கொரோனா வைரஸ் மூக்கின் பின்புறத்தில் உள்ள நாசியின் ஆதரவு செல்களைத் தாக்குவதால் சிலருக்கு வாசனை உணர்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. அவர்கள் “நறுமணங்களை முகரும் பயிற்சி”யை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் இழந்த நுகர்வு திறனை மீட்டெடுக்கலாம் என ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
கொரோனாவால் வாசனை இழப்பவர்கள்
வாசனை இழப்பு என்பது COVID-19 நோயைப் பொறுத்தவரை விசித்திரமான மற்றும் தனித்துவமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இதனால் காய்ச்சல் அல்லது இருமல் போன்ற பொதுவான அறிகுறிகளை வெளிக்காட்டாத வேறுயாரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதைக் கண்டறிய இது சிறந்த அறிகுறியாகக் கருதப்படுகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் சரிபாதி நோயாளர்கள் தற்காலிகமாக வாசனையை உணரும் திறனை இழக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது லேசான மற்றும் மிதமான கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டவட்டர்களில் இந்த அறிகுறி கண்டவர்கள் 67% வரை அதிகமாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.
முகர்ந்து கொண்டே இருக்கும் பயிற்சி
தற்போது ஆய்வில் கண்டறியப்பட்ட ஒரு நல்ல செய்தி என்னவென்றால், கொரோனா தாக்குதலால் அதிகமாக வாசனை உணரும் திறன் சேதமடைந்துள்ளவர்களுக்கு அவர்கள் மீண்டும் மீண்டும் வெவ்வேறு தேர்ந்தெடுக்கப்பட்ட வாசனையை திட்டமிடப்பட்ட இடைவெளிகளில் முகர்ந்துகொண்டே இருந்தால் அந்த பயிற்சியானது அவர்கள் இழந்த நுகர்ச்சி திறனை மீட்டெடுக்க உதவும் என்று தெரிவிக்கின்றன.
இயல்பாக நாம் வாசனையை உணர எது காரணம்?
மணங்களை நாம் உணர்வதற்கு “ஆல்ஃபாக்டரி சென்சார் நியூரான்கள்” (olfactory sensory neurons) எனப்படும் நரம்பு செல்களே காரணம். அவை மூக்கின் பின்புறத்தில் ஆல்ஃபாக்டரி குமிழ் (olfactory bulb) எனப்படும் கட்டமைப்பில் ஒரு கொத்தாக அமைந்துள்ளன. இந்த கொத்து கொத்தான நரம்பு செல்களில் இருக்கும் நியூரான்களில் சிறிய முடிச்சுகள் போன்ற உணர்முனைகள் உள்ளன. இவையே சளி மூடிய நாசியினுள் விரிவடைந்து மூக்கு வழியாக நாம் சுவாசிக்கும் வாசனை மூலக்கூறுகளுக்கு பதிலளிக்கின்றன.

கொரோனா தொற்றால் வாசனை இழப்பதன் காரணம்
தொற்றுநோயின் ஆரம்பத்தில், விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் இந்த அதிவேக நியூரான்களைப் பாதிப்பதன் மூலம் வாசனை இழப்பைத் தூண்டி பின்னர் அது மூளைக்குள்ளும் நுழைவதால் அது நீடித்த சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சினர். ஆனால் மேலதிக ஆய்வுகளில் இந்த நியூரான்களில் உயிரணுக்களைப் பாதிக்க கொரோனா வைரஸ் பயன்படுத்தும் ACE2 ஏற்பிகள் இல்லை என்று தெரியவந்துள்ளது.
ஆனால் ACE2 புரதஏற்பிகளானது நியூரான்களுடன் தொடர்பு கொள்ளும் நாசியின் ஆதரவு செல்களில் காணப்படுகின்றன. (ACE2 புரத ஏற்பிகள் மற்றும் கொரோனா வைரஸ் செயல்படும் விதத்தை அறிய நமது ‘மெட்ராஸ் ரிவியூ’ வில் முன்பு வெளிவந்த கட்டுரையை வாசிக்கவும்
படிக்க: கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்னேறிக் கொண்டிருக்கிறது அறிவியல்! புதிய ஆய்வுகளின் முடிவுகள்
வெள்ளெலிகளில் நடத்தப்பட்ட ஆய்வு

மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்பும் வேலை தடையின்றி நடக்க நாசி சளியில் உப்பு அயனிகள் சமநிலையைப் பராமரிப்பதே இந்த ஆதரவு செல்களின் (Sustentacular cells) முக்கிய வேலை. அதேவேளையில் ஆல்ஃபாக்டரி நியூரான்களுக்கு கட்டமைப்பு மற்றும் வளர்சிதை மாற்ற ஆதரவையும் அவை வழங்குகின்றன. இந்த அம்சங்களை கணக்கிலெடுத்து வெள்ளெலிகளுக்கு இதேபோன்று நடத்திய சோதனையில் இந்த ஆதரவு செல்கள்தான் ஆல்ஃபாக்டரி நியூரான்களைக் காட்டிலும் கொரோனா வைரஸ் செறிவை மிக அதிகமாகக் கொண்டிருந்தன என்பது தெரியவந்துள்ளது. இது நோயெதிர்ப்பு உயிரணுக்களில் பெரியளவிலான வைரஸ்களின் ஊடுருவலைத் தூண்டியதும் அதைத் தொடர்ந்து நாசியின் இயல்பான அமைப்புக்கு இடையூறு ஏற்பட்டது என்றும் தெரிவித்தது. துர்நாற்ற மூலக்கூறுகளைக் கண்டறிய நியூரான்கள் பயன்படுத்தும் முடி போன்ற அமைப்பில் சீர்குலைவையும் ஏற்படுத்தியிருக்கின்றன.
வாசனை உணர்வு இழந்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக சுமார் 14 நாட்களுக்குப் பிறகு நாசியின் செல்கள் மீண்டும் உருவாக்கத் தொடங்கியது என்பதையும் அவர்கள் கண்டறிந்தனர். இருப்பினும், ஒரு வெள்ளெலியின் வாசனை உணர்வு எவ்வளவு திரும்பியுள்ளது என்பதை அளவிடுவது கடினம் என்பதால், அவற்றை முழுமையாக மீட்டெடுக்க எவ்வளவு நேரம் ஆனது என்பதை கணிக்க இயலவில்லை.
மனிதர்களில் நடத்தப்பட்ட ஆய்வு

இருப்பினும், மனிதர்களில் மேற்கொண்ட ஆய்வுகள் சில பதில்களை அளிக்கின்றன. COVID-19 இன் விளைவாக வாசனை மற்றும் / அல்லது சுவை இழந்ததாகக் கூறிய 2,428 நபர்களின் ஆரோக்கியத்தைக் கண்காணித்து கண்டறிந்த ஒரு சமீபத்திய ஆய்வில், அவர்களில் 40% பேர் ஆறு மாதங்களுக்குப் பிறகு தங்கள் வாசனை உணர்வை முழுமையாக மீட்டெடுத்துள்ளனர். 2% மட்டுமே எந்த முன்னேற்றத்தையும் தெரிவிக்கவில்லை. மற்றொரு கணக்கெடுப்பு பல நபர்களுக்கு வாசனை உணர்வு மீள்தல் முந்தைய ஆய்வைவிட வேகமாக இருக்கலாம் என்று கூறியது. 71.8% பேர் ஒரு மாதத்திற்குப் பிறகு “மிகச் சிறந்த” அல்லது “நல்ல” வாசனை உணர்வை திரும்பப் பெறுவதாகவும், 84.2% பேர் “மிகச் சிறந்த” அல்லது “நல்ல” நிலைக்கு திரும்புவதாகவும் தெரிவிக்கிறது.
சுவை இழப்பிற்கும் வாசனை இழப்பிற்கும் உள்ள தொடர்பு

சுவை இழப்பு கொரோனா பாதிப்பின் மற்றொரு அறிகுறி. ஆனால் இதை மதிப்பிடுவது கடினம். ஏனென்றால் பெரும்பாலான ஆய்வுகள் நோயாளிகள் தங்கள் அறிகுறிகளை வெளிப்படையாக தெரிவிப்பதை நம்பியுள்ளன. மேலும் சுவை இழப்பு என்று அவர்கள் கருதும் சில வாசனை இழப்பின் விளைவாக இருக்கலாம் என்றும் தெரிகிறது. சுவை உணர்வு அவர்களின் வாசனை இழப்பால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவேதான் நமது மூக்கைப் பிடிப்பது விரும்பத்தகாத உணவுகளை விழுங்குவதை எளிதாக்குகிறது.
எவ்வாறாயினும் 2,428 நபர்களைப் பற்றிய முந்தைய ஆய்வில் அவர்களில் 3% பேர் மட்டுமே ஆறு மாதங்களுக்குப் பிறகும் இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு மற்றும் நம் நாவுகளில் சுவை மொட்டுகளால் நேரடியாக உணரப்படும் சுவைகளுக்கு இடையில் எந்தவொரு வேறுபாடையும் அறியமுடியவில்லை என்று தெரிவித்தனர்.
நுகரும் திறன் மீட்டெடுப்பின் போது சிலர் ஒரு சிதைந்த வாசனை அல்லது “பரோஸ்மியா”(Parosmia) பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றனர். கொரோனா நோய் பதித்தவர்களின் மருத்துவ அறிக்கையிலிருந்து, நோயிலிருந்து மீண்டு வரும் பலர் ஒரு துர்நாற்றத்தை உணர்கிறார்கள். இந்த வெறுக்கத்தக்க துர்நாற்றமானது பொதுவாக நரம்பு செல்கள் மீண்டு வருவதற்கான அறிகுறியாகும்.
என்ன செய்ய வேண்டும்?
ஒரு நல்ல செய்தி என்னவென்றால், வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகு மிகமோசமாக நுகரும் திறன் சேதமடைந்துள்ளவர்களுக்கு அவர்கள் மீண்டும் மீண்டும் திட்டமிட்ட கால இடைவெளியில் வாசனையை வெளிப்படுத்தும் பொருட்களை நுகர்வது அவர்களை அதிலிருந்து மீட்க உதவும் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த முறையில் அவர்கள் எளிதில் கிடைக்கக்கூடிய வெவ்வேறு நான்கு நறுமணங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஒரு நாளைக்கு இரண்டு முறை ஒவ்வொரு நறுமணத்திற்கும் 20 வினாடிகள் முகர்ந்து பார்க்கவேண்டும் என பரிந்துரைக்கின்றன. அவர்கள் வாசனையை வெளிப்படுத்தும் ஒரு மலர், பழம் மற்றும் வேறு இரண்டு விதமான நறுமணங்களை வெளிப்படுத்தும் நான்கு வகை நறுமணங்களைத் தேர்ந்தெடுத்து இந்த பயிற்சியினை செய்ய வேண்டும்.
உதாரணமாக, உங்கள் நறுமணங்களில் ஒன்றாக எலுமிச்சையைத் தேர்ந்தெடுத்தால் அதன் தோலினைப் பயன்படுத்தலாம். அதேவேளையில் ஒரு வாசனை பொருளைப் தேர்ந்தெடுக்கும்போது அதைப் பற்றிய நறுமணத்தை எண்ணங்களில் இருந்தும் நினைத்துப் பார்க்க வேண்டும். உதாரணமாக எலுமிச்சையில் உங்கள் எண்ணங்களை மையமாகக் கொண்டு எலுமிச்சை பற்றிய அனுபவம் என்ன என்பதை நினைவுபடுத்த முயற்சிக்கலாம்.
இது உடனடியான பலனளிக்கும் நிவாரணமல்ல. ஆனால் இந்த பயிற்சியை தொடர்ந்து திட்டமிட்டு பழகும்போது இது இழந்த நுகரும் திறனை மீட்டெடுக்க உதவும்.