கொரோனா தொற்று ஏற்படுத்தப் போகும் பாதிப்பைக் கண்டுமட்டும் மனித இனம் பயப்படவில்லை. அதோடு சேர்த்து பசி, சுயவெறுப்பு, இயலாமை, எதிர்காலத்தின் மீதான அவநம்பிக்கை மற்றும் பொருளியல் பாதுகாப்பு இன்மை போன்ற பல்வேறு தொற்றுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அடிப்படைச் சிக்கல் உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களையும் விடையற்ற இடத்தில் நிற்கவைத்து விட்டது. ஆனால் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இந்தியாவின் இஸ்லாமியர்கள் கொரானா தொற்றைவிட மிக மோசமான ஒரு நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். அதுவே இஸ்லாமோபோபியா எனும் இஸ்லாமிய வெறுப்பின் அடிப்படையிலான பீதி.
ஒவ்வொரு நாளும் முகக்கவசம் அணிந்துகொண்டு கடைகளுக்கு புறப்படும்போது தன்னை ஆயிரக்கணக்கான கண்கள் ஒரு நோய்த் தொற்றைவிட கொடூரமாக பார்ப்பதை சகித்துக்கொள்ள முடியாமல் திணறும் இஸ்லாமியர்கள் கையறுநிலையில் இருக்கிறார்கள். இந்த வெறுப்பு பொது இடத்தில் மட்டுமல்ல, தனது வீட்டுக்குள்ளும் விருப்பமில்லாமலேயே தொலைக்காட்சி செய்திகளின் வழியாக கசிந்துகொண்டே இருக்கிறது. சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானவர்கள் எந்த விதமான அடிப்படை உண்மையும் தெரியாமல் தனது விரக்தியைப் போக்குவதற்காக இஸ்லாமியர்கள் மீது ஒரு வெறுப்பையும் பீதியையும் பரப்பி வருகின்றனர்.
மோடி அரசின் பொருளாதார ரீதியான பின்னடைவுகளையும், கொரோனா தொற்று குறித்து ஒரு ஆக்கப்பூர்வமான திடத்தை செயல்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிரார்கள். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பசி பட்டினியோடு தனது குழந்தைகளை தோளில் சுமந்துகொண்டு ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து கொண்டிருக்கின்றனர். கிடைத்த இடத்தில் உண்டு உறங்கும் நம்பிக்கையற்ற உள்நாட்டு அகதிகளை உருவாக்கி இருக்கிறது மோடி அரசு. அவர்கள் அனைவரும் இந்துக்களே. இந்த நிலையை மூடிமறைக்கவும் திசைதிருப்பவும் டெல்லியில் நடந்த அந்த ஒற்றை பிரார்த்தனை கூட்டத்தில் பங்குபெற்று, பின் சொந்த ஊர் திரும்பிய ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள்தான் கொரோனா வைரசை பரப்பினார்கள் என்று திட்டமிட்டு இஸ்லாமிய வெறுப்பினூடாக தனது இயலாமையை மறைக்கிறது அரசு. இதற்கு இந்திய ஊடகங்களும் அதிகாரவர்க்கமும் துணைநிற்கிறது.
பாசிசம் தலைமை தாங்கிவிட்டால் அந்த தேசத்தின் ஆளும் வர்க்கமும் முதலாளியும் தனது எதேச்சதிகாரத்தை வெளிக்காட்டத் துவங்கும். அது தனது செயல்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக வெகுசன உளவியலில் படிந்திருக்கும் அதிருப்தியையும் கேள்விகளையும் ஒட்டுமொத்தமாக ஒரு குறிப்பிட்ட மக்கள் மீதோ, நிகழ்வின் மீதோ படியவைக்கும். அதுதான் இந்தியாவில் கடந்த இரண்டு மாதமாக நடந்துவருகிறது. மோடி அரசின் இயலாமையை மறைப்பதற்காக பெரும்திரள் கொண்ட இந்த துணைக் கண்டத்தில் இந்து-இஸ்லாமிய இடைவெளியை மேலும் மேலும் அதிகப்படுத்தி மூர்க்கமடையச் செய்கிறது. இது இந்த மண்ணில் அடுத்த 100 ஆண்டுகளுக்கு நிவர்த்தி செய்ய முடியாத அழிவை ஏற்படுத்தக்கூடியது.
ஒவ்வொரு இஸ்லாமியனும், தான் இந்த தேசத்துக்கு உரியவன், விசுவாசமானவன் என்பதை காலை எழுந்ததிலிருந்து இரவு படுக்கும்வரை தனது அன்றாட செயல்களினூடாக இந்த சமூகத்தார்க்கு உறுதி செய்ய வேண்டிய ஒரு இயல்பற்ற வாழ்க்கைக்கு தள்ளப்படுவார்கள்.
அதேபோல் இஸ்லாமியர்களின் நியாயமான உரிமைகளை விட்டுக்கொடுத்து தனது விஸ்வாசத்தை நிரூபிக்க வேண்டிய அறமற்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாபர் மசூதியை இடித்தவர்களுக்கே தனது இடத்தை விட்டுக்கொடுத்து தனது ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டிய நிர்பந்தம் நம் கண்முன்னே நடந்தது. பெரும்பான்மைவாதம் என்ற அடிப்படையில் ஒரு சிறு தன்னலக் குழுவிற்கு நீதி பணிய வேண்டியிருக்கிறது.
தனது உயிரைக் கூட தியாகம் செய்து, தனது உன்னத தன்மையை நிலைநாட்ட வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இனி வருகின்ற காலங்களில் இஸ்லாமியர்கள் ஒவ்வொரு தருணத்திலும் உளவியல் ரீதியாக விழிப்புடன் இருக்கவேண்டிய மனித இயல்பை மீறிய வாழ்க்கை முறைக்கு தள்ளப்படுவார்கள். அதேபோல் வெகுசன இந்துக்களும் நாம் இருவரும் சகோதரர்கள், நமக்குள் எந்த மதப்பாகுபாடும் இல்லை என்பதை ஒவ்வொரு செயலினூடாகவும் சமன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். இனி வருகின்ற காலங்கள் நாம் நமது சகோதரத்துத்தை நிலைநாட்டவே செயல்புரிய வேண்டியுள்ளது.
இந்த இஸ்லாமிய பீதி என்பது மேற்குலகத்தால் கட்டியமைக்கப்பட்ட ஒரு கருத்தியல். பின் அதனை மையமாக வைத்துதான் உலக ஏகாதிபத்தியங்கள் பின்னை சோவியத் உலக ஒழுங்கில் தனக்கான இடத்தை நிலைநிறுத்தி வருகிறது. அதில் அசாதாரணமான வெற்றியும் கண்டுள்ளது. இஸ்லாம் என்பதே தீவிரவாதத்தை மையமாக வைத்து உள்ள ஒரு மதம், இஸ்லாமியர்கள் மனித சமத்துவத்தை மறுப்பவர்கள், மதத்தீவிரவாதத்தை கடைப்பிடிப்பவர்கள், நாகரீகத்தில் பின்தங்கியவர்கள் என்று தொடர்ச்சியாக மேற்குலக நாடுகளின் பொதுபுத்தியில் மிகத் தீவிரமாக 1980-களுக்கு இடைப்பகுதியில் இருந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. அதன் பலனாக போர் வணிகத்தை அறுவடை செய்து வருகிறது.
இந்தியாவிலும் இந்துத்துவ அடிப்படைவாத சிந்தனை கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, தொடர்ந்து இஸ்லாமியர்கள் மீதான ஒரு தீவிரவாத பீதியைக் கட்டமைத்து வருகிறது. இதுபோன்ற ஒரு மதத்தின் அடிப்படையிலான பீதி காசுமீரி தேசிய இனத்தின் மீது கட்டியமைக்கப்பட்டது. அதன் விளைவுதான் இன்று அந்த தேசியம் துண்டாடப்பட்ட போதும், அதன் தலைவர்கள் காலவரையின்றி வீட்டு சிறையில் அடைக்கப்பட்டபோதும், அந்த மக்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்த நாட்களிலும், நம்மால் எளிமையாக கடந்துசெல்ல முடிகிறது. சிறுபான்மையினர் காயப்படுத்தப்பட்டு பொது சமூகத்திடமிருந்து உளவியல் ரீதியாக துண்டாடப்படுவது ஒரு இனப்படுகொலைக்கு செய்யப்படும் முன்தயாரிப்பு. எதிர்காலங்களில் இஸ்லாமியர்கள் இனப்படுகொலை செய்யப்படும்போதும் பொதுசமூகம் அதற்கான எல்லா நியாயத்தையும் வரலாறுகளினுடாக தேடி எடுப்பதற்கான குறியீடுகளையும் காரணிகளையும் இந்துத்துவ சக்திகள் உருவாக்கி வருகின்றனர். இதற்கு சமூக வலைதளம் மிக நேர்த்தியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது
சமூகவலைதளங்களில் பரப்பப்படும் பொய் செய்திகளும், கற்பனை செயல்களும் (febrile imagination) மிகமோசமான விதைகளை ஊன்றிவருகிறது. இஸ்லாமியப் பீதி என்பது இந்திய சுதந்திரத்திற்கு பிறகு காந்தியார் சுடப்பட்டதிலிருந்து நேர்த்தியாகக் கையாளப்படும் யுக்தி. அது பல்வேறு காலகட்டங்களில் போதாமையால் மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் பின்னை சேவியத்துக்குபிறகு இந்தியாவிலும் தீவிரமாக பரவியது. குறிப்பாக 2010-ம் ஆண்டிற்கு பிறகு சமூகவலைத்தளங்களின் காலம். அதில் பாசிசம் தனக்காக திறமையை நிறுவியது. பாசிஸ்ட் சிந்தனை எப்போதும் அதிதீவிரமான கருத்துப் பரவலுக்கான சாதனங்களைத் தேடும். அது வரலாறுகளை தேவைப்படும் போதெல்லாம் மற்றியமைத்தும் திருத்தியும் பரப்பும். அதனூடாக நிகழ்காலத்தை நியாயப்படுத்தும்.
தீவிரமான நோய்த்தொற்றில் அச்சப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் மனதில் பரப்பப்பட்ட பொய் செய்தியின் விளைவாக ஒரு இஸ்லாமிய கர்ப்பிணிக்கு பிரசவம் செய்ய மறுத்தது மருத்துவமனைகள், சில இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர் அதில் ஒருவர் மன உளைச்சல் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார். ஏன் இஸ்லாமியர்கள் பல குடியிருப்புக்களில் தடுக்கப்பட்டனர் பொது இடங்களில் காய்கறி மற்றும் கசாப்புக்கடை வைத்திருக்கும் இஸ்லாமியர்கள் தனது நெருங்கிய வணிகர்களாலேயே புறக்கணிக்கப்பட்டனர். இவையனைத்தும் சமூக ஊடகத்தில் செயல்படும் நிழல் காவிகளால் விதைக்கப்பட்டது. Corona Jihad என்று புனைவைக் கொடுத்து நோய்த்தொற்றை தடுப்பதற்காக போராடுகின்ற உத்தமர்களாக தங்களைக் காட்டிக்கொண்டனர் இந்துத்துவவாதிகள். அவர்கள் ஏற்படுத்திய சமூக பதட்டங்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு அங்கீகரித்தது. ஒவ்வொரு இஸ்லாமியனும் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்பட்டான். இந்த சூழ்நிலையில்தான் இந்திய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் கீழ்க்கண்டவாறு செய்தி வெளியிட்டார்.
“Your bulletins of Coronavirus victims are showing a separate column ‘Markaz Masjid’. Such thoughtless classification is feeding into the Islamophobia agenda of the lap media and Hindutva forces and has been easily turned into a handle to attack Muslims across the country. As a result, Muslims are being attacked in various areas, calls are being made for their social boycott, one boy was almost lynched in the North-West Delhi village of Harewali, others attacked.”
ஆனால் அதேவேளையில் கொரானா குறித்தான தின செய்திகளை வெளியிட்ட, சில அரசு செய்தி தொடர்பாளர்கள் திட்டவட்டமாக தப்லிக் ஜமாத் குறித்தான எண்ணிக்கையைப் பிரித்து மிகைப்படுத்தி வெறுப்பை உமிழ்ந்தார்கள். அதன் மிக அபாயகரமான மனப்போக்காக “தங்களின் கிரிமினல் செயலால் கொரோனா வைரசைப் பரப்பி பாவத்தைச் செய்தவர்கள், இப்போது பிளாஸ்மா சிகிச்சைக்கு பிளாஸ்மா தானம் செய்கிறேன் என கரோனா போர் வீரர்களாக மாறுகிறார்கள்” என மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி வெறுப்பைக் விதைத்துள்ளார். இஸ்லாமியர்களின் மனிதநேயம் தொடர்ந்து கொச்சைப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இங்கு அனைவரும் சமம் இல்லை குறிப்பாக இஸ்லாமியர்கள் நமக்கு சமமானவர்கள் கிடையாது என்று சுப்ரமணிய சுவாமியின் டிவிட்டர் பதிவு மிகமுக்கியமான ஒரு குறியீடாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம் மற்றும் கேரள முதல்வர்கள் வெளிப்படையாக இதுபோன்று இஸ்லாமியப் பீதியை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். கொரோனாவை மையமாக வைத்து மதம் மற்றும் இனவாதப் போக்குகளை கடைப்பிடிப்பது கண்டனத்திற்கு உரியது என்று சர்வதேச நிறுவனங்களும் ஐக்கிய அரபு நாடுகளும் எச்சரித்த பிறகே இந்துத்துவ சக்திகளும் அரசும் பின்வாங்கியுள்ளது.
பெருந்தொற்றுகளான வைரஸ் பரவல் கூட தடுப்பூசி வந்தால் ஒழிந்து விடும். இஸ்லாமோபோபியா எனும் முன்னதைவிட ஆபத்தான பெருந்தொற்றுக்கு என்ன மருந்திக்கிறது இங்கே?