மணிப்பூர் மாணவர் சங்கத்தின் இரண்டு தலைவர்களை வகுப்புவாத வெறுப்பைப் பரப்பியதாகக் கூறி டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.
விஸ்வ இந்து பரிஷத், அனைத்து மணிப்பூர் தர்ம ரக்ஷ சமிதி, மணிப்பூர் பிராமண அமைப்பு மற்றும் தர்ம ரக்ஷக் சங்கம் ஆகிய நான்கு அமைப்புகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் டெல்லியில் உள்ள மணிப்பூர் மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிங்காஜித் தோச்சோம் (Singhajit Thokchom) மற்றும் அதன் அமைப்புச் செயலாளர் கெணடி மொய்ரங்தேம் (Kenedy Moirangthem) திங்கள்கிழமை டெல்லி மற்றும் மணிப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் விசாரணைக்காக வியாழக்கிழமை இம்பாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மணிப்பூர் கல்வி அமைச்சர் எஸ்.ராஜென்சிங் மாநிலத்தில் உள்ள சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சமஸ்கிருதத்தை பாடமாக அறிமுகப்படுத்தியதை எதிர்த்து மணிப்பூர் மாணவர் சங்கம் அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
“வெறுப்பு, குற்றம், தீண்டத்தகாத தன்மை, பாலியல், ஆதிக்கம், பேரினவாதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சமஸ்கிருதத்தை மாணவர்கள் மீது திணிக்க முயற்சிப்பதன் மூலம் அரசாங்கம் அதன் முட்டாள்தனத்தை அம்பலப்படுத்துகிறது. உயர் சாதி இந்து பிராமணர்கள் யார் அவர்களின் நோக்கம் என்ன வென்று எங்களுக்குத் தெரியும்”
”மணிப்பூர் மக்களை கல்வி ரீதியாகவும், மொழியியல் ரீதியாகவும் அடிமைப்படுத்தும் முயற்சியாக இது அமைந்துள்ளது. மணிப்பூருக்கு எதிரான இந்தியாவின் காலனித்துவ நடவடிக்கை இருகிக்கொண்டே போகிறது.”
”மணிப்பூர் பழங்குடி மக்கள் 30-க்கும் அதிகமான கிளைமொழிகளை பேசி வருகின்றனர் அவற்றில் பெரும்பாலானவை அழிந்துபோகும் நிலையில் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலை அரசின் கண்களுக்கு தெரிவதில்லை ஆனால் அவர்கள் காலனித்துவ எஜமானரான உயர் சாதி இந்து பிராமண இழிபிறப்பாளர்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு கீழ்படிந்துள்ளனர்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில கல்வி அமைச்சர் எஸ். ராஜன் “பிராமணர்களுக்கு அடிபணிந்தவர்” என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
”there are above 30 dialects spoken by the indigenous people of Manipur “most of which are about to be extinct lest measures are taken to continue their existence. No doubt that this government is blind enough to not to see enough to see such a sight but obedient enough to be acceptable to their colonial master, the upper caste Hindu Brahmins, the b***ards.” It termed state education minister S. Rajen as “submissive to the Brahmins”.
அடிப்படையில் இந்த அறிக்கை உயர் சாதி இந்து பிராமணர்களை குறிவைத்து காயப்படுத்துகிறது. மேலும் பல்வேறு குழுக்களிடையே பகை அல்லது வெறுப்பு உணர்வுகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று குற்றம்சாட்டி மாணவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பின்வரும் பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
மதம், இனம் (பிரிவு 153 ஏ), அவமதிப்பு மற்றும் பொது அமைதியை குலைக்க தூண்டுதல் (பிரிவு 504), அல்லது பொது அமைதிக்கு எதிரான குற்றத்திற்கு வழிவகுக்கும் (பிரிவு 505-2) பொதுவான நோக்கத்துடன் செய்யப்படும் குற்றச் செயல் (பிரிவு 34). மாணவர்களுக்கு 5வது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ளதால் அவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.