கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால், பெரும்பான்மையான மக்கள் வேலையிழந்து தொழில் முடங்கி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டனர். சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
ஆரம்பத்தில் நகர்ப்புறங்களில் உள்ள தொழில்கள் மற்றும் வணிகம் பாதிப்புக்குள்ளானது போல தெரிந்தாலும், இப்போது அதன் விளைவுகள் எல்லா தரப்பையும் பாதிப்படையச் செய்துள்ளது.
குறிப்பாக நகரங்களையும், அண்டை மாநிலங்களையும் சந்தையாகக் கொண்ட பால் வணிகம் முடங்கியிருப்பதால் மாநிலம் முழுவதும் பல லட்சம் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இந்தியாவில் பால் உற்பத்தி மற்றும் பால் பொருள் சந்தையில் முதல் நான்கு மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 2.25 கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 19 மாவட்ட பால் உற்பத்தியாளர் ஓன்றியத்தின் கீழ் இயங்கும் 12,585 பால் உற்பத்தியாளர் சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கும் 23 லட்சம் விவசாயிகள், 37 லட்சம் லிட்டர் பால் வரை ஒரு நாளில் உற்பத்தி செய்கிறார்கள். மேலும் பத்திற்கும் மேற்பட்ட பால் பொருள் தனியார் நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து உணவகங்கள், தேனீர் கடைகள், பேக்கரிகள் இயங்காததால் பால் பொருட்கள் தேக்கமடைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் தனியார் பால் நிறுவனங்களின் பால் ஆவினுக்கு வருவதைத் தடுக்க ஆவின் நிறுவனம் தரக் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் ஜூன் மாதத்திற்குப் பின் இன்னும் பணப் பட்டுவாடாவும் செய்யவில்லை. இதனால் கூட்டுறவு சங்கங்களில் உள்ள விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ஆனால் தனியார் பால் நிறுவனங்களை நம்பியுள்ள விவசாயிகள் நிலை இன்னும் மோசமாக உள்ளது. பால் பொருளுக்கான சந்தை குறைந்திருப்பதை காரணம் காட்டி தனியார் பால் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பசும்பால் விலையை 30 ரூபாயில் இருந்து 12 ரூபாய் முதல் 16 ரூபாய் வரை குறைத்து உள்ளனர். மேலும் முழுமையாக பால் கொள்முதல் செய்ய மறுக்கிறார்கள்.
தனியார் பால் பொருள் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு கால்நடை தீவனங்களையும் விற்று வருகின்றனர். இப்பொழுது இந்த ஊரடங்கில் தீவனங்களுக்கான விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இதுவரை ஒழுங்கான பணப்பட்டுவாடாவும் நடைபெறவில்லை.
விலை கட்டுப்படியாகாத இந்த நிலையில், பால் கொள்முதலும் குறைந்து அதற்கான பணமும் கிடைக்கப் பெறாமல் கிராமப் புறங்களில் உள்ள இதை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்ட கால்நடை விவசாயிகள் பெரும் சிக்கலை சந்தித்துள்ளனர்.
மகளிர் சுய உதவிக் குழுவின் வழியாகக் கடன்பெற்று மாடு வளர்ப்பவர்கள். மாதாந்திரக் கடன் தொகை கட்ட முடியாமல், கந்துவட்டியை நாடும் துயரநிலையும் உள்ளது.
தமிழக அரசு உடனடியாக இதில் தனி கவனம் செலுத்தி விவசாயிகளின் மொத்த பாலையும் கொள்முதல் செய்யவும், உரிய விலை கிடைக்கவும், கறவை மாடுகளுக்கு தேவையான தீவனங்கள் குறைந்த விலையில் கிடைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள்.