மூன்று ஆண்டுகளில் 3005 வழக்குகள் ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அவற்றில் 821 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிக்கையானது 180 நாட்கள் கால வரம்பிற்குள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊபா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 3974 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பினோய் விஸ்வம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், 2016 முதல் 2018 வரையிலான தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அறிக்கையை சுட்டிக்காட்டி மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி பதிலளித்தார்.
2016, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் முறையே 999, 1554 மற்றும் 1421 பேர் இந்த தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
2016, 2017 மற்றும் 2018-ம் ஆண்டில் பதியப்பட்ட ஊபா வழக்குகளில் முறையே 232, 272 மற்றும் 317 வழக்குகளில் மட்டுமே 180 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் முறையே 31 மற்றும் 10 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கைகளில் இரண்டு ஆண்டுகள் கழித்தே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிணை வழங்கலுக்கான குற்றவியல் நடைமுறை விதிகள்
குற்றவியல் நடைமுறை விதிகளின் அடிப்படையில் ஒரு வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். குற்றவியல் நம்பிக்கை மீறல் வழக்குகளில் (Criminal breach of trust – Section 409) 90 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். இருப்பினும் UAPA வழக்கினைப் பொறுத்தவரை சம்மந்தப்பட்ட முகமைகள் 180 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யலாம்.
821 வழக்குகளைத் தவிர்த்து மற்றவர்களுக்கு ஊபா வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தாமதானதால் அவ்வழக்குகளில் சிறைப்படுத்தப்பட்டவர்களுக்கு பிணை வழங்கப்பட்டு விட்டதா என்ற கேள்விக்கு அமைச்சகம் பதிலளிக்கவில்லை.
தேசிய பாதுகாப்பு சட்டங்களில் கைது செய்யப்பட்டோர்
மேலும் 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் 1200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவற்றில் 563 பேர் இன்னும் சிறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் அதிக நபர்களை சிறையில் அடைத்த மாநிலமாக உத்திரப் பிரதேசம் இருக்கிறது.
தடுப்புக் காவல் சட்டங்கள் சரியானதா?
குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், ஊபா போன்ற தடுப்புக் காவல் சட்டங்கள் என்பவை ஒரு ஜனநாயக நாட்டில் இருக்கக் கூடாத சட்டங்கள் என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. இந்த மூன்றிலும் ஊபா சட்டமானது கொடூரமான முறையில் ஒரு நபரின் தனிநபர் சுதந்திரத்தினையும், சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையினையும் முற்றிலும் பறிப்பதாக பல மனித உரிமை நிறுவனங்களால் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படுகிறது.
ஊபா சட்டத்தின் பிரிவுகள் சர்வதேச மனித உரிமை பிரகடனங்களுக்கு எதிராக இருப்பதாக அம்னெஸ்டி இண்டர்நேஷ்னல், மனித உரிமை கண்காணிப்பகம் (Human Rights Watch) போன்ற அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும் ஊபா மாதிரியான தடுப்புக் காவல் சட்டங்கள் அரசியல் நோக்கங்களுக்காக பதியப்படுவது அதிகரித்திருப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் எழுந்துள்ளன.
குறிப்பாக பீமா கொரோகான் வன்முறை வழக்கில் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மற்று இடதுசாரி அறிவுஜீவிகள் மீது ஊபா சட்டம் ஏவப்பட்டது தொடங்கி தற்போது டெல்லி கலவரத்தை மையப்படுத்தி ஏராளமானோர் ஊபா வழக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
டெல்லியில் அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வலதுசாரி தீவிர குழுக்கள் வன்முறையை ஏவிய நிலையில், வன்முறையை திட்டமிட்ட வலதுசாரி குழுக்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கையானது, போராட்டத்தில் பங்கெடுத்த மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் மீது எடுக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தை மையப்படுத்தி 15 பேர் மீது வரை ஊபா சட்டம் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.