ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற நீதியரசர் A.K.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட்9 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து, அந்த குழு 33 நாட்களுக்குள் ஆய்வை முடித்து சமீபத்தில் தனது ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. அதனையொட்டி A.K.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கையை தமிழக அரசு 20 செப்டம்பர் அன்று வெளியிட்டது.
நீட் தொடர்பான பாதிப்புகள் குறித்த ஆய்வில் மக்களிடமும் கருத்து கேட்கப்பட்டது. இந்த கருத்துக்கேட்பில் மொத்தம் 86,342 கருத்துகள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.
அதில் 85,953 பேர் மின்னஞ்சல் மூலமாகவும், 332 கருத்துக்கள் தபால் மூலமாகவும், 57 கருத்துக்கள் ட்ராப் பாக்ஸ் மூலமாகவும் மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டது.
இந்த அனைத்து கருத்துகளையும் ஆராய்ந்ததில்,
65,007 பேர் நீட்டை எதிர்த்தும்,
18,966 பேர் நீட்டை ஆதரித்தும்,
1,453 பேர் எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமலும் (கருத்து தெரிவிக்க விரும்பாதவர்கள்)
916 ஒரே கருத்துகளையும் (repeated மெயில்)
தெரிவித்துள்ளனர்
என குழு தனது அறிக்கையில் தெரிவுத்துள்ளது.
மொத்தமாக எல்லா கருத்துகளையும் ஆராய்ந்து தரவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் “நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம். நீட் தேர்வை ரத்து செய்யத் தனியாக சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறலாம். நீட் ரத்து சட்டம் இயற்றுவது மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்திற்கான சமூக நீதியை உறுதி செய்யும். மருத்துவ மாணவர் சேர்க்கையை 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்திட வேண்டும்” என்று அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குழு சமர்ப்பித்த அறிக்கை மொத்தம் 166 பக்கங்களைக் கொண்டுள்ளது. அதில் ஒரு பகுதியான நீட் தேர்வின் பாதிப்புகளை மட்டும் இக்கட்டுரை விளக்கவுள்ளது.
இதில் நீட் தேர்வு வந்ததிற்கு முன், பின் பள்ளிக் கல்வியில் ஏற்பட்ட தாக்கம் குறித்தும், நீட் தேர்வு வந்தத்திற்கு முன், பின் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏற்பட்ட தாக்கம் குறித்தும், நீட் பயிற்சி மையங்களால் ஏழை எளிய மாணவர்களுக்கு ஏற்பட்ட தாக்கம் குறித்தும் இக்கட்டுரை விவரிக்க உள்ளது.
தமிழ்நாடு அரசு மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு படித்த மாணவர்களின் எண்ணிக்கை நீட்டிற்கு முன்னரும் பின்னரும் ஏற்படுத்திய தாக்கங்கள்:
கடந்த பத்து ஆண்டுகளில் அதாவது 2011 முதல் 2021 வரை தமிழ்நாடு அரசு மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு படித்தவர்களின் தரவுகளை பார்க்கும் போது, 2011 முதல் 2016 வரை அதாவது நீட்டிற்கு முன்னர் மாணவர்களின் சேர்கையானது 716543 லிருந்து 833682 ஆக அதிகரித்திருந்தது.
ஆனால் நீட்டிற்கு பின்னர் அதாவது 2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் 833682 லிருந்து 779940 ஆக குறைந்துள்ளது. அதாவது மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கையானது 12.7% குறைந்துள்ளது.
நீட் தேர்வில் கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகள் CBSE பாடத்திட்டத்திலிருந்தே கேட்கப்படுவதால் இயல்பாகவே CBSE பள்ளியை நோக்கி மாணவர்கள் நகர்ந்துள்ளதை இத்தரவு நமக்கு காட்டுகிறது.
தமிழ் வழியில் 12-ம் வகுப்பு படித்த மாணவர்களின் விவரம்:
நீட்டிற்கு முன்னர் 2011-ல் 5,09,246 ஆக இருந்த தமிழ் வழி கல்வி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 2016-ல் 5,40,183 ஆக உயர்ந்தது.
ஆனால் நீட்டிற்கு பின்னர் 2020 ல் 4,23,278 (24.8%)ஆக குறைந்துள்ளது.
ஆனால் ஆங்கில வழி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை நீட்டிற்கு பின்னர் 2020-ல் 3,55,754 (8.4%) ஆக அதிகரித்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் நீட்டின் தாக்கம்:
2016 வரையிலும் அதாவது நீட்டிற்கு முன்னர் வரை அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்களின் வருகையானது எந்தவொரு ஏற்றத் தாழ்வுமின்றி சீரானதாக இருந்தது. அந்த காலக்கட்டங்களில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை மெல்ல மெல்ல உயர்ந்து வந்துகொண்டிருந்தது.
ஆனால் நீட்டிற்கு பின்னர் அரசு பள்ளிகளில் 18.5% ஆகவும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 14.1% ஆகவும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதாவது அரசுபள்ளிகளில் 2017 ல் 401339 ஆகவும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 235123 ஆகவும் இருந்த மாணவர்களின் எண்ணிக்கை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 327137 எனவும் 201926 முறையே குறைந்துள்ளது.
ஆனால் தனியார் பள்ளிகளில் 256800 (28.75%) என இருந்த மாணவர்களின் எண்ணிக்கையானது 250877 (32.17%)அதிகரித்து கொண்டு இருந்தது.
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின்( தமிழ்/ஆங்கில வழி) கீழ் படித்த மாணவர்களின் தேர்ச்சியில் ஏற்பட்ட தாக்கம்:
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் வழி பயின்ற மாணவர்களின் தேர்ச்சியானது நீட்டிற்கு முன்னர் 2011-ல் 422665 (83%) ஆக இருந்து 2016-ல் (89.25%) ஆக வளர்ந்த தேர்ச்சி விகிதமானது, நீட்டிற்குப் பின்னர் 2017-ல் (90.03%) ஆக இருந்து 2020-ல் (88.80%) பெரிய அளவில் குறைந்துள்ளது.
இதே போல அதே தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் ஆங்கில வழி பயின்ற மாணவர்களின் தேர்ச்சியானது நீட்டிற்கு முன்னர் 2011-ல் (93.24%) ஆக இருந்து, 2016-ல் (95.35%) ஆக வளர்ந்த தேர்ச்சி விகிதமானது நீட்டிற்குப் பின்னர் 2017-ல் (95.75%) இருந்து 2020-ல் (96.57%) பெரிய அளவில் குறைந்துள்ளது.
அதாவது நீட்டானது தமிழ் நாடு பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் தமிழ் மட்டுமல்லாது, ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களின் வருகையையும் CBSE-ஐ நோக்கி மடைமாற்றியுள்ளது.
நீட்டிற்கு பின்னால் குறைந்த மருத்துவ சேர்க்கை:
நீட் தேர்வுக்கு முன்னர் தமிழ்நாடு பாடநூல் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களின் எண்ணிக்கையும், தமிழ் வழி கல்வி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கையும் 2011 – 2017 வரை, அதாவது நீட்டிற்கு முன்னர் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருந்தது.
அதேசமயம் CBSE வழி படித்த மாணவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் மாறாமல் 2 இலக்க எண்ணிற்குள்ளே இருந்து வந்தது. ஆனால் நீட்டிற்கு பின்னர் 2017 – 2020 வரை அதிகரித்து கொண்டு இருந்த தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களும், தமிழ் வழி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து CBSE வழி படித்தவர்கள் எண்ணிக்கை 3 இலக்க எண்ணை தொட்டு அப்படியே நேர்மாறாக மாறியது.
தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் மற்றும் CBSE பாடத்திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு படித்தவர்களில் மருத்துவ சேர்க்கை விவரம்:
கடந்த 10 ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவ சேர்க்கை மாணவர்களின் விவரங்களை நீட்டிற்கு முன்னரும், பின்னரும் பார்த்தோமேயானால் அப்படியே தலைகீழாக உள்ளது. நீட்டிற்கு முன்னர் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் HSC படித்த மாணவர்களின் எண்ணிக்கை சீராக உயர்ந்து வந்து கொண்டிருந்தது. நீட்டிற்கு பின்னர் அப்படியே தலைகீழாய் குறைந்து வந்துகொண்டிருக்கிறது. கடைசி வருடம் வரை எண்ணிக்கை குறைதல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
அதேபோல் நீட்டிற்கு முன்னர் ஒற்றை இலக்க சதவீத மாணவர் சேர்க்கையில் இருந்த CBSE மாணவர்களின் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையானது ஏன் இன்னும் சொல்லப் போனால் ஒரு சில வருடங்களில் வெறும் 0 சதவீதம் மாணவர் சேர்கையிலிருந்த CBSE மாணவர்களின் எண்ணிக்கை நீட்டிற்கு பின்னர் அரசு கல்லூரிகளிலும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாது தனியார் கல்லூரிகளிலும் அபரிவிதமான எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.
இதில் இன்னொமொறு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் 2011 முதல் 2014 வரையிலும் நீட் அல்லாத வேறு ஒரு மருத்துவ நுழைவுத் தேர்வு அப்போதைய மருத்துவ மாணவர் சேர்க்கையில் நடைமுறையில் இருந்தது. அந்த காலகட்டத்திலும் HSC படித்த மாணவர்களின் மருத்துவ சேர்க்கை எண்ணிக்கை குறைந்தும் காணப்பட்டது. அதன் பின்னர் 2017 வரை எண்ணிக்கை உயர்ந்திருப்பதை நீங்கள் அட்டவணையில் காணமுடியும்.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற மருத்துவ மாணவர் சேர்க்கை ஒப்பீடு:
நீட்டிற்கு முன்னரும் பின்னரும் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது பெரிய அளவில் மாற்றம் அடைந்துள்ளது. இந்த ஒப்பிட்டிலும் நீட்டிற்கு முன்னர் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்தும் நீட்டிற்கு பின்னர் குறைந்து காணப்படுகிறது. அதே போல நீட்டிற்கு முன்னர் பெரிய அளவில் குறைந்து வந்த நகர்ப்புற மாணவர்களின் மருத்துவ சேர்க்கை எண்ணிக்கையானது அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மிகப் பெரிய மாற்றம் பெற்று நீட்டிற்கு பின்னர் அதிகரித்துள்ளது.
முதல்தலைமுறை பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைவு:
அரசு பள்ளிகளில் மணர்வர்களின் எண்ணிக்கை குறைவு, கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை குறைவு அதேபோல் முதல் தலைமுறை பட்டதாரிகளின் எண்ணிக்கையானயது நீட்டிற்கு பின்னர் அரசு கல்லூரிகளிலும் மற்றும் தனியார் கல்லூரிகளிலும் நீட்டிற்கு பின்னர் வெகுவாக குறைந்துள்ளது.
சாதி வாரியாக பார்ப்போமேயானால் தனியார் கல்லூரிகளில் முன்னேறிய வகுப்பினர்(FC) மருத்துவ மாணவர் சேர்க்கை எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அதேசமயம் மற்ற வகுப்பினர் (BC/MBC/SC/SCA/ST) கணிசமான அளவில் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்த தரவின் மூலம் முன்னேறிய வகுப்பினர் மட்டுமே நீட் தேர்வால் அதிகம் பயனடைந்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
நீட் தேர்வில் முதல் முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் திரும்ப திரும்ப எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் விகிதம்:
இதில் திரும்பத் திரும்ப எழுதியவர்கள் யாரெனில் அதிகமுறை தேர்ச்சி பெரும் வரை நீட் எழுதியவரும், அதற்கு பயிற்சி வகுப்பிற்கு சென்றவரும் 8-ம் வகுப்பு முதலே நீட்டிற்கான பயிற்சி வகுப்பு சென்றவரும் ஆவர். இதன்படி பார்ப்போமேயானால் அதே ஆண்டு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் விகிதமானது கடைசி ஆண்டு வரை குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் திரும்ப திரும்ப தேர்வு எழுதியவர்களின் விகிதமானது அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.
அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டில் 71.42% பேர் என உயர்ந்துள்ளது. இதன் மூலம் நீட் தேர்விற்கு பயிற்சி வகுப்பு சென்றால் மட்டுமே நீட்டில் தேர்ச்சி பெற முடியும் என இந்த தரவுகளின் மூலம் தெளிவாகிறது.
நீட் தேர்வில் பயிற்சி மையங்களின் தாக்கம்:
நீட் தேர்விற்குப் பின்னர் நகர்ப்புறங்களில் ஏராளமான நீட் பயிற்சி மையங்கள் படையெடுக்க ஆரம்பித்து விட்டது. அதுவும் நகர்ப்புறங்களில் உள்ள பணக்கார மாணவர்களுக்கே உரித்தானதாக மாறியுள்ளது. அதுமட்டுமில்லாது அது மிகப்பெரிய வணிகமாகவும் மாறிக்கொண்டு வருகிறது.
நீட் பயிற்சி மையங்களில் வாங்கும் தொகையானது நம்மை திகைக்க வைக்கும் அளவில் உள்ளது. 2019 – 2020 ம் ஆண்டு மருத்துவ சேர்க்கை பெற்ற மாணவர்களில் 99% சதவீதம் நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவர்கள். அதில் பெரும்பாலானோர் திரும்பத் திரும்ப எழுதியவர்களாவே இருக்கிறார்கள் என்கிற அளவிற்கு உள்ளது. இதிலும் கூட சிலர் 8-ம் வகுப்பில் இருந்தே தங்களது நீட் பயிற்சி வகுப்பிற்கு செல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்.
கிராமப்புற ஏழை, எளிய அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்பு செல்ல போதிய அளவு பண வசதியும் இருப்பதில்லை. மீறி பணம் இருந்தால் கூட நீட் மையங்கள் லாப நோக்கில் செயல்படுவதால் கிராமப்புறங்களில் நீட் பயிற்சி மைய வசதியும் கிடைப்பதில்லை. நகர்ப்புறங்களில் சென்றால் மட்டுமே அம்மாணவர்களுக்கும் கூட நீட் பயிற்சி மைய வசதி கிடைக்குமென உள்ளது. கிராமப் புறங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நகர்ப்புறங்களில் இருக்கும் HSC, CBSE, ICSE மாணவர்களுக்கு நீட் பயிற்சியானது எளிதில் கிடைக்கிறது.
இதுமட்டுமல்லாது, நீட் பயிற்சி மையங்கள் கற்றலைத் தவிர்த்து பயிற்சி என்ற புதிய பழக்கத்தை உருவாக்கி வருகிறது. இதனால் பள்ளிப் பாடம் கற்றல் என்பது தவிர்க்கப்பட்டு நீட் தேர்வுக்கான பயிற்சி என்ற இடத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
நீட் பயிற்சி மையங்களில் கட்டணமானது
மாதம் மட்டும் குறைந்தபட்சம் Rs.10,000-Rs.38,000 ஆகவும்,
வருடத்திற்கு Rs. 30,000-Rs.1,50,000 ஆகவும்,
நான்கு வருடத்திற்கு Rs. 2,50,000-4,50,000 ஆகவும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
சராசரியாக ஒரு மாணவனுக்கு Rs.95,033 கட்டணம். கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு சராசரியாக ஒரு தனியார் பயிற்சி மையத்திற்கு வருடத்திற்கு லாபம் 13,95,32,202 கிடைக்கும். இதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் உள்ள 400 தனியார் பயிற்சி மையங்களில் லாபம் மட்டும் Rs. 5750 கோடி கிடைக்கும். இதனை அரசு தீவிரமாக விசாரிக்குமாணால் நாம் கணக்கிட்டத்தை விட அதிக பணம் புரள்வது நமக்கு தெரியவரும்.
ஒட்டுமொத்தமாக பார்ப்போமேயானால் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள், முதல் தலைமுறை மாணவர்கள் என எளிய மக்களுக்கு எதிரான ஒன்றாகவே நீட் தேர்வு உள்ளது. தரவுகளை அதையே நமக்கு விளக்குகிறது.
ஆங்கிலத்தில் வெளிவந்த அதிகாரப்பூர்வ முழு அறிக்கையை தரவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்.
– Madras Review