1949 நவம்பர் 15, இந்தியாவின் தேசத் தந்தை என்று அழைக்கப்படும் காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே தூக்கிலிடப்பட்ட நாள். அன்றைய காலைப் பொழுதில் கோட்சே தன்னை தயார்ப்படுத்திகொண்டு, தன் நண்பனும் சதியில் உடன் பயணித்தவனுமான நாராயன் ஆப்தே-வுடன் சேர்ந்து கீழ்கண்ட சமஸ்கிரத மந்திரங்களைக் கூறினான்.
”நமஸ்தே ஸதா வத்ஸ்லே மாத்ருபூமே
த்வயா ஹிந்துபூமே ஸூகம் வர்த்திதோஹம்
மஹாமங்கலே புண்யபூமே த்வதர்த்தே
பதத்வேஷ காயோ நமஸ்தே நமஸ்தே”
இது இன்றளவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ‘சாகா’ என்றழைக்கப்படும் பயிற்சி வகுப்புகளில் பாடப்பட்டு வரும் மந்திரங்களே ஆகும். 1938-ல் அகில் பாரதிய இந்து மகாசபாவில் கோட்சே உறுப்பினர் ஆகிவிட்டான் என்ற தகவல் பலராலும் நம்பப்படுகிறது (இந்து மகாசபா என்று பின்னாட்களில் இந்த பெயர் சுருக்கப்பட்டது). அதாவது ஆர்.எஸ்.எஸ்-சை விட்டு வெளியேறிவிட்டான் என்று சொல்லப்படுகிறது. 1939 வரை மராத்தியில் பாடப்பட்ட ஆர்.எஸ்.எஸ் ’சாகா’ மந்திரம் அதன் பின்னரே சமஸ்கிருதத்திற்கு மாற்றப்பட்டது. தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை விட்டு விலகிய பின்னர் கடைபிடிக்கப்படும் சமஸ்கிருத உச்சரிப்பை, தன் இறுதி நாளன்று கோட்சே கடமை தவறாது பாடியது அவன் ஆர்.எஸ்.எஸ் உடன் எத்தனை நெருக்கமான தொடர்பில் இருந்தான் என்பதற்கு ஒரு சான்று.
ஆரம்ப காலங்களில், ஆர்.எஸ்.எஸ் தீவிரமாக இந்துத்துவ கொள்கைகளை கடைபிடிக்கவில்லை என்பது ஆப்தேவின் எண்ணமாக இருந்தது. ஆனால் சிறையில் கோபால் கோட்சேவுடனான ஒரு உரையாடலில் ”உன் சகோதரன் நாதுராமும் நானும் ஆர்.எஸ்.எஸ்-சைப் பற்றி இப்பொழுது ஒரே சிந்தனையிலேயே இருக்கிறோம். அவனுடனான நான்கு வருட கால உரையாடல் என் சிந்தனையை மாற்றியிருக்கிறது” எனக் கூறி சற்று இடைவெளிவிட்டு ”உண்மையைக் கூறவேண்டுமானால் நானும் நாதுராமுமே ஆர்.எஸ்.எஸ் சாகா-வின் உறுதி மொழிக்கு நியாயமாக நடந்துள்ளோம். இந்த பெருமை எங்கள் இருவருக்கே” என நிறுத்தி தன் முகமலர்ச்சியை வெளிப்படுத்தியதாக தன் புத்தகத்தில் பதிவு செய்துள்ளான்.
ஆர்.எஸ்.எஸ் என்றுமே காந்தி கொலைக்கு பொறுப்பேற்றதில்லை. நேரடியாக நாங்கள்தான் செய்தோம் என்று அறிவிப்பதில் அவர்களுக்கு இருக்கும் பயம் புரிந்துகொள்ளக் கூடியதே.
ஜனவரி 30, 1948 அன்று காந்தி படுகொலை செய்யப்படுகிறார். பிப்ரவரி 2, 1948 அன்று அதிகாரபூர்மாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கோட்சேவுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் எந்த காலத்திலும் இருந்ததில்லை என முதன்முதலாக எதிர்வினை ஆற்றுகிறது. பின்பு இரண்டு நாட்கள் கழித்து அந்த அமைப்பு தடை செய்யப்படுகிறது.
கோட்சேவின் மார்ச் மாத வாக்குமூலம்
நவம்பர் 8, 1948 அன்று கோட்சே வழக்காடு மன்றத்தில் கொடுத்த வாக்குமூலம் ஆர்.எஸ்.எஸ்-க்கு வசதியாகப் போயிற்று. ”நான் ஆரம்ப காலங்களில் மகாராஷ்டிர ஆர்.எஸ்.எஸ்-ல் சேர்ந்து ’சங்’-ன் வேலைகளில் பங்கேற்றிருக்கிறேன். ஆனால் அரசியல் இயக்கத்தில் சேர்ந்து என் பயணத்தைத் தொடர விரும்பியதால் இந்து மகாசபையில் சேர்ந்தேன்” என்பதுதான் அது. என்னவொன்று அதுவரை “எந்தத் தொடர்பும் இல்லை” என்று கூறியவர்கள், பின்னர் சற்றே மாற்றி “காந்தி கொலைக்கு பல காலம் முன்பே அவர் எங்கள் அமைப்பில் இருந்து வெளியேறிவிட்டார்” என்பதாக மாற்றிகொண்டனர். ஆனால் கோட்சே-வுக்கும் தங்கள் அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இந்திய மக்களை நம்ப வைப்பதில் அவர்கள் ஓரளவு வெற்றி கண்டுள்ளனர். பல சிந்தனையாளர்கள், வரலாற்றாசிரியர்கள் பலரும் கோட்சே ஆர்.எஸ்.எஸ்-ன் ’முன்னாள்’ உறுப்பினர் என்றே கூறுகிறார்கள். சங்பரிவார அரசியலைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் இதில் அடக்கம். ஆனால் ஆர்.எஸ்.எஸ்-ஐ விட்டு கோட்சே விலகவே இல்லை என்பதை ஆதாரப்பூர்வமாக நம்மால் அறிய முடிகிறது.
நவம்பர் 8 அன்று செங்கோட்டையில் அமைக்கப்பட்ட நீதிமன்றத்தில் கோட்சே கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்தே இந்த பொய் கட்டமைக்கப்படுகிறது. ஆனால் அந்த வாக்குமூலத்தை யார் தயாரித்தது என்பதையும் நாம் பார்க்க வேண்டுமல்லவா? காந்தி படுகொலை வழக்கில் கோட்சே கும்பலுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் பி.எல்.இனாம்தார் அந்த உண்மையை பின்னாளில் தெரிவித்தார். வாசிக்க ஐந்து மணிநேரம் எடுத்துகொண்ட அறிக்கையின் பெரும்பகுதியை தயாரித்தது பம்பாய் நீதிமன்றத்தில் பணிபுரிந்த மேத்தா என்பவர். இவர் இந்து மகாசபா-வின் சாவர்க்கருக்கு நெருங்கிய தொடர்பில் இருப்பவர். அன்றைக்கு இந்துத்துவ அமைப்புகள் பலவற்றுக்கும் இவர் நெருக்கமானவர். சாவர்க்கரையும் இன்ன பிற நபர்களையும் வழக்கிலிருந்து தப்பவைக்கவே கோட்சே, தான் மட்டுமே இந்த கொலையை யோசித்து செய்ததாக நீதிமன்றத்தில் கூறினான். மேலும் ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து வெளியேறியே இந்து மகாசபையில் சேர்ந்ததாகவும் கூறினான். ஆனால் மார்ச் மாதமே (வழக்கு விசாரணை ஆரம்பிக்கும் முன்பே) ஒரு முழுமையான அறிக்கையை (PRE TRIAL STATEMENT – சுயசரிதை என்று கூட அதை கூறலாம்) கோட்சே வெளியிட்டுள்ளதை ஆய்வாளர்கள் பார்க்கத் தவறியிருக்கிறார்கள் என்பதுதான் வருந்தத்தக்க செய்தி. அதன் முழுபகுதி மராத்தியில் மட்டுமே இருப்பதும் அதற்கு காரணமாக இருக்கலாம்.
அந்த அறிக்கையில் கோட்சே ஆர்.எஸ்.எஸ்-ஐ விட்டு விலகியதாக எங்கேயும் குறிப்பிடவில்லை. இந்து மகாசபா மற்றும் ஆர்.எஸ்.எஸ் என இரண்டு அமைப்புக்காகவும் மாறிமாறி வேலை செய்தது அந்த அறிக்கையில் தெளிவாகவே இருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது. இது கோட்சேவினுடய சொந்த வாக்குமூலம். அந்த வாக்குமூலத்தை நிரூபிக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ்-ன் வருகைப் பதிவேடுகளில் 1941-ல் நா.வி.கோட்சே-பூனா என இருப்பது அதை உறுதி செய்கிறது. கோட்சே மட்டுமல்ல பல உறுப்பினர்கள் இந்துமகா சபாவிலும் ஆர்.எஸ்.எஸ்-சிலும் சேர்ந்து இரட்டை உறுப்பினராக இருப்பது உறுதியாகிறது. பல வரலாற்று ஆசிரியர்கள் இந்த இரண்டு அமைப்புகளும் வெவ்வேறானது என்றும் சில சமயங்களில் ஒன்றொக்கொன்று முரண்பட்டுக் கூட இருந்துள்ளதாகவும் கருதுகிறார்கள். ஆனால் இந்த இரண்டு அமைப்புகளுக்கான உறவு என்பதை காந்தி கொலைக்கு முன் மற்றும் பின் என பிரித்தால் அதன் தலைகீழ் மாற்றம் காந்தி கொலைக்கு பின்பே நிகழ்ந்திருப்பது தெளிவாகிறது.
கோட்சேவின் சகோதரனான கோபால் கோட்சே, நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்-சை விட்டு விலகியதே இல்லை என 1994 பிரண்ட்லைன் இதழுக்கான பேட்டியில் கூறியிருப்பதையும் நாம் இதோடு பொறுத்திப்பார்க்க வேண்டும். கோபால் கோட்சே மேலும் கூறுகையில், சகோதரர்கள் நாங்கள் நாலு பேரும் வீட்டில் வளர்ந்ததைவிட ஆர்.எஸ்.எஸ் பயிற்சிக் கூடங்களில் வளர்ந்ததுதான் அதிகம் எனவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாதுராமை கைகழுவிய விதம் தனக்கு அதிர்ச்சியாக இருந்தது எனவும் அதே பேட்டியில் தெரிவித்துள்ளான்.
ஆர்.எஸ்.எஸ் உடனான நாதுராம் கோட்சேவின் பயணம் அவனது இளம் வயதிலேயே ஆரம்பித்துவிட்டது. சாவர்க்கரின் நேரடித் தொடர்பில் அவன் தனது இளமை காலத்தைக் கழித்ததில் தொடங்கி அவன் இந்துத்துவத்தின் பிடியில் இருந்து என்றுமே விடுபட்டதில்லை.
சித்பவன் பார்ப்பனர்கள் – சாவர்க்கர் – கோட்சே – ஹெக்டேவர் – ஆர்.எஸ்.எஸ்
அதற்கு கோட்சேவின் சாதியும் ஒரு காரணம் எனலாம். மராத்திய சித்பவன் பார்ப்பனர்கள் இந்துத்துவ அடிப்படைவாதத்திற்கு பெயர் போனவர்கள். பாலகங்காதர் திலக், பிளேக் நோயை விரட்ட எலிகளை கொல்ல முடிவெடுத்த பூனா கமிசனரை படுகொலை செய்த சபேக்கர் சகோதரர்கள் என பயங்கரவாதத்தின் பிறப்பிடம்தான் இந்த சித்பவன் பார்ப்பனர்கள். வரலாற்று ரீதியாகவே முகலாயர்களை எதிர்த்தவர்கள், பதான்களை வென்றவர்கள், பேஷ்வா அரசை நிறுவி பிறரை அடக்கி ஆண்டவர்கள் என்ற இந்துத்துவ வெறி, இந்த பார்ப்பனர்களிடம் அதிகம் உண்டு. தன் சாதியைச் சேர்ந்த சாவர்க்கர் கூறிய கொள்கைகளை அப்படியே உள்வாங்கி பரப்புவதில் கோட்சேவுக்கு சாதிப் பெருமை தலைக்கேறியிருந்தது.
இங்கிலாந்து சென்று கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த சாவர்க்கர் அங்கிருந்து கொண்டே, இந்தியாவில் வெள்ளை அரசுக்கு எதிரான சதியை செய்ததாகக் கூறி அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட செய்தி அனைவரும் அறிந்த ஒன்று. அந்தமான் சிறையின் கொடுமை தாங்க முடியாததால் பிரிட்டிஷ் அரசிடம் பல மன்னிப்புக் கடிதம் எழுதி மகராஷ்ட்டிரா வந்தடைந்தான் சாவர்க்கர். இனி வெள்ளை அரசை எதிர்ப்பதில்லை என முடிவெடுத்த சாவர்க்கர் இசுலாமியர்களை எதிர்க்க இந்து மகாசபையில் தன்னை இணைத்துக் கொண்டான். அதன்படியே ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என காந்தி மேற்கொண்ட எந்த போராட்டத்திலும் பங்கேற்காமல் அதற்கு எதிரான பரப்புரையை செய்வதிலேயே சாவர்க்கரின் அரசியல் இருந்தது. 1923-லேயே ‘இந்துத்துவா : இந்து என்பவன் யார்’ என்ற புத்தகத்தை சாவர்க்கர் எழுதி, அதில் இந்துக்கள் மட்டுமே இந்தியர்கள் எனவும், அவர்கள் மட்டுமே இந்த பூமியை புனிதமாகக் கருதுகிறார்கள் எனவும் பதிவு செய்தான். மேலும் நாம் அனைவரும் இந்துக்கள், நாம் அனைவரும் ஒரு தேசத்தை சேர்ந்தவர்கள், நாம் அனைவரும் வேதத்திலிருந்து வந்தவர்கள், நாம் அனைவரும் சமஸ்கிருதத்தால் ஒன்றினைந்தவர்கள் என இசுலாமியர்கள் இந்த தேசத்தவர்கள் அல்லர் என்று முதன் முதலில் பதிவு செய்தது சாவர்க்கர்தான். சாவர்க்கர் உட்பட பல இந்துத்துவ அடிப்படைவாதிகளை அடித்தளமாகக் கொண்டே 1925-ல் ஹெட்கேவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தொடங்கினான்.
மகராஷ்டிராவில் ரத்தினகிரி எனும் ஊரில்தான் அந்தமானில் இருந்துவந்த சாவர்க்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தான். அங்குதான் பல நாட்கள் சாவர்க்கரின் இல்லத்தில் கோட்சே-சாவர்க்கர் உரையாடல் நிகழ்ந்தது. முதலில் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின்பால் ஈர்க்கபட்ட நபராகவே கோட்சே இருந்திருக்கிறான். அவனுடைய சிறுவயதில் பனிரெண்டாம் வகுப்பு மறுதேர்வை ஒத்துழையாமை இயக்கத்தின் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாகவே கைவிட்டதாக தன் நண்பர்களிடம் கோட்சே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. சாவர்க்கரிடம் நெருக்கம் ஏற்பட்ட போதும் குடும்ப பாரம் அதிகரித்தமையால் கோட்சே ரத்னகிரியை விட்டு கிளம்பி சங்லி என்ற ஊருக்கு பிழைப்பதற்காக இடம்பெயர்ந்தான். அங்கு சுயதொழிலாக தையல் கலையைக் கற்று தனியாக கடை ஒன்றை கோட்சே நடத்த ஆரம்பித்தான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாக்பூர் பார்ப்பனர்களால் துவங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது கிளையை சங்லியிலும் நிறுவியது. சாவர்க்கரின் இசுலாமிய எதிர்ப்பும் ஹெட்கேவரின் இசுலாமிய எதிர்ப்பும் ஒன்றொக்கொன்று சளைத்ததல்ல. அதன் தலைவர் ஹெட்கேவர் இசுலாமியர்கள் அனைவரும் நச்சு பாம்புகள் எனவும், அவர்களுக்கு காந்தி ஆதரவாக இருப்பதாகவும் சாடினார். தனது ஊரில் ஆர்.எஸ்.எஸ் கிளை நிறுவப்பட்டது என தெரிந்தவுடன் கோட்சே தன்னை ஆர்.எஸ்.எஸ்-ல் உடனடியாக இணைத்துகொண்டான்.
ஆர்.எஸ்.எஸ்-ன் லிமாயே – கோட்சே
சங்லியில் ஆர்.எஸ்.எஸின் பொறுப்பாளராக பாஸ்கர் லிமாயே என்ற பார்ப்பனர் நியமிக்கப்பட்டான். இவன் பின்னாட்களில் ஆர்.எஸ்.எஸ்-ன் மகராஷ்ட்டிர தலைவராக உயர்ந்தான். இந்த பாஸ்கர் லிமாயே, சங்லியில் இருந்த நாட்களில் தனக்கு பக்கபலமாக இருந்ததாகவும், தனக்கு தொழில் ரீதியாக உதவியதாகவும் கோட்சே தன்னுடைய மார்ச்-1948 வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொழில் நிமித்தமாக புனே சென்ற கோட்சேவுக்கு அங்குள்ள ஆர்,எஸ்.எஸ் அமைப்பினரிடம் தொடர்பேற்படுத்தி கொடுத்ததும் இதே லிமாயேதான். அங்கு தையல் தொழிலில் ஏற்கனவே ஈடுப்பட்டிருந்த விஷ்னுபந்த என்பவருடன் சேர்ந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கு தேவையான காக்கி உடைகளை தைத்துக் கொடுத்து தன் தொழிலை பெருக்கியதாக கோட்சேவே பதிவு செய்கிறான். 1930-க்கு பிறகு சாவர்க்கரை ஒரு முறை மட்டுமே சந்தித்திருந்த கோட்சே, வீட்டுக் காவலில் இருந்து சாவர்க்கர் விடுதலையான பின்பு 1937-க்கு பிறகே மறுபடியும் இணைந்து பயணிக்க ஆரம்பிக்கிறார்கள்.
1938-40 களில் இந்து மகாசபையில் அதிகாரப்பூர்வமாக இணைந்தாலும் ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து வெளியேறியதாக எங்கும் கோட்சே அந்த காலக்கட்டத்தில் பதிவு செய்யவில்லை. சங்லியில் தன்னை ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இணைத்துக் கொண்ட கோட்சே 1948 வரை ஆர்.எஸ்.எஸ்-காராகவே வாழ்ந்தான் என்பதுதான் உண்மை. பல வரலாற்று ஆய்வாளர்களும் சாவர்க்கர் இந்து மகாசபையின் தலைவரானவுடன் ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து வெளியேறி கோட்சே இந்து மகாசபையில் தன்னை இணைத்துகொண்டதாகவே பதிவு செய்கிறார்கள். ஆனால் டிசம்பர் 1937-ல் சாவர்க்கர் இந்து மகாசபையின் தலைவரான பின்பு 1941-ல் கூட ஆர்.எஸ்.எஸ் பதிவேடுகளில் கோட்சேவின் பெயர் இடம்பெற்றுள்ளது. கோட்சே எந்த இடத்திலும் தான் எப்போது ஆர்.எஸ்.எஸை விட்டு வெளியேறினான் என்பதை எந்த வாக்குமூலத்திலும் குறிப்பிடவே இல்லை.
ஹைதராபாத் சிறையில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி
கோட்சே இந்த இரண்டு அமைப்புகளுக்குள்ளும் இருந்து இரண்டையும் எப்படி இந்துத்துவ அடிப்படைவாதத்திற்கு பயன்படுத்துவது என்ற சிந்தனையில் தீவிரம் காட்டினான். 1938-ல் ஹைதரபாத் நிஜாமுக்கு எதிராக இந்துமகா சபையும் ஆரிய சமாஜும் இணைந்து போராட்டத்தை நடத்தினர். அப்போது சாவர்க்கருக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல் உத்திகளை விளக்கி கோட்சே ஒரு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது. ஹெட்கேவர் எவ்வாறு இளைஞர்களை ஈர்க்கிறார் போன்ற பல விஷயங்களை கோட்சே அதில் விளக்கியிருப்பான். இந்து மகாசபா முன்னெடுத்த போராட்டத்தில் கைதாகி ஹைதரபாத் சிறையில் இருந்த போதும், ஆர்.எஸ்.எஸ் காக்கி டவுசருடனும் கருப்பு தொப்பியுடனுமே கோட்சே வலம் வந்ததாக, உடன் கைதான இந்து மகாசபாவின் பொது செயலாளர் வி.ஜெ.தேஷ்பாண்டே பின்னொரு பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளான். ஆர்.எஸ்.எஸ்-ன் உறுதிமொழியும் உடற்பயிற்சியும் சிறையில் கட்டாயம் கோட்சே மேற்பார்வையில் நடைபெறும் என்றும் அந்த பேட்டியில் தேஷ்பாண்டே வெளிப்படுத்தியிருப்பான்.
ஆர்.எஸ்.எஸ் சுயம்சேவகர்கள் இந்து மகாசபையின் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்து ‘தேசிய படை’யை கட்டி அமைப்பதில் எனக்கு பெருமிதமாக உள்ளது என ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான எல்.வி.பராஞ்சிபே தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதையும், இதையும் நம்மால் இணைத்துப் பார்க்க முடியும். 1948-க்கு பிறகான இந்து மகாசபா – ஆர்.எஸ்.எஸ் உறவுக்கு நேர் எதிராக மிக நெருக்கமாக ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்ததாகவே அதன் இயக்கம் இருந்திருக்கிறது என்பது நமக்கு பல வகையில் தெளிவாகிறது.
அனைத்திற்கும் மேலாக காந்தி படுகொலைக்குப் பின்பு, ஆர்.எஸ்.எஸ்-ன் நாக்பூர் அலுவலகத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இன்றும் டெல்லி நேரு அருங்காட்சியகத்தில் இருக்கிறது. அதில் 1940 பம்பாய் சந்திப்பில் கலந்துகொண்ட விவரம் இடம்பெற்றிருக்கிறது, கோட்சே, சாவர்க்கர், லிமாயா, கோல்வாக்கர் என இந்துமகாசபா-ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அனைவரும் வேறுபாடின்றி கலந்துகொண்டுள்ளனர்.
கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்குமான உறவு 1930-களின் ஆரம்பப் பகுதியில் தீவிரமடைந்த ஒன்று. கோட்சே இந்து மகாசபையில் இருந்த போதும், பின்னர் இந்து ராஷ்டிர தள் என்ற அமைப்பை தோற்றுவித்த போதும் பின்னர் இரண்டு பத்திரிக்கைகளை நடத்திய போதும் வெளிப்படையான உறுப்பினராகவே இருந்துள்ளான். 1942-ல் ராஷ்டிர தள் என்ற அமைப்பைத் தொடங்கி தலைமைப் பொறுப்பு வகித்தவர் மகராஷ்டிர மாநில ஆர்.எஸ்.எஸ் தலைவரான லிமாயேதான். கோட்சேவும் ஆப்தேவும்தான் இந்த அமைப்பின் நிர்வாகப் பொறுப்பை வகித்தவர்கள். ஆக்டோபசைப் போல கைகள்தான் வேறு வேறு, ஆனால் மூளை ஒன்றுதான்..
1940களில் கோட்சேவும் ஆப்தேவும் இணைந்து அக்ரணை என்றும் இந்து ராஷ்டிரா என்றும் பத்திரிக்கைகளை நடத்தினர். அனைத்திலும் காந்தியின் அரசியல் கடுமையாக சாடப்பட்டது. சாவர்க்கர் அதற்கு நிதி அளித்து ஊக்குவித்தது என அனைத்தும் வரலாறு அறிந்தது. ஆனால் காந்தி கொலை வழக்கில் சாவர்க்கரோ, ஆர்.எஸ்.எஸ் அமைப்போ தண்டிக்கபடவே இல்லை. சாவர்க்கரோ, பிற இந்துத்துவவாதிகளோ தண்டிக்கப்பட்டால் இந்தியாவின் இசுலாமியர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும் என்று இந்த வழக்கிலிருந்து முக்கிய குற்றவாளிகளை தப்பவைக்க காரணம் கூறப்பட்டது.
இன்று ஆர்.எஸ்.எஸ்-ன் தேர்தல் பிரிவான பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் கோட்சேவை தேசப்பற்றாளன் என நாடாளுமன்றத்திலேயே முழங்குகிறார்கள். உத்திரப் பிரதேச பா.ஜ.க அரசு மீரட் மாவட்டத்தை பண்டிட் நாதுராம் கோட்சே நகர் என பெயர் மாற்றப் போவதாக அறிவிக்கிறது. கோட்சே தேசப்பற்றாளன், ஆனால் அவன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவனில்லை என்பதன் மூலமாக கோட்சேவின் சித்தாந்தைப் பரப்பவும் முடியும், அதன் எதிரிவினையிலிருந்து தப்பிக்கவும் இயலும் என அரசியல் கணக்கே இந்த வரலாற்றுத் திரிபு. ஆனால் உண்மையை நாம் உரக்க சொல்வோம்.
கோட்சே ஆர்.எஸ்.எஸ்-காரனே.
ஜனவரி மாத ‘THE CARAVAN’ இதழில் வந்த ‘THE APOSTLE OF HATE – HISTORICAL RECORDS EXPOSE THE LIE THAT NATHURM GODSE LEFT THE RSS’ என்ற கட்டுரையில் ஒரு சிலவற்றை தமிழ்ப்படுத்தி இங்கு தரப்பட்டுள்ளது.