இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றின் காரணமாக இன்று உயிரிழந்தார். தமிழ் திரையுலகம் ஒரு முக்கியமான முற்போக்குக் கலைஞனை இழந்திருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் உள்ள மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த இயக்குனர் தாமிராவின் இயற்பெயர் ஷேக் தாவூத். இளநிலை விலங்கியலில் பட்டம் படித்துவிட்டு, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
முற்போக்கு இதழியலாளர் மற்றும் சிறுகதை எழுத்தாளர்
சென்னையில் பொம்மை என்ற சினிமா இதழிலும், வேறு பல சினிமா இதழ்களிலும் கட்டுரைகள் எழுதிவந்தார். சிறந்த சிறுகதை எழுத்தாளராகவும் இருந்தவர். ஊரில் இருந்தபோதே சமூக செயல்பாடுகளிலும் இலக்கியத்திலும் ஆர்வமுடையவர் என்பதால் முற்போக்கு இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இலக்கிய இதழில் கவிதைகளும், சிறுகதையும் எழுதிவந்தார்.
இவரது சிறுகதைகள் பர்வதமலையில் ராஜகுமாரி, தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள் ஆகிய தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. தாமிரபரணி ஆற்றின் பெயரிலிருந்து தாமிரா என்பதை தனது புனைப்பெயராக்கிக் கொண்டார்.
கே.பாலச்சந்தரிடம் பணியாற்றிய தாமிரா
கே.பாலச்சந்தரிடம் எட்டு ஆண்டுகள் பணியாற்றிய தாமிரா, அவர் கடைசியாக இயக்கிய பொய் படத்திற்கு வசனமும் எழுதியிருந்தார். சஹானா, அண்ணி, மனைவி உள்ளிட்ட தொடர்களுக்கு திரைக்கதையும் வசனமும் எழுதியிருக்கிறார். தாமிரா கன்னடத்தில் வெளியான அமிர்ததாரே, மாத்தாடு மாத்தாடு மல்லிகே படங்களுக்கும் திரைக்கதை எழுதினார்.
இயக்கிய திரைப்படங்கள்
’ரெட்டச்சுழி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆரி அர்ஜூனன் மற்றும் அஞ்சலி நடித்த அப்படம் 2010-ல் வெளியானது. இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் பாலச்சந்தர் ஆகிய இருவரையும் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்தார்.
இதற்குப் பிறகு சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் ஆகியோரை வைத்து ஆண் தேவதை என்ற படத்தை இயக்கினார். அடுத்ததாக தனது மூன்றாவது படத்தை இயக்குவதற்கான கதை விவாதம் உள்ளிட்ட பணிகளில் தற்போது தாமிரா ஈடுபட்டிருந்தார்.
எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய ‘பாயம்மா’ சிறுகதையைத் தழுவி மெஹர் என்ற டெலிஃபிலிம் எடுத்தார். தமிழ் முஸ்லிம்களின் வாழ்வில் நடக்கும் விடயங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட அந்தச் சிறுகதையை 2 மணி நேரப் தொலைக்காட்சிப் படமாக உருவாக்கினார் தாமிரா. இது தமிழ்ச்சூழலில் பேசாத பொருளை பேசியதால் பலராலும் பாராட்டப்பட்டது.
தமிழீழ ஆதரவாளர்
தமிழீழ ஆதரவாளரான இயக்குனர் தாமிரா 2009-ம் ஆண்டு போர் நிறுத்தத்தினை வலியுறுத்தி நடந்த போராட்டங்களில் முன்னணியில் நின்றார். மரண தண்டனைக்கு எதிராக படைப்பாளிகள் இணைந்தபோது, அதில் தன்னை இணைத்துக் கொண்டு மரண தண்டனைக்கு எதிராக தீர்க்கமாக கருத்து தெரிவித்தார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டங்களில் இடிந்தகரைக்கு சென்று பங்கெடுத்தவர். தமிழ்நாட்டு வாழ்வாதாரப் போராட்டங்கள் அனைத்திலும் அக்கறை கொண்ட சமூக பொறுப்புள்ள படைப்பாளியாக விளங்கியவர்.
பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல்
சி.மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
ஒரு மாதம் மட்டுமே கழிந்திருக்கிறது. என்னை சந்திக்க வேண்டும் என்று நீ விரும்பியதாக புகழ் மூலம் தகவல் வந்தது. ஏதோ ஒரு அவசரம் என்று நினைத்து உன்னை சந்திப்பதற்காக அந்த விடுதிக்கு நான் வந்தேன். புன்னகை ஒன்றை மெல்ல உதிர்த்துவிட்டு, வேறு ஒன்றுமில்லை உங்களை சந்தித்துப் பேச விரும்பினேன். அவ்வளவுதான் என்றாய். இறப்பதற்கு முன் என்னை சந்திக்க வேண்டுமென்று விரும்பினாயா ப்ரியா தோழனே. இதன் மூலம்,ஏன் தந்தாய் இந்த சித்திரவதையை எனக்கு.
தாமிரா இன்று தமிழகம் அறிந்த இயக்குனர். முதன் முதலில் எனது தோழர் #கவிதா பாரதியின் அறையில் தான் அவரை சந்தித்தேன். #அன்பு,அரசு,ஸ்ரீதர் ராஜ் உள்ளிட்ட தோழர்கள் திருவண்ணாமலையில் இருந்து எங்களை சந்திப்பதற்காகவே வந்து செல்வார்கள்.
ஒருபுறம் பசியோடும் மறுபுறம் இலட்சியக் கனவுகளோடும் வாழ்ந்த காலம். அந்த சூழலில், முளைவிட்டு வளர்ந்த தோழமை உறவு அது. அடிக்கடி சந்திக்க விட்டாலும் அது மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருந்தது.
இன்று திடீரென்று ஒரு எண்ணம்.மாமரத்து இலைகள் தலை வருடிச் செல்லும் கவிதா பாரதியின் மொட்டை மாடியில் வேண்டும் நமது தோழர்கள் சகிதம், உனது அதே புன்னகையுடன் உன்னை பார்க்க விரும்புகின்றேன். காலம் மாமரத்தையும்,மொட்டை மாடியையும் கொன்று விட்டதைப் போல உன்னையும் கொன்று விட்டது. நீ திரும்பி வரமாட்டாய்.
இப்பொழுது உன்னிடம் பகிர்ந்து கொள்வதற்கு என்னிடம் கண்ணீரைத் தவிர வேறு எதுவும் இல்லை தாமிரா.
தொல்.திருமாவளவன்
இயக்குனர் மாரி செல்வராஜ்
பார்க்கும்போதெல்லாம் நீங்கள் பகிர்ந்த கொண்ட கனவுகளை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். எதன்பொருட்டும் மாறாத உங்கள் நம்பிக்கை இந்த தினத்தைப் பிடித்து அப்படி அழுத்துகிறது. உன் வலியை நீ தொடர்ந்து சொல்லிக்கொண்டே இரு தம்பி என்ற உங்கள் தோழமை தந்த ஆவேசத்தில் திளைத்திருந்த எனக்கு இன்று யாரிடமும் சொல்ல முடியாத பெரு வலியை கொடுத்து சென்றுவிட்டாயே அண்ணா… உங்கள் உள்ளங்கைகளைப் பற்றிக் கொண்ட நாட்களை எல்லாம் நினைத்துக் கொள்கிறேன். அந்த சிரிப்பு கண்ணுக்கு தெரிகிறது. அதுபோதும் நீங்கள் என்றைக்கும் என் நினைவில் இளைப்பாறிக்கொண்டிருப்பீர்கள்
MISS U THAMIRAA ANNA
பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்
நியூட்ரினோ திட்டம் தொடர்பான பல்வேறு பிரச்சாரங்கள், கூட்டங்கள், வழக்குகள் என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த காலகட்டம். அதுதொடர்பாக விவாதிக்க மதிமுக பொதுச்செயலர் வீட்டிற்கு சென்றிருந்தேன், அங்கே இயக்குனர் தாமிரா அமர்ந்திருந்தார். நான் சென்றவுடன், வைகோ அவர்கள், “இருவருக்கும் அறிமுகம் இருக்குல்ல” என்று கேட்டார், நான் நன்றாக அறிமுகம் உண்டு என்று தெரிவித்தேன்.
அங்கே மூவரும் அமர்ந்து நியூட்ரினோ திட்டம் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் நீண்டநேரம் உரையாடி கொண்டிருந்தோம். “இதில் இவ்வளவு சிக்கல் உள்ளதா” விரிவாக எடுத்துச்செல்வோம் என்றார்; அதன்பிறகு பல்வேறு உரையாடல்கள்; நேரடியாகவும், தொலை பேசியிலும். பல்வேறு கூட்டங்கள், போராட்டங்கள் என தொடர்ந்தது இந்த சந்திப்புகள்;
“எப்போதுவேண்டும் என்றாலும் கூப்பிடுங்கள் சுந்தர்ராஜன், நான் ஓடோடிவந்துவிடுகிறேன்” என்பார், இப்போது அழைக்கிறோம் நண்பரே, வாருங்கள் தாமிரா.
என்ன வார்த்தைகள் சொல்லி எங்களை ஆறுதல் படுத்திக் கொள்வது என தெரியவில்லை. குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் கலைத் துறையினருக்கும் ஆழ்ந்த இரங்கல்.