மாற்றுத் திறனாளிகள்

கொரோனா ஊரடங்கில் கைவிடப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் துயரம் குறித்த ஆய்வு

இந்திய ஒன்றியத்தில் 42.5% மாற்றுத் திறனாளிகள் ஊரடங்கின் காரணமாக சுகாதார சேவையைப் பெறுவதில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டனர் என்று இந்திய பொது சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. 

தனிமைப்படுத்துதல், கைவிடுதல் மற்றும் வன்முறை போன்ற காரணிகளால் 81% மாற்றுத்திறனாளிகள் அதிக அளவு மன அழுத்தத்தை அனுபவித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா (Covid-19) நோய்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் மனநலம், கல்வி, வாழ்வாதாரங்கள் மற்றும்  சமூக பங்களிப்பு ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஹைதராபாத்தில் உள்ள இந்திய பொது சுகாதார நிறுவனம் (I.I.P.H) நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

42.5% சதவீதம் மாற்றுத்திறனாளிகள் அதாவது சராசரியாக ஐந்து பேரில் குறைந்தது இரண்டு பேர் தங்கள் வழக்கமான சுகாதார சேவை கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும், 28% சதவீதம் பேர் ஊரடங்கு  காலத்தில் மருத்துவர்களை சந்திப்பதை தள்ளிப்போடப்பட வேண்டியிருந்தது என்றும் தங்களின் வழக்கமான சிகிச்சைகளை மேற்கொள்ளும் 58% சதவிகிதம் பேர் அச்சேவை கிடைப்பதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

‘மாற்றுத்திறனாளி இந்தியர்கள் மேல் கோவிட் -19 இன் தாக்கம்’ என்ற தலைப்பில் இந்த ஆய்வு இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் ஒரு அங்கமான ஐதராபாத் இந்திய பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் இந்த ஆய்வை மாற்றுத்திறனாளிகள் வளர்ச்சியில் முன்னணி அமைப்பாகத் திகழும் CBM இந்தியாவுடன் இணைந்து நடத்தியது.

ஆய்வில் பங்கேற்றவர்கள்

இந்த ஆய்வானது சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, டெல்லி, உத்தரகண்ட், அசாம், மேகாலயா, ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட 14 மாநிலங்களை சேர்ந்த 403 மாற்றுத்திறனாளிகளிடம் நடத்தப்பட்டது. அவர்களில் 60% சதவீதம் பேர் ஆண்கள் மற்றும் 40% சதவீதம் பேர் பெண்கள். ஆய்வில் பங்கேற்றவர்கள் அனைவரும் வெவ்வேறு குறைபாடுகளைக் கொண்டவர்கள். 

உடல் குறைபாடு உள்ளவர்கள் – 51.6% சதவீதம்

பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் – 16.1 சதவீதம்

அறிவுசார் குறைபாடு உள்ளவர்கள் – 19% சதவீதம் மற்றும் 

பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் – 9.2% சதவீதம் ஆவார்கள்.

ஆய்வின் சில முக்கிய முடிவுகள்

 • 81% பேர் அதிக அளவு மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த ஊரடங்கு காலத்தில் தனிமைப்படுத்துதல், கைவிடுதல் மற்றும் வன்முறை போன்ற காரணிகளால் 81% சதவீத மாற்று திறனாளிகள் அதிக அளவு மன அழுத்தத்தை அனுபவிப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • அதே போல் ஆய்வில் பங்கேற்றவர்களில் மனநலம் குறித்த தகவல் தேவைப்பட்டவர்கள்  34.5% சதவீதம் பேர். ஆனால், கிடைக்கப் பெற்றவர்கள் 25.9% சதவீதம் பேர் மட்டுமே. 
 • ஊரடங்கு காலத்தில் வெறும் 20% சதவீதம் பேர்  மட்டுமே வழக்கமான ஆலோசனைகள் அல்லது சிகிச்சையைப் பெற முடிந்தது. 11.4% சதவீதம் பேர் தங்களது வழக்கமான மனநலம் தொடர்பான மருந்துகளைப் பெறுவதில் கூட சிக்கல்களை எதிர்கொண்டனர்.
 • ஆய்வில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், தொடர்ச்சியான ஊரடங்கு அவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர். 
 • ஊரடங்கின் போது தங்களுக்கு மருந்துகள் தேவைப்பட்டது என்று கூறிய 35.7% சதவீத பேர்களில், கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டவர்கள் அவற்றை வாங்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டதாகக் கூறினர்.
 • வழக்கமான இரத்த அழுத்த கண்காணிப்பு தேவைப்படும் சுமார் 58% சதவீதம் பேர் அவ்வாறு செய்யத் தவறிவிட்டதாக ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். 
 • ஆய்வில் பங்கேற்ற 5.2% சதவீத அறுவை சிகிச்சை பற்றிய ஆலோசனைகள் தேவைப்படுபவர்களில் 47.6% சதவீதம் பேருக்கு கிடைக்கப் பெறவில்லை.
 • புனர்வாழ்வு சேவைகள் தேவைப்படும் 17% சதவீதத்தில், 59.4% சதவீதம் பேர் அவற்றை அணுகத் தவறிவிட்டனர் என்றும் ஆய்வின் மூலம் அறியமுடிகிறது.

ஆய்வு முன்வைத்துள்ள பரிந்துரைகள்

இந்த ஆய்வு மாற்று திறனாளிகள் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் ஆலோசனைகளையும் வழங்கியது. இவற்றில் சில திட்டங்கள்.

 • கொள்கைகள், உத்திகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் மாற்றுத் திறனாளிகளைச் சேர்ப்பது; 
 • அவர்களுக்கு telemedicine (தொலைபேசி மூலம் மருந்துகள் பற்றிய  ஆலோசனைகள் வழங்குவது) 
 • இணைய ஆலோசனைக்கு உதவுதல்; 
 • மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்த கோவிட் -19 நெறிமுறைகளை உருவாக்குதல்

என்பனவற்றை இந்த ஆய்வு பரிந்துரையாக முன்வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *