ஐபோன்

காலை செய்தித் தொகுப்பு: நாளை மெரீனா திறப்பு, ஐபோன் ஆலையை உடைத்து நொறுக்கிய தொழிலாளர்கள் உள்ளிட்ட 10 செய்திகள்

1) நாளை மெரீனா திறப்பு

கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக மார்ச் 24 முதல் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன்பின் இதுவரை சென்னை மெரீனா கடற்கரைக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்தநிலையில் சென்னை  உயர்நீதிமன்றத்தில் மீனவர் நலச்சங்கம் சார்பில் வந்த வழக்கு ஒன்றில், மெரினா கடற்கரை எப்போது திறக்கப்படும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

அரசு திறக்கவில்லை என்றால், நீதிமன்றம் திறக்க உத்தரவிடும் என்றும் எச்சரித்தனர். இதையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மெரீனா கடற்கரையை டிசம்பர் 14-ம் தேதி திறக்க அரசு திட்டமிட்டு இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.  

2) கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் கருத்துக்கேட்பு

மக்களவை, சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவின உச்ச வரம்பை நிர்ணயிப்பது குறித்து தேசிய, மாநில கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்டுள்ளது. மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்த செலவு உச்சவரம்பு கடைசியாக 2014-ம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்டது. இருப்பினும் இத்தொகை போதுமானதாக இல்லை என்று கட்சிகள் கூறி வருகின்றன.

இந்நிலையில், வேட்பாளர்களின் தேர்தல் செலவின உச்சவரம்பை அதிகரிப்பது குறித்து தேசிய, மாநில கட்சிகளின் கருத்தை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. இது தொடர்பாக டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், ”எதிர்காலத்தில் மக்களவை, சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவின உச்சவரம்பு எவ்வளவு இருக்க வேண்டும் என்பது குறித்து தேசிய, மாநில கட்சிகள் தங்கள் கருத்துகளையும், பரிந்துரைகளையும் தேர்தல் ஆணையம் அமைத்துள்ள குழுவுக்கு அனுப்பி வைக்கலாம்” என கூறப்பட்டுள்ளது.

3) அரசுப் பணி நீதிமன்றம் புதிய உத்தரவு

கூடுதல் கல்வித் தகுதி பெற்றுள்ளவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படுவது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு: கடைநிலை பணிகளுக்கு அதிக தகுதியுடையோரை நியமிப்பதால் அரசு பொதுப்பணி பெரிதும் பாதிக்கிறது. இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள் அலுவலக உதவியாளர், துப்புரவாளர், தூய்மை பணியாளர் போன்ற பணிகளில் சேர்கின்றனர். இவர்களால் அந்தப் பணியை சரிவர கையாள முடியவில்லை.

ஆனால், வரி செலுத்தும் அளவுக்கு கவுரவமான சம்பளத்தை பெறுகின்றனர். சமீபத்தில் உயர்நீதிமன்றம் நீதிபதிகளின் இல்லங்களில் பணியாற்ற உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதிக கல்வித்தகுதியுடைய இவர்களால் நிர்வாகம் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறது. கடைநிலை பணிகளுக்கு கூடுதல் தகுதி பெற்றவர்கள் நியமிப்பதைத் தவிர்த்து, அந்தந்த பணியின் தகுதிக்கு ஏற்ப உரிய கல்வித் தகுதியை பெற்றவர்கள் மட்டும் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை அரசு உறுதிப்படுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

4) ஆன்லைனில் அரையாண்டு தேர்வு நடத்தலாம் 

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: அரசுப் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைன் மூலமாக அரையாண்டுத் தேர்வு நடத்துவதில் ஆட்சேபனை இல்லை. மாணவர் சேர்க்கைக்குப் பிறகு, தேவையான ஆசிரியர்களைத் தவிர கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் காலி இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இன்றைய சூழ்நிலையில் 50 சதவீத பாடம் குறைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்துதான் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும். அதற்கான அட்டவணை 2 நாட்களில் வெளியிடப்படும். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

5) ஐ போன் ஆலையை உடைத்து நொறுக்கிய தொழிலாளர்கள்

உலகின் முன்னணி மொபைல் போன் நிறுவனமான ஆப்பிள், ஐ போன் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, கர்நாடகாவில் உள்ள கோலார் தாலுகா வேம்கல் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வருகிறது. தைவான் நாட்டைச் சேர்ந்த விஸ்ட்ரான் தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் சரியாக வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் சம்பளம் வழங்கக் கோரி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.

நிர்வாகம் கண்டு கொள்ளாததால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று காலை தொழிற்சாலையை முற்றுகையிட்டு, அங்கிருந்த பொருட்களை உடைத்து நொறுக்கினர்.

6) மத்திய அரசுக்கு அதிகாரமில்லை – திரிணாமுல் காங்கிரஸ்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இக்கட்சியின் மக்களவை துணைத் தலைவருமான கல்யாண் பானர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் அஜய் பல்லாவுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் ”சட்டம் ஒழுங்கு மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றபோது, நட்டா கார் மீதான தாக்குதல் குறித்து ஆலோசிக்க மேற்கு வங்க அதிகாரிகளுக்கு நீங்கள் எப்படி சம்மன் அனுப்பலாம்? இது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது. அரசியல் கட்சியில் உள்ள உங்கள் அமைச்சர், அரசியல் பழிவாங்கலுக்காக எங்கள் மாநில அதிகாரிகளை மிரட்டப் பார்க்கிறார். சட்டம் ஒழுங்கிற்கு மாநில அரசே பொறுப்பு. நீங்களோ உங்கள் அமைச்சரோ அல்ல” என சரமாரியாக விமர்சித்துள்ளார்.

7) உலக அளவில் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் 16,10,771

 உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்  7,20,84,888

உலகம் முழுவதும் குணமடைந்தவர்கள் 5,04,78,417 

அமெரிக்கா   –  1,65,44,568

இந்தியா     –  98,57,380

பிரேசில்     –  68,80,595

 ரஷ்யா     –  26,25,848

பிரான்ஸ்    –  23,65,319

இத்தாலி     – 18,25,775

இங்கிலாந்து  – 18,30,956

ஸ்பெயின்    – 17,41,439   

அர்ஜென்டினா – 14,94,602

கொலம்பியா – 14,17,072    

ஜெர்மனி     – 13,20,592

மெக்சிகோ  – 12,29,379

போலந்து   – 11,26,700

ஈரான்       – 11,00,818    

பெரு       – 9,80,943

துருக்கி     – 18,09,809  

தென்னாப்பிரிக்கா – 8,52,965

8) தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் நேற்று  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 1218 பேர்

கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,97,693 

சிகிச்சை பெற்று வருபவர்கள் 10,208 பேர் 

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் 

மொத்த எண்ணிக்கை 7,75,602 

9) நிவாரணம் வேண்டும் 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் 13 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில் கடந்த வாரம் பெய்த கனமழை மற்றும் புயலால் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள ஆறுகளில் தண்ணீ்ர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியது. மேலும் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின. தற்போது மழைவிட்டு ஒருவாரம் ஆகியும் பல இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் நீரில் மூழ்கிய பயிர்கள் அழுகி வருகிறது.  இவர்களுக்கு உரிய நிவாரணம் கொடுக்கப்பட வேண்டும் .

10) ரயில்வே தேர்வுகள் 

ரயில்வே துறையில் காலியாக உள்ள ஒரு லட்சத்து நான்காயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு இம்மாதம் பதினைந்தாம் தேதி முதல் 3 கட்டங்களாக தேர்வு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

“இந்திய ரயில்வே, தனது 21 ரயில்வே வாரியங்கள் மூலம் நடத்தும் மிகப் பெரிய அளவிலான ஆட்கள் தேர்வு, டிசம்பர் 15-ம் தேதி முதல் 3 கட்டங்களாக நடக்கிறது. இதன் மூலம் ரயில்வே துறையின் பல பிரிவுகளில் 1.4 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு 2.44 கோடிக்கும் மேற்பட்டோர் நாடு முழுவதும் தேர்வெழுதவுள்ளனர். இந்த தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கின்றன என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *