66 ஆண்டுகளுக்கு முன்பு, 1954 ஆகஸ்ட் 11 அன்று தமிழ்நாட்டின் எல்லைப்பகுதிகளான செங்கோட்டை, விளவங்கோடு, கல்குளம், தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய பகுதிகளை மீட்க நடைபெற்ற போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழ்நாட்டின் எல்லை காக்க உயிர்கொடுத்த 11 தியாகிகளின் நினைவு நாள் இன்று.
இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் இருக்கும்போதே திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தானத்தின் கீழ் இருந்த தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு ஆகிய தாலுகாக்களில் தமிழர்கள் பெருவாரியாக வசித்து வந்தனர். தமிழர் பகுதிகளில் மலையாளம் அலுவல் மொழியாக இருந்தமையும்,
தமிழ் கல்வியும் மறுக்கப்பட்டு வந்ததும் தமிழர்களுக்கு பல இன்னல்களை தோற்றுவித்து வந்தன. மொழி சம்பந்தமாக தமிழர்கள் விடுத்த கோரிக்கைகளை திருவாங்கூர் அரசு தொடர்ந்து புறக்கணித்து வந்தது. தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட தமிழ் பகுதிகளில் மலையாளிகள் குடியேறுவதை அரசே ஊக்குவித்தது.
மலபார் மாகாண காங்கிரஸ் கமிட்டி, கொச்சி பிரஜா மண்டல், திருவிதாங்கூர் சமஸ்தான காங்கிரஸ் என மூன்று பிரிவாக செயல்பட்ட மலையாளப் பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் ஒன்று கூடி காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரையுள்ள பகுதிகளைக் கேரள மாநிலமாக ஆக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
கேரள மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு திருவாங்கூர் சமஸ்தான காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்து வந்ததால், அக்கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பி.எஸ்.மணி உள்ளிட்ட தமிழ் தலைவர்கள் அக்கட்சியை விட்டு வெளியேறினர்.
அவர்கள் 1945-ம் ஆண்டு டிசம்பர் 16 அன்று நாகர்கோவிலில் கூடி வழக்கறிஞர் சாம் நத்தானியேல் தலைமையில் திருவாங்கூர் தமிழர் காங்கிரஸ் எனும் அரசியல் இயக்கத்தை தொடங்கினர். திருவாங்கூரின் தமிழர் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
1946-ம் ஆண்டு ஜுன் 30-ம் தேதியன்று இரவிபுதூரில் கூடிய தமிழர் காங்கிரஸின் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் பெயர் ‘திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்’ என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. தி.த.நா.கா (திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்) தமிழர் பகுதிகளில் சட்டமன்ற தேர்தலில், 14 தொகுதிகளை கைப்பற்றி சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. தி.த.நா.கா-வின் சட்டமன்ற கட்சித் தலைவராக நேசமணி தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது தலைமையிலேயே இந்த எல்லைப் போராட்டமானது வழிநடத்திச் செல்லப்பட்டது.
கொச்சி மாநில முதல்வராக பதவி வகித்த பட்டம் தாணுபிள்ளை தமிழர் போராட்டத்திற்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். குறிப்பாக தேவிகுளம், பீர்மேடு பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் மலையாள காவல்துறையின் தொடர் சித்திரவதைகளுக்கு ஆளாகி வந்தனர்.
1954-ம் ஆண்டு காவல்துறையின் அத்துமீறல்களைக் கண்டிக்க, நாகர்கோவில் பகுதி தி.த.நா.கா தலைவர்கள் மார்ஷல் நேசமணி, ரசாக், சிதம்பரநாதன் ஆகியோர் மூணாருக்குச் சென்றனர். 144 தடை உத்தரவு போட்டு, தமிழ் தலைவர்களை மலையாள காவல்துறை கைது செய்தது.
அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்து ஆகஸ்ட் 11-ம் தேதியன்று தி.த.நா.கா அறிவித்திருந்த ‘விடுதலை நாள்’ போராட்டத்தின் போது ஊர்வலங்களும், பொதுக்கூட்டங்களும் நடைபெற்றன. மார்த்தாண்டம் மற்றும் புதுக்கடை ஊர்களில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அருளப்பன், முத்துசாமி, செல்லப்பா பிள்ளை, பீா் முகம்மது உட்பட 11 போ் உயிாிழந்தனா்.
ஆயிரக்கணக்கான தி.த.நா.கா தொண்டர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு காவல்துறையால் சித்ரவதை செய்யப்பட்டனர். இறுதியில் பட்டம் தாணுபிள்ளையின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகே தமிழர் பகுதிகளில் அமைதி திரும்பியது.
மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பசல் அலி ஆணையம், 1955-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியன்று தமது அறிக்கையை வெளியிட்டது. தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின்கரை தாலுகாக்களையும், செங்கோட்டை வனப்பகுதியையும் புதிதாக அமையவிருக்கும் கேரள மாநிலத்துடன் இணைக்க ஆணையம் பரிந்துரைத்தது.
1948-ல் நடந்த தூப்பாக்கிச் சூடு உட்பட 15 உயிர்களை பலி கொடுத்து தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு உள்ளிட்ட தாலுக்காகளும், செங்கோட்டை நகரமும் தமிழகத்துடன் இணைந்தது.