நாடு கடந்த சுதந்திர இந்திய அரசு நேதாஜி

நேதாஜி உருவாக்கிய நாடு கடந்த இந்திய அரசைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ”நாடு கடந்த சுதந்திர இந்திய அரசு (Provisional Government of Free India” என்பதை உருவாக்கி 1943-ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று அறிவித்தார். இது சுருக்கமாக ’விடுதலையான இந்தியா’ அல்லது ’ஆசாத் ஹிந்த்’ என்று அழைக்கப்பட்டது. (முதன்மைப் படம்: நாடு கடந்த இந்திய அரசினை சிங்கப்பூரில் நேதாஜி அறிவிக்கும் படம்)

 அந்த நாடுகடந்த அரசானது சிங்கப்பூரிலிருந்து இயங்கியது. இடைக்கால சுதந்திர இந்திய அரசின் பிரதமராக நேதாஜி அறிவிக்கப்பட்டார். அதற்கு 11 அமைச்சர்களும் அறிவிக்கப்பட்டார்கள். இந்திய தேசிய ராணுவம் நாடு கடந்த அரசின் ராணுவப் பிரிவாக இருந்தது. 

ஆசாத் இந்தியாவிற்கான தேசியக் கொடி, குறிக்கோள், முழக்கம், தேசிய கீதம் உள்ளிட்டவையும் அறிவிக்கப்பட்டன. 

  • தேசியக் கொடி : காந்திய சக்கரத்தை நடுவில் கொண்ட மூவர்ணக் கொடி
  • குறிக்கோள்: நம்பிக்கை-ஒற்றுமை-தியாகம்
  • முழக்கம்: ஜெய்ஹிந்த்
  • இந்திய தேசிய ராணுவத்தின் இலச்சினை: திப்புசுல்தான் பயன்படுத்திய பாயும் புலியின் உருவத்தை மூவர்ணத்தின் மையத்தில் பொறித்த சின்னம்.
  • தேசிய கீதம்: ஜன கன மண பாடலின் ஹிந்துஸ்தானி வடிவம்.
  • மொழி: ஹிந்துஸ்தானி. அதிகாரப்பூர்வ அறிவிப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டது. (’ஆசாத் ஹிந்த்’ என்று பெயரிடப்பட்ட நாடு கடந்த இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை ஹிந்துஸ்தானி, குஜராத்தி, மலையாளம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பதிப்பிக்கப்பட்டது).
  • வங்கி: ஆசாத் ஹிந்த் தேசிய வங்கி
  • ராணுவம்: 45,000 முதல் 50,000 ராணுவ வீரர்கள் இருந்தார்கள். பெண்களை மையப்படுத்திய ஜான்சி ராணி படைப்பிரிவும் இருந்தது.
கொடி மற்றும் இலச்சினை
ஜான்சி ராணி படைப்பிரிவின் பொறுப்பாளர் லட்சுமி மற்றும் நேதாஜி

அமைச்சரவை உறுப்பினர்கள்

  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் – பிரதமர், போர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்.
  • லெப்டினண்ட் கர்னல் ஏசி சாட்டர்ஜி – நிதி அமைச்சர்
  • டாக்டர் லட்சுமி சுவாமிநாதன் – பெண்கள் விவகார அமைச்சர்
  • ஏ.எம்.சகாய் – அமைச்சர் அந்தஸ்துடன் கூடிய செயலாளர்
  • எஸ்.ஏ ஐயர் – விளம்பரம் மற்றும் பிரச்சார அமைச்சர்
  • ராஷ் பெஹாரி போஸ் – தலைமை ஆலோசகர்
  • கரீம் கியானி, டெப்னாத் தாஸ், ஜான் திவி, சர்தார் இஷார் சிங், டி.எம்.கான், எம்.எல்லப்பா – பர்மா, தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆலோசகர்கள்.
  • லெப்.கர்னல் ஜே.கே.போன்ஸ்லே, லெப்.கர்னல் குல்சாரா சிங், லெப்.கர்னல் ஷானவாஸ் கான், லெப்.கர்னல் அசீஸ் அகமது, லெப்.கர்னல் கியானி, லெப்.கர்னல் என்.எஸ்.பகத், லெப்.கர்னல் இஷான் காதிர், லெப்.கர்னல் லோகநாதன் – இந்திய தேசிய ராணுவத்தின் பிரதிநிதிகள்
  • ஏ.என்.சர்க்கார் – சட்ட ஆலோசகர்.
அமைச்சரவை உறுப்பினர்களுடன் நேதாஜி

கிழக்காசிய இந்தியர்களின் பெறும் பங்களிப்பு

நாடு கடந்த அரசின் உருவாக்கம் நேதாஜிக்கு ஜப்பானுடனான பேச்சுவார்த்தையில் உதவியதுடன், கிழக்காசியாவில் இருந்த இந்தியர்களை பெருமளவில் ஐ.என்.ஏவில் சேர வைத்தது. மலேசியா, தாய்லாந்து, பர்மா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஏராளமானோர் படையில் இணைந்தனர். ஏராளமானோர் நிதியினையும் தங்கத்தையும் நன்கொடையாகக் கொட்டிக் கொடுத்தனர். 

பெண்கள் தாங்கள் அணிந்திருந்த நகைகளைக் கூட கழட்டி நன்கொடையாய் அளித்தனர். வசூலிக்கப்பட்ட நன்கொடை தொகையினைக் கொண்டு 1944 ஏப்ரல் மாதத்தில் ’ஆசாத் ஹிந்த் வங்கி’ உருவாக்கப்பட்டது. 

அங்கீகாரம் அளித்த நாடுகள்

நாடு கடந்த சுதந்திர இந்திய அரசுக்கு ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, க்ரோட்டியா, பர்மா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மன்ச்சூரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அங்கீகாரம் அளித்தன. இந்த நாடுகள் நாடுகடந்த இந்திய அரசுக்கு அங்கீகாரம் அளித்ததற்கு ஜெர்மன் தலைமையிலான கூட்டணியில் இந்த நாடுகள் ’நேச நாடுகளின் அணி’ என்றழைக்கப்பட்ட இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுடன் போரில் ஈடுபட்டிருந்தது முக்கியக் காரணமாக இருந்தது. அயர்லாந்து பிரதமரிடமிருந்தும் நாடுகடந்த அரசிற்கு வாழ்த்துக் கடிதம் வந்தது. 

ஐ.என்.ஏவின் தலைமையகம் பர்மாவில் ரங்கூன் பகுதியில் ஜனவரி 25, 1944 அன்று அமைக்கப்பட்டது. ஜப்பான் அரசு இங்கிலாந்தை எதிர்கொள்வதற்காக, அந்தமான் நிக்கோபார் பகுதியின் கட்டுப்பாட்டினை நாடு கடந்த இந்திய அரசுக்கு அளித்தது. 

வகுப்புவாத சக்திகளை ஊக்குவிக்காத சுபாஷ் சந்திர போஸ்

சுபாஷ் சந்திர போஸ் ஆரம்பத்திலிருந்தே மதவாத வகுப்புவாத அமைப்புகளின் மேல் கோபம் கொண்டிருந்தார். அவர் கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் பன்மைத் துவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால்தான் அவர் எந்த மேடையிலும் தன் கடவுளைப் பற்றி பேசியதில்லை. திப்பு சுல்தானின் பிரிட்டிஷ் எதிர்ப்பு சின்னத்தினை இந்திய தேசிய ராணுவத்தின் சின்னமாக வைத்தார். வட மற்றும் தென்னிந்திய மொழிகள் என இரண்டு தரப்பையுமே அதிகாரப்பூர்வ மொழிகளாக பயன்படுத்தினார்.

நாடுகடந்த இந்திய அரசு உருவாக்கப்பட்டதன் நினைவாக கிழக்காசிய நாடுகளில் உள்ள இந்திய மக்கள் ஒவ்வொரு மாதமும் 21-ம் தேதியை ஆசாத் ஹிந்த் நாளாகக் கொண்டாடினர். 

நாடு கடந்த சுதந்திர இந்திய அரசு உருவாக்கப்பட்ட 77 ஆம் ஆண்டு இன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *