johnson & johnson ஜான்சன் & ஜான்சன்

சொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்!

அரசு புள்ளி விபரங்களை எடுத்துப் பார்த்தால் இந்தியாவில் கடந்த ஒரு மாதத்தில் ஒரு நாளைக்கு முப்பதாயிரத்தில் இருந்து நாற்பதாயிரம் பேர் வரை கொரோனா தொற்றால் பாதிப்பப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் 94 கோடிக்கும் அதிகமாக உள்ள வயது வந்தோருக்கு தடுப்பூசி அளிக்க ஒன்றிய அரசு விரும்புவதாக இந்திய பிரதமார் கூறினார். ஆனால் இதுவரை 14% இந்தியர்களுக்கு மட்டும்தான் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தான் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் ஏறத்தாழ 60 கோடி (single-shot Johnson & Johnson vaccines) ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாக உள்ளது. 

தற்போது இந்தியாவில் போடப்படும் தடுப்பூசிகள்

தற்போது இந்தியாவில் போடப்பட்டு வரும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் உள்ளூர் மாறுபாடான கோவிஷீல்டை  புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரித்து வருகிறது. அதேபோல் கோவாக்ஸின் தடுப்பூசி ஐதராபாத்தை சார்ந்த பாரத் பயோடெக் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஸ்புட்னிக் வி தடுப்பூசியை டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகம் பெற்ற உரிமத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனுடன் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவும் செப்டம்பரில் இருந்து கூடுதல் உற்பத்தியில் இறங்கியுள்ளது. இதுமட்டும் இல்லாமல் இன்னும் பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசி தயாரித்து வருகிறது. மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் மற்றும் ZyCoV-D போன்ற பல்வேறு வகையான தடுப்பூசிகளும் இதில் அடங்கும்.

QUAD கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு

கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் நடந்த  QUAD (Quadrilateral Framework) உரையாடலில் இந்திய பசுபிக் பகுதியில் கொரோனா கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி குறித்து சில இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வரும் 2022-ம் ஆண்டின் இறுதிக்குள் ஜான்சன் & ஜான்சன் கம்பெனி ஒரு பில்லியன் டோஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்ய இலக்கு வைக்கப்பட்டது. 

ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியின் விநியோகம்

இந்தியாவின் Biological E Limited நிறுவனமும், ஜான்சன் & ஜான்சன்  சேர்ந்து தயாரிக்கும் இந்த தடுப்பூசிக்கு  அமெரிக்க மேம்பாட்டு நிதி நிறுவனம் (US Development Finance Corporation) ஆதரவளிக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. அதேபோல் Biological E Limited மற்றும் ஜான்சன் & ஜான்சன் இணைந்து தயாரிக்கும் இந்த தடுப்பூசியின் சந்தை விநியோகம் மற்றும் ஏற்றுமதி குறித்தான அனைத்து முடிவுகளையும் அமெரிக்காவே இறுதிசெய்யும் என்று QUAD மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் மற்றும் கோவிசீல்டு போன்ற தடுப்பூசி விநியோகத்திற்கு இதுபோன்ற எந்த நிபந்தனையும் இல்லை. 

ஒரு டோஸ் போட்டாலே போதும்

நடைமுறையில் இந்தியாவில் போடப்படும் கோவாக்சின் மற்றும் கோவிசீல்டு போன்ற தடுப்பூசிகள் இரண்டு டோசுகளாக போடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகள் ஒருமுறை போட்டாலே போதும். அதன் வீரியம் மற்ற தடுப்பூசிகளைவிட சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி ஹைதராபாத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இந்த தடுப்பூசிகள் எங்கு செல்கிறது என்பதை ஜான்சன் & ஜான்சன் நிறுவனமே ஒன்றிய அரசாங்கத்திற்கு இதுவரை எந்தவித தெளிவான விளக்கமும் கொடுக்கப்படவில்லை. 

தடுப்பூசி ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கும் இந்திய அரசு 

இந்தியாவில் மூன்றாம் அலையை கருத்தில்கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் தடுப்பூசி ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா தலைவர்கள் கலந்துகொள்ளும் QUAD மாநாட்டில் மோடி கலந்துகொள்ள அமெரிக்கா சென்றுள்ளார். ”இந்த மாநாட்டில் தடுப்பூசி ஏற்றுமதி குறித்து மிக முககியமான சில முடிவுகள் எடுக்கப்படும். அதன் அடிப்படையில் சர்வேதச மட்டத்தில் தடுப்பூசிகள் தேவைக்கு எற்ப ஏற்றுமதி செய்யப்படும்” என்று ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.  

இந்த சூழ்நிலையில் கடந்த 20-ம் தேதி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்தியா அடுத்த மாதத்திலிருந்து கோவிட் -19 தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதை மீண்டும் தொடங்கும் என்று அறிவித்ததுள்ளார். இந்தியப் பிரதமர் QUAD மாநாட்டில் கலந்துகொண்டு சில முடிவுகளை இறுதி செய்வதற்கு முன்பே சுகாதாரத்துறை அமைச்சர் இதுபோன்ற அறிவுப்புகளை வெளியிட்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

சிவில் அமைப்புகள் எதிர்ப்பு

கடந்த செப்டம்பர் 16-ம் தேதி, 14 சிவில் சமூக அமைப்புகள் ஒன்றுசேர்ந்து  ஜான்சன் & ஜான்சன் கம்பெனி, இந்திய ஒன்றிய அரசு மற்றும் அமெரிக்க அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளன. அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது ”ஜான்சன் & ஜான்சன்  கம்பனி தென்னாப்பிரிக்காவில் மில்லியன் கணக்கான கோவிட்  தடுப்பூசிகளை தயாரித்து அந்த நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்யாமல் அதற்குப் பதிலாக ஐரோப்பாவிற்கு அனுப்பியது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா தங்கள் உள்நாட்டுத் தேவைகளுக்கு அதிகமாகவே தடுப்பூசிகளை பதுக்கி வைத்து வருகின்றன.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டது 

கள நிலவரப்படி, ஐரோப்பிய யூனியன் (EU) மற்றும் அமெரிக்கா (US) நாடுகளில் 50%க்கும் அதிகமான பெரியவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் இதுவரை 13% மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல் ஆப்ரிக்க கண்டத்தில் வெறும் 3% மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது போன்று தடுப்பூசி உடனடி தேவைப்படும் பகுதிகளுக்கு பகிர்ந்து கொடுக்காமல் வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களின் வணிக பலத்தைப் பயன்படுத்தி இறக்குமதி செய்வது ஆபத்தானது என்று அக்கடிதம் கூறுகிறது. 

மேலும் அந்த கடிதத்தில் “ஜான்சன் & ஜான்சன்” கம்பனி வளரும் நடுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. இந்நிறுவனம் ஆப்பிரிக்காவில் இருந்து மில்லியன் கணக்கான தடுப்பூசிகளை ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதி செய்தது. சமூக ஆர்வலர்களின் தொடர் முயற்சிக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியம் மில்லியன் கணக்கான தடுப்பூசிகளை திரும்பவும் ஆப்ரிக்க கண்டத்திற்கு அனுப்ப ஒப்புக்கொண்டது” என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படலாம் என்று சிவில் சமூக அமைப்பினர் கூறுகின்றனர். ஜான்சன் & ஜான்சன் மற்றும் ஒன்றிய அரசாங்கம் இதுரை எந்தவித தெளிவான விளக்கமும் கொடுக்காத சூழ்நிலையை ஆய்வு செய்து பார்க்கையில் ஏறத்தாழ 60 கோடி தடுப்பூசிகள் வருகின்ற காலத்தில் ஜரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் ஏற்றுமதி செய்யப்படலாம் என்று கூறுகின்றனர். 

இந்தியாவின் மீது அமெரிக்கா கொடுக்கும் அழுத்தம்

இந்த மாத தொடக்கத்தில், வாஷிங்டன் போஸ்ட் ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் ”அமெரிக்கா உட்பட செல்வந்த நாடுகள் தங்கள் சொந்த குடிமக்களுக்கு கொரோனா வைரஸ் பூஸ்டர் ஷாட்களை வழங்க முன்வருகிறது. எனவே தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கு இந்தியாவின் மீது அழுத்தம் கொடுக்கிறது” என்று கருத்து தெரிவித்துள்ளது.

கடந்தத ஆகஸ்ட் மாதம் இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் ஜான்சன் & ஜான்சன் ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு அவசரப் பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கிய பிறகு அதிவிரைவாக ஜான்சன் & ஜான்சன் தனது உற்பத்தியை பெருக்கியது. அங்கு உற்பத்தியாகும் தடுப்பூசிகள் எங்கு அனுப்பப்பட உள்ளன என்று எனக்கு தெரியாது என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகிமா டாட்லா (Mahima Datla) Nature என்ற சர்வதே ஆய்வு இதழுக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

உத்தரவாதத்தை உறுதி செய்யாத மோடி அரசு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் இந்தியர்களின் உழைப்பில், இந்திய மண்ணில் உற்பத்தி செய்யப்படுகின்றது. எனவே தடுப்பூசி வினியோகத்தில் இந்தியாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று சிவில் சமூக அமைப்புகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படும் என்ற உத்தரவாதத்தை இதுவரை மோடி அரசு உறுதி செய்யவில்லை.

2021-ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் வயது வந்த அனைவருக்கும் கட்டாயம் தடுப்பூசி போடப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருந்த நிலையில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்து ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் கொடுப்பாரா அல்லது தனது நாட்டின் சக ஏழை குடிமகனுக்கு கொடுப்பாரா என்ற கேள்வி அவர்முன் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *