சட்டவிரோத மணல் கடத்தலால் கடந்த இரண்டு ஆண்டுகளில் 193 மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை பத்திரிக்கை செய்திகள், ஆய்வுகள், களப்பணியாளர்கள் மற்றும் அரசு இணையதளங்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில் தெற்காசிய ஆறுகள், அணைகள் மற்றும் மக்களுக்கான அமைப்பு (South Asia Network on Dams, Rivers and People) வெளியிட்டுள்ளது.
இந்த நிறுவனம் சேகரித்த தகவல்களில் 2019 ஜனவரி முதல் 2020 நவம்பர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது மற்றும் கடத்துவதில் 193 மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்கள் யார்யார்?
இதில் விவசாயிகள் 23 பேரும், பத்திரிக்கையாளர்கள் 5 பேரும், காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணிகளில் இருப்பவர்கள் 11 பேரும் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட இந்திய மாநிலங்களில் தான் இந்த சட்டவிரோத மணல் கடத்தல் மரணங்கள் அதிகமாக பதிவாகியுள்ளது என்றும், தென் மாநிலங்களில் ஒப்பீட்டளவில் குறைவு என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த மரணங்களில் 95 மரணங்கள் மணல் குவாரிகளில் நிகழ்ந்துள்ளன. மணல் குவாரிகளில் உள்ள நீரில் மூழ்கி 27 பேரும், சுரங்ககளில் மணல் சரிவில் சிக்கி மற்றும் சுரங்கங்களில் அடைக்கப்பட்டு 27 பேரும் இறந்துள்ளனர்.
சந்தேக விபத்துகள்
மணல் லாரிகள் ஏற்படுத்திய விபத்தில் மட்டும் 26 பேர் இறந்துள்ளனர். நடந்த மரணங்களில் 76% அதாவது 148 மரணங்கள் விபத்துகளாகக் காட்டப்பட்டாலும், அவை நம்பும்படியானதாக இல்லை என்றும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட கதைகளைக் கொண்ட சந்தேக மரணங்களாக இருக்கின்றன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
முதல் மூன்று இடங்களில் பாஜக ஆளும் மாநிலங்கள்
மணல் கடத்தல் வாகனங்களால் நிகழ்த்தப்பட்ட மரணங்களில் முதல் மூன்று இடங்களில் பாஜக ஆளும் மாநிலங்களே உள்ளது. அதுவும் யோகி ஆதித்யநாத்தின் உத்திரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இங்கு மணல் கடத்தல் வாகனங்களால் 12 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
அடுத்து ஹரியானா மற்றும் உத்ரகாண்டில் சட்டவிரோத மணல் கடத்தல் வாகனங்களால் தலா மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மணல் கொள்ளையை எதிர்த்து அம்பலப்படுத்தியதால் உத்திரப்பிரதேசம், பீகார் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் மற்றும் ஒடிசாவில் இரண்டு பேரும் நேரடியாகவே கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்
மணல் கொள்ளையை எதிர்த்து தொடர்ச்சியாக இயங்கிவந்த சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது நடந்த தாக்குதல்கள் இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 84 என்று இந்த ஆய்வு கூறுகிறது.
மேலும் பதிவான குற்றச் செயல்கள்தான் இந்த 193 என்றும், பெரும்பான்மையான மரணங்களும் விபத்துகளும் நிறுவனங்களின் மீதான அச்சத்தின் காரணமாக பதிவாகாமல் தடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.