பெரியாரும் தமிழறிஞர்களும்

பெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்

‘தமிழன்பர் மாநாட்’டையும், ‘அறிவுரைக்கொத்து’ எதிர்ப்பையும் முன்வைத்து…

8.பெரியாரும் இராசமாணிக்கனாரும் (12/3/1907 – 26/5/1967): 

அ. தமிழன்பர் மாநாட்டை முன்வைத்து..

“தமிழுக்கு ஆபத்து வரும் போதெல்லாம் முன்னடியாராக நின்று அவ்வின்னலை நீக்குதல் பெரியாரது இயல்பு. 1933′- இல் சென்னை பச்சையப்பன்கல்லூரியில் தமிழன்பர் மாநாடு கூட்டப்பட்டது. ‘பேசுவது போல் எழுதவேண்டும்’ என்பது அம்மாநாட்டில் முடிவு செய்யப்படுவதாக இருந்தது. இத்தீயமுடிவு வெற்றி பெற்றிருப்பின் செந்தமிழ் வழக்கு ஒழியும் என்பதை உணர்ந்த பெரியார்  திரு ‘குத்தூசி’குருசாமி முதலிய தமிழ்வீரர்கள் அம்மாநாட்டில் கலந்துகொண்டதன் மூலம் நிறைவேறா வண்ணம் செய்வித்தார். அன்று பெரியாரும் அவர்தம் வீரரும் தலையிட்டதன் மூலம் பெருஞ்செல்வாக்குப் படைத்த தமிழன்பர்களால் கூட்டப்பட்ட அம்மாநாட்டில் செந்தமிழ் வழக்கினை நிலைநிறுத்திய பெருமை பெரியார் அவர்கட்கே உண்டு என்பார் மா. இராசமாணிக்கனார் (‘பெரியார் பார்வை’ இதழ்த்தொகுப்பு)

மா.ராசமாணிக்கனார்

இத்தொடர்பிலான மேலதிகப் புரிதல்களுக்கு மணிக்கொடியாளர் தரப்பையும் ஒத்துறழ்ந்து நோக்குவோம். இம்மாநாட்டை நடாத்தியது ரசிகமணி டிகேசியே! இதில் உவேசா, திருவிக, வையாபுரியார் முதலான தமிழறிஞர்களும் வட்டத்தொட்டி வகையறாவினரும் பங்கேற்றனர். இதில் உலக இலக்கிய இயக்கத்தில் தமிழ் இலக்கியத்தை இணைக்கும் ஒரு சொல்கூட இல்லை என்பதுடன் பாரதி அறவே புறக்கணிக்கப்பட்டதனையும், கம்பன் மட்டுமே கொண்டாடப்பட்டதையும் எடுத்துரைப்பார் பி.எஸ்.ராமையா (‘மணிக்கொடி காலம்’)

மணிக்கொடி காலம் – பி.எஸ்.ராமையா

தமிழன்பர் மாநாடு குறித்த பெரியார், மாரா,ராமையா  பார்வைகள் வெவ்வேறு திசையில் பயணிக்கக் கூடியனவே. ஏனைப்பிற தமிழறிஞர் பண்டித மனோபாவத்திலும் (வையாபுரியார் இதில்விதிவிலக்கே); வட்டத்தொட்டியர் ரசனை மனோபாவத்திலும்; தம்முள் முரண்பட்ட போதிலும் மணிக்கொடியினரின் புதுவது புனையும் போக்கை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதில் தம்முள் ஒன்றியே கிடந்தனர்.

இந்தத் தமிழன்பர் மாநாடு ‘பண்டிதமரபு’ ×’ வட்டத்தொட்டி’ ரசனை அபிப்ராயமரபு இவற்றுக்கூடான இருவேறு செல்நெறிமோதல் மட்டுமேயன்று. பெருஞ்செல்வாக்குப் படைத்த என இராசமாணிக்கனார் சுட்டுவதன் பின்னணியில் வீற்றிருப்பவர் ஆச்சாரியாரே. இத்தகு சனாதனத்தின் தலையீட்டுத் தருணங்களில் எல்லாம் தமிழறிஞர்க்குப் பக்கபலமான காவலரணாய் அரவணைத்தவர் பெரியார்தாமே!

இதிலொரு முரண் தொனியும் காணக்கிடக்கின்றது. பேசுவது போல் எழுதவேண்டும் எனுந் தீயமுடிவு வெற்றி பெற்றிருப்பின் செந்தமிழ் வழக்கு சிதைந்தொழியும் என்பதை உணர்ந்த பெரியார் தலையீட்டுக் காத்த பெருமை பெரியாருக்கே உண்டென்னும் மாரா கருத்துக்கு மாறான இன்னொரு உண்மையும் இத்தொடர்பில் ஒத்துறழ்ந்து நோக்குவோமாக:

“”பெரியார் ஈ.வெ.ராமசாமி, கு.காமராஜ் ஆகிய மக்கள் தலைவர்கள்,தமிழ்ச்சூழலில் பேச்சுமொழிக்கும், எழுத்துமொழிக்கும் இடைவெளி இல்லாத மேடைப் பேச்சைக் கைக்கொண்டனர். தமிழ்மொழி இயல்பாக இரட்டை வழக்கை அடிப்படையாகக் கொண்ட மொழி. ஆனால் பெரியார் இம்மரபை உடைத்துப் பேசுவதைப் போல் எழுதினார். இதனால், கேட்போர் மிக எளிதாக அவரது உரையாடலுக்குள் செல்ல முடிந்தது. மேலும் கேள்வி பதில் முறையில் அமைந்த பேச்சு பெரியாரின் பேச்சு. வெகுசன அரசியல் பங்கேற்பு, சனநாயகப்படுத்தல் ஆகிய நிகழ்வுகளுக்குப் பெரியாரின் மொழி உதவியது.” – வீ.அரசு (‘உங்கள் நூலகம்’  யூன், 2017)

சனாதனத்தின் தலையீடு அம்மாநாட்டின் பின்னணியில் ஆச்சாரியார் வடிவத்தில் இருந்தமையேயாகும் இது குறித்து மேலதிகமாக  இறுதியிற் காண்போமாக.

*

ஆ. மறைமலையாரின் ‘அறிவுரைக்கொத்து’  நூற்சிக்கலை முன்வைத்து.

அறிவுரைக் கொத்து – மறைமலையடிகள்

“தமிழாராய்சித் துறையின் இரண்டாம் காலப்பகுதியில் (1920 -70) தொடக்க முதலாகவே பல்வேறு வகையான கருத்துப்பள்ளிகள் உருவாகின. வைதிகமரபு சாராத கருத்துப்பள்ளிகள்,வைதிக மரபுக்கு எதிரான ஆய்வுகள், தனித்தமிழ் இயக்கச் சார்புநிலை ஆய்வுகள் என ஒரு கருத்துப்பள்ளி ஆய்வுலகில் உருவாயிற்று. இதற்கு மாறாக இந்திய தேசியத்தளத்தில் தமிழ்ப்பண்பாட்டையும் ஒரு கூறாக வைத்து ஆராயும் ஆய்வறிஞர்களும் இருந்தனர். மறைமலையடிகள், எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை,நாவலர் பாரதியார் ஆகியோரை முதல்வகைக் கருத்துப்பள்ளியின் முன்னோடிகளாகச் சொல்லலாம். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையை இரண்டாம் வகையினரின் முன்னோடி என்று குறிப்பிடலாம்.”

“வையாபுரிப்பிள்ளையின் ஆராய்ச்சி, சொல்லாராய்ச்சி ஆகியவற்றுக்கு எதிர்நிலையாக இக்காலப்பகுதியில் உருவான மூன்று ஆராய்ச்சி அறிஞா்கள் இராசமாணிக்கனாரும், ஔவை துரைசாமிப் பிள்ளையும், ஞா. தேவநேயப் பாவாணரும் ஆவர்.”

“மா.இராசமாணிக்கனாரின் ‘,கால ஆராய்ச்சி’ என்ற நூலும்,’பல்லவர் வரலாறு’ம் அறுபதுகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் அவர்செய்த ‘பத்துப்பாட்டு’ ஆராய்ச்சியும் குறிப்பிடத் தகுந்தவை”

“சென்னைப் பல்கலைக்கழகத்தில் மறைமலையடிகளாரின் ‘அறிவுரைக்கொத்து’ நூலுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு இதற்கொரு எடுத்துக்காட்டாகும். தமிழிலக்கிய ஆராய்ச்சியானது மொழி, இலக்கியம் சார்ந்ததாக மட்டும் அமையாமல் அன்று எதிர்நிலை கொண்டிருந்த தேசிய திராவிட இயக்கக் கருத்தியல்களின் போராட்டக்களமாக மாறியதற்கு மேற்குறித்த நிகழ்ச்சியே சான்றாகும்.” தொ.பரமசிவன் (‘அன்னை அஞ்சுகம் தந்தை முத்துவேலர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்’)

*

“1935-ல் தவத்திரு மறைமலை அடிகளார் எழுதிய ‘அறிவுரைக்கொத்து’ எனும் நூலைப் பல்கலைக்கழகத்தார் பி.ஏ. வகுப்புக்குப் பாடமாக வைத்தனர். அதில் சில குறைகள் இருப்பதாகச் சிலர் கூக்குரலிட்டனர். சிலர் அதைப் பாடநூல் பட்டியலிலிருந்து நீக்கிவிட வேண்டுமென்று செய்தித்தாள்களில் எழுதினர். எதிர்ப்புக் கட்டுரைகளும் செய்தித்தாள்களில் வெளிவந்தன. இந்நிலையில் பெரியார் அவர்கள் இவ்விவாத அரங்கு குறித்துத் தம் ‘குடிஅர’சிலும் ‘பகுத்தறி’விலும் பல கட்டுரைகள் எழுதினார்கள். நாடெங்கும் சுற்றிச் சொற்பொழிவாற்றினார்கள். இறுதியில் அந்நூல் பாடநூலாகவே மாணவரால் படித்து முடிக்கப்பட்டது. பெரியாருக்கும் மறைமலை  அடிகளாருக்கும் சமயத்துறையில் கருத்து வேறுபாடு இருப்பினும் அதனைப் பொருட்படுத்தாது அவரைத் தாங்கிப் போர் முழக்கம் செய்தமை, பெரியாருக்குத் தமிழின் பாலுள்ள அளப்பரிய பற்றினை நன்கு விளக்குகிறது.” – மா.இராசமாணிக்கனார்

இத்தொடர்பில் பெரியாரையும் (சைவத்) தமிழறிஞர்களையும் ஒன்றிணைத்தது தமிழென்பதினும், சனாதன வடமொழி ஆதிக்க எதிர்ப்பே எனலாம். இதற்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு:

“பழைய உணர்ச்சியைப் பின்பற்றி இன்று தன்மான உணர்ச்சிக்கட்சி (சுயமரியாதை இயக்கம்) தோன்றி இப்புரோகிதத் தொல்லையை ஒழிக்க முயன்று வருகின்றது.  அவ்வியக்கத்துக்குத் தலைமை தாங்கி நிற்கின்றவரை இவ்விருபதாம் நூற்றாண்டின் மார்ட்டின் லூதர்கிங் என்றே கூறலாம். நம் முன்னோர் முயன்று புரோகித நிகழ்ச்சியில் தோல்வி கண்டவராயினும், இன்றைய லூதர் வெற்றிகாண வேண்டும், காண்பார் என்பதே நமது அவா. ” – ந.சி.கந்தையா (‘ஆரியர் தமிழர் கலப்பு…)

இதன் மறுபக்கமாகக் கம்பராமாயணத்தை விமர்சித்த போது பெரியாரை ஆதரித்த மறைமலையாரே, மாறாகப் பெரியார் பெரியபுராணத்தை விமர்சித்தபோது அவருடன் முரண்பட்டதையும்,  இதே மூச்சில் நாம் கவனத்திருத்தியே நோக்கவேண்டும்.

*

இ. பெரியாரின் தாலிமறுப்புத் திருமணப் பரப்புரைக்கு வலுவான அடித்தளமாகக் ‘கட்டுடைக்கும் கலையின் முன்னோடி’ மாராவின் ஆராய்ச்சி

“மா.ரா. என்னும் ஈரெழுத்தே இவரைக் குறிக்க அன்றைய தமிழ்நாட்டில் புகழுடன் பொலிந்தது. இந்தப் பெயரைக் கேட்டால் தமிழ்நெஞ்சங்களில் இவரது “தமிழர் திருமணத்தில் தாலி” என்னும் நூலே கிளர்ச்சியூட்டும் எண்ணத்தை ஊற்றெடுக்கச் செய்யும். தமிழர் திருமணத்தில் தாலி கட்டுதல் கி.பி. பதினோராம் நூற்றாண்டில் ஏற்பட்ட புதிய பழக்கமே என்பதனையும் பண்டைத் தமிழகத்தில் இப்பழக்கம் இல்லை என்பதனையும் விரிவான பல சான்றுகளுடன் இவர் விளக்கியபோது தமிழ்நாடே அதிர்ந்தது.

தமிழர் திருமணத்தில் தாலி – மா.இராசமாணிக்கனார்

பழமைப்பித்தர்கள் இவரது கருத்தை எதிர்த்துரைக்க முயன்று சான்றுகள் இன்றி இடர்ப்பட்டனர். சங்க இலக்கியத்திலிருந்து நாச்சியார் திருமொழி வரை அடுக்கடுக்காகச் சான்றுகளை இவர் தொகுத்துரைத்துத் தமது நிலைப்பாட்டின் மெய்ம்மையை நாட்டினார். அதுவரை கல்வி என்பது கற்று, புரிந்துகொண்டு விளக்கத்துடன் மீண்டும் கற்பித்தல் என்னும் பொம்மலாட்டக் கூத்தாக இருந்தது. ஆனால் கட்டுடைக்கும் கலையின் முன்னோடியாகத் திகழ்ந்த மா.ரா. கல்வியைத் தகர்ப்புமைய நோக்குக் கொண்ட அறிவியக்கமாக மாற்றினார். காலங்காலமாகப் படிந்துகிடக்கும் பழமைப் பாசியை நீக்கி, கற்போர் உள்ளங்களில் அகற்றமுடியாமல் கப்பிக்கொண்டிருக்கும் அழுக்கைப் போக்கிப் பகுத்தறிவுச் சூரியனின் உதயத்தால் புதிய விடியலைப் புலரவைக்கும் பெரியாரின் நெறியில் உழைக்கும் பொருத்தமான கல்வியாளராக மா.ரா. தமிழ்கூறு நல்லுலகெங்கும் புகழுடன் உலா வந்தார்.

தந்தை பெரியாரின் தன்மான இயக்கம் பரந்துபட்ட அளவில் பார்ப்பன மறுப்பு, சாதி மறுப்பு, சடங்கு மறுப்பு என்பவற்றைப் பரப்புரை செய்து மூடத்தனத்தின் முடைநாற்றம் போக்கப் பாடுபட்டது. இதனைப் போலவே தாலி மறுப்புத் திருமணங்களையும் ஏற்படுத்திச் சமூகத்தில் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பெரியார் தாலி அணிவது தேவையற்றது என்பதை வலியுறுத்தி வந்தாலும் தாலி அணியும் திருமணங்களையும் தலைமை ஏற்று நடத்திவைத்துள்ளார். பெண் என்பவள் ஆணின் சொத்து என்ற பிற்போக்கு அடிமைக் கருத்தியலைத் தகர்த்தெறிவதே அவரது முதன்மை நோக்கமாக இருந்தது. அவரது பேச்சையே மேற்கோளாகக் காணலம்:

“இப்போது இங்குப் பெண்ணுக்குத் தாலி கட்டப்பட்டது. இதற்கு என்னதான் தத்துவார்த்தம் சொல்லப்பட்டாலும் இந்தத் தாலி கட்டுவதானது. ‘இந்தப் பெண், இந்த மாப்பிள்ளையினுடைய சொத்து’ என்கிற அறிகுறிக்காகத்தான். இந்தத் தத்துவம் சுலபத்தில் மாறிவிடும் என்று என்னால் கருத முடியவில்லை. தாலி கட்டாத கலியாணம் நடந்த போதிலும் மணப்பெண் மணமகனுடைய சொத்து என்பது மாறிவிடும் என்று  நினைக்க முடியவில்லை” (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், தொகுதி 1-3 (சமுதாயம்), பக்கம் 249)

பெரியாரின் பரப்புரைக்கு வலுவான அடித்தளமாக மா.இராசமாணிக்கனாரின் ஆராய்ச்சி அமைந்துள்ளதல்லவா? “
– மறைமலை இலக்குவனார்

“சாதியை ஒழிக்க தொடர்ச்சியான போராட்டம் தேவை. பெரியாரின் அதிர்ச்சி மதிப்பீடுகள் அதைச் செய்தன.”ஆண்தான் தாலி கட்டவேண்டுமா? ஆணுக்கு பெண் தாலி கட்டட்டும்”என்றார்.அப்படித்தான் சில திருமணங்களை அவர் நடத்தினார். அவருடைய உறுதி, அவர் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை எல்லாம் அவரை ஏற்றுக் கொண்டு, அவரைப்பின் தொடர வைத்தன. மன உறுதி மிக்கவராக இருந்தார். அவருடைய அதிர்ச்சி வைத்தியங்களுக்கு மக்கள் ஆதரவு இருந்தது.

பெரியாரின் கட்டளையை ஏற்று, தேவதாசிப் பெண்களை பல பெரிய மனிதர்கள் மணந்தார்கள். குத்தூசி குருசாமி, பூவாலூர் பொன்னம்பலனார், நெ.து.சுந்தரவடிவேலு, போன்ற பெரியவர்கள் எல்லாம் தேவதாசி இனப் பெண்களையே மணந்தனர். திருமண உறவுகளுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த சாதியைத் திருமண உறவுக்குள் மாற்றியதில் பெரியாரின் பங்களிப்பு ஏத்தகையது என்பதை எண்ணிப்பாருங்கள்.” – தொ.பரமசிவன்

‘தமிழர் என்ற தலைப்புக்குள் புகுந்தும் தமிழெனும் பாஷையின் பேராலும் பார்ப்பனச் சூழ்ச்சிகள்’

ஈ. பெரியாரின் பார்வையில் உவேசா

மூன்றிடங்களில் உவேசா பற்றிப் பெரியார் விமர்சித்து உள்ளதாகக் க.காமராசன் குறிப்பிடுவனவற்றுள் இரண்டு இடங்கள் முறையே தமிழன்பர் மாநாடு குறித்தததும், ‘அறிவுரைக்கொத்து’ குறித்ததுமாகும்:

“1933 -ஆம் ஆண்டு நடக்க இருந்த ‘தமிழர் அன்பர் மாநாடு’ தொடர்பாகக் ‘குடி அரசு இதழில் விவாதமொன்று நடந்தது. அந்த விவாதத்தில் தனது கருத்துகளைப் பதிவு செய்த கட்டுரையொன்றில் பெரியார், ‘பார்ப்பனர்கள் தமிழர்கள் என்ற தலைப்புக்குள் புகுந்து கொண்டு, பார்ப்பனரல்லாதார் என்ற உணர்ச்சியை நசுக்கி, பார்ப்பனிய ஆதிக்கம் பழையபடிக்குத் தொடர வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறார்கள்’ என எச்சரிக்கை செய்கின்றார் .

‘சமீப காலத்தில் தமிழில் மிக மேன்மையாய்த் தேறிய ஒரு பார்ப்பனரல்லாதார்க்கு, அதாவது சென்னை டி.பி.மீனாசஷிசுந்திரம், எ.ஏ.பி.எல்., (தெபொமீ). இவர் கல்வி விஷயத்தில் மிக்க தேர்ச்சி உடையவர். பல விஷயங்களில் பண்டிதர். தமிழை ஒரு சந்தோஷத்திற்காகப் படித்து இம்மாகாண மாணவர்களில் உயர்தர வகுப்பில் தேறியவர். தமிழில் உயர்தர வகுப்பில் தேறியவருக்குப் பரிசளிக்கவென்று திருவாவடுதுறைப் பண்டார சந்நிதியவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 1000 ரூபாய் பரிசு முறைப்படிக்கு அடைய தகுதி உடையவர். இப்படிப்பட்ட இவர் பார்ப்பனரல்லாதாராய் இருப்பதால் இவ்வருஷப் பரிசு இவருக்கு வழங்கப்படாமல் போயிற்று. இந்தப் பெருமை தோழர் மகா மகோபாத்யாயர் உ.வே.சாமிநாதையர் அவர்களுக்கே  சேர்ந்தது.

பார்ப்பனரல்லாதார் செய்யும் தற்காப்புக் காரியங்கள் பார்ப்பனத்துவேஷமாய்ப் போய்விடுகிறது. பார்ப்பனர் செய்யும் சகலவித கொடுமைகளும் அவர்களைப் பட்டதாரிகளாகவும் பதவிதாரர்களாகவும் ஆக்கிவிடுகிறது.’ – ஈ.வெ.ராமசாமி (‘குடி அரசு’, 19/11/1933)

இந்தக் குறிப்பை மேலும் தெளிவுபடுத்திக்கொள்ள முடியவில்லை. தெபொமீ பரிசு பெறுவதை எவ்வாறு உவேசா தடை செய்தார் எனத் தெரியவில்லை. ஆனால், உவேசா பார்ப்பனரல்லாத ஒரு சிறந்த தமிழ் மாணவர், அறிஞர் மீது வெறுப்பு காட்டினார் என்பது பெரியார் கூற்றின் சாரம்.” – க.காமராசன் (’உங்கள் நூலகம்’, யூன் 2017)

காமராசன் கட்டுரை (‘உவேசாவும் பெரியாரும்’) தொடரும் எனக் குறிப்பிடப்பட்டாலும் அதன்பின் இவ்விதழில் வெளியாகவில்லை. பின்னர் ‘பாரதி புத்தகாலய’ வெளியீடாக நூலுருப் பெற்றுள்ளது. அதனை இன்னும் நான் வாசிக்கவில்லை.என்ற போதிலும் இத்தொடர்பில் ஒன்றை இங்கே நான் சுட்டிக்காட்ட விழைகின்றேன். சைவசமய மடங்களின் பொருளுதவிகளும்; பொருளுதவி செய்ய வேண்டிய இடங்களில் அவற்றைத் தீர்மானிக்கும் செல்வாக்கும் பெற்றவராக உவேசா மட்டுமே ‘திகழ்ந்தார்’ என்பது மறுக்கொணா மெய்ம்மையே. இதற்கான சான்றாதாரமாக இன்னொரு தரவாதாரத்தை இத்தொடர்பில் காண்போம்:

1938 வாக்கில் தம் ‘செந்தமிழ் சொற்பிறப்பியல்’ ஆய்வுப் பணிக்கான பொருளுதவி வேண்டி ஞா.தேவநேயப் பாவாணர் திருப்பனந்தாள் மடத்துக்குச் சென்றார். மடத்துக்கு வெளியே அவரை நிர்வாகி காத்திருக்கச் சொன்னார். பிராமணப் பந்தி முடிந்தபின் அடுத்த பந்தியில் பாவாணர்க்குப் பரிமாறப்பட்டது.

சந்நிதானம் விவரங் கேட்டுவிட்டுக் குருபூஜைக்கு வருமாறும் அப்போதுவரும் தமிழ்ப்புலவரிடம் கலந்தாலோசிக்கலாம் எனவும் விடையிறுத்தார். அவ்வாறே குருபூஜையன்று பாவாணரும் சென்றுள்ளார். அந்தப் புலவரான உவேசா ஏலவே பாவாணரை அறிந்திருந்த போதிலும் அவர்க்குப் பாராமுகங் காட்டியதோடு அவரைத் தெரியாதெனவும் தெரிவித்து விட்டார். 

‘எனக்கு மடத்தின் பொருள் உதவி கிடைக்காமற் போனதில் வருத்தம் இல்லை. அங்கே தமிழ் பேசுபவன் நாயைப் போல் நடைத்தப்படுவதை நினைத்துத்தான் வருத்தம். இந்த நூற்றாண்டிலும் இது தொடருகிறதே.” – பாவாணர் (ஆதாரம்: அ.கா.பெருமாள் ‘தமிழறிஞர் வரிசை’ கட்டுரை – ‘தமிழினி’ ஆக. 2009)

*

“மறைமலையடிகளின் ‘அறிவுரைக்கொத்து’ என்னும் நூல் சென்னைப் பல்கலைப் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டதற்கு எதிராகப் பார்ப்பனப் பத்திரிக்கைகள் ‘அந்நூலில் உள்ள ‘தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும்’ என்ற கட்டுரை தமிழை இழிவுபடுத்தியும் கேவலப்படுத்தியும் எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே அந்நூலைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும்’ என்று பிரச்சாரம் செய்துவந்தன.

மறைமலையடிகளின் வாதங்களை ஆதரித்து, ‘போக்கிரித்தனமான புகார்’ என்றொரு கட்டுரையை எழுதியுள்ளார்:

‘ உதாரணமாக இன்று தமிழ் பாஷையின் பேரால் பெருநிதி திரட்டிக் கொண்டவரும் தமிழுக்குத் தாயகமெனவும் விளம்பரப்படுத்தப்பட்டு மகாமஹோபாத்தியாயர் எனப் பட்டம் சூட்டப் பெற்றவருமான தோழர் உ.வே.சாமிநாதையர் அவர்களை ஒரு தட்டில் வைத்து நிறுக்கப்படுமானால், எத்தனை சுவாமிநாதையர்களைப் போட்டால் சுவாமிவேதாச்சலம் வீற்றிருக்கும் தட்டை அசைக்கமுடியும் என்பதை ஒவ்வொரு நேர்மையான மகனும் தன்நெஞ்சில் கையை வைத்து உண்மை உணர்வோடு பார்ப்பாரானால் நன்றாய் விளங்கிவிடும்.” – ஈ.வெ.ராமசாமி, 11/8/1935)

இக்கட்டுரையில் உவேசாவை விமர்சித்தும், 10/3/1935 தேதிய ‘குடி அரசி’ல்,’பார்ப்பனச் சூழ்ச்சி’ எனுந் தலைப்பில் அவர்க்குத் தமிழபிமானிகள் நன்றி பாராட்ட வேண்டும் என்பதைத் தாமும் மனப்பூர்வமாக ஆதரிப்பதாகவும்; பார்ப்பனச் சூழ்ச்சி நோக்கு இன்னதென்றும் அதற்கு அவர்களுக்கு உவேசா பயன்பட்டிருக்கின்றார் எனவும் விரிவாக எழுதிச்செல்லும் க.காமராசன் உவேசாகுறித்த பெரியாரின் மதிப்பீடுகளைத் தொகுத்துச் சுட்டி, அந்த மதிப்பீடுகளுக்கு தமிழ் இலக்கிய வரலாறு எழுதியல் நோக்கில் ஏதேனும் முக்கியத்துவம் உண்டா என்பதை அடுத்த பகுதியில் விவவாதிக்கலாம் என முதற் பகுதியை முடித்துள்ளார்.

உவேசா குறித்து மட்டுமல்ல. இத்தொடரில் நான் முன்வைக்கும் தமிழறிஞர் குறித்த மதிப்பீடுகளுக்கும் வரலாறெதியல் நோக்கில் இன்றியமையாமை உண்டென்பதை இத்தொடர்பிலான பதிவுகளும் இவற்றிற்கான காத்திரமான பின்னூட்டங்களுமே போதுமான சான்றாதாரங்களாம்.

இதற்குமேல் இன்னும் மேலதிகமாகப் பேசிநிற்க இங்கே இடனில்லை.

– வே.மு.பொதியவெற்பன்

(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)

(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)

பொதியவெற்பன் கட்டுரைகளைப் படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *