தமிழ்நாடு முழுவதும் உள்ள குடிசைவாழ் மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான இருப்பிடத்தை வழங்க 1971 இல் உருவாக்கபட்டதுதான் குடிசை மாற்று வாரியம். குடிசைவாழ் மக்களை அவ்விடத்தில் இருந்து வெளியேற்றாமல் பாதுகாத்து, அவர்களை நவீன அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியமர்த்துவது இந்த வாரியத்தின் பிரதான நோக்கமாகக் குறிப்பிடப்பட்டது. மக்கள் வாழ்ந்த குடிசைகளுக்கு அருகிலோ அல்லது சற்றுத் தொலைவிலோ அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்பட்டன. ஆரம்பத்தில் 2 செண்ட் நிலமும் கொடுக்கப்பட்டது.
கண்ணகி நகர்
1990-க்கு பிறகு சீர்மிகு சென்னையாக உருவாக்குவதற்காக பலியிடப்பட்டது சென்னையின் குடிசை பகுதி மக்கள்தான். 1997-ம் ஆண்டு 150 சதுரஅடி கொண்ட மூன்றாயிரம் குடியிருப்புகளை கட்டியது தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம். அதை 03-02-2000 அன்று அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் திறந்து வைத்தார். அதுதான் கண்ணகி நகர்.
இன்று 15 ஆயிரத்து 566 குடியிருப்புகளாக வளர்ந்து, சென்னை நகரின் மிகப் பெரிய நவீன சேரியாக விரிவடைந்து வருகிறது. புதிதாக 10 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளும் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
செம்மஞ்சேரி
சென்னையிலிருந்து பழைய மாமல்லபுரம் சாலையில் (OMR) சுமார் 25 கி.மீ. தொலைவில் ‘செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு’ உள்ளது. இது சென்னை மாநகராட்சியின் 200-வது வார்டாக இருந்த போதிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில், புனித தோமையார் மலை (St Thomas mount ) ஒன்றியத்தின் எல்லைக்குள் உள்ளது. இங்கு சுமார் 6,700 குடும்பங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 1800 வீடுகளில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். மீதம் உள்ளவற்றில் இருப்பவர்கள் சென்னை மாநகரின் 61 குடிசைப் பகுதிகளிலிருந்து கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டவர்கள்.
எங்கியிருந்து குடியேற்றப்பட்டார்கள் கண்ணகி நகர் மக்கள்?
சென்னையில் பல்வேறு பகுதிகளான சீனிவாசபுரம், நொச்சிக்குப்பம், தியாகராய நகர், நம்பிக்கை நகர், திடீர் நகர், சத்யா ஸ்டுடியோ அருகில், ஸ்டாலின் நகர், கோட்டூர்புரம், தனக்கோடிபுரம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, ஓட்காட் குப்பம், ஓசூர் குப்பம், திருவான்மியூர் குப்பம், சூளைமேடு, பெசன்ட் நகர், அடையார், பட்டினப்பாக்கம், டுமீங் குப்பம், சத்யா நகர், பாரதியார் நகர் என பல பகுதிகளில் இருந்து இவர்கள் இங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர் .கண்ணகி நகரில் இருக்கும் வீடுகள் வெறும் 120 சதுரஅடி தான். இப்போதைய நிலவரப்படி, கண்ணகி நகரில், 15,565 குடும்பங்களும், அருகே எழில் நகரில் உருவாக்கப்பட்ட குடியிருப்பில் 8,038 குடும்பங்களும் வசிக்கின்றன.
இவர்களுக்கான வாழ்வாதாரம் என்பது பெரும்பாலும் ஆட்டோ ஓட்டுவது மற்றும் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களை நம்பித்தான் இருக்கிறது. கொரோனா தொற்று ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து எந்த வருமானமும் சேமிப்பும் இல்லாத, பாதிப்புக்குள்ளான மக்களுக்கு ஒரு பேரிடியாக அமைந்துள்ளது அண்மையில் வந்திருக்கக் கூடிய செய்திகள் . ஆம் கண்ணகி நகரில் 31 பேருக்கு கொரானா தொற்று உறுதிசெய்யபட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் சாத்தியமா?
ஏற்கனவே வாழ்வதாராம் இல்லாமல் இருக்கும் மக்கள், நல்ல உணவு கிடைக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிற பொழுது அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவிற்கு என்ன செய்வார்கள்? 120 சதுர அடி, 170 சதுர அடி தான் அரசாங்கம்.அவர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்திருக்கும் இடத்தின் அளவு. இந்த இடத்தில் இயல்பாக ஒரு குடும்பம் வாழ்வதே கடினம். இப்பொழுது கண்ணகி நகர் மக்களும், எழில் நகர் மக்களும் எங்கு சென்று வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள இயலும்?
அடுக்கப்பட்ட தீப்பெட்டி போன்று வீடுகளைக் கொண்வடர்களால் எப்படி சமுக இடைவெளியைக் கடைபிடிக்க முடியும். மிக நெருக்கமாக மக்கள் வாழும் வடசென்னையில் பரவியது போல கண்ணகி நகரிலும் அதிகமாக பரவும் ஆபாயம் உள்ளது. சென்னையை உருவாக்கிய இந்த உழைக்கும் மக்களை பாதுகாக்க அரசு விரைந்து செயல்பட்டாக வேண்டும்.