மருத்துவத் துறை அரசிடம் இருக்கும் வரையில் மட்டுமே அது மக்களுக்காக செயல்படும். மருத்துவ ரீதியாக நடக்கும் எந்த ஆய்வுகளும், பரிசோதனை முயற்சிகளும் (Clinical Trial) முழுமையாக மருத்துவ விதிமுறைகளுக்கு உட்பட்டே நடத்தப்பட வேண்டும். பன்னாட்டு தனியார் மருந்து கம்பெனிகளின் தலையீடும், நிதியும் மருத்துவத் துறையில் அதீதமானதாக இருக்குமெனில் மக்கள் நலன் சார்ந்து கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டு, மருந்து ஆய்வுகளுக்காக (Clinical Trial) செலவிடும் நிறுவனங்களின் வியாபாரமே முதன்மையானதாக முன்னிறுத்தப்படும். மக்களின் உடல் நலன் என்பது பின்னுக்கு தள்ளப்பட்டு மருந்து நிறுவனங்களுக்கு சாதகமான முடிவுகளே எடுக்கப்படும்.
WHO-ல் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் ஆதிக்கம்
கொரோனாவுக்குப் பிறகான சூழலில் உலக சுகாதார நிறுவனத்திற்கு அளித்து வந்த நிதியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது. தற்போது மீண்டும் நிதி அளிப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்கா தனது நிதி நிறுத்தத்தை தொடருமானால், அமெரிக்காவிற்கு அடுத்ததாக அதிக நிதி அளிக்கும் பட்டியலில் பில் கேட்ஸின் Bill & Melinda Gates Foundation (BMGF) இருக்கும்.
உலக சுகாதார நிறுவனத்தில் அமெரிக்க நாட்டிற்கு இணையான நிதிப் பங்களிப்பினை பில் கேட்சின் நிறுவனங்கள் செய்து வருகின்றன. உலக சுகாதார நிறுவனமானது அமெரிக்கா என்ற உலக வல்லாதிக்க அரசின் பிடியில் இருப்பதும், ஏழை மக்களின் உடல் நலம் காக்கும் காப்பாளர் என்ற போர்வையில் வலம் வரும் பில் கேட்ஸ் போன்ற மருந்து நிறுவனங்களின் தரகரான பெருமுதலாளியின் பிடியில் இருப்பதும் ஆபத்தானதே.

இப்படி இவர்களின் நிதியில் இயங்கும் உலக சுகாதார நிறுவனம் அமெரிக்காவின் மருந்து நிறுவனங்களுக்கு சாதகமாகவும், பில் கேட்ஸ் முதலீடு செய்துள்ள மருந்து நிறுவனங்களின் லாபத்திற்கு சாதகமான முடிவுகளையும் எடுப்பதற்கு, நிதி அளிக்கும் நிறுவனங்களால் பெருமளவிலான அழுத்தம் பல காலங்களில் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்துள்ளது.
உலக நாடுகளுக்கு மருத்துவ ஆலோசனை சொல்லும் உலக சுகாதார நிறுவனம் அமெரிக்க அரசு மற்றும் பில்கேட்சின் அதிகப்படியான நிதியில் இயங்குவதனை ஆபத்தான ஒன்றாகவே பார்க்க முடியும். உலக மக்களின் ஆரோக்கியம் இவர்கள் மூலமாக பன்னாட்டு மருந்து நிறுவனங்களிடம் அடகு வைக்கப்படும் அபாயம் இருக்கிறது.
GAVI அமைப்பின் தடுப்பூசிகளில் பில் கேட்சின் முதலீடு
மேலும் தடுப்பூசி திட்டங்களை பல நாடுகளில் அரசுகளோடு இணைந்து செயல்படுத்தி வரும் GAVI என்ற அமைப்பபிலும் முக்கிய உறுப்பினராக பில்கேட்ஸ் அறக்கட்டளையின் முதலீடு உள்ளது. கேட்ஸ் பவுண்டேசன் மற்றும் GAVI அமைப்பு இணைந்து WHO-விற்கு அளிக்கும் நிதியானது கிட்டத்தட்ட அமெரிக்கா அளிக்கும் நிதிப் பங்களிப்பிற்கு இணையானது. பல்வேறு நாடுகளுக்கு மருத்துவ ரீதியான ஆலோசனைகளை வழங்கக் கூடிய உலக சுகாதார நிறுவனம் இப்படி ஒரு தனியார் அறக்கட்டளை(BMGF)யின் அதிகப்படியான நிதியில் இயங்குவதால், அந்த தொண்டு நிறுவனங்களின் பின்புலத்தில் உள்ள மருந்து நிறுவனங்களின் மருந்து பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவான முடிவுகளை எடுக்க அழுத்தம் கொடுக்க முடியும் எனும் ஆபத்து இருக்கிறது.
GAVI அமைப்பு தொடங்குவதற்கு 1999-ல் பில் கேட்ஸ் அறக்கட்டளை 750 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது. தற்போதைய முதலீடு 4000 மில்லியன் டாலர்கள்.
இந்தியாவின் Serum Institute உடன் கேட்ஸ் அறக்கட்டளை
இந்தியாவில் உள்ள Serum Institute of India என்ற நிறுவனம் தற்போது கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் GAVI மற்றும் கேட்ஸ் அறக்கட்டளையுடன் கைகோர்த்திருக்கிறது. அதாவது தடுப்பூசி உற்பத்தி செய்ய GAVI அமைப்பிற்கு பில் கேட்ஸ் அறக்கட்டளை 150 மில்லியன் டாலர்கள் வழங்கும்.

மருத்துவ சேவகர் வேடத்தில் வலம்வரும் PATH அமைப்பு
PROGRAMME FOR APPROPRIATE TECHNOLOGY IN HEALTH (PATH) என்பது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு என்.ஜி.ஓ. இது உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் மருத்துவத்தைக் கொண்டு சேர்ப்பதற்கான அமைப்பாக தன்னைக் கூறிக் கொள்கிறது. ஆனால் மருந்து கம்பெனிகளுக்காக மருந்துகளை மக்கள் மீது சட்ட விரோதமாக பரிசோதனை செய்வதும், தடுப்பூசி மருந்து மாத்திரைகள் உள்ளிட்டவற்றை வியாபாரம் செய்து கொடுக்கும் ஒரு தரகு நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது. இதற்கு பில் கேட்ஸ் அறக்கட்டளை நிதி அளிக்கிறது. இந்த அமைப்பு சட்ட விரோதமாக இந்தியாவில் தொடங்கப்பட்டடு, மருந்து நிறுவனங்களுக்கு சாதகமான திட்டங்களை செயல்படுத்தியதாக பாராளுமன்ற விசாரணைக் குழு தெரிவித்தது.
PATH அமைப்பின் பங்குதாரர்களாக கார்ப்பரேட் மருந்து நிறுவனங்கள்
- GSK பன்னாட்டு மருந்து கம்பெனி – இந்த நிறுவனம் HPV எனும் தடுப்பூசியை குஜராத்தில் 9 முதல் 14 வயது கொண்ட 14,000 பெண் குழந்தைகள் மீது சட்ட விரோதமாக பரிசோதனை (Clinical Trial) செய்தது. 2013-ம் ஆண்டு GSK மற்றும் பில் கேட்சின் BMGF இணைந்து தடுப்பூசிகளுக்கான தொடக்க நிலை ஆராய்ச்சியில் 1.8 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்வதாக அறிவித்தார்கள். இந்நிறுவனம் காசநோய் தடுப்பூசி ஆய்வுக்கான உரிமத்தை மெலிண்டா கேட்ஸ் மருத்துவ ஆய்வு நிறுவனத்திற்கு வழங்கியது .
- நோவோ நார்டிஸ்க் (Novo Nordisk) – மருந்து நிறுவனம்.உலகின் 50% இன்சுலின் மருந்தினை உற்பத்தி செய்கிறது.
- ஃபைசர் (pfizer) – அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு மருந்து நிறுவனம். இந்நிறுவனத்திலும் பில் கேட்சின் BMGF முதலீடு செய்துள்ளது.
- ஜான்சன் & ஜான்சன் (johnson and johnson) – தற்போது கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருக்கிறது.
இப்படி மருந்து உற்பத்தியினை பெரும் வியாபாரமாக மேற்கொள்ளும் நிறுவனங்கள் தான், மருத்துவ சேவகராக காட்டிக் கொள்ளும் PATH அமைப்பின் பங்குதாரர்களாக உள்ளன.
இப்படி பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் நிதி ஆதரவோடு மக்களுக்கு மருத்துவ வசதியை ஏற்படுத்துவதாக அறிவித்துக்கொண்டு, தனக்கு நிதி வழங்கிய மருந்து நிறுவனங்களின் மருந்து மற்றும் தடுப்பூசிகளை அரசிற்கு விற்பனை செய்து கொடுக்கிறது PATH அமைப்பு. மருந்து நிறுவனங்களின் நிதியில் இயங்கும் இந்த அமைப்பு எப்படி மருந்து சோதனைகளையும், புள்ளி விவர சேகரிப்பினையும் நடுநிலையாக நடத்தும்?
இந்திய குழந்தைகள் மீது சட்டவிரோதமாக PATH அமைப்பு நடத்திய பரிசோதனை
இதற்கான உதாரணம் தான் 2009-ம் ஆண்டு மருத்துவ சோதனைக்கான அத்தனை விதிமுறைகளையும் மீறி அரசின் துணையோடு கிட்டத்தட்ட 30,000 பெண் குழந்தைகள் மீது தடுப்பூசி சோதனையை (Clinical Trial) நடத்தியது.
இந்த PATH அமைப்பு ஐ.சி.எம்.ஆர், ஆந்திரா மற்றும் குஜராத் மாநில அரசுகளோடு இணைந்து 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 முதல் 15 வயதுடைய கிட்டத்தட்ட 30,000 பெண் குழந்தைகள் மீது HPV தடுப்பூசி சோதனையை (clinical Trial) நடத்தியது. இதில் 16,000 குழந்தைகள் ஆந்திராவையும், 14,000 குழந்தைகள் குஜராத்தையும் சேர்ந்தவை. இந்த தடுப்பூசி சோதனை நடத்துவதற்கான நிதியை PATH அமைப்பிற்கு பில்கேட்சின் நிறுவனம் வழங்கியது.
இந்த தடுப்பூசி பரிசோதனையானது மூன்று முறை செலுத்தப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆந்திராவில் 5 மாணவிகளும், குஜராத்தில் இரண்டு மாணவிகளும் உயிரிழந்தனர். மேலும் பலர் தீவிர வயிற்று வலி, தலை வலி, மாதவிடாய் சிக்கல்கள், அதிக ரத்த இழப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகினர். இதில் பெரும்பாலான மாணவிகள் அரசால் நடத்தப்படுகிற விடுதிகளில் தங்கியிருந்த மாணவிகள்.
இந்த தடுப்பூசியை இவர்கள் மீது செலுத்தி பரிசோதிக்கும் தகவலை இந்த மாணவிகளிடமும், அவர்களின் பெற்றோர்களிடமும் தெரிவிக்காமல் விடுதியின் காப்பாளர்களிடம் மட்டும் கையொப்பம் பெற்றுக்கொண்டு இது நடத்தப்பட்டது. இது சட்டவிரோதமான மனித உரிமை மீறல் நடவடிக்கையாகும். மேலும் கல்வி அறிவு பெற்றிராத பெற்றோர்களிடம் விளக்கம் அளிக்காமல், ஒப்புதல் படிவத்தில் வெறும் கைரேகை மட்டும் பெறப்பட்டது. இதில் பெரும்பாலான விண்ணப்பம் கைரேகை ஒப்புதலாகவே இருந்தது. இது சட்டத்திற்கு புறம்பானதாகும்.
PATH-ன் சட்ட விரோத முறைகளை அம்பலப்படுத்திய பாராளுமன்ற நிலைக்குழு மற்றும் உண்மை அறியும் குழுக்கள்
இதை விசாரிக்க அமைக்கப்பட்ட பாராளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கை பின்வருமாறு குறிப்பிடுகிறது.
“9,543 படிவத்தில் 1,948 படிவங்களில் கைரேகை வைக்கப்பட்டிருந்தது. மேலும் இதில் 2,763 படிவங்களில் மாணவிகள் தங்கியிருந்த விடுதியின் காப்பாளர் கையொப்பமிட்டிருக்கிறார். குஜராத்தில் 6,217 படிவங்களில் 3,944 படிவங்களில் கைநாட்டு பெறப்பட்டுள்ளது. மேலும் 5,454 படிவங்களில் அந்த மாணவிகளின் பாதுகாவலர்களிடம் கையெழுத்தாகவோ கைரேகையாகவோ பெறப்பட்டுள்ளது.”
பெண் செயற்பாட்டாளர்களின் உண்மை அறியும் குழு
மாணவிகளின் மரணம் மற்றும் உடல் நல பாதிப்புகளைத் தொடர்ந்து பெண் செயற்பாட்டாளர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு ஆந்திராவில் பாதிக்கப்படட மாணவிகளிடம் ஆய்வு மேற்கொண்டது. இந்த உண்மையறியும் குழு தடுப்பூசி பரிசோதனையில் நடந்த விதிமுறை மீறல்களை வெளிக்கொண்டு வந்தது. தாழ்த்தப்படட, பழங்குடி, இசுலாமிய மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த குழந்தைகள் மீது இந்த பரிசோதனை நடத்தப்பட்டிருந்ததை உண்மை அறியும் குழு வெளிப்படுத்தியது.
தடுப்பூசி பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட பல பெண்களுக்கு தீவிர தலைவலி, அதீத ரத்தப்போக்கு, வயிற்று வலி, தலைசுற்றல், மயக்கம் போன்ற பல தீவிர தொந்தரவுகள் ஏற்பட்டதாக அந்த உண்மை அறியும் குழு தெரிவித்திருந்தது. தடுப்பூசி பரிசோதனைக்குப் பிறகு சோதனைக்கு உட்படுத்தப்பட்டோர் உடல் நலம் கண்காணிப்பு செய்யப்படவில்லை. அதற்கான எந்தவித திட்டமிடலும் இல்லாமல் பரிசோதனை செய்யப்பட்டிருந்ததாக அந்த குழு குற்றம் சாட்டியது. இந்த பரிசோதனை பற்றி பெரும்பாலான மாணவிகளின் பெற்றோர்களுக்கே தெரியாமல் செய்யப்பட்டிருந்தது. மேலும் இதற்கு சம்மதித்திருந்த விடுதி காப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் யாருக்கும் பரிசோதனை என்ற தகவலும், இதில் விருப்பமில்லை எனில் மறுக்கும் உரிமை உள்ளது என்ற தகவலும்கூட தெரியப்படுத்தப்படவில்லை.
இது வழக்கமான நோய் தடுப்பூசி திடடம் என்றே நினைத்திருந்தனர். சிலரது பெற்றோர்களுக்கு கர்ப்பப்பை, வாய் புற்றுநோய் ஆகியவற்றுக்கான தடுப்பூசி என்ற தகவல் மட்டுமே சொல்லப்பட்டிருந்தது. தடுப்பூசிகளின் சோதனை முயற்சி என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. பரிசோதனைக்கான ஒப்புதல் படிவங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான பெற்றோர்களுக்கு தாய் மொழியில் கூட எழுதவோ படிக்கவோ தெரிந்திருக்காத நிலையில், ஆங்கிலத்தில் படிவம் கொடுக்கப்பட்டு கைரேகை மூலமாக ஒப்புதல் பெறப்பட்டிருந்தது.
இந்த தடுப்பூசி பரிசோதனையில் PATH செய்யும் விதிமுறை மீறல்களையும், ஐ.சி.எம்.ஆர் அதற்கு சாதகமாக செயல்பட்டதையும், சோதனைக்கான முறையான அனுமதியை பெறவில்லை என்பதையும் பாராளுமன்ற விசாரணைக் குழு வெளிப்படுத்தியது.
குழந்தைகளின் மரணத்திற்கு எழுதப்பட்ட காரணங்கள்
7 குழந்தைகளின் மரணங்களும் இவ்வாறாக முடிக்கப்பட்டது.
- தடுப்பூசி சோதனைக்கும் இந்த மரணங்களுக்கும் தொடர்பு இல்லை.
- ஆந்திராவில் ஏற்பட்ட 5 மரணங்களில் 2 குழந்தைகள் விசம் அருந்தி இறந்தனர். ஒருவர் கிணற்றில் விழுந்து இறந்து போனார். 4-வது மரணம் தடுப்பூசிக்கு தொடர்பில்லாத வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்தார். 5 வது மரணம் தீவிர மலேரியாவால் மரணமடைந்தார்.
- குஜராத்- ஒருவர் பாம்பு கடித்தும், மற்றொருவர் மலேரியாவாலும் இறந்தார்.
அந்த ஏழைக் குழந்தைகளின் மரணம் இப்படித்தான் எழுதப்பட்டது.
பாராளுமன்ற விசாரணைக் குழு அறிக்கையில் சில
இந்த சோதனைக்காக PATH தேர்வு செய்திருக்கின்ற நாடுகள், மக்கள் குழுக்கள் உள்ளிட்டவைகளைப் பார்க்குபோது, அந்த நாடுகளின் தடுப்பூசி திட்டங்களில் இவர்களின் தடுப்பூசியையும் சேர்த்து மருந்து உற்பத்தியாளர்களுக்கு வருடந்தோறும் அளவில்லா லாபத்தை ஈட்டிக்கொடுக்க வியாபார நோக்கில் பயன்படுத்தியிருப்பது தெரிகிறது. மற்ற மூன்று நாடுகளான உகாண்டா, வியட்நாம் மற்றும் பெரு ஆகிய நாடுகளில் எந்த விதத்தில் செயல்படுத்தியது என்பது தெரியவில்லை. இந்திய அரசு சம்பந்தப்பட்ட நாடுகளின் கவனத்திற்கு இது குறித்து எடுத்துச் செல்ல வேண்டும்.
ஐ.சி.எம்.ஆர் இந்த தடுப்பூசியை தேசிய தடுப்பூசி திட்டத்தில் சேர்ப்பதற்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை கேள்வி எழுப்பியிருந்தது.
PATH அமைப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கிறதா என்று கண்காணிப்பதற்கு பதிலாக ஐ.சி.எம்.ஆர், அந்த அமைப்பின் விதி மீறல்களுக்கு சாதகமாக செய்யப்பட்டிருக்கிறது. அமைச்சகம் ஐ.சி.எம்.ஆர் செயல்பாடு குறித்து விசாரணை செய்ய வேண்டும்.
இந்த அறிக்கை குறித்து முழுமையாக படிக்க: http://164.100.47.5/newcommittee/reports/EnglishCommittees/Committee%20on%20Health%20and%20Family%20Welfare/72.pdf
மருத்துவ வல்லுநர்களின் கடிதம்
பென்டாவேலன்ட் தடுப்பூசி தொடர்பாக 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அடங்கிய 10 பேர் கொண்ட குழு பெண்டாவலன்ட் தடுப்பூசியை திரும்ப பெறக்கோரி பிரதமருக்கு கையொப்பமிட்ட கடிதத்தை அனுப்பினர். அக்கடிதத்தில், “சர்வதேச நிறுவனங்களிடமிருந்தும் நன்கொடையாளர்களிடமிருந்தும் வரும் அழுத்தங்களை அறிகிறோம். இந்த நிறுவனங்கள் மரணங்களை விசாரிக்கும் நெறிமுறைகளைக் கூட மாற்றி அமைத்திருக்கிறது. எனவே மரணங்கள் புறக்கணிக்கப்படலாம்” என்று எச்சரித்திருந்தனர்.
இந்த கடிதத்தின் மூலமும், குழந்தைகள் பாதிப்பின் மூலமும் பில்கேட்சின் BMGF, GAVI, PATH போன்ற அமைப்புகள் மருத்துவ சேவை என்ற போர்வையில் மருந்து நிறுவனங்களுக்கு மறைமுகமாக வியாபார தரகர்களாக செயல்படுவது தெரிகிறது.
மருந்து முதலாளி பில் கேட்ஸ்
பில் கேட்ஸ் தன்னிடம் உள்ள நிதியின் மூலமாக உலகில் உணவின்றி உயிரிழக்கும் குழந்தைகளைக் காக்க முடியும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. ஏனெனில் உயிரிழக்கும் குழந்தைகளைக் காப்பாற்ற செலவு செய்தால் அதிலிருந்து லாபம் ஈட்ட முடியாது. தடுப்பூசி, நோய் தடுப்பு என்ற பெயரில் செய்யப்படும் முதலீடு மூலமாக பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் மூலமாக பன்மடங்கு லாபம் ஈட்ட முடியும்.
சட்ட விரோதமாக மருத்துவ அறக் கோட்பாடுகளை (Medical ethics) மீறி, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட PATH போன்ற அமைப்புகளுக்கு நிதிப் பின்புலமாக செயல்பட்ட BMGF அமைப்பின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, அவர்கள் இயங்குவதற்கான வெளிகளை முடக்கியிருக்க வேண்டும். ஆனால் BMGF-ன் செயல்பாடு இந்தியாவில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் இந்தியப் பிரதமர் மோடியுடனான சந்திப்பினையும் நடத்தியது.
வெளிநாட்டுப் பணம் என்றெல்லாம் பல்வேறு காரணங்களைக் கூறி அம்னெஸ்டி போன்ற மனித உரிமை அமைப்புகளை முடக்குவதில் தீவிரம் காட்டும் இந்திய அரசு, மக்களின் உயிரோடு விளையாடி அதில் லாபம் சம்பாதிக்கும் இத்தகைய அயல்நாட்டு மருந்து மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?
பிலிகேட்ஸ் போன்ற வியாபாரிகளிடமிருந்து உலக மக்களின் உடல் நலம் காக்கப்பட வேண்டும்.