தொழிலாளர் மசோதா

இந்திய அரசின் புதிய தொழிலாளர் மசோதாக்கள் சொல்வது என்ன? – பாகம் 1

கடந்த ஐந்து வருடங்களாக இந்தியப் பொருளாதாரம் ஒரு நெருக்கடி நிலையில் உள்ளது. குறிப்பாக கொரோனா தொற்று பரவுவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பே இந்தியப் பொருளாதாரத்தின் சரிவு கைமீறி போய்விட்டது. கொரோனா பரவலுக்குப் பிறகு, மேலும் மோசமடைந்து வருகிறது. இந்த பொருளாதார சரிவுகள் நேரடியாக இந்திய தொழிலாளர்களின் வாழ்வைப் புரட்டிப்போட்டுள்ளது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில்தான் ஒன்றிய அரசு தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை செய்துள்ளது. 

உலக அளவில் இந்தியாவில் வணிகம் செய்வதற்கு எளிதான ‘Ease of Doing Business’ (EDB) நடைமுறைகளை உருவாக்குவதற்காகவே இந்த சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் EDB தரவரிசையின் அடிப்படையில்தான் முதலீடுகளை செய்வது வழக்கம். எனவே உலக நாடுகள் EDB தரவரிசையில் முன்னிலை வகிக்க உள்நாட்டு தொழிலாளர்களையும் சூழலியலையும் பொருட்படுத்தாமல் பல திருத்தங்களை செய்து வருகிறது. இதன் அடிப்படையில்தான் கடந்த 22-ம் தேதி இந்தியப் பாராளுமன்றத்தில் பாஜக அரசு தொழிலாளர் சட்டத் திருத்தங்களை நிறைவேற்றியுள்ளது. 

இந்த திருத்தங்கள் இந்தியாவின் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரானது என்று தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் இந்த மாற்றங்கள் காலனிய கால அடிமை முறைக்கு இட்டுச்செல்லும் என்றும், அத்தோடு சுதந்திர இந்தியாவில் தொழிலாளர்கள் படிப்படியாக போராடி அடைந்த உரிமைகளை ஒரே நாளில் சவப்பெட்டிக்குள் போட்டுவிட்டது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். 

கூலி, சமூக பாதுகாப்பு, தொழிலாளர் நலன், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம், தொழிலாளர் உறவுகள் (wages, social security, labour welfare, occupational safety and health, and industrial relations) என தொழிலாளர்கள் தொடர்பான 44 விடயங்களை உள்ளடக்கிய சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

மாநில அரசுகளுடனோ, தொழிற்சங்கங்களுடனோ விவாதிக்கவில்லை

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தொழிலாளர் குறித்தான சட்டங்கள் பொதுப்பட்டியலில் உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் என இரண்டு அரசுகளுக்கும் பொதுவாக உள்ளது. ஏறத்தாழ 100-க்கும் அதிகமான தொழிலாளர் தொடர்பான விடயங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவற்றை திருத்த  வேண்டும் என்றால் பல்வேறு மாநில அரசுகளுடன் விவாதித்தும், அந்த மாநில தொழிலாளர்களின் நிலைமைகளை கருத்தில் கொண்டும், அத்தோடு தொழிற்சங்கங்களின் கருத்துக்களையும் பொருட்படுத்தியே திருத்தங்கள் செய்ய வேண்டும். ஆனால் புதிய வரைவினை உருவாக்கும்போது பாஜக அரசு யாரையும் பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக குழுவை அமைத்து வரைவு முடிவுகளை இறுதி செய்துள்ளது.

கடந்த ஐந்து வருடங்களில் முத்தரப்பு தொழிலாளர் கொள்கையில் முடிவெடுக்கும் அமைப்பான இந்திய தொழிலாளர் மாநாடு அமைப்புடன்  (Indian Labour Conference) எந்த உரையாடலையும் மோடி அரசு நிகழ்த்தவில்லை. இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் நலன் குறித்து முடிவெடுப்பதில் ஜனநாயக முறையைக் கையாள்வதிலும் மோடி அவர்களின் அரசு நம்பிக்கை கொள்ளவில்லை. 

எதிர்க்கட்சிகளே இல்லாமல் நிறைவேற்றப்பட்ட மசோதா

2019-ம் ஆண்டு தொழிலாளர் ஊதியம் குறித்தான மசோதா பல்வேறு எதிர்ப்புகளுக்கு நடுவில் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள், சமூகப் பாதுகாப்பு, தொழில்துறை உறவுகள் குறித்தான மசோதாக்கள் செப்டம்பர் 22-ம் தேதி எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்த நேரத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொழிலாளர் வர்க்கத்தின் நியாயமான தேவைகளை சேர்க்காமல் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

இந்த திருத்தங்கள் முறைசார துறையில் உள்ள தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், சுயதொழில் தொழிலாளர்கள் மற்றும் வீட்டுத் தொழிலாளர்கள் போன்றோரின் சமூகப் பாதுகாப்பு குறித்து பொருட்படுத்தவில்லை. இந்தியாவில் பெரும்பான்மை தொழிலாளர்களை உள்ளடக்கிய முறைசாரா தொழிலாளர்களின் துறையைப் பொருட்படுத்தாமல் இந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

சமூக பாதுகாப்பு குறித்த குறியீடு, 2020 

The Code on Social Security, 2020 என்றழைக்கப்படும் சமூக பாதுகாப்பு குறித்த குறியீடு 2020 ஆனது, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, ஊழியர்களின் மாநில காப்பீடு, Gratuity, மகப்பேறு சலுகைகள் (Employees’ Provident Fund (PF), Employees’ State Insurance (ESI), gratuity, maternity benefits) போன்ற சமூக பாதுகாப்பு குறித்து ஏற்கனவே உள்ள சட்டத்தை ஒருங்கிணைக்க முயல்கிறது. இந்த முயற்சியில் பல தன்னிச்சையான வகைப்பாடுகளை கொண்டு வருகிறது. இந்த வகைப்பாடுகள் கோடிக்கணக்கான தொழிலாளர்களை சமூக பாதுகப்பில் இருந்து விலக்குகிறது. குறிப்பாக முறைசார தொழிலார்களின் பாதுகாப்பு அடியோடு தவிர்க்கப்பட்டுள்ளது. 

கொரோனா காலக்கட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றை சமகாலத்தில பார்த்த பிறகும் ஒன்றிய அரசு அவர்களின் எதிர்கால பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. தொழிலார்களின் சமூக பாதுகாப்பு ஒரு உரிமையாக வலியுறுத்தப்படவில்லை. இது குறித்து  அரசியலமைப்புச் சட்டம் செய்து வைத்திருக்கும் ஏற்பாடுகளை பொருட்படுத்தவும் இல்லை, எங்கும் குறிப்பிடவும் இல்லை. சில பாதுகாப்புகள் வலியுறுத்தப்பட்டிருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள எதார்த்தங்களை கருத்தில் கொண்டு நடைமுறையும், வழிகாட்டுதல்களும் உறுதிபடுத்தப்படவில்லை. 

பெரும்பான்மை தொழிலாளர்களை விலக்கி வைக்கிறது

இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான தொழிலாளர்களை உள்ளடக்குவதற்குப் பதிலாக வகைப்பாடுகள் மூலமாக விலக்கி வைத்துள்ளது.

  1. பிரிவு 2(6)-ல் ”பழைய கட்டுமானங்களை வைத்திருக்கிற, 10 அல்லது அதற்கு மேற்பட்ட கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்களை உள்ளடக்கிய என்று குறிபிடப்பட்டுள்ளது. தினக்கூலி வேலையில் பெரும் அங்கமாக விளங்கும் தனிப்பட்ட குடியிருப்புகளின் கட்டுமானப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் இந்த குறியீட்டு விதிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். (Section 2(6) retains the old threshold of only those sites with 10 or more buildings and other construction workers needing to be covered by the Code. In addition, “personal residential construction work,” which forms a large component of daily waged work, is excluded from the provisions of the Code.)
  2. பிரிவு 2(82) கூலித் தொழிலாளிகளை வரையறுப்பதில் ஊதிய உச்ச வரம்பை இலக்காக வைத்துள்ளது. இருப்பினும் அந்த அளவீடு தன்னிச்சையாகவும் வரையறுக்கப்படலாம் என்று கூறுகிறது. இதை அகற்ற பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்த போதிலும் அப்பிரிவு அகற்றப்படவில்லை.
    (Section 2(82) retains a wage ceiling to define a waged worker. However, such ceilings might be defined arbitrarily, and despite the Standing Committees recommendation to remove it, the Code retains this clause.)
  3. வைப்பு நிதியைப் பொறுத்தவரை, 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இந்த போக்கு கோடிக்கணக்கான சிறு மற்றும் குறு நிறுவனங்களை நம்பியிருக்கும் தொழிலாளர்களை கைவிட்டுள்ளது. மேலும் தற்போதுள்ள ஊழியர்களை இந்த பாதுகாப்பிலிருந்து விலக்க முதலாளிகள் இந்த கட்டுப்பாட்டை தவறாகப் பயன்படுத்தக்கூடும். (For PF, only establishments with 20 or more workers are covered, excluding the millions of micro and small enterprises from its ambit. Moreover, employers could misuse this restriction to exclude existing employees from this protection)

இந்த பரிந்துரைகளில் உள்ள வகைப்பாடுகள் பெரும்பாலும் தெளிவற்றதாக இருக்கிறது. 

தொழிலாளர் வரையறையில் உள்ள சிக்கல்

குறிப்பாக ஒரு தொழிலாளி முறைசார் தொழிலாளரா அல்லது முறைசார தொழிலாளரா என்று தீர்மானகரமாக வரையறுக்கப்படவில்லை. உதாரணத்திற்கு Gig workers என்றழைக்கப்படும் சுதந்திரமாக, தன்னிச்சையாக வேலை செய்யும் தொழிலாளர்களும், Platform workers என்றழைக்கப்படும் தெருவோரங்களில் நடைமேடைகளில் வேலை செய்பவர்களும் முறைசாரா தொழிலாளர்கள் பட்டியலில் வகைபடுத்தப்படவில்லை. இந்தியாவில் லட்சக்கணக்கானவர்கள் இதுபோன்ற வேலையில் தான் ஈடுபட்டு வருகின்றனர். 

பாராளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைகள் நிராகரிப்பு

இதேபோல் அனைத்து தொழிலாளர்களும் பாகுபாடின்றி, சமூக  பாதுகாப்பின் நோக்கத்தில் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதற்காக  ‘ஸ்தாபனம்’(Establishment) என்ற சொல்லின் வரையறை மாற்றப்பட வேண்டும் என்று பாராளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்தது. இருப்பினும் அது புறக்கணிக்கப்பட்டுள்ளது. விதிவிலக்கில்லாமல் அனைத்து நிறுவனங்களும் ஒரு நிறுவனத்தின் கீழ் பதியப்படவேண்டும், அது தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் மையமாக இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக பல முகர்வகள் மூலம் கையாளப்படும் நடைமுறை தடுக்கப்படும்.

புலம்பெயர் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் பாதுகாப்பு புறக்கணிப்பு

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளுடன் கூடிய பாதுகாப்பு நல நிதி கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அவர்கள் இந்த வகைப்படுத்துதலில் தவிர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது. இவர்களுக்கு இந்திய அரசியலமைப்பினால் வழங்கப்பட்ட உரிமைகளின்படி, தொழிலாளர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதிசெய்ய கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு, ஓய்வூதியங்கள் மற்றும் பிற சலுகைகள் போன்ற விடயங்களை உள்ளடக்கிய அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டம் எதுவும் இதில் இல்லை.

பொருளாதார மந்தநிலை காலக்கட்டங்களில் வேலை இழக்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான எந்தவொரு ஏற்பாடும் இந்த மசோதாவில் இல்லை.

தெளிவான முதலாளி மற்றும் பண்ணையாள் வித்தியாசம் இல்லாத வீட்டு வேலை, சுயதொழில், Piece rate work போன்ற தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு எவ்வாறு உறுதி செய்யப்படும் என்பது குறித்து எதுவும் இந்த மசோதாவில் இல்லை.

SC/ST/OBC மற்றும் பெண் பிரதிநிதிகளை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புக் குழுவில் (Employees’ Provident Fund Organisation) சேர்க்க எந்த வழிமுறையும் பரிந்துரைக்கப்படவில்லை. அமைப்புசாரா துறைக்குள் உள்ள பல்வேறுபட்ட தொழிலாளிகளின் பன்முகத் தன்மையை ஒன்று சேர்க்க எந்தவொரு குறிப்பிட்ட துறையின் பிரதிநிதித்துவமும் இல்லை. (No sectoral representation to include diversity of work types within the unorganised sector).

முத்தரப்பு முறை புறக்கணிப்பு

ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகக் குழுவில் (Employees’ State Insurance corporation) தொழிலாளி, முதலாளி, மாநிலம் என்ற முத்தரப்பு முறை கலைக்கப்படக் கூடாது என்று பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இது புறக்கணிக்கப்பட்டுள்ளது. 

மகப்பேறு நன்மைகள் ஆனைத்து பெண் தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் எனும் கோரிக்கை பரிந்துரைக்கப்படவில்லை.

தொழிலாளர்களுக்கு சட்டபூர்வமாக கிடைக்கும் சமூகப் பாதுகாப்பை முதலாளிகள் எளிதாக மீறும் வகையில் இந்த பரிந்துரைகள் அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பி.எஃப் நிலுவைத் தொகையை வழங்காத முதலாளி மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கு எந்த ஒரு கடுமையான அபராதமும் இல்லாமல் செய்திருக்கிறது இந்த சட்டம். அதேபோல் gratuity-ஐப் பொறுத்தவரை ஒப்பந்தக்காரர் பணம் செலுத்தத் தவறினால் முதன்மை முதலாளி பொறுப்பேற்க மாட்டார் என்று இந்த சட்டம் கூறுகிறது. இந்த போக்குகள்  தொழிலாளர்களுக்கு விரோதமாகவும் முதலாளிகளுக்கு சாதகமாவும் உள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. 

தொடரும்…

இக்கட்டுரையின் தொடர்ச்சியை கீழே உள்ள இணைப்பில் படிக்கலாம்.

இந்திய அரசின் புதிய தொழிலாளர் மசோதாக்கள் சொல்வது என்ன? – பாகம் 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *