திராவிட இயக்கமும் சித்த மருத்துவமும்

திராவிட இயக்கமும் சித்த மருத்துவமும்

கபசுரக் குடிநீரை அரசு பரிந்துரை செய்யும் போதிலும், சித்த மருத்துவத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வருகிற பொழுதும், சித்த மருத்துவத்தை ஆதரிப்பவர்களை நோக்கி ’பிற்போக்குவாதிகள்’, ’அறிவுக்கு உதவாதவர்கள்’ என்ற வாதம் தொடர்ச்சியாக அறிவியலின் பெயர் கொண்டு பலரால் முன்வைக்கப்படுகிறது. பாரம்பரிய மாற்று மருத்துவ சிந்தனை முறையினை ஆய்வுக்குட்படுத்தாமலே புறக்கணிக்கும் அடிப்படைவாதத்தை முன்வைக்கின்ற இந்த வாதத்திற்கு நேர் எதிராகவே எல்லாவற்றையும் அறிவியல்பூர்வமாக பகுத்தறிவுப் பார்வையில் அணுகுகிற திராவிட இயக்கத்தினர் செயல்பட்டுள்ளார்கள் என்பதுதான் வரலாறு.

அதன் தொடர்ச்சியாகவே இன்று பதவியேற்று இரண்டு தினங்களில் தமிழ்நாடு முழுவதும் 12 சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் துவங்கி வைத்துள்ளார்.

நீதிக்கட்சி ஆட்சியில் திறக்கப்பட்ட இந்திய மருத்துவப் பள்ளி

நீதிக் கட்சியின் சார்பில் முதலமைச்சராகப் பணியாற்றிய பனகல் அரசர் 1924-ல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் இந்திய மருத்துவப் பள்ளியைத் (School of Indian Medicine) தோற்றுவித்தார். அப்பள்ளியில் சித்த மருத்துவம் கற்பிக்கப்பட்டதுடன், சித்த மருத்துவ மறுமலர்ச்சிக்கு வித்தாகவும் அப்பள்ளி அமைந்தது.

சித்த மருத்துவ மாநாடு – பெரியார் மற்றும் அண்ணா

பெரியார் கடலூரில் சித்த மருத்துவ மாநாடு நடத்தியதைக் குறித்து ’பெரியார் சுயமரியாதை சமதர்மம்’ மற்றும் ’ஆகஸ்ட் 15’ என்ற ஆய்வுகளை எழுதிய ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை எழுதியிருக்கிறார்.

1967-ல் ஆட்சியைக் கைப்பற்றிய பேரறிஞர் அண்ணாவின் அரசு சித்த மருத்துவத்தினை வளர்த்தெடுக்க நினைத்தது. அதனால் தான் 1968-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சித்த மருத்துவக் கண்காட்சி, கருத்தரங்கு ஆகியவற்றை நடத்தியது. மேலும் அந்த மாநாட்டு மலரில்,

  • சங்க இலக்கியத்தில் சித்த மருத்துவம் – டாக்டர் பு.மு.வேணுகோபால்
  • திருமூலர் அருளிய மருத்துவத் திருமந்திரம் எண்ணாயிரம் – டாக்டர் ஆ.சண்முகவேலன்
  • சித்த மருந்தின் வயது சுத்தி முறை ஆய்வு – திரு.கி.சிதம்பரம்
  • சித்த மருத்துவத்தில் வர்ம பரிகாரம் – ஏ.தேவசகாய ஆசான்

ஆகிய கட்டுரைகள் வெளியிடப்பட்டது.

மேலும் சென்னை அரும்பாக்கத்தில் இந்திய மருத்துவத்திற்கென தனி இயக்குநரகம் ஏற்படுத்தப்பட்டு, சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

பொறியாளர்களுக்கு இணையாக அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவப் பட்டதாரிகள்

1965-ல் காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட பாளையங்கோட்டையில் முதல் சித்த மருத்துவக் கல்லூரியில் இருந்து, 1969-70 களில் முதல் சித்த மருத்துவப் பட்டதாரிகள் வந்தபொழுது அவர்களை அப்போது பொறியாளர்களுக்கு இணையாக சமூகத்தில் அங்கீகரிக்கச் செய்தது கருணாநிதியின் முதல் அரசு.

அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி -File Photo

கோயில்களில் சித்த மருத்துவப் பணி

அறநிலையத் துறைக்குக் கீழாக உள்ள அத்தனை இந்து கோயில்களிலும், கோயிலில் ஈட்டப்படும் பொதுமக்கள் வருவாய் மூலம் கோயில் பணி மட்டுமல்லாது, சித்த மருத்துவப் பணியும் நடக்க வேண்டும் என ஆணையிட்டு, அதில் கல்லூரியில் பயின்று வெளியான சித்த மருத்துவப் பட்டதாரிகளை நியமித்தும் சித்த மருத்துவம் பார்க்கச் சொன்னது அப்போதைய திமுக அரசு.

அச்சில் ஏற்றப்பட்ட சித்த மருத்துவ சுவடிகள்

1970-களில், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் மூலமாக, அதுவரை சுவடிகளாய் இருந்த பல முக்கிய சித்த மருத்துவ நூல்கள் திமுக அரசினால் அச்சில் ஏற்றப்பட்டது. ஹக்கீம் சாயுபுவுடைய ‘அனுபவ வைத்திய நவநீதம்’, ‘தேரன் மருத்து பாரதம்’ போன்ற சித்த மருத்துவ நூல்கள், அப்போது அச்சேற்றப்பட்ட மிக முக்கிய சித்த மருத்துவ நூல்கள் ஆகும். இன்றுவரை சித்த மருத்துவப் பாடத் திட்டத்திற்கு அடிப்படையான பெரும்பாலான பாடநூல்கள், அப்போதுதான் முதன்முதலாக அச்சிலேறின.

1973-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 23-ம் நாள் தமிழக அரசு சித்த மருத்துவ அறிவியல் வளர்ச்சிக்குழு என்னும் ஒரு குழுவைத் (G.O. Ms. No. 2571 dt. 23.10.73) தோற்றுவித்தது. அக்குழு இதுவரை’ 400 சுவடிகளையும், 200 கையெழுத்துப் படிகளையும், 230 அச்சான பழைய நூல்களையும் சேகரித்துள்ளது.

சித்த மருத்துவ வளர்ச்சியில் பேரா க.அன்பழகன்

பேராசிரியர் க.அன்பழகன் மற்றும் கலைஞர் கருணாநிதி – File Photo

தமிழ்நாட்டு அரசில் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றினார். சித்த மருத்துவம் ஆயுர் வேதத்தின் ஒரு பிரிவு அல்ல. அது தனி மருத்துவம் என்பதை இந்திய அரசு அங்கீகரித்தது அவரால் தாம். இந்திய அரசியல் சட்ட அடிப்படையில் தனி மருத்துவமாகச் சித்த மருத்துவத்தை அறிவிக்கச் செய்ததும் சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் நிதி உதவியும் கிடைக்கச் செய்ததும் பேராசிரியர் அன்பழகன் தான். அறிவியல் தமிழ் என்று அவர் எழுதிய கட்டுரை தமிழ்நாடு பள்ளி பாடப் புத்தகத்தில் இருந்தது.

பாளையங்கோட்டை கல்லூரியில் சித்த மருத்துவத்தில் உயர் கல்விப் படிப்பினை உருவாக்கியது, சித்த மருத்துவச் சுவடிகளைத் திரட்டி நூலாக வெளியிட்டது, மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் சித்த மருத்துவமனைகளை உருவாக்கியது திமுக அரசு.

சித்த மருத்துவத்தில் ஆய்வுகளும், அறிவியல் முயற்சிகளும்

மேலும் 1975-ம் ஆண்டிற்குப் பிறகு, சித்த மருத்துவக் கல்வியில் உயர் ஆய்வும், அறிவியல் முயற்சிகளும் நிகழத் தொடங்கின. சென்னை அரும்பாக்கத்தில் இந்திய மருத்துவமனையுடன் இணைந்த மருத்துவக் கல்லூரியும் ஏற்படுத்தப்பட்டது.

சித்த மருத்துவப் பரம்பரை மருத்துவர்கள் ஒருங்கிணைந்து கூட்டுறவு முறையில் மருந்துச் சாலை ஒன்றை ஏற்படுத்தினர். அதன் மூலம் 500-க்கும் மேற்பட்ட சித்த மருந்துகளும், 1000-க்கும் மேற்பட்ட இந்திய மருந்துகளும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. அதேபோல, மதுரை திருமங்கலத்தில் ஒரு மருந்துச் சாலை உருவாக்கப்பட்டு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

தஞ்சை தமிழ் பலகலைக்கழகத்தில் சித்த மருத்துவம் அறிவியல் பிரிவாக ஏற்பு

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், சித்த மருத்துவத்தை ஓர் அறிவியல் பிரிவாக ஏற்று சித்த மருத்துவ அறிவியல் என்னும் அறிவியல் ஆய்வுத் துறையை உருவாக்கியுள்ளது. இது எல்லாம் சித்த மருத்துவ மறுமலர்ச்சிக்கு திராவிட இயக்கம் ஆற்றிய முக்கியப் பங்களிப்புகளாக இருக்கிறது.

2010-ம் ஆண்டு மூலிகைக் கண்காட்சியில் பேரா க.அன்பழகன்

பேராசிரியர் அன்பழகன் சித்தா-2010 மூலிகைக் கண்காட்சி துவங்கிவைத்து பேசியதாவது:

”சித்த மருத்துவத்தின் அடிப்படை மூலிகையாகும். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய சித்தர்கள் ஆராய்ந்து பல்வேறு மருத்துவங்களைக் கண்டறிந்தனர். ஏறத்தாழ எல்லா நோய்களுக்கும் மருத்துகளைக் கண்டறிந்து, அதனை தலைமுறை தலைமுறையாகக் காப்பாற்றி, பாடல்களாக எழுதி வைத்துள்ளனர்.

பெரும்பாலான வைத்தியங்களை பாட்டின் மூலம் உரைநடைப்படுத்தித்தான் புரிந்து கொண்டோம். சித்த மருத்துவத்தின் தாய் வீடு தமிழகம். சித்த மருத்துவத்தை மொழிப்பெயர்த்து வேறு மருத்துவமாக மாற்றிக் கொண்டனர். சித்த மருத்துவத்தின் சில அடிப்படைகள் ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படையில் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

சீன நாட்டு மருத்துவம் மற்றும் அலோபதி மருத்துவம் இரண்டையும் இணைத்து எந்தெந்த நோய்க்கு எந்தவித மருந்து கொடுக்க வேண்டும் என்ற முறையை அந்த நாட்டு அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்கு எதிர்காலத்தில் வாய்ப்புகள் பெருகும். அதே போன்று ஆய்வுகளுக்கான தடங்கள் தமிழகத்தில் நிறைந்து காணப்படுகின்றன. செம்மையான மருத்துவம் சித்த மருத்துவம் என்று கூறும் காலம் உருவாகும். சித்த மருத்துவத்தை முன்னேற்ற வேண்டும் என்ற ஆர்வமும், ஊக்கமும் ஏற்பட்டால் சாதனைகள் செய்யலாம். இதற்கு அரசும் ஒத்துழைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் வளர்ச்சிக்கு உதவும் அரசு, சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்கும் உதவும் என்பதில் சந்தேகமில்லை. பாடத் திட்டங்கள் என்பது சித்த மருத்துவத்தின் அறிமுகத்துக்கு மட்டுமே. மாணவர்கள்தான் பல்வேறு விஷயங்களை தெரிந்து கொண்டு அறிவை வளர்க்க வேண்டும்” என்று பேசினார்.

சிக்குன் குன்யாவிற்கு நிலவேம்புக் குடிநீரை அறிமுகப்படுத்திய செ.நெ.தெய்வநாயகம்

2006 டிசம்பரில் தமிழகமே சிக்குன் குன்யா நோயினால் திணறிய பொழுது, இந்திய நலவாழ்வு நல்லறத் தலைவர் பேராசிரியர் செ.நெ.தெய்வநாயகம் பரிந்துரை செய்த நிலவேம்புக் குடிநீரைப் பயன்படுத்தி சிக்குன் குன்யாவை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துக்கு தாம்பரத்தில் பிரதான இடம் அளித்து பின்னர் இந்த மையத்துக்கு அடிக்கல் நாட்டியதும், சித்த மருத்துவ வரலாற்றில் திமுக-வின் முக்கிய பங்களிப்பு. இந்தியாவின் வேறு எந்த ஆயுஷ் மருத்துவமனையை விடவும் இங்கு வந்து பயனடையும் மக்கள் எண்ணிக்கை அதிகம்.

தமிழ், தமிழர், தமிழ்நாடு என்கிற ஓர்மையைக் கட்டி எழுப்பியது திராவிட இயக்கம். சங்க இலக்கியத்தில் இருந்து இதை மீட்டுருவாக்கம் செய்தவர் அண்ணா என்று பேரா தமிழவன் எழுதுவார். தூய தமிழரை தமிழ் கொண்டு எழுப்புவோம் என்று பாடியவன் திராவிட இயக்கப் பாவேந்தேன் என்பது தான் வரலாறு. அதன் தொடர்ச்சிதான் தமிழர் மருத்துவமான சித்த மருத்துவம் குறித்து இன்றுவரை திராவிட இயக்கத்தின் ஆட்சியினால் முன்னகரும் முயற்சிகள்.

அறிவும், அறிவியலும் இறக்குமதி செய்யப்பட்டது மட்டுமே அல்ல.

– பன்னீர் பெருமாள், Madras Review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *