தடுப்பூசியும் காப்புரிமையும்

யார் வாழ வேண்டும், யார் சாக வேண்டும்? தடுப்பூசிகளும் காப்புரிமையும்

கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்த இடையூறாக இருக்கும் அறிவுசார் சொத்துரிமை மற்றும் காப்புரிமையில் இருந்து விலக்கு கொடுக்க வேண்டும் என்று 2020 அக்டோபர் மாதம் தென்னாப்பிரிக்கா, இந்தியா மேலும் 100-க்கும் அதிகமான நாடுகள் ஒன்றிணைந்து உலக வர்த்தக கழகத்திடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தனர். இதை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து கடுமையாக எதிர்த்துவருகிறது. பின்னர் அமெரிக்கா நீண்ட அழுத்தத்திற்குப் பிறகு காப்புரிமையிலிருந்து தற்காலிக விலக்கிற்கு ஒப்புதல் தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. இருப்பினும் இன்னும் காப்புரிமை சர்ச்சை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அறிவுசார் சொத்துதரிமை தடைகள் நீக்கப்பட்டால் உலக நாடுகளில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் தடுப்பூசி தயாரிக்கும் தொழில்நுட்பம் எந்தவித கட்டண சுமையும் இல்லாமல் எளிமையாக சென்று சேரும். உலக அளவில் தடுப்பூசி உற்பத்தி அதிகரித்தால் நோய்ப் பரவலை கூடுமான வரையில் தடுப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக பொது சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

காப்புரிமை தொகையை ரத்து செய்யக் கூடாது என வாதிடும் ஏகாதிபத்திய நாடுகள்

இன்றைய சுழ்நிலையில் தேவையான தடுப்பூசி உற்பத்திக்கு போதுமான திறன் இல்லை, அதை அதிகப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஆனால் ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள மருந்து நிறுவனங்கள் காப்புரிமை என்பது ஆராய்ச்சில் முதலீடு செய்வதற்கான ஒரு ஊக்கத்தொகை அதை நிறுத்தக்கூடாது, மருத்துவ நிறுவனங்களின் ஆராய்ச்சி முன்னேற்றத்திற்கு இந்த அறிவுசார் சொத்துரிமை மற்றும் காப்புரிமைத் தொகை மிக முக்கியமானது என்று தனது வாதத்தை தொடர்ந்து முன்வைக்கின்றன.

தங்களுக்கு உரிய காப்புரிமை தொகை செலுத்தாமல் தடுப்பூசி உற்பத்தியில் எந்த நிறுவனங்களும் ஈடுபடக் கூடாது என்று உறுதியாக இருக்கின்றன. இன்றைய எதார்த்த நிலையில் பார்த்தால், ”யார் வாழ வேண்டும், யார் சாக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மருத்து நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது”.

தடுப்பூசி நிறுவனங்களின் ஆராய்ச்சிக்கு பணம் கொடுப்பது அரசாங்கமே

உண்மையில் ஆராய்ச்சிக்கான நிதி தனியார் மருந்து தொழில் மூலங்களிலிருந்து வரவில்லை. வரலாற்று ரீதியாகப் பார்த்தால் மருத்துவ ஆராய்ச்சிக்கான நிதி ஆதாரங்களை உருவாக்கியது அரசாங்கங்கள்தான், அத்துடன் சில பல்கலைக்கழகங்களும் முக்கியமான பொது நிறுவனங்களும் கணிசமான நிதியை மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒதுக்கியுள்ளது.

COVID-19 தடுப்பூசி ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட 13.9 பில்லியன் டாலர்களில், அரசாங்கங்கள் 8.6 பில்லியன் டாலர்கள் பங்களித்துள்ளன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 1.9 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளன. தனியார் மருந்து நிறுவனங்கள் 3.4 பில்லியனை மட்டுமே இதுவரை ஒதுக்கியுள்ளது. மொத்தத்தில் 25% மட்டும்தான் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு.

தடுப்பூசி காப்புரிமைக்கு எதிரான போராட்டம் ஒன்றில் தடுப்பூசி இலவசமாக வேண்டும் எனும் பதாகை ஏந்திய போராட்டக்காரர் ஒருவர் – File Photo

மாடர்னா தடுப்பூசி

அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா, COVID-19க்கு எதிராக உருவாக்கிய தடுப்பூசிக்கு 100% நிதி அதாவது 2.5 பில்லியன் டாலர்கள் அரசிடம் இருந்து பெற்றது. இந்நிறுவனம் ஒரு டோஸுக்கு 31 டாலர் என்ற விலையில் 780 மில்லியன் டோஸ்க்கான ஆடர்களை பெற்றுள்ளது. இது சுமார் 24 பில்லியன் டாலர் அமெரிக்க வருமானத்தை அந்த நிறுவனத்திர்க்கு உருவாக்கியுள்ளது.

ஃபைசர்/பயோஎன்டெக்

ஃபைசர்/பயோஎன்டெக் (Pfizer/BioNtech,) அமெரிக்க நிறுவனங்கள் ஆராய்ச்சிக்கான 66% நிதி அதாவது 1.95 பில்லியனை அரசிடம் இருந்து பெற்றது. 1.28 பில்லியன் டோஸ் ஒரு டோஸுக்கு சராசரியாக 18.50 டாலர் என்ற விலையில் முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்டது. இது சுமார் 23.68 பில்லியன் டாலர் வருமானத்தினை உருவாக்கியுள்ளது.

அஸ்ட்ராஜெனெகா

அஸ்ட்ராஜெனெகா/ஆக்ஸ்போர்டு (AstraZeneca/Oxford,) நிறுவனம் ஆராய்ச்சிக்காக வெற்ற 67% நிதி அதாவது 2.2 பில்லியன் டாலர்கள் பொதுநிதியில் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் 3.29 பில்லியன் டோஸ் முன்கூட்டியே ஆர்டர்களைப் பெற்றுள்ளது. அவை ஒவ்வொன்றும் 6 டாலருக்கு விற்கப்படும். எனவே இது 19.74 பில்லியன் டாலர் வருவாயைப் பெறுகின்றது.

ஜான்சன் அண்ட் ஜான்சன்

ஜான்சன் அண்ட் ஜான்சன் 1.27 பில்லியன் டோஸ் தடுப்பூசி விற்பனையை ஒரு டோஸுக்கு 10 டாலருக்கு விற்கிறது. இது 12.7 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டுகிறது; அவர்கள் 819 மில்லியன் டாலர்களை ஆராய்ச்சியில் முதலீடு செய்துள்ளனர். அதில் 100% பொது நிதியில் இருந்து வழங்கப்பட்டது.

முதலீடு அரசுடையது, லாபம் நிறுவனங்களுக்கு

COVID-9க்கு எதிரான தடுப்பூசி உற்பத்தி என்பது இன்றைய காலத்தின் மிகச் சிறந்த வணிக வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. ஆராய்ச்சி செய்வதற்கான முதலீட்டை அரசாங்கம் கொடுத்துள்ளது. தடுப்பூசி கண்டுபிடித்த பின்பு அதற்கான ஒரு உத்தரவாதமான சந்தையாக அரசே முன்கூட்டியே ஆர்டர் செய்கின்றது. இந்த பரிவர்த்தனையில் கிடைக்கும் அனைத்து லாபங்களும் மருந்து கம்பனிகளுக்கே. மேலும் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தின் காப்புரிமையும் மருந்து நிறுவனங்களுக்கே சொந்தம். அதை வேறு நாடுகளுக்கு விற்க காப்புரிமை பெறும் உரிமையும் அவர்களுக்கே சொந்தம். இதுபோன்று ஒரு ஏகபோக வணிகமாயமாக்கலில் இறங்கியுள்ளது மருந்து நிறுவனங்கள்.

மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசியை மக்களுக்கு அதிக விலைக்கு விற்பதும் அதன் உற்பத்தியை கட்டுக்குள் வைத்திருப்பதுமான இந்த போக்கு முதலாளியத்தின் லாபம் ஈட்டும் நோக்கத்தைத் தவிர வேறு என்னவாக இருக்கமுடியும்?

மனிதநேயமற்ற காப்புரிமை

உலகெங்கும் ஒரு நாளைக்கு 650,000-க்கும் அதிகமானோர் கொரானா தொற்றுநோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் ஒவ்வொரு நாளும் 8,000-க்கும் அதிகமானவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். மூச்சுவிட முடியாமல் லட்சக்கணக்கான மக்கள் மருத்துவமனையில் இடம் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். தன்னைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்று புரிந்துகொள்ள முடியாமல் சிறு குழுந்தைகள் கூட இந்த கொடிய நோயில் மாண்டு கொண்டிருக்கும் இந்த தருணத்தில் காப்புரிமை குறித்தும், அறிவுசார் சொத்துரிமை குறித்தும் பேசுவது மருத்துவத் துறை கார்ப்பரேட்டுக்களின் இரக்கமற்ற கைகளில் சிக்கி இருப்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது.

10 பணக்கார நாடுகளில் மட்டுமே செலுத்தப்பட்ட முக்கால்வாசி தடுப்பூசிகள்

சித்தரிப்புப் படம்

அதிக வருவாய் உள்ள நாடுகளில் ஒரு விநாடிக்கு ஒரு நபருக்கு தடுப்பூசி போடுகிறது. ஆனால் பெரும்பான்மையான ஏழை நாடுகள் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடமுடியாத நிலையில் இருக்கின்றன என்று ஆக்ஸ்பாம் அறிக்கை தெரிவித்துள்ளது.
பிப்ரவரி மாதத்தின் தொடக்கம் வரை வழங்கப்பட்ட 128 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளில், முக்கால்வாசி அதாவது நான்கில் மூன்று பங்கு தடுப்பூசிகள் வெறும் 10 பணக்கார நாடுகளில் மட்டுமே செலுத்தப்பட்டன. அந்த நாடுகள் உலகின் மொத்த உற்பத்தியில் 60% பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகள் வளர்ந்த நாடுகள் ஆகும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி கிட்டத்தட்ட 130 நாடுகளில் இன்னு தடுப்பூசி போடுவதை துவங்கவில்லை.

2020-ம் ஆண்டின் பிற்பாதியில் நடத்தப்பட்ட ஆய்வின்படி பார்த்தால், ​​குறைந்த வளங்களைக் கொண்ட நாடுகளின் மக்கள் தொகையில் 3% பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக ஆக்ஸ்பாம் தெரிவித்துள்ளது. உலகில் கிடைக்கக்கூடிய அனைத்து தடுப்பூசிகளிலும் 25%-ஐ அமெரிக்கா பெற்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 12.6% பெற்றுள்ளன. இந்த பாரபட்சம் வளர்ச்சியடையாத நாடுகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை நிலைகுலையச் செய்துள்ளது. பொருளாதார பாதுகாப்பு இன்மையுடன் நோய்தொற்றும் அவர்களை வாட்டி வதைக்கிறது.

சுகாதார அவசர காலங்களில் காப்புரிமையிலிருந்து விலக்கு எனும் ஒப்பந்தம்

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து நாடுகள் தங்களது மருந்து நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு மனித இனத்திற்கு எதிரியாக நிர்கிறது. பொது சுகாதார அவசர காலங்களில் சொத்து உரிமைகள் காப்புரிமையிலிருந்து விலக்கு தரப்படும் என்று 2001ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பில் இந்த நாடுகள் ஒப்புக் கொண்டாலும் இப்போது அதை மறுத்துவிட்டனர்.

”the TRIPS Agreement does not and should not prevent Members from taking measures to protect public health. In this regard, the Doha Declaration enshrines the principles WHO has publicly advocated and advanced over the years, namely the re-affirmation of the right of WTO Members to make full use of the safeguard provisions of the TRIPS Agreement in order to protect public health and enhance access to medicines for poor countries.”

ஒரு டோஸுக்கு சராசரியாக 15 டாலர் என்றால் உலகின் 7.9 பில்லியன் மக்களுக்கு தலா இரண்டு டோஸ் வழங்கப்படுவதற்கு 231 பில்லியன் டாலர்கள் செலவாகும். இது உலக பணக்காரர்களில் முதல் 2000 பேர் இந்த கோரானா காலத்தில் சம்பாதித்த மொத்த வருமானத்தில் 5% க்கும் குறைவானது. கொரான தொற்றுக்குப் பிறகு புதிதாக 4 பில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெருந்தொற்று காலகட்டத்திலும் இதுபோன்ற லாபத்தை மையமாக வைத்து இயங்கக்கூடிய ஒரு பொருளாதார அமைப்பு மனித இருப்புக்கு எதிரானது.

தகவல்கள் : பேராசிரியர் பாஸ்குவலினா குர்சியோ (சைமன் போலிவர் பல்கலைக்கழகம், வெனிசுலா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *