தமிழண்ணல்

நாகசாமியின் புரட்டுகளை உடைத்த தமிழண்ணல் அவர்களை அறிவோம்!

முதுபெரும் தமிழறிஞரான பெரிய கருப்பன் என்கிற தமிழண்ணல் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

ஓய்வு பெற்ற தொல்லியல் அறிஞர் நாகசாமி அவர்கள் தமிழ் மொழியை கீழ்மைப்படுத்தும் நோக்கத்தோடு, சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களும், சமற்கிருத நூல்களைப் பார்த்து எழுதப்பட்டவை என்று ”தி மிர்ரர் ஆப் தமிழ் அண்டு சான்ஸ்கிரிட்” என்ற ஒரு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார். அந்த நூலில் தொல்காப்பியம் பிந்தைய கால நூல் என்றும், தமிழ் நூல்கள் அனைத்தும் வடமொழி தழுவியவை என்றும் கருத்துகளை முன்வைத்து ஆங்கிலத்தில் எழுதினார். அந்த நூலைக் கண்டித்து தமிழண்ணல் அவர்கள், ”இரா.நாகசாமியின் பழுதடைந்த கண்ணாடியும், பார்வைக் கோளாறுகளும்” (The tainted spectacles and faulty vision of Dr. Nagaswamy) என்ற நூலை தக்க சான்றுகளுடன் எழுதினார். நாகசாமியின் கூற்றுகள் ஒவ்வொன்றையும் மறுக்கும் இந்த ஆழமான ஆய்வு நூலை தமிழண்ணல் அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டார். 

நாகசாமியின் புத்தகமும் அதற்கு மறுப்பான தமிழண்ணல் அவர்களின் புத்தகமும்

வாழ்க்கை குறிப்பு

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்ற கிராமத்தில் இராமசாமி-கல்யாணி ஆகியோருக்கு மகனாக  12 ஆகஸ்ட் 1928  மகனாக பிறந்த இராம.பெரியகருப்பன் பின்னாளில் தமிழறிஞர் தமிழண்ணல் ஆனார்.  

பள்ளத்தூர், ஏ.ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியிலும், மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும் திருவையாற்று அரசர் கல்லூரியிலும் பயின்று வித்துவான் பட்டம் பெற்றார். தன் முயற்சியாக சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை பொருளியல், முதுகலை தமிழ் ஆகிய பட்டங்களைப் பெற்றார். மொழிப்போர் மறவர் பேராசிரியர் சி.இலக்குவனார் மற்றும் இலக்கணச் செம்மல் போராசிரியர் அ.சிதம்பரநாதன் செட்டியார் ஆகியோரின் வழிகாட்டுதலில் “Tradition and Talent in Cankam Poetry” என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை செய்தார்.

காரைக்குடியிலுள்ள மீ.சு.உயர்நிலைப் பள்ளியில், தன்னுடைய கல்லூரி நண்பர் கவியரசு முடியரசனாருடன் இணைந்து 13 ஆண்டுகள் பணியாற்றினார். இவருடைய சங்க இலக்கியப் பயிற்சியை அறிந்த மதுரை கருமுத்து தியாகராசர் அவர்கள் தமது தியாகராசர் கல்லூரிக்கு அழைக்க, அங்கு 10 ஆண்டுகள் பணிசெய்தார். 1971-ல் பேரா.முத்து சண்முகம்பிள்ளையின் விருப்பத்தின் பேரில் காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். இவர் 1988-ல் காமராசர் பல்கலைக்கழகத் துறைத்தலைவராக இருந்தபோது, அது தனி ஆய்வு நடுவமாக (School of Tamil Studies) மாறுவதற்குப் பெரிதும் உழைத்தார்.  

ஒப்பிலக்கியத் துறை முதன் முதலாக காமராசர் பல்கலைகழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டபோது, அதற்கான கருவி நூலை எழுதியவர் டாக்டர் தமிழண்ணல். ஆங்கில அறிவு, உலக இலக்கிய அறிவு ஆகியனவற்றை தேடித் தேடிப் பெற்றவர் டாக்டர் தமிழண்ணல். 1989-ல் மலேசியத் திராவிடர் கழகம் நடத்திய விழாவிற்குத் தலைமை தாங்கியுள்ளார்.

தொழிலதிபர் பொள்ளாச்சி மாகாலிங்கம் சில தமிழ் அறிஞர்களின் உதவியுடன் வெளியிட்ட தொல்காப்பிய பதிப்பு தமிழுக்கு கேடானது என்று  எதிர்த்துக் கூறியவர். 

”கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்

எங்கு தேர்ந்தாயினும் அறிவினை நாடுதல்

இடம், பொருள், கருதாது, ஆய்வினைப் போற்றுதல்

தவறுறின் ஒப்புதல், பிழையினைக் காணின்

தயங்காது மறுத்தல், தற்சார்பில்லா 

நடுநிலை மனத்துடன் நாடுதல்

விடுதலை உணர்வாய்  ஆய்வறம் விளையுமே”  

என்று ஆய்வின் அறம் குறித்து பேசியவர்  

ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர் அனைவரும் கிரேக்க, இலத்தீன் இலக்கியங்களைப் பயின்ற பிறகே இலக்கியத்தைப் படைத்துள்ளனர். ஆனால், நமது தமிழில் சிறுகதை, நாவல், கவிதை எழுதுவோர் பலரும் பழந்தமிழ் இலக்கியப் பயிற்சியை அறவே புறக்கணித்துவிட்டுத் தம் படைப்புகளை எழுதுகின்றனர். ஆகவே, அவர்களது படைப்புகள் ஒளிவீசித் திகழவில்லை. வேரை மறந்து, அடிமரத்தைச் செல்லரிக்கவிட்டால் கிளைகள் காய்ந்து சருகாகுமே தவிர தளிர்க்காது. தமிழராகப் பிறந்த அனைவரும் சங்க இலக்கியத்தில் அறிமுகம் பெற்றாலன்றி, நமது தமிழ் வளர்ச்சியை மேலெடுத்துச் செல்ல முடியாது” என்று கூறியவர். 

அடையார் மாணவர் நகலகம் நா.அருணாசலம் அவர்கள்  உருவாக்கிய தமிழ் சான்றோர் பேரவையானது, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்துதல், தமிழே ஆட்சிமொழியாக வேண்டும், கோவில்களில் செய்யப்படும் அர்ச்சனைகள், சடங்குகள், இசையரங்குகள் ஆகியவற்றில் தமிழே இருக்க வேண்டும், பாராளுமன்றத்தில் தமிழ் நடைமுறை மொழியாக ஏற்கப்பட வேண்டும், தமிழ் படித்தவருக்கு வேலைவாய்ப்பு, எங்கும் தமிழ், எதிலும் தமிழ் ஆகிய கோரிக்கையை முன்வைத்து, 25.04.1999  அன்று 102 தமிழறிஞர்களுடன்  காலவரையற்ற உண்ணாவிரத்தை முன்னெடுத்தது. இந்த  போராட்டத்திற்கு  தலைமைதாங்கி  முன்னெடுத்தது தமிழண்ணல் ஆகும்.  

இதுவரை அவர் தொல்காப்பியம் தொடர்பாக 8 நூல்கள் உட்பட 80க்கும்   மேல்பட்ட நூல்களை  எழுதியுள்ளார். ஒரு தமிழறிஞராய் தமிழ் மொழிக்கு எதிரான கருத்துகளை முறியடிக்கும் ஆய்வுப் போராளியாய் செயல்பட்ட  தமிழண்ணல் 29 டிசம்பர் 2015 அன்று இயற்கை எய்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *