corporate tax cut modi nirmala sitharaman

கார்ப்பரேட் வரி குறைப்பால் இந்தியா இழந்த 1.45 லட்சம் கோடி! பலனடைந்தோர் யார்?

கடந்த செப்டம்பர் 2019-ல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். அங்கு அமெரிக்காவின் கார்ப்பரேட் முதலாளிகளுடன் சிறப்பு சந்திப்பினை நடத்தினார்.

அந்த நேரத்தில் செப்டம்பர் 20, 2019 அன்று இந்திய அரசு கார்ப்பரேட் வரியில் சீர்திருத்தம் கொண்டுவருவதாக சொல்லி மிகப் பெரும் வரி குறைப்பினை செய்தது. அடிப்படை கார்ப்பரேட் வரியானது 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைக்கப்பட்டது. புதிய கார்ப்பரேட் உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதன் மூலமாக அரசுக்கு 1.45 லட்சம் கோடி ரூபாய் வரிவருவாய் இழப்பு ஏற்பட்டது.

கார்ப்பரேட் வரிக் குறைப்பிற்கு சொல்லப்பட்ட காரணம்

2019 செப்டம்பர் மாதத்தின் போது, இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமான நிலையினை அடைந்திருந்தது. 1991ம் ஆண்டு ஏற்பட்டதாக சொல்லப்படும் வீழ்ச்சியை விட மோசமானதாக அது தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் GDP 4.5 சதவீதமாக குறைந்தது. 2013ம் ஆண்டிலிருந்து கணக்கைப் பார்த்தால் இதுதான் மிகக் குறைந்த GDP ஆகும்.

ஏற்றுமதி குறைந்தது. தேவை குறைந்தது. முதலீடு குறைந்தது. வங்கிகளில் வாராக் கடன் அளவு அதிகரித்துக் கொண்டே சென்றது. எனவே வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டினை ஈர்ப்பதற்கான ராஜதந்திரமாக இம்முடிவிற்கு நியாயம் சொல்லப்பட்டது.

இந்த வரி குறைப்பினைப் பற்றி ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, இந்த கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று முடிவு என்றும், மேக் இன் இந்தியா திட்டத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து முதலீடுகளை இம்முடிவு ஈர்க்கும் என்றும், இதனால் வேலை வாய்ப்புகள் நிறைய அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த வரலாற்று முடிவின் காரணமாக, வருமான வரி வசூலிப்பில் 1.45 லட்சம் கோடி ரூபாய் குறைந்தது. உற்பத்தியில் முதலீடுகள் அதிகரிக்கும் என்று சொன்ன இந்திய அரசின் அறிவிப்பின் படி, உண்மையிலேயே அப்படி ஏதேனும் நிகழ்ந்ததா என்று பார்த்தோமானால் ஒன்றும் இல்லை என்பதே உண்மை.

இந்தியாவில் நடைபெற்ற முதலீடு பற்றிய உண்மை விவரங்கள்

சமீபத்தில் வெளியான ஐ.நாவின் வர்த்தக மற்றும் மேம்பாடு குறித்தான மாநாடு ( United Nations Conference on Trade And Development – UNCTAD) அறிக்கையில், 2019-ம் நிதி ஆண்டில் இந்தியாவில் 4900 கோடி டாலர் அந்நிய முதலீடு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கிறது. இதில் பாதிக்கும் மேற்பட்ட முதலீடுகள் இந்திய அரசினால் வரிகுறைப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பே வந்தவையாகும்.

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (Department for Promotion of Industry and Internal Trade) தகவல்களின் படி, கார்ப்பரேட் வரி குறைப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பான இரண்டு காலாண்டுகளில் 2610 கோடி டாலர் அந்நிய முதலீடு நிகழ்ந்திருப்பதாகவும், கடைசி இரண்டு காலாண்டுகளில் 2300 கோடி டாலர் அந்நிய முதலீடு நிகழ்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் மூலம் கார்ப்பரேட் வரி குறைப்பினால் அந்நிய முதலீட்டில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேலும் இந்த அந்நிய முதலீடுகளின் பெரும் பகுதி சேவைத் துறையிலும், தகவல் தொழில்நுட்பத் துறையிலும் தான் நிகழ்ந்துள்ளது. வரியை குறைத்தாலும், குறைக்காவிட்டாலும் இந்த துறைகளில் முதலீடு என்பது எப்படியும் இருந்திருக்கும். ஆனால் உற்பத்தித் துறையில் முதலீடு எந்த விதத்திலும் அதிகரிக்கவில்லை, மாறாக குறைந்துள்ளது. எனவே உற்பத்தித் துறையில் முதலீடு அதிகரிக்கும் என்று அரசு சொன்ன காரணம் எந்த வகையிலும் சரியானதாக இல்லை.

வரிக்குறைப்பினால் பலன் அடைந்தவர்கள் யார்?

2019-20ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வு, இந்த கார்ப்பரேட் வரி குறைப்பினால் 0.9 சதவீதம் இந்திய நிறுவனங்களுக்கு மட்டுமே வரிச்சலுகை கிடைத்திருப்பதாக தெரிவிக்கிறது. அதாவது 400 கோடி ரூபாய்க்கு அதிகமான வருவாயுள்ள நிறுவனங்களுக்குத் தான் இந்த வரிச்சலுகை கிடைக்கும். ஏனைய 99.1 சதவீத இந்திய நிறுவனங்களுக்கு இந்த வரி குறைப்பால் எந்த சலுகையும் கிடைக்கவில்லை.

மிகப்பெரிய வருமானத்தில் வலுவாக இருக்கிற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும்தான் தங்கள் லாபத்தினை இந்த வரிகுறைப்பின் மூலம் பெருக்கிக் கொண்டன. ஆனாலும் இந்த நிறுவனங்கள் பெரிய அளவில் எந்த புதிய முதலீட்டையும் செய்யவில்லை. வேலைவாய்ப்பும் உருவாகவில்லை. அரசுக்கு வரவேண்டிய 1.45 லட்சம் கோடியை இழந்ததுதான் மிச்சம்.

இந்த கார்ப்பரேட் வரி குறைப்பினை நிகழ்த்தாமல் இருந்திருந்தால், இந்த 1.45 லட்சம் கோடி ரூபாயை இந்த கொரோனா நெருக்கடி சூழலில் இந்திய அரசு ஏழை மக்களுக்கான நிவாரணத்திற்காக அளித்திருக்க முடியும். அரசு பல்வேறு துறைகளில் முதலீடு செய்திருக்க முடியும். இதன் மூலமாக ஏராளமான வேலைவாய்ப்பினை உருவாக்கி இருக்க முடியும்.

பணக்காரர்களிடம் வசூலித்து சாமானியர்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பதே வரி வசூலிப்பின் முக்கிய நிபந்தனையாக இருக்கிறது. ஆனால் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான இந்திய அரசாங்கமோ தலைகீழாக நடக்கிறது. சாதாரண ஏழை மக்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்களின் மீதான மறைமுக வரியை GST மூலமாக உயர்த்துகிறது. நம் மக்களின் பணத்திலும், நம் நாட்டின் வளத்திலும் செழித்து வளர்கிற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிக் குறைப்பை செய்து சேவகம் செய்கிறது.

எது எப்படியோ மக்களுக்கு சென்று சேர வேண்டிய 1.45 லட்சம் கோடி பணம் கார்ப்பரேட் முதலாளிகளின் வயிற்றை நிரப்பியிருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மையாக இருக்கிறது.

(தகவல்கள் Scroll.in இணையதளத்தில் வழக்கறிஞர் ஆசிஷ் கேட்டான் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து உபயோகிக்கப்பட்டுள்ளது. கட்டுரையின் கருத்துகளும், அழுத்தங்களும் Madras Radicals செய்தியாளரால் மேற்கொள்ளப்பட்டவை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *