அணுக்கழிவுகள்

தாழப் பறந்திடும் மேகம் -2 அணுக்கழிவு -ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து. (செர்னோபில் அணுவிபத்தின் 35வது நினைவுதினம் ஏப்ரல் 26,2021)

“வீட்டைச் சுற்றி தோட்டம் போட்டேன்
தோட்டத்தைச் சுற்றி வேலி போட்டேன்
வேலியைச் சுற்றி காவல் போட்டேன்
காவலைப் பற்றி கவலைப்பட்டேன்.”

– சண்முக சுப்பையா.

“ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு (1950ல் எழுதியது) ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக….”

தமிழகத்தில் ஏராளமானோருக்கு மிகமிக பரிச்சயமான ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் வரிகள் இவை. இந்த வரிகளை எழுதி இந்த ஆண்டுடன் (2021) 71 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. நாவலானது வாசகர்களை கால பிரயாணத்திற்கு அழைக்கும் காலகட்டத்திற்கு 1053 ஆண்டுகளாகிவிட்டன. மனிதர்களின் கற்பனையானது ஆயிரமாண்டுகளுக்கு முன்பான நாகரிகங்களைப் பற்றி ஒரு கற்பனையில்தான் நாம் ஒரு முடிவிற்கு வர வேண்டியிருக்கிறது. இதற்கும் இந்த கட்டுரைக்கும் தொடர்புள்ளதா என நீங்கள் கேட்பது புரிகிறது? ஆம் தொடர்புள்ளது. இதை மனதில் நிறுத்தி கட்டுரைக்குள் நுழைவோம்.

இப்போது உலகத்தில் நடந்து கொண்டிருக்கும் முக்கியமான தேடல்

மிக பரபரப்பான நவீன உலகில் ஒரு மாபெரும் தேடல் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு புதிருக்கான விடையைக் கண்டுபிடிக்கும் செயல். நீங்கள் நினைப்பதுபோல் வினா ஒன்றும் கடினமானதில்லை. மிக மிகச் சுலபம். வினா இதுதான். பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் விதமாக  ஒரு நினைவுச் சின்னம் அல்லது குறியீடு தேவைப்படுகிறது. அதாவது இந்த இடத்தில் மிகமிக ஆபத்தான பொருளை நாங்கள் புதைத்து வைத்திருக்கிறோம். இங்கு யாரும் வரவேண்டாம். ஆர்வ மிகுதியில்  இந்த இடத்தை தோண்டிப் பார்க்க வேண்டாம். இந்த பகுதியை விட்டு உடனே விலகவும். இதனை சித்திர வடிவில் காட்டுவதற்கான குறியீட்டுக்கான தேடல்தான். அப்படியென்ன இது கடினமான புதிரா என்ற கேள்வி எழலாம். இதற்கான தர்க்கங்களையும் தமிழகத்தை வைத்தே பார்க்கலாம்.

நம் தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 250 – கி.பி. 600 காலப்பகுதியில் களப்பிரர்கள் என்பவர்கள் ஆண்டார்கள் எனச் சொல்லப்படுகிறது. ஏறக்குறைய 350 ஆண்டுகள் ஆண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி இன்றுவரை தெளிவான தகவல்கள் இல்லை. இவ்வளவு ஏன் திருச்சிக்கு கிழக்கே மலைகளே இல்லாத நிலையில் தஞ்சையில் ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக தமிழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக நின்றுகொண்டிருக்கும் தஞ்சை பெரிய கோவிலுக்கு எங்கிருந்து கற்களை எடுத்து வந்தார்கள்? எப்படி அவ்வளவு உயரத்தில் அதை உயர்த்தினார்கள் என்பதும் இன்றுவரை மாபெரும் புதிராகவே இருக்கின்றன. உலகளவில் ஏராளமான புதிர்கள் மனிதகுலம் இவ்வளவு நவீனமான அறிவியலை கொண்டிருக்கும் காலத்திலும் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளன. எகிப்தில் நின்றுகொண்டிருக்கும் பிரமிட் இன்றுவரை ஏராளமான புதிர்களைக் கொண்டிருக்கிறது. இன்னும் ஏன் அவ்வளவு காலம் போகவேண்டும்! சில வருடங்களுக்கு முன்பு இந்தோனேசியாவில் காணாமல் போன விமானம் என்னவானது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்கவியலாத புதிர்தான்.

விடை கண்டுபிடிக்கப்படாத நவீனகாலப் புதிர்

இந்த புதிர்கள் எல்லாம் அதைப் பற்றிய கடந்தகால பதிவுகளை நாம் இன்னும் கண்டறியாததாலோ அல்லது அவை அழிந்துவிட்டதாலோ ஏற்பட்டிருக்கின்றன. நிகழ்ந்துகொண்டிருக்கும் புதிருக்கான தேடலும் இதையொட்டியேதான் உள்ளது. இந்த புதிர் எழுவதற்கான அடிப்படையான காரணம் என்னவென்றால், நாகரீகமும், தொழில்நுட்பமும் தினம்தினம் எண்ணவியலாதவாறு வளர்ந்து கொண்டிருக்கும் இந்த நவீன காலத்திற்கு நாம் கொடுக்கவிருக்கும் விலைதான் அது. இன்று உலகெங்கும் ஆக்க வேலைகளுக்கு மின்சாரத்தையும் , அழிவு வேலைகளுக்கு அணுகுண்டையும் தயாரிக்கும் 440 அணுமின் நிலையங்களே இந்த தேடலுக்கான அடிப்படையாக நின்று கொண்டிருக்கின்றன. 

இந்த அணுமின் நிலையங்களிலிருந்து உற்பத்தியாகும் அணுக்கழிவுகளே இதற்கான அடிப்படையாக இருக்கின்றன. ஆமாம் அணு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறோம். ஆனால் அதன் கழிவுகளை என்ன செய்வது என்று தெரியாமலேயே நாம் இந்த அழிவுசக்தியை வளர்த்துவிட்டு இப்போது செய்வதறியாது திகைத்துப்போய் நிற்கிறோம். அதன் விளைவாகத்தான் இந்த தேடல்.

நிலத்தின் அடியில் அமைந்திருக்கும் அணுக்கழிவு கிடங்கின் மாதிரி வரைபடம்

பல லட்சம் ஆண்டுகளுக்கு அழிக்க முடியாத அணுக்கழிவுகள்

அணுக்கழிவுகளை எப்படி கையாள்வது அல்லது அதை எப்படி முற்றிலும் அழிப்பது என்ற கேள்விகளுக்கு இன்றுவரை நாம் கண்டறிந்த எந்தவொரு நவீன தொழிநுட்பங்களும் கைகொடுக்கவில்லை. இதன் விளைவாக இன்றுவரை அந்த அணுக் கழிவுகளை பூமியில் துளையிட்டு அல்லது கைவிடப்பட்ட கனிமச் சுரங்கங்களில் புதைப்பதைத் தான் உலக வல்லரசுகள் மேற்கொள்கின்றன. அப்படி புதைக்கப்பட்ட இடங்களில் நிறுவுவதற்காகத் தான் இந்த தேடல் நடக்கிறது. அப்படிப்பட்ட அபாயம் கொண்டவையா? இவை என்ற கேள்வி எல்லோருக்கும் எழலாம்.

நிலத்தின் அடியில் அமைந்திருக்கும் அணுக்கழிவு கிடங்கின் மாதிரி வரைபடம்

உதாரணமாக யுரேனியத்தை உபயோகித்து செயல்படும் அணு நிலையங்களில் அதன் கழிவாக வெளிவரும் பொருள்களில் ஒன்று குளோரின்-36 (Chlorine-36) என்ற மிகமிக அபாயமான கதிர்வீச்சு கொண்ட கழிவுப் பொருள். இந்த கதிர்வீச்சு பொருளின் கதிர்வீச்சின் வீரியமானது சரிபாதியாக குறைவதற்கு அதாவது 50% குறைவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் மூன்று லட்சம் ஆண்டுகள் (3,00,000 ஆண்டுகள்). இதேபோல நெப்டியூனியம்-237 (Neptunium-237) என்ற கதிர்வீச்சுப் பொருள் தன்னுடைய வீரியத்தை சரிபாதியாக இழக்க (50% சதவிகிதம்) எடுத்துக்கொள்ளும் காலம் 2 மில்லியன் ஆண்டுகள். அதாவது இருபது லட்சம் ஆண்டுகளென்றால் இதன் ஆபத்தை நீங்கள் சரிவர உணர்ந்து கொள்ளலாம். மேற்சொன்ன அணுக் கதிர்வீச்சு கொண்ட பொருட்களை இப்போதுவரை புவியின் மிக ஆழத்தில் புதைத்து வைப்பதைத் தவிர அவற்றை அப்புறப்படுத்த வேறு வழியில்லை. அப்படி புதைத்து வைத்த இடத்தை  வருங்கால தலைமுறைகள் அவற்றை நெருங்கிவிடாமல் எப்படி காப்பது? அவற்றிற்கு என்னவிதமான வழிகாட்டுதல்கள் தருவது? என்பவை எல்லோர் மனதிலும் இப்போது எழுந்திருக்கும் கேள்விகளின் அடிப்படை.

அணுக்கழிவுகள் சேகரித்து வைத்திருக்கும் தடைசெய்யப்பட்ட பகுதி

இப்போதுவரை ஆபத்து விளைவிக்கும் அணுப்பொருள்களை நேரிடையாக தெரிந்தோ தெரியாமலோ கையாளக்கூடிய அல்லது நெருங்கக்கூடிய வாய்ப்புகள் மனிதர்களுக்கு உருவாகாது என்பதற்கு எந்தவித உத்திரவாதங்களுமில்லை. கண்காணிப்புகள் இருந்தாலும் அதையும் மீறி ஏதாவது விரும்பத்தகாத நிகழ்வுகள் நிகழ்ந்தால் அது உயிரிழப்புகளில்தான் சென்று முடியும். உதாரணமாக இதுவரை நடந்திருக்கும்  சில சம்பவங்களையே எடுத்துக்கொள்ளலாம். 

1987-ம் வருடம் பிரேசில் நாட்டில் ஒரு கைவிடப்பட்ட மருத்துவமனையில் நுழைந்த நான்கு திருடர்கள் அங்கிருந்த அதிக கதிரியக்கம் கொண்ட பெட்டகத்தை அது என்னவென்று தெரியாமல் திருடிச்சென்று அதை உடைத்து விற்றுவிட்டனர். இது நடந்த மூன்று நாட்களுக்கு  பின் திருடர்கள் நான்கு பேரும் கண்கள் உள்ளிட்ட பல உடலின் பலபாகங்களில் ரத்தக்கசிவு கண்டு, தலைமுடிகள் எல்லாம் உதிர்ந்து ஒரு வாரத்திற்குள் இறந்தனர்.

அணுக்கழிவுகள்

ஒரு ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோமானால், பிரான்ஸ் தனது முதல் அணுமின் நிலையத்தை 1956-ம் ஆண்டில் திறந்தது. இப்போதுவரை அது தனது நாட்டின் அதிதீவிர கதிர்வீச்சு கொண்ட நச்சுக்கழிவுகளை நாட்டின் நான்கு இடங்களில் குறுகிய காலத்திற்கு பாதுகாப்பதாகக் கூறி, நார்மண்டியில் (Normandy) உள்ள லா ஹேக்(La Hague), மார்கோல் (Marcoule) மற்றும் காடராச் (Cadarache) மற்றும் வால்டூக் (Valduc) ஆகிய இடங்களில் சேகரித்து வைத்திருக்கிறது. அங்கு வைத்திருக்கும் முடிவானது அப்போது குறுகிய கால தீர்வாகவே சொல்லப்பட்டது. உண்மையில் அவை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் அதிக பாதுகாப்பைக் கொண்டிருப்பதாக சொல்லப்பட்டாலும் அவை குறைந்தபட்சம் 100 ஆண்டுகளுக்கு மேலாக உறுதியாக நீடிக்கும் என்பது  நிச்சயமில்லை. 

மக்கள் நலன் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தால் நீண்ட கால நோக்கில் அந்த ஆபத்தான கழிவுகளை ஏறத்தாழ ஒரு லட்சம் (1,00,000) ஆண்டுகளுக்கு மக்கள் அந்த  கழிவுகளை அணுக முடியாமல் வைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஒரு கட்டுமானம் இந்த நவீன காலகட்டத்திலும் நம்மால் வடிவமைக்க முடியாது என்பதே உண்மை. 

இதற்குமுன் 1970 மற்றும் 1980 ஆண்டுகளில் பிரான்சிலும் உலகெங்கிலும் உள்ள அணுசக்தி ஏஜென்சிகள் இந்த அணுக்கழிவுகளை ஒரு ராக்கெட்டில் வைத்து விண்வெளியில் ஏவி விண்வெளியில் வீசிவிடலாம் என்றும், அல்லது கடலில் மிக ஆழத்தில் வைத்து பாதுகாக்கலாம் போன்ற திட்டங்களை வகுத்தன. ஆனால் வளிமண்டலத்தில் ஏவும்போது ராக்கெட் வெடித்தாலோ அல்லது கதிர்வீச்சு கடலில் கசிந்தாலோ மிக மோசமான விளைவுகளை அவை ஏற்படுத்தும் என்று அந்த கருத்துக்கள் ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டன.

அணுக்கழிவுகள்

அணுக்கழிவை சேமிப்பதில் உள்ள சிக்கல்கள்

இத்தகைய திட்டங்களில் இரண்டு மிகப்பெரும் சிக்கல்கள் இருக்கின்றன. முதலில் நிலத்தின் மிக ஆழத்தில் அணுக்கழிவு சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு கூடங்கள் அமைப்பதற்கு அதன் ஒழுங்குமுறை அங்கீகாரத்தைப் பெற தகுந்த திட்டங்களை உருவாக்குவதே மிகவும் சவால் நிறைந்ததுதான். இதில் மேலுமொரு சிக்கலாக டெக்டோனிக் தகடுகள் எனப்படும் நிலஅடுக்குகள் வரும்காலங்களில் மாற்றமடைந்து ஒரு புதிய பனியுகமானது அடுத்துவரும் 1,00,000 ஆண்டுகளுக்குள் நிகழும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள். அப்படி ஒரு நிலை ஏற்படுமானால் கழிவுகளில் இருக்கக்கூடிய கதிரியக்க கூறுகள் எளிதாக மண்ணை அரித்து நிலத்தடி நீருக்குள் கலக்கக்கூடும். அப்படி ஒரு மாற்றம் ஏற்படுமானாலும் அப்போதும் நிலைத்திருக்குமாறு என்றென்றும் நிலைத்திருக்கும்படி அந்த தளத்தை வடிவமைப்பதும் மிக சிக்கலானது. ஏனெனில் நீருக்குள் வெளியேறும் கதிரியக்க கழிவுகள் படிப்படியாக நிலத்தடி நீரை நஞ்சாக்கும். இது வனவிலங்குகளையும் மனிதர்களையும் பாதிக்கக்கூடும்.

ஜெர்மனியில் 1970 ஆண்டுகளில் ஆஸ்ஸி (Asse) என்ற இடத்தில் இருக்கும் கைவிடப்பட்ட ஒரு உப்பு சுரங்கத்தில் 126,000 சேகரிப்பு கலன்களில் புதைக்கப்பட்டிருந்த அணுக்கழிவுகள் இப்படிப்பட்ட மாற்றங்களால் பல ஆண்டுகளாகவே சிதைந்து வருகின்றது. இதனால் அங்கிருக்கும் கொள்கலன்களை வேறு இடத்தில் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

இரண்டாவது பிரச்சினை என்னவென்றால் ஏற்கனவே கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னதுதான். எதிர்கால மனித நாகரிகங்களால் அவர்களுக்கு தெரியாமலேயே கதிரியக்க தளங்கள் அகழ்வு செய்யப்படலாம். அப்படி ஒரு முயற்சி நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டெனில் அதைத் தடுக்க அனைத்து அணுசக்தி நிறுவனங்களுக்கும் தலையாய கடமை இருக்கிறது. ஏனெனில் எதிர்கால தலைமுறையினர் அவர்களின் அறியாமையால் அந்த தளத்தை அகழ்வாராய்ச்சி செய்ய முடிவு செய்யலாம் அல்லது பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட ஏதேனும் புதையலைக் கண்டறியலாம் என்ற தவறான நம்பிக்கையில் கூட இது நிகழலாம். எனவே இதைத் தடுக்கும் நோக்கத்திற்காக நீண்ட காலங்களுக்கு பின் வரக்கூடிய எதிர்காலத்துடன் இப்போதே தொடர்பு கொள்வதற்கான ஏதேனும் வழியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யவேண்டும். எதிர்காலத்தில் அங்கு வசிக்கும் மக்கள் அவற்றைப் பற்றி அறியாமல் அகழ்ந்தெடுக்க மிகவும் ஆர்வமாகிவிட்டால் அதன்பின் என்ன நடக்கும் என்பதைப் பற்றி எச்சரிக்கவும், மேலும் அந்த இடத்தின் தளத்தில் ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல்களைக் கவனிக்க அவர்களை ஊக்குவிக்கவும் நமக்கு இப்போது ஒரு  தார்மீகக் கடமை இருக்கிறது.

இது எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்து இப்போதே நம் மனதால் அதை வளைக்கும் பணி போன்றது. ஆனால் அப்படிப்பட்ட தொழில்நுட்பங்களோ அல்லது மாற்று வழிமுறைகளோ இப்போது இல்லை என்பதுதான் துயரம். சொல்லப்போனால் சுமார் 100,000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் ஹோமோ நியண்டர்டாலென்சிஸ் (Homo neanderthalensis) என்ற மனித இனம் பருமனான உடலமைப்புடனும் குரங்கு போன்ற முக அம்சங்களுடன் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எந்தவிதமான  அடிப்படை வேட்டைக் கருவிகளைப் பயன்படுத்தினார்கள் என்பது பற்றி நமக்கு  தெரியும். ஆனால் அவர்கள் பயன்படுத்திய மொழி குறித்து எந்தவித ஆதாரங்களும் நம்மிடம் இல்லை. இதேபோல் அடுத்த ஒரு லட்சம் ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது. 

அடுத்து வரக்கூடிய எந்த வகையான சமூகங்கள் இந்த பூவுலகை எப்படி விரிவுபடுத்துகிறார்கள், நாம் அவர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். அவர்கள் நாம் இப்போது பயன்படுத்தும் நம் மொழியைக் கூட புரிந்துகொள்வார்களா? என்ற கேள்வியே விடை தெரியாத ஒன்றாகும். ஏனெனில் மத்திய அமெரிக்காவில் 17-ம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப்பட்ட, எழுதப்பட்ட மாயன் மொழியின் பெரும்பகுதியானது இன்று நம்மால் விவரிக்க முடியாததாகவும் ,புரிந்து கொள்ள இயலாததாகவும் மாறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கதிரியக்க பொருளை குறிக்கும் குறியீடு -‘ட்ரெஃபோயில்’ (Trefoil)

அணுக்கழிவுகளை குறிக்க பயன்படுத்தப்படும் குறியீடு

தற்போது பயன்படுத்தப்படும் கதிர்வீச்சிற்கான சர்வதேச எச்சரிக்கை சின்னமான ட்ரெஃபோயில் (Trefoil) எனப்படும் குறியீடு மஞ்சள் பின்னணியில் மூன்று கருப்பு கதிர்கள் சுழலுமாறு வரையப்பட்ட குறியீடு 1946-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கொடுமை என்னவென்றால் இந்த குறியீடு இன்னும் பெரும்பான்மை மக்களால் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. 2007-ம் ஆண்டில் 11 நாடுகளில் மேற்கொண்ட ஐந்தாண்டு ஆய்வுக்குப் பிறகு சர்வதேச அணுசக்தி நிறுவனம் (International Atomic Energy Agency) இந்த சின்னத்திற்கு “உள்ளுணர்வு அர்த்தத்திற்கும் அதன் முக்கியத்துவதிற்கும் படித்தவர்களைத் தாண்டி வேறு எங்கும்  சிறிய அங்கீகாரமும் இல்லை” என்று கண்டறிந்தது. 

கென்யா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இந்த குறீயீடு பற்றி கேள்வி எழுப்பப்பட்டவர்களில் 6% சதவீதம் பேருக்கு மட்டுமே இதன் பொருள் என்னவென்று  தெரிந்ததும் இந்த விவாதத்தை மேலும் சிக்கலாக்கியது. இதனால் 2007-ம் ஆண்டு இந்த குறியீடு திருத்தப்பட்டு சிவப்பு நிறத்தில் ட்ரெஃபாயிலில் இருந்து வெளியேறும் அலைகள், ஒரு மண்டை ஓடு மற்றும் குறுக்கு எலும்புகள் மற்றும் ஓடும் ஒரு மனித  உருவம் ஆகியவற்றைக் காண்பிக்கும் விதமாக அந்த சின்னம்  மாற்றப்பட்டது. இந்த புதிய குறியீடு மிகவும் கவனமாகவும் உள்ளுணர்வுடனும் வடிவமைக்கப்பட்டது. ஆனாலும் இது அடுத்து வரக்கூடிய 100,000 ஆண்டுகளுக்கு ஆபத்துக்கான அடையாளமாக, அறிகுறியாக புரிந்து கொள்ளப்படுமா? என்ற கேள்வியும் எழுகிறது. 

2007ம் ஆண்டில் திருத்தப்பட்ட ‘ட்ரெஃபோயில்’ குறியீடு (Trefoil)

இன்னும் கவலையளிக்கும் விதமாக எதிர்கால நாகரிகங்கள் இந்த எச்சரிக்கையை புரிந்து கொண்டாலும் அதைக் சரியாக கவனிக்குமா? என்ற ஐயமும் எழுகிறது.

தொடரும்…

இக்கட்டுரையின் அடுத்தடுத்த பாகங்களை பின்வரும் இணைப்புகளில் படிக்கலாம்.


தாழப் பறந்திடும் மேகம் -2 (பாகம் 2) அணுக்கழிவு – ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து.

தாழப் பறந்திடும் மேகம் -2 (பாகம் 3) அணுக்கழிவு – ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து

தாழப் பறந்திடும் மேகம் -2 (பாகம் 4) அணுக்கழிவு -ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து


– அருண்குமார் தங்கராஜ், Madras Review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *