சர் பிட்டி தியாகராயரின் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 28)
(மேலே உள்ள நீதிக்கட்சி தலைவர்களின் படத்தில் முன்வரிசையில் குழந்தைக்கு வலப்புறமாக அமர்ந்திருப்பவர் தியாகராயர்)
சர் பிட்டி தியாகராயர் சென்னை கொருக்குப்பேட்டையில் வாழ்ந்த வர்த்தகரும் செல்வந்தருமான அய்யப்ப செட்டியார் – வள்ளியம்மாள் தம்பதிக்கு மகனாக 1852ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் நாள் பிறந்தார். தேவாங்கர் சமூகத்தின் முதல் பி.ஏ பட்டதாரியான இவர், அன்றைய காலக்கட்டத்தில் இந்த படிப்பிற்கு பிரிட்டிஷ் அரசில் பல்வேறு பணியில் சேர வாய்ப்பிருந்தும், அவற்றில் சேராமல் பொதுப்பணியில் ஈடுபட்டார்.

1881-ம் ஆண்டு சென்னையில் மெட்ராஸ் நேட்டிவிட்டி அசோசியேசன் என்கிற அமைப்பை உருவாக்கியவர். அதன் சார்பாக பல்வேறு கூட்டங்கள் நடத்தி அரசிடம் கோரிக்கை வைப்பதை பணியாகக் கொண்டு தன் பொதுவாழ்வை துவங்கினார்.
நெசவு, உப்பளம், சுண்ணாம்பு மற்றும் தோல் பதனிடுதல் உள்ளிட்ட தொழில்களை கொண்ட பெரும் செல்வந்தரான இவர் ஆரம்ப நாட்களில் காங்கிரஸ்காரராகவும் காந்தியின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராகவும் இருந்தார். 1885-ல் துவங்கிய காங்கிரசில் 1916 வரை இணைந்து தீவிரமாக தேசியப் பணியில் ஈடுபட்டார்.
சென்னை மக்கிஸ் கார்டனில் இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாட்டை நடத்தியதில் முக்கிய பங்காற்றினார். சென்னையின் மாநகராட்சியின் மிக நீண்ட கால உறுப்பினராக இருந்தார் 1882 முதல் 1923 வரை கிட்டத்தட்ட 40களுக்கு மேல் உறுப்பினராக இருந்த ஒரே தலைவர் தியாகராயர் மட்டும் தான். சென்னை நகரை திட்டமிட்டதில் அதை வளர்த்தெடுத்ததில் தியாகராயரின் பணி முக்கியமானது.
மிகுந்த தெய்வ நம்பிக்கை உடையவர். மயிலாப்பூர் திருவல்லிக்கேணி கோவில்களுக்கு அவர் செய்த திருப்பணிகளுக்கான சான்றுகள் இன்றும் இருக்கின்றன. ஆனாலும் அவர் பிறப்பின் அடிப்படையில் இழிவுபடுத்தப்பட்டதாலும் அன்று காங்கிரசில் இருந்த பார்ப்பனர் ஆதிக்க காரணமாக, நீதிக்கட்சியை தோற்றுவித்தவர்களில் ஒருவராக உருவெடுத்தார்.
பிட்டி தியாகராயர் 1916இல் சென்னையில் ராஜு கிராமணியார் தோட்டத்தில் நடந்த சைவ சித்தாந்த மகாஜன சபையில் பிராமணரல்லாதோர் முன்னேற்றம் குறித்து நீண்ட உரையாற்றுகிறவராக மாறினார். பார்ப்பனர் அல்லாதார் கொள்கைப் பிரகடனம் என்று சொல்லப்படுகின்ற பார்ப்பனரல்லாதார் அறிக்கை 20.12.1916 இதே பிட்டி தியாகராயர் கையொப்பத்துடன் வெளியானது.
சென்னை மேயராகவும் நீதிக்கட்சி தலைவராகவும் பார்ப்பனர் அல்லாதோர் சமூக அரசியல் பொருளாதர முன்னேற்றத்திக்கு பெரும் பாடுபட்டார்.
இன்று இந்தியா முழுவதும் முன்னோடி திட்டமாக இருக்கும் சமூக நலத் திட்டங்களில் ஒன்றான சத்துணவுத் திட்டம் இவர்கள் அடித்தளமிட்டதே. திராவிட சங்கம் நிறுவிய நடேசனார் தன் சொந்த செலவில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு உணவு அளித்தார். அதையே நகராட்சித் தலைவராக இருந்த பொழுது ஆயிரம்விளக்கு பள்ளியில் அரசின் சார்பாக அனைவருக்கும் மதிய உணவுத் திட்டத்தை முதன் முதலாக அறிவித்தவர் சர் பிட்டி தியாகராயர். சென்னை நகராட்சியின் முதல் தலைவராகவும் பல்வேறு பணிகளை நிகழ்த்தினார்.
சென்னை நகரின் பல பள்ளிகளை துவக்கியது அதில் அனைத்து சமூகத்தினரையும் சேர்ந்து படிக்க வைத்ததில் முக்கியப் பங்காற்றினார். இவர் துவங்கிய பள்ளிகளில் ஒன்று தான் பின்னாளில் தியாகராயர் கல்லூரியாக உருப்பெற்றது. சென்னைப் பல்கலைக்கழகத்தை சீர்திருத்தியது, மருத்துவம் படிப்பதற்கு சமஸ்கிருதம் கட்டாயம் என்று இருந்ததை மாற்றியது, பச்சையப்பன் கல்வி அறக்கட்டளையில் அனைத்து சமூகத்தினரும் பங்கெடுக்கச் செய்தது ஆகியவை இவரது முக்கிய கல்விப் பணிகள் ஆகும்.
தென்னிந்தியாவின் தொழிர்வளர்ச்சில் இவரது பங்கு முக்கியமானது. தென்னிந்திய வர்த்தகக் கழகம் தோற்றம் பெறவும், நிலைப்பெற்று இயங்கிடவும் தியாகராயர் பெருமுயற்சி மேற்கொண்டார். தியாகராயர் தலைமையில் வர்த்தகக் கழகத்தின் முதல் கூட்டம் 9.10.1909 அன்று சிறப்புற நடைபெற்றது. 1909-ம் ஆண்டிலிருந்து 1921-ம் ஆண்டு வரை தென்னிந்திய வர்த்த கழகத்தின் தலைவராக இருந்து தென்னிந்தியாவின் வர்த்தக வளர்ச்சிக்கும், தொழில்கள் பெருகவும் பெரும்பணிகள் புரிந்தவர்.
1925-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் நாள் இயற்கை எய்தினார். இவரது இறுதி ஊர்வலத்தில் பெருந்திராளாக சென்னை மக்கள் பங்கெடுத்தனர். சென்னை மாகாண முதல் அமைசராக இருந்த பனகல் அரசரும் , அமைச்சராக இருந்த தண்டபாணி பிள்ளை உள்ளிட்டவர்கள் இவரது உடலை சுமந்து சென்றனர் .
தி இந்து உள்ளிட்ட பத்திரிகைகள் இரங்கல் செய்தி வெளியிட்டது. மாற்றுக் கட்சிக்காரராக இருந்தபோதும், தமிழ்த்தென்றல் திருவிக பெரும் “பெருங்கிழவர் பிரிந்தார்“ என்று தலைப்பிட்டு நவசக்தியில் இரங்கல் எழுதினார்.
“அவர் வாழ்வு உரிமையில் தோன்றி, உரிமையில் வளர்ந்து, உரிமையில் காய்த்து, உரிமைக்கு கீழேயே கனிந்து சென்றார்“ என்ற திருவிக-வின் கூற்று வெள்ளுடை வேந்தரின் வாழ்வை நமக்கு உணர்த்தும்.