கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னும் பின்னுமான நடைமுறை-அரசு உறுதிப்படுத்த வேண்டியவை

கொரோனா தடுப்பூசி குறித்தான சந்தேகங்களும் விவாதங்களும் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் மக்களுக்கு வெளிப்படைத் தன்மையோடு விளக்கமளிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னும் தடுப்பூசி செலுத்திய பின்னரும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை முறையாகக் கடைபிடிப்பதை அரசு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உறுதி செய்ய வெண்டும்.

தடுப்பூசி செலுத்தும் முன் தடுப்பூசி எடுத்துக்கொள்வோரிடம் தற்போதைய உடல் நிலை, நீண்ட நாட்கள் தொந்தரவு உள்ளிட்ட தகவல்களை சேகரிப்பதை உறுதி செய்ய வேண்டும். அந்த தகவல்களை கேட்டறிந்த பின்னர் அவருக்கு இந்த தடுப்பூசி பொருந்துமா என்பதை மருத்துவர்கள் உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் தடுப்பூசியோடு வெளியிடும் தகவல் குறிப்பை நுகர்வோருக்கு தெரியப்படுத்துவது அரசு மற்றும் மருத்துவர்களின் பொறுப்பு. இதை அனைத்து மருத்துவமனைகளும் கடைபிடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்னதாக நீங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டிய விவரங்கள் என்று அந்த நிறுவனத்தின் தகவல் சீட்டில் கீழ்காண்பவை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் அந்த தகவல் அடங்கிய குறிப்பு தடுப்பூசி செலுத்திக் கொள்வோரிடம் விளக்கப்படுவது இல்லை. 

கோவிஷீல்ட் தடுப்பூசி தகவல்கள்

கோவிஷீல்ட் தடுப்பூசி

மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டியவை என்று கோவிஷீல்ட் தடுப்பூசி தகவல் அடங்கிய  சீட்டில் இருக்கும் தகவல்கள் சில:

 • முன்னதாக ஏதேனும் மருந்து,உணவு, தடுப்பூசி அல்லது இந்த  கோவிசீல்டு தடுப்பூசியில் அடங்கியுள்ள ஏதேனும் ஒரு பொருள்  எடுத்ததைத் தொடர்ந்து உங்களுக்கு தீவிர ஒவ்வாமை ஏற்பட்டிருக்கிறதா?
 • காய்ச்சல் இருக்குமானால் தெரிவிப்பது
 • ரத்த கசிவு நோய் (bleeding disorder) பாதிப்பு உள்ளவரா?
 • நோயெதிர்ப்பு குறைபாடு உடையவர் அல்லது நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் மருந்து எடுத்துக்கொள்பவர்?
 • கர்ப்பமாக இருந்தால் அல்லது கர்ப்பமடைய திட்டமிருப்பவர்
 • பாலூட்டும் தாய்மாரா?

நீங்கள் நிச்சயமாக  தடுப்பூசி எடுக்கும் முன் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.

யாரெல்லாம் கோவிஷீல்ட் தடுப்பூசி எடுக்கக் கூடாது?

யாரெல்லம் கோவிஷீல்ட் தடுப்பூசி எடுக்கக் கூடாது என்று அந்த நிறுவனம் தெரிவித்திருப்பது

 • முதல் முறை தடுப்பூசி எடுத்ததைத் தொடர்ந்து தீவிர ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டோர்
 • இந்த தடுப்பூசியில் அடங்கியுள்ள ஏதேனும் ஒரு பொருளால் தீவிர ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்

அப்படியென்றால் அந்த தடுப்பூசியில் என்னென்ன பொருட்கள் உள்ளது என தடுப்பூசி செலுத்திக் கொள்பவரிடம் மருத்துவர்கள் தெரியப்படுத்த வேண்டும்.

கோவிஷீல்ட் தடுப்பூசியில் அடங்கியுள்ள பொருட்கள்

L-Histidine, L-Histidine hydrochloride monohydrate, Magnesium chloride hexahydrate, Polysorbate 80, Ethanol, Sucrose, Sodium chloride, Disodium edetate dihydrate (EDTA), Water for injection.

இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த பொருட்கள் குறித்து தெரியாது. இந்த பொருட்கள் நமக்கு ஒத்துப்போகுமா அல்லது ஒவ்வாமை ஏற்படுத்துமா என்பது அறிவதே கடினம். மருத்துவர்கள் இந்த பொருட்கள் குறித்து தெளிவுபடுத்துவது அவர்களின் பொறுப்பு.

கொரோனா தொற்றிற்கு எதிராக எவ்வளவு காலம் கோவிஷீல்ட் பாதுகாப்பு அளிக்கும் என்பது குறித்து ”இன்னும் நிறுவப்படவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறது. மேலும் அனைவரையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்காது என்றும் தெரிவித்திருக்கிறது. (As with any vaccine, vaccination with COVISHIELD™ may not protect all vaccine recipients)

கோவிஷீல்ட் – பக்க விளைவுகள்

பொதுவாக 10-ல் ஒருவருக்கு எற்படும் பக்க விளைவுகள்

 • வலி, வெப்பநிலை உயர்வு, சிவந்து போதல், வீக்கம், அரிப்பு, சோர்வு, காய்ச்சல், உடல் குளிர்ந்து போதல், தலை வலி, மூட்டு வலி, வாந்தி, சளி, மூக்கு ஒழுகுதல்.

அரிதாக 100-ல் ஒருவருக்கு

 • தலைசுற்றல்
 • பசியின்மை
 • வயிற்று வலி
 • enlarged lymph nodes
 • அதிகப்படியான வியர்வை, அரிப்பு, எரிச்சல்
 • மேலும் தீவிர எதிர்பாராத பக்க விளைவுகள் ஏற்படலாம் என்றும் இன்னும் கிளினிகல் ஆய்வு நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்துவதற்கு முன் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளவை

 • தடுப்பூசியைத் தொடர்ந்து anaphylactic (உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய தீவிர ஒவ்வாமை) ஏற்படுமானால் அதற்கு தகுந்த சிகிச்சை முறையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
 • தீவிர காய்ச்சல் இருக்கும்போது செலுத்தக்கூடாது.
 • ரத்த தட்டுக்கள் குறைபாடுடையோருக்கு மிகவும் எச்சரிக்கையுடன் செலுத்த வேண்டும்.

கூட்டு மருந்து பயன்பாடு மற்ற மருந்துகளோடு சேர்த்து பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தப்படவில்லை. இதர மருந்துகளுடன் சேர்த்து கொடுக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொலைக்காட்சியில் பல மருத்துவர்கள் அரசு அதிகாரிகள் அனைவரும் போட்டுக் கொள்ளலாம் எனவும், ரத்த அழுத்தம்,சர்க்கரை நோய் சிகிச்சையில் இருப்பவர்கள் கூட போட்டுக்கொள்ளலாம் என்றும் சொல்கின்றனர். தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் கூட்டு மருந்தாக கொடுத்து சோதனை செய்யாதபோது எதன் அடிப்படையில் அனைவரும் போட்டுக்கொள்ளலாம் என்று கூற முடியும். மக்களிடம் சரியான தகவலை கொடுப்பது அரசு மற்றும் மருத்துவர்களின் பொறுப்பு.

கோவாக்சின் தடுப்பூசி தகவல்கள்

கோவாக்சின் தடுப்பூசி

தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு முன் முருத்துவரிடம் தெரிவிக்க வேண்டியவை

 • ஏதேனும் நோய்க்காக நீண்ட காலமாக தொடர் சிகிச்சையில்  இருப்பவர்கள் (எவ்வளவு காலமாக சிகிச்சையில்,எந்த நிலையில் இருப்பவர்கள் என்பதைப் பொறுத்து) தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
 • ஒவ்வாமை குறித்து
 • காய்ச்சல் இருந்தால்
 • ரத்த கசிவு நோய் இருந்தால்
 • நோயெதிர்ப்பு குறைபாடு உடையவர் அல்லது நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் மருந்து எடுத்துக்கொள்பவர்
 • பேறு காலத்தில் உள்ளவர்கள்
 • பாலுட்டும் தாய்மார்கள்

யாரெல்லம் Covaxin தடுப்பூசி எடுக்க கூடாது என்று அந்த நிறுவனம் தெரிவித்திருப்பது?

 • முதல் முறை தடுப்பூசி எடுத்ததைத் தொடர்ந்து தீவிர ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டோர்.
 • இந்த தடுப்பூசியில் அடங்கியுள்ள ஏதேனும் ஒரு பொருளால் தீவிர ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்.
 • கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள்

இப்படி அனைத்து தடுப்பூசிகளுமே யாருக்கு செலுத்தலாம் மற்றும் கூடாது என்பதை முடிவு செய்ய தடுப்பூசி செலுத்திக்கொள்வோரிடம் அவரின் உடல் நிலை குறித்து தகவல்(Screening) பெற வேண்டும். மேலும் தடுப்பூசியில் உள்ள பொருட்கள் மற்றும் அதனால் ஏற்பட வாய்ப்பிருக்கும் பக்க விளைவுகள் குறித்து விளக்கப்பட வேண்டும். அந்த நபருக்கு தடுப்பூசி பொருந்தும் எனும் பட்சத்தில் அவரின் ஒப்புதலோடு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். ஆனால் நடைமுறையில் பார்க்கும்போது இவை எதுவும் பின்பற்றப்படுவதில்லை.

நேற்றைய முன்தினம் ஏப்ரல் 24 அன்று கடலூர் மாவட்டம் சிவப்பிரகாஷ் (வயது 25) என்ற இளைஞருக்கு அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருந்திருக்கிறது. தடுப்பூசி செலுத்தும் முன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள்/மருத்துவர்கள் முறையாக அவரது உடல்நிலை குறித்து விசாரணை செய்யத் தவறியிருக்கிறார்கள் அல்லது விசாரணை செய்து அவருக்கு வலிப்பு நோய் உள்ளது என்பது தெரிந்தும் தடுப்பூசி எந்த விதத்திலும் பாதிக்காது என்று கூறி தடுப்பூசி போட்டிருப்பார்கள். இந்த இரண்டுமே மருத்துவ அறிவியலுக்கு எதிரான செயல்.

தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து ஏற்படும் எதிர்விளைவுகள் adverse events following immunisation (AEFI) விதிமுறைகள்

தடுப்பு மருந்து செலுத்திய பின் ஏற்படும் எதிர்விளைவுகளைக் கண்காணித்து பதிவு செய்ய அனைத்து நாடுகளிலும் AEFI நடைமுறையில் உள்ளது. தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து ஏற்படும் எதிர்விளைவுகள் (AEFI) கண்காணிக்கும் திட்டம் இந்தியாவில் 1988-ல் தொடங்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தியதிலிருந்து 30 நாட்கள் கண்காணிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கு ஏற்படும் எதிர் விளைவுகள் பதிவு செய்யப்படுகிறது.

31 மார்ச் அன்று தேசிய AEFI கமிட்டியில் சமர்பிக்கப்பட்ட தகவலின் படி கொரோனா தடுப்பூசி போட்டதைத் தொடர்ந்து 617 தீவிர பக்க விளைவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 29 மார்ச் அன்றைய தேதிப்படி தடுப்பூசியைத் தொடர்ந்து இந்திய அளவில் 180 மரணங்கள் நிகழ்ந்துள்ளது. அதாவது 617 தீவிர பக்கவிளைவு ஏற்பட்டவர்களில் 180 (29.2%) பேர் மரணமடைந்துள்ளனர். ஆனால் இந்த மரணங்களுக்கு தடுப்பூசி காரணமென்று கொடுக்கப்பட்ட தகவலில் உறுதிப்படுத்தப்படவில்லை.

கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் பக்க விளைவுகள்
கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் பக்க விளைவுகள்

இந்த மரணங்கள் குறித்து வைராலஜிஸ்ட் ஜேக்கப் ஜான் இவ்வாறு கூறுகிறார்.

”இந்த மரணங்களுக்கு தடுப்பூசி காரணமில்லை எனில் தடுப்பூசியைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மரணங்களின் எண்ணிக்கை வேறுபடாமல் சம அளவில்   நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் தடுப்பூசி போட்டதிலிருந்து 93 மரணங்கள் முதல் மூன்று நாட்களிலும், 18 மரணங்கள் 4 முதல் 8 நாட்களிலும், 11 மரணங்கள் 8 முதல் 28 நாட்களிலும் ஏற்பட்டிருக்கிறது. எனவே நிசசயமாக தடுப்பூசியோடு மரணங்களுக்கு தொடர்பு உண்டா என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்த மரணங்களின் எண்ணிக்கையை வாரக் கணக்கீட்டு அடிப்படையில் பார்த்தால் 111 மரணங்கள் முதல் வாரத்தில் நிகழ்ந்திருக்கிறது. அடுத்த மூன்று வாரங்களில் 11 மரணங்கள் மட்டுமே நிகழ்ந்திருக்கிறது. இந்த மரணங்களுக்கும், தடுப்பூசிக்கும் தொடர்பில்லை எனில் தடுப்பூசி போட்ட பிறகான வாரங்களில் மரணங்களின் எண்ணிக்கை சமமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் முதல் வாரத்தில் மரணங்களின் எண்ணிக்கை அசாதாரணமாகவும் அடுத்த இரண்டு முதல் நான்கு வாரங்களில் ஒரு வாரத்திற்கு நான்கு மரணங்கள் மட்டுமே நிகழ்ந்திருக்கிறது.

தடுப்பூசியை தொடர்ந்து முதல் வாரத்தில் மட்டும் இதயத்திற்கு ரத்த ஓட்டக் குறைவு அல்லது மாரடைப்பு காரணமாக 59 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் 2 முதல் 4 வாரங்களில் 4 மரணங்கள் மட்டுமே நிகழ்ந்திருக்கிறது. அதேபோல் தடுப்பூசியைத் தொடர்ந்து பக்கவாதம் காரணமாக முதல் வாரத்தில் 13 உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் 2 முதல் 4 வாரத்தில் ஒரு மரணம் மட்டுமே நிகழ்ந்திருக்கிறது. 

தடுப்பூசியைத் தொடர்ந்து முதல் வாரத்தில் 9 திடீர் மரணங்களும், ஆனால் அடுத்த 2 முதல் நான்கு வாரங்களில் ஒரு மரணம் மட்டுமே நிகழ்ந்திருக்கிறது.”

பதிவு செய்யப்பட்ட இந்த எதிர் விளைவுகளோ, மரணங்களோ அனைத்தும் தடுப்பூசி போட்டதிலிருந்து குறுகிய காலத்தில் ஏற்பட்டவை மட்டுமே. நீண்ட கால பக்க விளைவுகள் குறித்து ஆய்வுகள் செய்யப்படவில்லை. ஏனெனில் ஒரு வருடத்திலேயே தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நீண்ட கால பக்க விளைவுகளையும் அரசு கண்காணிக்க வேண்டும்.

இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்ற AstraZeneca ரத்த உறைதலை ஏற்படுத்துவதாக டென்மார்க் நாடு அந்த தடுப்பூசியை நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது. 

AEFI  விதிமுறைகள்- சர்வதேச நிறுவனங்களின் அழுத்தம்

AEFI  என்ற நடைமுறையே தடுப்பூசி போடப்படுவதைத் தொடர்ந்து ஏற்படும் எதிர்விளைவுகள் மரணங்களை பதிவு செய்வதற்காகத்தான். ஆனால் தடுப்பூசியைத் தொடர்ந்து ஏற்படும் மரணங்கள் அனைத்தும் தற்செயலானது என்றே பதிவு செய்யப்படுகிறது. 

தடுப்பூசியைத் தொடர்ந்து ஏற்படும் மரணங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் புறக்கணிப்பதற்கு சர்வதேச நிறுவனங்களின் அழுத்தம் இருப்பதாக சமீபத்தில் பத்ம விருது பெற்ற மருத்துவர் பி.எம் ஹெக்டே உள்ளிட்ட பத்து மருத்துவர்கள் பேராசிரியர்கள் அடங்கிய குழு 2014-ம் ஆண்டு பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தனர். அந்த கடித்ததில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

”சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து உலகளாவிய அழுத்தம் இருப்பதை நாங்கள் அறிவோம். இந்த சர்வதேச நிறுவனங்கள் மரணங்களை விசாரிக்கும் நெறிமுறைகளைக் கூட மாற்றியிருக்கிறது. எனவே தடுப்பூசியைத் தொடர்ந்து ஏற்படும் மரணங்கள் புறக்கணிக்கப்படலாம்.”

இந்த சர்வதேச நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் என்பவர்கள் GAVI மற்றும் பில்கேட்ஸ்  நிறுவனங்கள் தான். இது பற்றி மேலும் தகவலறிய.

படிக்க: மருந்து வியாபாரி பில் கேட்ஸ்-ன் கட்டுப்பாட்டில் WHO செல்வதால் சூழும் அபாயம்

எனவே எவ்வித அழுத்தங்களுக்கும் உட்படாமல் தடுப்பூசியைத் தொடர்ந்து ஏற்படும் மரணங்களை உடற்கூறாய்வு செய்து அரசு முழுவதுமாக விசாரணை செய்து புள்ளி விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

தேசிய AEFI கமிட்டி

மாவட்ட வாரியாக சுகாதார அதிகாரிகள் சமர்ப்பிக்கின்ற அறிக்கைகளின் அடிப்படையிலேயே தேசிய கமிட்டி தடுப்பூசி தொடர்பான பக்க விளைவுகளை ஆய்வு செய்கிறது. எனவே களத்தில் பக்க விளைவுகளை பதிவு செய்கிற அதிகாரிகள் முறையாக ஆய்வுகளை செய்து சமர்ப்பிக்க அரசு அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்க வேண்டும்.

இதுகுறித்து Indian Journal of Medical Ethics-ன் ஆசிரியர் மருத்துவர் அமர் ஜெசானி இவ்வாறு கூறுகிறார்.

“”தடுப்பூசியைத் தொடர்ந்து ஏற்படும் பக்க விளைவுகளை பதிவு செய்கிறபோது  என்னவெல்லாம் கவனிக்க வேண்டும் என்று மாவட்ட அளவில் உள்ள சுகாதார அதிகாரிகளுக்கு தேசிய AEFI கமிட்டி வழிகாட்டுதல் வழங்க வேண்டும். எப்படி நோய் குறித்தான பிரேதப் பரிசோதனை (pathological autospy) செய்யப்பட வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லப்பட வேண்டும்.”

தடுப்பூசி எதிர்விளைவுகள்/மரணங்களுக்கு இழப்பீடு

இந்திய அரசின் அறிவிப்பின்படி கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு இழப்பீடு கிடையாது. இத்தகவலை சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட கடிதத்தில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் இழப்பீடு வழங்குவதற்கான நடைமுறை உள்ளது. ஆனால் இந்தியாவில் அப்படியான நடைமுறை வெளிப்படையாக இல்லை. அதுகுறித்து மக்களுக்கு அரசு எந்த தகவலும் அளிப்பதில்லை.

இதர நாடுகளைப் போல தடுப்பூசியால் ஏற்படும் பாதகங்களுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறையை அரசு அறிவிக்க வேண்டும். மேலும் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் லாபத்தை மட்டும் தனதாக்கிக் கொண்டு அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பொறுப்பேற்காமல் சட்டப் பாதுகாப்பு கோருவதை அரசு அனுமதிக்கக் கூடாது.

– சுசீந்திரன் பன்னீர், Madras Review

References:

https://timesofindia.indiatimes.com/india/local-authorities-not-admitting-aefi-deaths/articleshow/82010059.cms

https://jacob.puliyel.com/paper.php?id=342

https://www.cdc.gov/vaccines/covid-19/downloads/pre-vaccination-screening-form.pdf

https://timesofindia.indiatimes.com/india/local-authorities-not-admitting-aefi-deaths/articleshow/82010059.cms

https://www.thehindu.com/news/national/coronavirus-180-deaths-following-vaccination-reported-in-india/article34274144.ece

https://timesofindia.indiatimes.com/india/180-deaths-after-jabs-till-mar-31-75-within-3-days/articleshow/81978526.cms

https://www.businesstoday.in/sectors/pharma/denmark-bans-astrazeneca-covid-19-vaccine-use-over-blood-clotting-fears/story/436649.html

https://timesofindia.indiatimes.com/india/govt-no-provision-to-compensate-the-vaccinated-in-case-of-adverse-events/articleshow/81923434.cms#:~:text=NEW%20DELHI%3A%20India%20has%20no,free%20in%20public%20health%20facilities.

http://www.healerumar.com/search/label/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%20%E2%80%93%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%20%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%202.0

https://www.healthline.com/health/anaphylactic-shock

One Reply to “தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னும் பின்னுமான நடைமுறை-அரசு உறுதிப்படுத்த வேண்டியவை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *