இந்திய ஒன்றிய அரசின் புதிய மின்சார திருத்த மசோதாவானது ஒரு மாநிலம் மின்மிகை மாநிலமாகவே இருந்தாலும், மின் உற்பத்தியைக் குறைத்துவிட்டு, அதானி நிறுவனத்திடமிருந்து மின்சாரத்தை வாங்க அம்மாநிலத்தைக் கட்டாயப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
பல இடங்களில் அதானி குழுமத்திற்கு சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக தெலுங்கானா மாநிலத்தில் 45,000 கோடி ரூபாய் மதிப்பில் 8,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய சூரிய ஒளி மின் திட்டத்தினை அதானி குழுமம் உருவாக்கி வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தின் மின்சார உற்பத்தியும், அதானி குழுமமும்
தெலுங்கானா மாநிலமானது தனது பெரும்பாலான மின்சாரத்தினை அனல் மின் நிலையங்கள் வழியாகவும், நீர் மின்சாரம் வழியாகவும், சூரிய ஒளி மின்சாரம் வழியாகவும் பெறுகிறது. கிட்டத்தட்ட மின்மிகை மாநிலமாக திகழும் அளவிற்கு மின்சார உற்பத்தியில் தெலுங்கானா மாநிலம் உயர்ந்திருக்கிறது.
இருப்பினும் ஏற்கனவே மின்சாரத்தினை உற்பத்தி செய்யக் கூடிய சில மின் உற்பத்தி நிலையங்களை மூடிவிட்டு அதானி குழுமத்திலிருந்து மின்சாரத்தினை வாங்கியாக வேண்டும் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. இந்திய ஒன்றிய அரசு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி முறையை ஊக்குவிப்பது என்ற பெயரில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறைந்தபட்சம் இத்தனை மெகாவாட் மின்சாரத்தினை புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி முறைகளான சூரிய ஒளி மின்சாரம், நீர் மின்சாரம் போன்ற துறைகளிலிருந்து பெற்றாக வேண்டும் என்று ஒரு இலக்கினை நிர்ணயித்துள்ளது.
ஒன்றிய அரசு தரும் அழுத்தம்
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மின்சார திருத்தச் சட்டம் 2020-ன் மூலமாக இந்த கட்டாயம் மாநிலங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள இலக்கினை மாநிலங்கள் எட்டாவிட்டால் ஒன்றிய அரசு மாநிலங்களின் மீது அபராதம் விதிக்க முடியும்.
இந்த குறைந்தபட்ச இலக்கு எது என்பதை உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களை நிர்ணயிக்க விடாமல், ஒன்றிய அரசே நிர்ணயித்து அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த திருத்தம் அமைந்துள்ளது.
தெலுங்கானா மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையமானது இந்த இலக்கினை 7% என்று வைத்திருந்தது. அதனை ஒன்றிய அரசு 19% சதவீதமாக உயர்த்தவுள்ளது.
மாநிலங்களுக்கு விதிக்கப்படும் அபராத மதிப்பு
நீர்மின் உற்பத்தி அளவையும் இந்த இலக்கினை அடைவதற்கு பயன்படுத்தலாம் என்றாலும், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள எந்த நீர் மின் உற்பத்தி நிலையத்தையும் ஒன்றிய அரசு புதுப்பிக்கத்த ஆற்றல் நிலையமாக அங்கீகரிக்கவில்லை. எனவே அதானி குழுமத்திடம் தான் வாங்கியாக வேண்டும் என்ற கட்டாயம் அவர்களுக்கு உருவாகியுள்ளது.
சூரிய உற்பத்தி மின்சாரத்தினை மாநில மின் உற்பத்தி வாரியங்கள் கொள்முதல் செய்யவில்லையென்றால் முதல் ஆண்டிற்கு ஒவ்வொரு யூனிட்டிற்கும் 50 பைசாவும், இரண்டாம் ஆண்டிலிருந்து ஒரு யூனிட்டிற்கு ஒரு ரூபாயும், அடுத்தடுத்த ஆண்டுகளில் யூனிட்டிற்கு 2 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.
சாதாரணமாக மாநில மின்வாரியங்கள் உற்பத்தி செய்து பெறும் மின்சாரத்தின் விலையைக் காட்டிலும், தனியார் சூரிய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து வாங்கும் மின்சாரத்தின் விலை மிக அதிகமானதாகும். தொடர்ச்சியாக இந்த மின்சார நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து சூரிய ஒளி மின்சாரத்தை வாங்குமாறு கட்டாயப்படுத்துவது மாநில மின்வாரியங்களை கடன் சூழலுக்குள் தள்ளிவிடும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கு
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் இதே போன்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை பூர்த்தி செய்வதற்காக 500 மெகாவாட் மின்சாரத்தினை 25 ஆண்டுகளுக்கு வாங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சூரியமின்சார இலக்கினை அடைவதற்கு 2021-22 ஆண்டில் 9,000 மெகாவாட் மின்சாரத்தினை வாங்க வேண்டும்.
ஜனவரி 31, 2020 வரையிலான காலத்திற்கு 4,000 மெகாவாட் சூரிய மின்சாரத்தை தமிழ்நாடு உருவாக்கியுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இன்னும் 5,000 மெகாவாட்டினை வாங்க வேண்டும்.