விடுதலைப் புலிகள் தடை இங்கிலாந்து

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகளின் தடை நீக்கம் குறித்த தீர்ப்பு என்ன சொல்கிறது?

இங்கிலாந்தில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையத்தில் (Proscribed Organizations Appeal Commission) விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி நடத்தப்பட்ட வழக்கில் முக்கியமான தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அவ்வழக்கின் பின்னணி மற்றும் தீர்ப்பு குறித்த விவரங்களைப் பார்ப்போம்.

தடையை நீக்க யார் முறையிட முடியும்?

POAC (Proscribed Organizations Appeal Commission) என்பது இங்கிலாந்தின் 2000-ம் ஆண்டு தீவிரவாத சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சிறப்பு தீர்ப்பாயம் ஆகும். இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத பட்டியலில் சேர்க்கப்படும் அமைப்புகள் இந்த ஆணையத்தில் மேல்முறையீடு செய்து வழக்கினை நடத்த இயலும். தடை செய்யப்பட்ட அமைப்பின் சார்பாக ஒருவரோ அல்லது அந்த குறிப்பிட்ட அமைப்பின் மீதான தடையினால் பாதிப்புகளை சந்திக்கும் வேறு ஒருவரோ இந்த ஆணையத்தில் தடை நீக்கம் கோரி முறையிட இயலும்.

2001-ல் தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இங்கிலாந்தில் கடந்த 2001-ம் ஆண்டு தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பிரிட்டனில் இயங்கும் புலம்பெயர் அமைப்புகள் இந்த தடைக்கு எதிராக தொடர்ச்சியாக சட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. 

2009-ம் ஆண்டு இலங்கை அரசினால் விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் இங்கிலாந்து அரசு அந்த தடையினை தொடர்ந்து வருகிறது. 

2018-ல் TGTE சமர்பித்த விண்ணப்பம்

2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) இங்கிலாந்தின் உள்துறை செயலர் சஜித் ஜாவித் அவர்களுக்கு விடுதலைப் புலிகளின் மீதான தடையினை நீக்க வலியுறுத்தி விண்ணப்பம் ஒன்றினை அனுப்பியது. விடுதலைப் புலிகளின் மீதான தடையினைத் தொடர்ந்து நீட்டித்து வருவதன் மூலமாக TGTE உள்ளிட்ட தமிழ் மக்களின் சுதந்திர உரிமையும், கருத்துரிமையும் மறுக்கப்பட்டு வருவதாக இந்த முறையீட்டினை செய்திருந்தது.

விடுதலைப் புலிகளின் மீதான தடையானது, இறையாண்மை கொண்ட தமிழீழ அரசினை உருவாக்குவதற்கான பணியினை மேற்கொள்வதற்கான தடையாக முன்வைக்கப்படுகிறது. இதனால் தமிழீழ அரசை உருவாக்குவதற்கான பணியில் மக்களை திரட்டுவதில் TGTE  பல தடைகளை எதிர்கொண்டு பாதிப்புகளை சந்திப்பதாகவும் அந்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தனர். அந்த விண்ணப்பத்தினை உள்துறை செயலர் ஜாவித் நிராகரித்து விட்டார்.

கடந்த 10 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் எந்த வன்முறை நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.  விடுதலைப் புலிகளை தடை செய்து வைத்திருப்பதென்பது, அனைத்து தமிழர்களின் அரசியல் செயல்பாடுகளை சிதைப்பதற்கு ஒப்பானதேயாகும். இது இலங்கை அரசு மேற்கொண்டு வரும் செயலைப் போன்றதாகும் என்று TGTE அமைப்பின் தலைவரான ருத்ரகுமாரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இங்கிலாந்து உள்துறை செயலரின் நிராகரிப்பு கடிதம்

அந்த விண்ணப்பத்தினை நிராகரித்த கடிதத்தில் ஜூன் 2018-ல் இலங்கையின் காவல்துறை வெடிபொருட்கள் வைத்திருப்பதாக சிலரை கைது செய்ததாகவும், அவர்களிடம் விடுதலைப் புலிகளின் கொடி உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாகவும் ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் சுட்டிக் காட்டி, அதன் காரணமாக தடையினை நீக்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.

உள்துறை செயலரின் நிராகரிப்பு கடிதம் குறித்த விவரம். தீர்ப்பிலிருந்து

தடை நீக்கம் கோரி வழக்கு பதிவு செய்த TGTE

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் டிசம்பர் 13, 2018 அன்று POAC ஆணையத்தில் தடை நீக்கம் கோரி வழக்கினை பதிவு செய்தது. அந்த ஆணையம் ஜூலை 30, 2020 அன்று நேரடியான ஆதாரங்களின் மூலம் வாதங்களினை விசாரித்தது. அதன்பிறகு ஜூலை 31, 2020 அன்று ரகசிய ஆதாரங்கள் தொடர்பான வாதங்களை விசாரித்தது. 

மேட்ரிக்ஸ் சாம்பர்ஸ் மற்றும் London School of Economics-ஐச் சேர்ந்த பேராசிரியர் கோனோர் கியர்டி வழக்கினை தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர்கள் மாயா லெஸ்டர் (QC), மால்கம் பேர்ட்லிங் (Brick Court Chambers) உள்ளிட்டோர் TGTE சார்பில் ஆஜரானார்கள். ரகசிய விசாரணையின் போது சிறப்பு வழக்கறிஞர்களாக ஆங்கஸ் மெக்கல்லோச், ராச்செல் டோனி ஆகியோர் ஆஜரானார்கள். 

கோனோர் கியர்டி, மாயா லெஸ்டர், மால்கம் பேர்ட்லிங்
TGTE சார்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதங்கள்

வழக்கை விசாரித்த ஆணையத்தின் கருத்து

வழக்கினை விசாரித்த ஆணையம் இங்கிலாந்து அரசின் சார்பாக முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் தடையினை தொடர்வதை நியாயப்படுத்துவதற்கு போதுமானதாக இல்லை என்று தெரிவித்திருக்கிறது. எனவே விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு நியாயமான காரணங்கள் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறது. 

ஒரு அமைப்பு பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக உள்துறை செயலாளர் கருதினால் ஒரு அமைப்பினை தடை செய்ய இயலும். உள்துறை செயலர் எடுத்த முடிவிற்கு காரணமாக முன்வைக்கப்பட்ட விவகாரங்களை ஆணையம் முழுமையாக ஆய்வு செய்தது. உள்துறை செயலருக்கு பரிந்துரைகளை அளித்த PRG (The Proscription Review Group) மற்றும் JTAC (The Joint Terrorism Analysis Centre) ஆகிய இரண்டு குழுக்களின் அறிக்கைகளையும் ஆராய்ந்தது. ஆனால் அந்த அறிக்கைகளிலும் முறையான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்திருக்கிறது.

தீர்ப்பின் சாராம்சம் 1
தீர்ப்பின் சாராம்சம் 2
தீர்ப்பின் சாராம்சம் 3

புலிகள் மீதான தடை இங்கிலாந்தில் நீக்கப்படுமா?

தடை செய்ததற்கு முறையான ஆதாரம் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலும், இந்த ஆணையத்திற்கு விடுதலைப் புலிகள் அமைப்பினை தடை செய்யப்பட்ட பட்டியலிலிருந்து நீக்குவதற்கான அதிகாரம் இல்லை. உள்துறை செயலர் இத்தீர்ப்பின் அம்சங்களை பாராளுமன்றத்தில் முன்வைத்து அதை செயல்படுத்த வலியுறுத்தினால் மட்டுமே தடை நீக்கப்பட முடியும். பாராளுமன்றத்திற்கு மட்டுமே அந்த அதிகாரம் இருக்கிறது. 

ஆனால் உள்துறை செயலர் தாங்கள் புதிய ஆதாரங்களை இதற்குப் பிறகான காலங்களில் முறையாக மேலாண்மை செய்வதாக நீதிமன்றத்தில் வாதங்களை வைத்து தடையினை நீக்காமலும் காலம் கடத்தவே செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஐரோப்பிய யூனியனில் புலிகள் மீதான தடை நீக்க வலியுறுத்தி தீர்ப்பு வெளியானபோதும், தடையை நீக்கக் கூடாது என இங்கிலாந்து அரசே அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.

எனவே இனிவரும் காலங்களில் உள்துறை செயலரின் செயல்பாடுகளைப் பொறுத்தே அடுத்தகட்டமாக இந்த தடை விவகாரத்தில் என்ன நடக்கும் என்பது தெரியவரும். இது குறித்த அடுத்தகட்ட முடிவினை இந்த தீர்ப்பாயம் அறிவிப்பதற்கு அடுத்த 5 முதல் 8 வாரங்கள் வரை ஆகலாம் என்று தெரிகிறது. 

இங்கிலாந்தில் தீவிரவாத சட்டம் கொண்டுவரப்பட்ட 20 ஆண்டுகளில் இரண்டே வழக்குகள் மட்டுமே இந்த அளவுக்கான முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது. அந்த இரண்டில் ஒன்று விடுதலைப் புலிகள் குறித்தான வழக்காகும். எனவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இந்த தீர்ப்பினை ஒரு முதல்கட்ட வெற்றியாகவே கருதுகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை நீக்கப்படும் வரை தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று நாடுகடந்த தமிழீழ அரசு அறிவித்திருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *