கோவையில் கொரோனாவால் இறந்தவர்களாக அரசு காண்பிக்கும் எண்ணிக்கையை விட உண்மை எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருப்பது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அரசு காண்பிக்கும் எண்ணிக்கையை விட, மயானங்களில் கொரோனா விதிமுறைகளைப் பயன்படுத்தி எரிக்கப்படும் உடல்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருப்பது அம்பலமாகியுள்ளது.
ஏப்ரல் 26 – மே 1
ஏப்ரல் 26 தொடங்கி மே 1-ம் தேதிக்கு இடைப்பட்ட 6 நாட்களில் கோவை மாவட்டத்தில் 13 பேர் இறந்திருப்பதாக அரசின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை தெரிவிக்கிறது. ஆனால் கொரோனா விதிமுறைகளைப் பயன்படுத்தி கோவையின் மயானங்களில் எரிக்கப்பட்ட/தகனம் செய்யப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 210 என்ற தகவல் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.
கோவை மயானங்கள்
கோவை மாநகர எல்லைக்குள் உயிரிழக்கும் கொரோனா நோயாளிகளின் உடல்கள் முதன்மையாக ஆத்துப்பாலம், நஞ்சுண்டபுறம், கவுண்டம்பாளையம் மற்றும் சொக்கம்புதூர் ஆகிய நான்கு மயானங்களிலும், செல்வபுரம், பூமார்க்கெட், போடனூர், கோவைபுதூர் மற்றும் சுகுணாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள இடுகாடுகளிலும் எரிக்கப்படுகிறது.
இந்த அனைத்து மயானங்களிலும் கொரோனா விதிமுறைகளின் அடிப்படையில் தகனம் செய்யப்பட்ட உடல்களின் எண்ணிக்கையை டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியாளர்கள் சேகரித்துள்ளனர். அதில்தான் 210 பேரின் உடல்கள் கொரோனா விதிமுறைகளுடன் தகனம் செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இறந்தவர்களை அறிவிக்கும் தேதிகளிலும் இடைவெளி
மேலும் கொரோனா நோயாளிகள் உண்மையில் இறந்த தேதிக்கும், அவை அதிகாரப்பூர்வ இதழில் குறிப்பிடப்பட்ட தேதிகளுக்கு இடையிலும் கூட கால இடைவெளிகள் இருப்பதும் தெரிகிறது. இறப்பு விகிதம் என்பது 0.9% சதவீதம் என்று காட்டப்படுகிறது. இது உண்மை நிலையை விடக் குறைவாக இருக்கவே வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
சராசரியாக ஒரு மயானத்தில் ஒரு நாளைக்கு 10 முதல் 12 உடல்கள் வரை வருகின்றன. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் இன்னும் அதிகமாகலாம் என்று சுகாதாரத் துறை அலுவலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கோவை அரசு மருத்துவமனையிலிருந்து அனுப்பப்பட்ட 140 உடல்கள்
சுகாதாரத் துறையிலிருந்து ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு தெரிவித்த தகவலில், ஏப்ரல் 26 முதல் மே1-ம் தேதி வரை கோயம்பத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலிருந்து 140 கொரோனா நோயாளிகளின் உடல்கள் அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தனியார் மருத்துவமனைகள் கடைசி நேரத்தில்தான் நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு மாற்றுவதாகவும், இதன் காரணமாக அவர்களைக் காப்பாற்றுவது கடினமாகி விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 40% உடல்கள்
மேலும் அவர், அந்த 140 உடல்களில் 40% உடல்கள் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் கோயம்புத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்திருந்தார்கள் என்றும் கூறியுள்ளார். அவர்களது உடல்களை சொந்த மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வது பாதுகாப்பானதல்ல என்பதால், கோவையிலேயே தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கிறார்.
இஸ்லாமிய இயக்கங்களால் தகனம் செய்யப்பட்ட 4 உடல்கள்
கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு பல இடங்களில் தயக்கம் காட்டப்படுவதால் இஸ்லாமிய இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அப்பணிகளை தானாக முன்வந்து செய்து வருகிறார்கள். கடந்த ஏப்ரல் 30-ம் தேதி அன்று, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் 3 கொரோனா நோயாளிகளின் உடல்களை தகனம் செய்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒருவரின் உடலையும், ஜீவ சாந்தி அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் ஒரு உடலையும் தகனம் செய்தனர். இந்த உடல்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ கணக்கில் சேர்க்கப்படவில்லை என்று அந்த இயக்கங்களின் தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க மறுத்த ஆட்சியர்
சுகாதாரத் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி தெரிவிக்கையில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் இறப்பு எண்ணிக்கையை கோவை மாவட்டத்தின் கணக்கில் சேர்ப்பதில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களை சொல்வதை ஏற்றுக் கொண்டாலும் கூட, எண்ணிக்கையில் பெரும் வேறுபாடு இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் தெரிவித்துள்ளது.
இதுபற்றி மாவட்ட ஆட்சியரிடம் டைம்ஸ் ஆஃப் இந்தியா சார்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது, அவர் கருத்து தெரிவிக்க மறுத்திருக்கிறார்.
முகப்புப் படம் : சித்தரிப்புப் படம் / Reuters