சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் மொத்த தூய்மைப் பணியாளர்களில் 29,339 பேரில் 6,400 பேர் மட்டுமே நிரந்தரப் பணியாளர்கள். மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்ட போது, சுற்றியுள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்தவர்கள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டனர்.
2000-ம் ஆண்டிலிருந்து துப்புரவுப் பணிக்கான காண்ட்ராக்ட்டினை தனியார் நிறுவனத்திற்கு மாநகராட்சி அளித்துள்ளது. அதில் 4500க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு ஒரு நாளைக்கு 210 ரூபாய் தான் ஊதியமாக வழங்கப்படுகிறது.
இதை தவிர்த்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 379 ரூபாய் ஊதியமாக மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகிறது. 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தூய்மைப் பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 624 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என்று அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையின் படி ஊதியம் வழங்கக் கோரி செப்டம்பர் 7-ம் தேதி சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு தூய்மைப் பணியாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராடியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள்
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய தொழிற்சங்க தலைவர்களான சீனிவாசலு, வரதன் மற்றும் முனுசாமி ஆகியோரை நிர்வாகம் தடை செய்துள்ளது. 500 பேருக்கு குற்றக் குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. 291 தற்காலிகப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 714 பேர் மீது வழக்கு பதியபட்டுள்ளது.
இதனை எதிர்த்து நேற்று சேப்பாக்கத்தில் உண்ணாவிரதத்தை தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
12 ரூபாய் ஊதிய உயர்வு என்பது நியாயமா?
இது குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த சி.ஐ.டி.யு மாநில செயலாளர் அ.சவுந்தரராஜன் பேசியதாவது.

”கோரோனா காலத்தில் களப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு விளக்கு ஏற்றி கைதட்டி ஆரவாரம் செய்து விட்டு, அவர்களுக்கு அரசாணைப்படி கொடுக்க வேண்டிய ஊதியத்தை கொடுக்க மறுப்பது எந்த வகையில் நியாயம்? ஒப்பந்த அடிப்படையில் இல்லையென்றாலும் தற்காலிகமாக எடுக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு கொடுக்கும் 500 ரூபாய் ஊதியமாவது கொடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால் பேச்சுவார்த்தை என்று அழைத்து நாளொன்றுக்கு 12 ரூபாய் மட்டும் கூட்டி 391 ரூபாய் ஊதியம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
இது தமிழகத்தில் உள்ள மற்ற உள்ளாட்சிகளுக்கு நிர்ணயம் செய்த ஊதியத்தை விட மிகவும் குறைவு. இந்த அடிப்படை உரிமையைக் கேட்ட தொழிலாளர்களை வன்மத்தோடு மாநகராட்சி பணிநீக்கம் செய்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. தொழிலாளர்களின் அரசாணைப்படி ஊதியம் வழங்க வேண்டும். பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தனியார்மயம் என்ற பெயரில் மாநகராட்சியின் சுகாதாரத்தை சீர்கெடுக்கக் கூடாது” என்றார்.
இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை
இன்றும் இதே கோரிக்கையை அடிப்படையாக வைத்து சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்ற போது மாநகராட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்தது..
இது குறித்து செங்கொடி தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் சீனிவாசலு அவர்கள் Madras Radicals-இடம் தனது கருத்தை தெரிவித்த போது, அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஊதியத்தை அமல்படுத்தச் சொல்வதே தங்கள் மைய கோரிக்கை என்றார்.

மேலும் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் தங்கள் சார்பாக அரசிடம் ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்ட 291 பணியாளர்களை எந்த நிபந்தனையும் இன்றி பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் முன்வைக்கப்பட்டது எனவும், இக்கோரிக்கை சுமுகமாக ஏற்றுக் கொள்ளப்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.