புதுச்சேரியில் காங்கிரஸ் அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் வீழ்த்தப்பட்டிருக்கிறது. பாஜக அரசு நியமன உறுப்பினர்களைப் பயன்படுத்தியும், எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியும் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு ஜனநாயகப் படுகொலையை செய்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
புதுச்சேரி மாநில மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த ஓர் அரசு சுதந்திரமாக இயங்க முடியாத தொடர் முட்டுக்கட்டை இந்த நாலரை ஆண்டுகளிலும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி என்பவர் மூலம் மத்திய பா.ஜ.க. அரசு நாளொரு வண்ணமும் நடத்திக் காட்டி, எல்லையற்ற தொல்லைகளைக் கொடுத்தது!
மக்கள் நலத் திட்டங்களை மாநில அமைச்சரவை நினைத்தாலும், திட்டமிட்டபடி செயல்பட முடியாத தடைகளும், முட்டுக்கட்டைகளும் ஏற்பட்டு, அவற்றை அகற்றுவதிலும், எதிர்கொள்வதற்குமே திரு.நாராயணசாமி அவர்கள் தலைமையில் இருந்த அமைச்சரவைக்கு நேரம் சரியாக இருந்த ஒரு ‘கெட்ட வாய்ப்பான’ அரசியல் நடைபெற்றது அங்கு.
புதுச்சேரியில் காவி ஆட்சியை எப்படியும் நிறுவிடவோ அல்லது அதன் கொத்தடிமைகளைக் கொண்டு அரசியல் கச்சேரி நடத்திடவோ திட்டமிட்டு, இன்று பலத்தை நிரூபிக்கக் கெடு கொடுத்தார், புதிய பொறுப்பு துணைநிலை ஆளுநர் திருமதி தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள்!
இதில் மிகவும் வெட்கமும், வேதனையும்பட வேண்டியது தி.மு.க.விற்கும் ஒரு களங்கம் ஏற்படும் வண்ணம் – கட்டுப்பாடு காக்காமல் பதவி விலகியுள்ளார் ஒரு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்!
புதிய வலுவுள்ள ஜனநாயகத்தை அனைத்து முற்போக்குச் சக்திகளின் துணையோடு, தன்முனைப்புக்கு சிறிதும் இடம்தராது – தொடர்ந்து அரசியலைத் தூய்மைப்படுத்தி, ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும், சமூகநீதியையும் சமதர்மத்தையும் காப்பாற்ற தன் சகாக்களுடன் கடுமையாகப் போராடி வீதிக்கு வந்து நீதி கேட்பதுதான் ஒரே வழி!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
குதிரை பேரம் நடத்தியும், நியமன உறுப்பினர்கள் மூலமும் நாராயணசாமி அரசை பாஜக கவிழ்த்துள்ளது. பாஜகவின் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும், சட்ட அத்துமீறல்களையும் பேரவையில் எடுத்துரைத்து, தனது முதல்வர் பதவியை நாராயணசாமி ராஜினாமா செய்திருக்கிறார். ஜனநாயகம் காப்பதில் அவருடைய துணிச்சலான செயல்பாட்டை வாழ்த்துகிறேன்.
தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாவிட்டாலும் அதிமுகவை கைப்பாவையாக்கி பாஜக ஆட்சி நடத்துகிறது. அதுபோல புதுச்சேரியில் தேர்தலைத் தள்ளிவைத்து, துணைநிலை ஆளுநர் மூலம் மறைமுக ஆட்சி நடத்த முயற்சித்தால், அதை நீதிமன்றத்தில் சட்டரீதியாக எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் திமுக துணை நிற்கும். இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து திமுக – காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்.
கேரள முதல்வர் பினராயி விஜயன்
பாஜக பணம் மற்றும் வகுப்புவாதத்தால் ஜனநாயகத்தை வீழ்த்தியிருக்கிறது. புதுச்சேரியில் நாம் கண்டது ஜனநாயகத்தை விற்கவும் வாங்கவும் விரும்புவோருக்கு இடையிலான வணிக ஒப்பந்தம். இது இந்திய ஜனநாயகத்தில் வெட்கக்கேடான அத்தியாயம். பாஜக ஒரு ஆபத்தான விளையாட்டை விளையாடுகிறது,
மாற்று அரசியலை முன்வைப்பது இடது மற்றும் ஜனநாயக சக்திகள்தான். ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் வளர்ச்சியைப் பாதுகாப்பதில் உறுதியற்ற சக்திகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை புதுச்சேரி நமக்கு நினைவூட்டுகிறது என்று கூறியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி
புதுச்சேரி மாநிலத்தில்,தி.மு.கழக ஆதரவுடன், பெரும்பான்மை பலத்துடன் இயங்கி வந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசை, மிகக் கேவலமான முறையில் கவிழ்த்து ஜனநாயகப் படுகொலை நடத்தி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண் பேடி பொறுப்பு ஏற்ற நாள் முதல், நாராயணசாமி அரசுக்கு நாள்தோறும் தொல்லைகள் கொடுத்து வந்தார். மக்களாட்சிக் கோட்பாட்டைக் குழிதோண்டிப் புதைத்தார். அதனால், புதுச்சேரி மக்களின் கடுங்கோபத்திற்கும், வெறுப்புக்கும் ஆளான கிரண் பேடியை நீக்குவது போல ஒரு நாடகத்தை நடத்தி, சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஆட்சியைக் கவிழ்க்கும் வேலையையும் செய்து முடித்து இருக்கின்றனர்.
இரண்டு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், மக்களைச் சந்தித்து, அவர்களுடைய நம்பிக்கையைப் பெறுவதைக் கைவிட்டு விட்டு, சட்டமன்ற உறுப்பினர்களை கட்சி தாவச் செய்து பாஜகவில் சேர்த்துக்கொண்டு, இந்த ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றி இருக்கின்றார்கள். அடிமை அ.இ.அ.தி.மு.க., கை கட்டி, வாய்பொத்திச் சேவகம் செய்கின்றது. அவர்களுடைய கூட்டணிக்கு, நடைபெற இருக்கின்ற தேர்தலில், மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி
ஆட்சிக் கவிழ்ப்பு என்னும் அநாகரீக அரசியலை புதுச்சேரியில் அரங்கேற்றும் பாஜகவின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
புதுச்சேரியில் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து அரசியல் கட்சிகளும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இதனை தமிழ்நாட்டிலும் சனாதனிகள் விரிவுபடுத்துவார்கள் என்பதையும், புதுச்சேரியில் நடப்பது தமிழ்நாட்டுக்கான ஒத்திகையே என்பதையும் அறிய முடிகிறது. அரசியல் கட்சிகள், கொள்கை பிடிப்பு இல்லாத தற்குறிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினால், என்ன ஆகும் என்பதை உணர்ந்து இனிவரும் காலங்களில் எச்சரிக்கையோடு நடந்துகொள்ள வேண்டும்.
மக்களிடம் வாக்கு வாங்கி ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியாத பாஜக, இப்படி பின்வாசல் வழியாக புதுச்சேரியில் காலூன்ற முற்படுவதை புதுச்சேரி மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். ஜனநாயக விரோதிகளுக்கு தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் தக்க பாடத்தை கற்பிப்பார்கள் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்
எதிர்கட்சிகள் அதிகாரத்தில் உள்ள மாநிலங்களில் குறுக்குவழியில் நுழைந்து ஜனநாயக விரோத முறையில் அதிகாரத்தைக் கைப்பற்றி வருவதன் தொடர்ச்சியாக பாஜக புதுச்சேரியிலும் சட்டவிரோதச் செயலில் ஆதாயம் தேடி தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கிவிட்டது.
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசை வீழ்த்திவிட ஆளுநர் மாளிகை வழியாக பல்வேறு அரசியல் சதிவேலைகளை தொடர்ந்து அரங்கேற்றி வந்தது. தற்போது மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை செயல்படவிடாமல் முடக்குவதில் வெற்றி பெற்று விட்டது.
அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படைகளை தகர்த்து, மக்கள் உணர்வுகளை நிராகரித்து, ஜனநாயக நெறிமுறைகளை சிறுமைப்படுத்தி பாஜக மத்திய அரசு புதுச்சேரியில் அரங்கேற்றியுள்ள ஜனநாயகப் படுகொலையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பாஜகவின் ஜனநாயக விரோத, அதிகார அத்துமீறலுக்கு எதிராக ஜனநாயக சக்தி ஒருமுகமாகத் திரண்டு போராடி முறியடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.
சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட அனுமதிக்காததும், கவிழ்ப்பதும் பாஜகவின் கைவந்த கலையாக உள்ளது என்பது மீண்டும், மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
பாஜகவின் ஜனநாயக விரோத, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான செயல்களுக்கும் இதற்கு துணைபோகும் மற்றும் விலைபோகும் கட்சிமாறிகளையும், அரசியல் வியாபாரிகளையும், வரும் சட்டமன்றத் தேர்தலில் புறக்கணித்து புதுச்சேரி மக்கள் அவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்
பாசிச பாஜகவின் சர்வாதிகாரப் போக்கு ஜனநாயகத்திற்கு எதிராக முடியும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது.
அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் ,கோவா, மேகாலயா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில், ஆட்சி கவிழ்ப்பு செய்து குறுக்கு வழியில் தனது ஆட்சியை நிறுவியுள்ள பாஜக அரசு, தற்போது , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியும், மிரட்டியும் தனது ஆட்சியை அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாராயணசாமி ஆட்சியை திட்டமிட்டு கவிழ்த்துள்ளது பாஜக. பாசிச மோடி அரசின் மோசடியான செயலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
இது நாட்டின் ஜனநாயகத்தை அவமானப்படுத்துவதோடு, வாக்களித்த ஒட்டுமொத்த மக்களையும் இழிவுப்படுத்தும் செயலாகும் என்பதையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி காங்கிரஸ் அரசை பெரும்பான்மை இழக்கச் செய்து ஆட்சியை அகற்றியிருப்பது தேர்தல் ஜனநாயகத்தைப் படுகொலை செய்வதற்கு சமமாகவே கருதுகிறேன். எதிர்காலத்தில் இதுபோல் நடைபெறமால் இருக்க புதுச்செரிக்கு முழு மாநில அந்தஸ்தை கொடுப்பதும், நியமன உறுப்பினர் எனபதை அடியோடு ஒழிப்பதுமே தீர்வாகும்.