தமிழக சுகாதாரத் துறை

தமிழக சுகாதாரத்துறை உடனே செய்ய வேண்டியது என்ன?

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தின் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் அவர்கள் நேற்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் அவர்களை சந்தித்து இந்த கொரோனா பேரிடரில் சுகாதாரத்துறை என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து மருத்துவர்களின் சார்பாக சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

அதில் பல் மருத்துவமனைகளை கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களாக மாற்றுவதன் மூலம் 11,000 படுக்கைகள் சிகிச்சை கிடைக்கும் என்பது உள்ளிட்ட மிக முக்கியமான கோரிக்கைகளாக அவை இருக்கின்றன.

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் அவர்களிடம் கோரிக்கைகளை வழங்கும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவ சங்கத்தினர்
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் அவர்களிடம் கோரிக்கைகளை வழங்கும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவ சங்கத்தினர்

அந்த பரிந்துரைகள் பின்வருமாறு:

மருத்துவத் துறை மனித வளம்

கொரோனா போரில் போராட அதிக எண்ணிக்கையில் மருத்துவர்கள் தங்கு தடையின்றி தேவைப்படுகின்றனர். முக்கியமாக முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் இந்தப் போரில் முக்கியப் பங்காற்றுகின்றனர்.

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 41,000 மருத்துவப் பட்ட மேற்படிப்பு இடங்களும், 500 தனியார் மருத்துவ நிறுவனங்களில் 9700 மருத்துவ பட்ட மேற்படிப்பு (டி.என்.பி) இடங்களும் உள்ளன.

இவ்விடங்களில் சேர்ந்திட, முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு (NEET PG) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இரண்டாவது வாரம் நடைபெறும். இவ்வாண்டும் ஜனவரி மாதம் 10 ஆம் தேதி நடத்திட திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது கொரோனா தொற்று குறைவாக இருந்த போதிலும், இத்தேர்வு அவசியமின்றி தள்ளி வைக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

கொரோனா இரண்டாவது அலையைக் காரணம் காட்டி, ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடக்கவிருந்த நீட் நுழைவுத் தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. அதேநேரத்தில் தேர்தல் பிரச்சாரங்களும், கும்ப மேளாக்களும் நடந்து கொண்டு தான் இருந்தன.

ஏறத்தாழ 1.6 இலட்சம் மருத்துவர்கள் இந்த முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை (NEET PG) எழுதி, ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களில் சேர்ந்திட தயாராக இருந்தனர். ஜனவரி மாதத்திலேயே தேர்வை நடத்தி, மே மாதம் கல்லூரியில் சேர்த்திருக்கலாம். அதன் மூலம் கொரோனா போருக்காக 50 ஆயிரம் இளம் மருத்துவர்களை பெற்றிருக்க முடியும். அதைச் செய்யவில்லை. ஏப்ரல் 18 ஆம் தேதியாவது தேர்வை நடத்தியிருக்கலாம். அதையும் செய்யவில்லை. மத்திய அரசின் நிர்வாகத் திறனின்மையும், தொலைநோக்குப் பார்வையின்மையுமே இந்த அவல நிலைக்குக் காரணம்.

முதுநிலை மருத்துவப் படிப்புக்காக தயார் செய்து வரும் இளம் மருத்துவர்கள் கொரானா தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர். ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் மற்ற முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இத்தேர்வை வெற்றிகரமாக நடத்தி இருக்க முடியும். ஆனால் அதைச் சரியான நேரத்தில் செய்ய மத்திய அரசு தவறிவிட்டது.

ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதிக்கு முன்பாக இந்த நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படாது என திட்டவட்டமாக பிரதமர் அலுவலகம் தற்போது தெரிவித்துள்ளது. அதன்பிறகு ஒரு மாதம் அவகாசம் கொடுத்து பின் தேர்வு வைப்பதாக அறிவித்துள்ளது. தேர்வுக்குப்பின் கவுன்சிலிங் முடிந்து முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரியில் சேர குறைந்தது நவம்பர் மாதமாகும்.

மத்திய அரசின் இந்த தவறான நடவடிக்கைகளால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுநிலை முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களை கொரோனா பணியில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பெருந்தொற்றால், பல மாநிலங்களில் பொது முடக்கம் மாறி மாறி அறிவிக்கப்பட்டு வருவதால் தேசிய அளவில் ஒரு நுழைவுத் தேர்வை நடத்துவதில் சிரமங்கள் உள்ளது. எனவே இந்த ஆண்டிற்கு மட்டுமாவது, நீட் (NEET PG) தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு அந்தந்த மாநில அரசுகளே நுழைவுத் தேர்வுகளை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

அந்த நுழைவுத் தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில், அகில இந்தியத் தொகுப்பு உட்பட அனைத்து இடங்களுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும், தனியார் மருத்துவ நிறுவனங்களுக்கும், தனியார் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக்கழக இடங்களுக்கும் மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

தமிழகத்தில் தோராயமாக 18,000 மருத்துவர்கள் ஒவ்வொரு ஆண்டும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை எழுதுகின்றனர். எனவே தமிழக அரசே தனியாக நுழைவுத் தேர்வை நடத்திக்கொள்ள மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்கிட வேண்டும்.

இத்தேர்வின் மூலம், தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்களில் உள்ள ஏறத்தாழ 8500 மருத்துவ மேற்படிப்பு இடங்களை உடனடியாக நிரப்பிக் கொள்ள முடியும். அதன் மூலம் போதிய இளம் மருத்துவர்களை கொரோனா பணியில் ஈடுபடுத்த முடியும். முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை மேலும் தள்ளிப் போடுவது கொரோனா பெருந்தொற்று காலத்தில் சரியல்ல.

• முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்விற்கு படிக்கும் மருத்துவப் மாணவர்களை கொரோனா பணியில் ஈடுபடுத்தலாம் என பிரதமர் அலுவலகம் கூறுகிறது. ஆனால் அவர்களுக்கான வேலையை யாரால், எங்கு, எவ்வாறு, என்ன ஊதியத்துடன் வழங்கப்படும் என தெளிவாகக் கூறப்படவில்லை. இதர சலுகைகள் பற்றியும் குறிப்பிடவில்லை. 100 நாள் கொரோனா பணியை முடித்தால் மத்திய அரசின் சான்றிதழைப் பெற முடியும். வேலைவாய்ப்பில் முன்னுரிமையைப் பெறலாம் என்ற ஆசை வார்த்தைகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. தனி இடஒதுக்கீடு வழங்கப்படும் என கூறப்படவில்லை. இதனால் இளம் மருத்துவர்கள் இந்த 100 நாள் வேலையில் சேர்வதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

• இந்தியாவில் 41,000 இறுதியாண்டு முதுநிலை மருத்துவ மாணவர்கள் 2021 ஏப்ரல் மாதம் இறுதியில் (தமிழகத்தில் மே 30 ) மருத்துவப் படிப்பை முடித்துவிட்டனர். இம்மாணவர்கள் 2020 மார்ச் மாதம் முதல் தங்களது துறை சார்ந்த கல்வி நடவடிக்கைகளை கொரோனா சிகிச்சைக்காக தியாகம் செய்துள்ளனர். கொரானாவுக்கு எதிரான போரில் தொடக்கத்தில் இருந்து சரியான பாதுகாப்பு கவசமும், முகக் கவசமும் இன்றி, இரவு பகல் பாராமல் வேலை செய்ததில் ஆயிரக்கணக்கானோர் கொரானா தொற்றுக்கு உள்ளானார்கள். பலர் இரண்டாவது முறையாகவும் இத்தொற்றால் பாதிக்கப்பட்டனர். சிலர் இன்னுயிரையும் இழந்துவிட்டனர். ஆனால் அரசு கல்விக் கட்டணம் தள்ளுபடி, தேர்வு கட்டணம் தள்ளுபடி என எந்த சலுகையையும் வழங்கவில்லை. சிறப்பு ஊதியம், காப்பீடு போன்ற சலுகைகள் எதுவும் வழங்கிடவில்லை. பயிற்சிக் கால உதவி ஊதியமும் உயர்த்தப்படவில்லை.

• உலகையே உலுக்கி வரும் கொள்ளை நோயுடனான போரில் இறுதி ஆண்டு முதுநிலை மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து 15 மாதங்களாக கடுமையாக உழைத்து வருகின்றனர். அதனால் உடலாலும் மனதாலும் சோர்வுற்று இருக்கின்றனர். இந்நிலையில் மே 17 முதல் அவர்களுக்கு நடக்கவிருந்த இறுதி ஆண்டுக்கான பல்கலைக்கழகத் தேர்வுகளும் திடீரென்று கால வரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2 மாதம் ஜூன் இறுதி வரை படிப்புக்காலம் நீட்டிக்கப்பட்டது.

• இந்நிலையில் முதலாம் ஆண்டு முதுநிலை மருத்துவ மாணவர்கள் ,கல்லூரிகளில் சேரும் வரை இறுதியாண்டு முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு படிப்புக்கால பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

குறைந்த தொகுப்பூதியத்தில் அல்லது பயிற்சிக்கால உதவி ஊதியத்தில் ( Stipend) இளம் மருத்துவர்களை கொரோனா பணியில் கொத்தடிமைகளைப் போல பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முயற்சியை மத்திய மோடி அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதிக்கு பின் நீட் தேர்வை நடத்தி, முடிவுகள் அறிவித்து, கவுன்சிலிங் நடத்தி முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்திட நவம்பர் மாதமாகிவிடும். அதுவரை நீண்ட காலத்திற்கு படிப்பு காலத்தை நீட்டிப்பது சரியல்ல.

எனவே,

• இறுதி ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த மருத்துவ மாணவர்களுக்கு உடனடியாக பல்கலைக்கழகத் தேர்வை நடத்திட வேண்டும். தேர்வை முடித்த பிறகு, படிப்பை முடித்ததற்கான சான்றிதழ்களை வழங்கிட வேண்டும் (Course completion certificate and degree certificate). அதன்பிறகு அவர்களுக்கு நிரந்தர மருத்துவர்களுக்கான ஊதியத்துடன், கொரோனா பணியில் தேவைப்படும் மருத்துவமனைகளில் ஈடுபடுத்த வேண்டும்.

ரெம்டெசிவிர்

• ரெம்டிசிவிர் மருந்தை தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் விற்பதால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ரெம்டிசிவிர் மருந்தை அரசே தனியார் மருத்துவமனைகளுக்கும் நேரடியாக டி.என்.எம்.சி மாவட்ட களஞ்சியங்கள் மூலம் நோயாளிகளின் தகவலைப்பெற்று வழங்கிட வேண்டும். இதனால் ரெம்டிசிவிர் பெறுவதில் ஏற்படும் காலதாமதம், கலப்படம், போலி மருந்துகள் தவிர்க்கப்படும். விற்பனை செய்யப்படும் இடங்களில் நிலவும் கூட்டத்தின் மூலம் கொரோனா பரவுவது தவிர்க்கப்படும்.

கொரோனா தடுப்பூசி

• 18 வயதுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாகவும், மிக விரைவாகவும் வழங்கிட வேண்டும். கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்கிட செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல் பயோ டெக் (HLL Biotech)நிறுவனம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால் மத்திய அரசு அதற்குத் தயாராக இல்லை.

கொரோனா சிகிச்சைக்குரிய தடுப்பூசிகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பதினெட்டு வயதுக்கு மேலுள்ள அனைவருக்கும் 2 தவணைகள் தடுப்பூசி செலுத்துவதற்கு சுமார் 12.5 கோடி தவணைக்கான கொரோனா தடுப்பூசி மருந்துகள் தேவை. இதுவரை 4 மாதமாக வெறும் 60 லட்சம் தவணைகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. 45 லட்சம் பேர் இரண்டாவது தவணைக்காக தடுப்பூசி இன்றி காத்திருக்கின்றனர்.

கோவிஷீல்டு, கோவேக்சின் போன்ற தடுப்பூசிகளை அந்நிறுவனங்களிடமிருந்து முறையே ரூ.300 மற்றும் ரூ.400 என்ற விலைகளைக் கொடுத்து சுமார் 8 கோடி தவணைகள் வாங்கிடவே சுமார் 2400 கோடி ரூபாய் முதல் 3200 கோடி ரூபாய் வரை செலவாகலாம். உடனடியாக நமக்கு அவ்வளவு தவணைகளுக்கான தடுப்பூசி மருந்துகள் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது.

எனவே கோவேக்சின் தடுப்பூசியை தமிழக அரசே சென்னை கிண்டியில் உள்ள ‘கிங்ஸ் நிறுவனம்’ மூலமும், செங்கல்பட்டிலுள்ள எச்.எல்.எல் பயோடெக்(HLL Bio tech) நிறுவனம் மூலமும் உற்பத்தி செய்வதே நல்லது. அதன் மூலம் குறைந்த விலையில் தேவையான மருந்தை குறுகிய காலத்திற்குள் உற்பத்தி செய்திட முடியும்.

எச்.எல்.எல் பயோடெக் நிறுவனத்தில் முதலீடு செய்ய மத்திய அரசு தயங்குகிறது. அங்கு தடுப்பூசி உற்பத்தி செய்துகொள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விட ஒப்பந்தப் புள்ளியை 26.03.2021 அன்று கோரியுள்ளது. இதுவரை எந்த நிறுவனமும் அங்கு உற்பத்தியை தொடங்கிட முன்வரவில்லை. இதனால் உற்பத்தி தாமதமாகிறது.

எனவே,தமிழக அரசே அந்நிறுவனத்தை ஒப்பந்த அடிப்படையில் மத்திய அரசிடம் இருந்து பெற்று கோவேக்சின் தடுப்பூசியை, மத்திய அரசின் அனுமதியுடன் உற்பத்தி செய்ய முன்வர வேண்டும். இதன் மூலம் அந்த பொதுத்துறை நிறுவனத்தைக் காப்பதுடன், மக்களுக்குத் தேவையான கொரானா தடுப்பூசிகள் மற்றும் இதர தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்திட முடியும். இதன்மூலம் தமிழக மக்களின் தேவையை நிறைவேற்றுவதோடு வணிக அடிப்படையில் விற்கவும் முடியும்.

மகாராஷ்டிரா தனது மாநிலத்துக்குச் சொந்தமான மும்பை ஹாக்கின்ஸ் தடுப்பூசி நிறுவனம் மூலம் கோவிட் தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசின் அனுமதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ உபகரண உற்பத்திக்காக செங்கல்பட்டில் எச்.எல்.எல் மெடி பார்க்(HLL MEDI PARK) என்ற நிறுவனத்தில் தமிழக அரசின் தொழில் வளர்ச்சிக் கழகம் மத்திய அரசுடன் ஒப்பந்தமிட்டு இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதிலும் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்திட முடியும். இவை குறித்து தமிழகத்தில் பதவி ஏற்கவுள்ள புதிய அரசு பரிசீலிக்க வேண்டும்.

நிபுணர்குழு

• மருத்துவ நிபுணர் குழுவை செழுமைப்படுத்தி, தினந்தோறும் கூடி ஆலோசித்து நன்கு அறிவியல் பூர்வமாகவும், வெளிப்படைத்தன்மையுடன் செயல்படச் செய்ய வேண்டும். DPH, DMS & DME என பணிபுரியும் மருத்துவத் துறையினரின் ஆலோசனைகளையும், அனுபவங்களையும் களத்தில் ஏற்படும் நடைமுறைப் பிரச்சினைகளையும் மருத்துவ நிபுணர் குழுவினர் தெரிந்துகொண்டு அவைகளை கருத்தில்கொண்டு செயலாற்ற வேண்டும். அதைப்போலவே பல்துறையினரின் நிபுணர் குழுக்களை தனித்தனியாக அமைத்து அவர்கள் ஆலோசனையுடன் கொரானாவால் ஏற்படக்கூடிய துறை சார்ந்த பாதிப்புகளை சரிசெய்ய வேண்டும்.

பொதுமுடக்கம்

கொரானா நிவாரண நிதி ரூபாய் 2000-ஐயும், வீட்டிலேயே வழங்கிட வேண்டும்.

பொதுமுடக்கக் காலத்தில் தடுப்பூசி இருப்பும் குறைவாக இருப்பதால், அனைத்து தடுப்பூசி முகாம்களை திறந்து வைத்து சுகாதாரத்துறையினர் மனித வளத்தை வீணடிக்காமல் இருக்கவும், நோய் பரவும் வாய்ப்பைக் குறைக்கவும் தடுப்பூசியை அனைவர்களுக்கும் ஒரு நாளுக்கு 2 மாவட்டம் வீதம் சுழற்சி முறையில் வழங்க வேண்டும்.

• தடுப்பூசியை இருப்பு குறைவாக இருப்பதால் பலர் தடுப்பூசி போடும் இடங்களில் தினந்தோறும் வந்து காத்திருப்பதால் அங்கு தொற்று பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதைத் தவிர்க்க உள்ளூர் அளவில் எந்த தெருவில் உள்ளவர்கள், எங்கு, எப்போது தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் எனத் திட்டமிட்டு உள்ளூர் கேபிள் டிவி மூலமாகவும், ஒலிப்பெருக்கி மூலமாகவும் அறிவிப்பு கொடுக்க வேண்டும்.

• ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளிகள் வந்து போகும், சிகிச்சை பெறும் பெரிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் மையம் இருக்கக்கூடாது.

அங்கு பலர் கூடி காத்திருப்பதால் தொற்று பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள தடுப்பூசி போடும் இடத்தையும், மனித வளத்தையும் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம்.

• முன்களப் பணியாளர்கள் இறப்பைக் குறைக்க மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் முன்களப் பணியாளர்களின் தொடர் கொரோனா மரணங்கள் அதிர்ச்சியையும், மனச் சோர்வையும் ஏற்படுத்துகின்றன. எனவே மருத்துவப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மருத்துவமனைகளில் தனி வார்டுகளை உருவாக்கிட வேண்டும்.

மருந்து பற்றாக்குறை

• பிரெட்னிசோலோன், டெக்சா மீத்தசோன் ஊசிகள், மாத்திரைகள், ரெம்டிசிவிர், ஐவர்மெக்டின், ஈனாக்சிபெரின், டாபிகேட்ரின், ஆஸ்பிரின், குளோபிடோகிரல் உள்ளிட்ட மருந்துகளும், ஆக்சிஜனும் சமூக விரோத சக்திகளால் பதுக்கப்படுகின்றன. விலைகளும் மிக அதிகமாக உயர்ந்துள்ளன. ரெம்டிசிவிர் போன்ற மருந்துகளில் போலி மற்றும் கலப்பட மருந்துகளும் புழக்கத்தில் அதிகமாக உள்ளன. இவற்றை தடுத்திட உடனடி நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.

மத்திய அரசு

மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்குத் தேவைப்படுகின்ற நிதியை உடனடியாகக் கேட்டுப் பெற வேண்டும். கொரோனாவுக்கான உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், முகக்கவசம், பாதுகாப்புக் கவசம் உள்ளிட்டவற்றிற்கு உடனடியாக ஜி.எஸ்.டி யிலிருந்து விலக்கு வழங்கிடக் கோரவேண்டும். கொரோனாவுக்கான உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்களுக்கு, ’நிலையான விலை’யை (fixed price) நிர்ணயம் செய்து அவைகளை தட்டுப்பாடின்றி ’மக்கள் மருந்தகம், அம்மா மருந்தகம்’, மூலமாக அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

தனியார் மருத்துவமனைகள்

நூறு படுக்கைகளுக்கும் அதிகமாக உள்ள தனியார் மருத்துவமனைகளை தற்காலிகமாக அரசே வாடகை செலுத்தி, கையகப்படுத்தி கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக தரமான சிகிச்சை வழங்கிட வேண்டும். இதன் மூலம் குறைந்த செலவில், கொரோனா நோயாளிகளின் தீவிரத்திற்கு ஏற்ப தேவைப்படும் சிகிச்சையை சரியாக வழங்கவும், இறப்புகளைக் குறைக்கவும் முடியும்.

இறப்பு குறைப்பு

நோயாளியின் முதல் வருகையிலேயே எளிமையான சி.பி.சி மற்றும் சி.ஆர்.பி இரத்தப் பரிசோதனை மூலம் (Serial CBC,CRP in CCC) நோயாளிகளை வகைப்படுத்தி சிகிச்சை அளிப்பதின் மூலம் நோயாளிகளின் நோய் தீவிரமடைவதில் இருந்தும், இறப்பிலிருந்தும் காக்க முடியும். கொரோனா தொற்றுக்குப்பின் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க discharge நேரத்தில் asprin clopidogrel, dabigatran போன்ற மாத்திரைகளைத் நோயாளிக்கேற்ப தொடர அறிவுறுத்த வேண்டும்.

சமூகப் பரவல்

சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதால் ஒரு குடும்பத்தில், ஒரு அலுவலகத்தில் ஒருவருக்கு RTPCR பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு அறிகுறிகள் அடிப்படையிலும் எளிதில் விரைவாக செய்யக்கூடிய சில (CBC,CRP,D Dimer போன்ற) இரத்தப் பரிசோதனை அடிப்படையிலும் (lab markers based protocol treatment) சிகிச்சை வழங்க முயல வேணடும். இதனால் சிகிச்சைக்கான கால தாமதத்தையும், இறப்பையும் குறைக்கலாம். மத்திய அரசின் 8.5.2021 தேதியிட்ட அறிவிக்கை ’கொரோனா அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு RTPCR டெஸ்ட் பாசிடிவ் என்பது அவசியமில்லை,’ எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா சிகிச்சைக்குரிய மருத்துவ ஆக்சிஜனுக்கும், மருந்துகளுக்கும், தடுப்பூசிகளுக்கும், மருத்துவ மனித வளத்திற்கும் ஏற்பட்டுள்ள கடுமையான தட்டுப்பாட்டை நீக்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 23 பல் மருத்துவக் கல்லூரிகளை, ’கொரோனா நோயாளிகளின் பராமரிப்பு மையம்’ ஆக மாற்ற வேண்டும். இதனால் ஏறத்தாழ 11,000 படுக்கைகள் உடனடியாகக் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *