நிவர் புயல்

நெருங்குகிறது நிவர் புயல்! முக்கிய விவரங்கள்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு நிவர் புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாளை இந்த புயல் தீவிரமடைந்து, நாளை மறுநாள் நவம்பர் 25 அன்று காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கு இடையில் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மிகக் கடுமையான மழை

திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் காரைக்கால் பகுதியில் மிகக் கடுமையான மழைப்பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான மழை

திருச்சி, நாமக்கல், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், கடலூர், பாண்டி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவு இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

புயலின் பலவீனமடைந்து குறையும் பட்சத்தில் 70 முதல் 80 கி.மீ வேகத்திலும், வலுவான புயலாக கரையை கடக்கும் பட்சத்தில் 120 முதல் 140 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக் கூடும் என கணிக்கப்படுகிறது. 

அதிதீவிர புயலாக சென்னைக்கு அருகில் கரையைக் கடக்கும் பட்சத்தில் கடலூர், பாண்டி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிகக் கடுமையான மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிவார் புயல் குறித்து ஆய்வு செய்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், வட தமிழ்நாட்டில் கனமழை 100 % உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சமீப ஆண்டுகளில் உருவான புயல்கள் அனைத்தும் கணிக்கப்பட்ட வேகத்தை விட 20 முதல் 30 கி.மீ வரை அதிக வேகத்தில் வீசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் புயலின் தன்மை குறித்தும், கரையைக் கடக்கப் போகும் இடம் குறித்தும் விரிவான விடயங்களை கண்டறிந்துவிட முடியும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இன்று மாலை 3 மணியளவில் நிவர் புயலானது சென்னையின் கடற்கரையிலிருந்து தென்கிழக்கு திசையில் 590 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

நாளை மற்றும் நாளை மறுதினம் புயல் எச்சரிக்கையின் காரணமாக சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவற்றின் விவரங்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. நாளை திருச்சி, தஞ்சாவூர் மற்றும் சென்னைக்கு இடையிலான 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

டிசம்பர் 2-ம் தேதி வாக்கில் இன்னொரு புயல் சின்னம் தமிழகத்தை நோக்கி வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கணிக்கப்படுகிறது. ஆனால் அதன் உறுதியான தன்மை குறித்து இப்போதைக்கு கணிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு மேலாண்மை மையத்திலிருந்து 20 வீரர்கள் அடங்கிய 6 குழுக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக கடலூர் மாவட்டத்தி்ற்கு விரைந்துள்ளது. 

மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *