பம்மல் சம்மந்தனார்

நாடகங்களை வீதியிலிருந்து மேடை ஏறச் செய்த பம்மல் சம்மந்தனார்

பம்மல் சம்மந்தனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals

சென்னைக்கு அருகில் உள்ள பம்மலில் வேதரங்கம் – ருக்மணி அம்மாளுக்கும்  மகனாக 1873-ம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று மகனாக பிறந்தார் சம்பந்தம். கோவிந்தப்ப நாயக்கர் உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் கல்வி பயின்றார். சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரான இவர் 1924 முதல் 1928 வரை நீதிபதியாவும் பணி செய்தார்.

தமிழ் நாடகங்களில் பல மாற்றங்களை செய்த இவர் முதன்முதலில் 1891 ஜூலை 1-ம் நாள் ’சுகுண விலாச சபை’ என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.

நாடகம் என்றால் தெருக்கூத்து என்றும், கிராம  மக்கள் மட்டுமே பார்ப்பார்கள்  என்றும் இருந்த நிலையை மாற்றி நகரங்களிலே நல்ல பெரிய அரங்குகளில்  மேடையமைத்து  நாடகங்களை நடத்திக் காட்டினார்.

நாடக நடிகர்களின் மீதிருந்த பார்வையை உயர்த்தியவர்

நாடக நடிகர்கள் கூத்தாடிகள் என்று அழைக்கப்பட்ட வழக்கத்தை மாற்றி, அவர்களைக் கலைஞர்கள் என்று சிறப்பாகக் குறிப்பிடும் நிலைக்கு உயர்த்தியவர். நாடக நடிகர்கள் மீது இருந்த பார்வையை மாற்ற சமூகத்தில் பெரும் புகழுடன் இருந்த அறிஞர்களையும் நடிகர்களாக மேடை ஏற்றி நாடகத்தின் மீதான பொதுப் பார்வையை மாற்றியவர் சம்பந்தம். சர்.சி.பி.ராமசாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, எம்.கந்தசாமி முதலியார், சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார், வி.சி.கோபாலரத்தினம் ஆகியோர் சம்பந்தனார் நாடகத்தில் நடித்த முக்கியமானவர்கள் ஆவர்.

தமிழ் நவீன நாடகத்தின் தந்தையானார்

”தமிழில் ஒரு துறையில் நூல்களே இல்லையென்றால் அறிஞர்கள் அத்துறையில் கவனம் செலுத்தி நூல்களைப் படைக்க வேண்டும். அதற்கு மாறாகத் தமிழில் ஒன்றுமே இல்லை என்று எப்போதும் புலம்பிக் கொண்டு இருக்கக்கூடாது. அவ்வாறு கூறுவோர் ‘பெற்ற தாய்க்கு உடை இல்லை’ என்று சொல்வதற்குச் சமமாவர். ‘தாய்க்கு உடை இல்லை’ என்றால் முதலில் வெட்கப்பட வேண்டியவன் மகனாவான். அதற்கு மாறாக அவன் ஊரெல்லாம் சொல்லித் திரிவது இழிந்த செயலாகும்.” 

என்று எழுதிய சம்பந்தனார் தமிழ் நாடகத்தை பல வழிகளில் முன்னேற்றினார்.

தொடக்கக் காலத்தில் பம்மல் சம்பந்த முதலியாருக்கு நடிப்பில் போதிய பயிற்சி இல்லை என்பதை அவரே ’நாடக மேடை நினைவுகள்’ எனும் நூலில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளவர், பின்னாளில் தமிழ் நவீன நாடகத்தின் தந்தையாக மாறினார்.

அவரது 22-வது வயதில் அவருடைய முதல் நாடகத்தை ‘லீலாவதி-சுலோச்சனா’ என்ற பெயருடன் அரங்கேறியவர் மொத்தம் 94 நாடகங்கள் எழுதினார். அவரது நாடகத்திற்கு 1959-ல் சங்கீத நாடக அகாதமி விருது அளிக்கப்பட்டது. அதன்பிறகு பத்மபூஷன் விருதையும் பெற்றார். இவரது மனோகரா, தாசிப் பெண் உள்ளிட்ட பல நாடகங்கள் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. 

ஷேக்ஸ்பியரின் நாடகங்களை மொழிப்பெயர்த்தார்

ஷேக்ஸ்பியர் நாடகங்களை தமிழில் மொழிபெயர்த்து அதன் தன்மை மாறாமலேயே அறிமுகப்படுத்தினார். அது மட்டுமின்றி பம்மல் சம்பந்த முதலியார் ஆங்கிலம், வடமொழி, பிரெஞ்சு, ஜெர்மன், லத்தீன் முதலிய மொழிகளிலிருந்து நாடகங்களை தமிழில் மொழிப்பெயர்த்தார். அவருடைய மொழிப்பெயர்ப்புகள் தமிழ் நாடகக் கலைக்கு கிடைத்த பெரும் பொக்கிஷங்களாகும்.

சம்பந்தம் வழக்கறிஞராக பணி செய்துகொண்டே தமிழ் நாடகத்துக்கு உழைக்க வேண்டும் என்று கருதினார். தன்னிடம் வழக்கு தொடர்பாக வரக்கூடியவர்கள் காலை 9 1/2 மணி முதல் மாலை 5 மணி வரை பேசலாம் என்றும். மாலை நேரம் நாடகப் பணிக்காக ஒதுக்கப்பட்டது என்றும் பிரித்துக் கொண்டு பணியாற்றினார்.

நாடக சபா சாதியைப் பாதுகாக்கும் அரணாக மாறுவதைக் கண்டித்தார்

‘சுகுண விலாச சபா’ என்ற நாடக அமைப்பை சென்னையில் உருவாக்கிய பின்னர், இந்நாடகக் குழுவைப் பின்பற்றி தமிழகத்தில் புதிய நாடகக் குழுக்கள் தோன்றின. அவற்றுள் ஒன்று ‘ஓரியன்டல் டிராமேட்டிக் சொசைட்டி’ என்பதாகும். இந்நாடகக் குழு சுகுண விலாச சபா தோன்றுவதற்கு முன்னரே உருவாகி, பின்னர் செயலற்று விட்டது. சுகுண விலாச சபாவுக்குப் பின் மீண்டும் செயல்படத் தொடங்கியது. ‘ஓரியன்டல் டிராமேட்டிக் சொசைட்டி’ என்ற இந்நாடகக் குழுவில் பார்ப்பனர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். இந்நாடகக் குழுவினர் பிற சாதியினரை சேர்ப்பதில்லை. மேலும் அந்நாடகக் குழு சுகுண விலாச சபையில் நடிகராக இருந்த ரங்கசாமி அய்யங்காரை, அவர் பார்ப்பனாராக இருந்ததால் தங்களுடைய குழுவிற்கு வரும்படி அழைப்பு விடுத்தனர்.

சாதி சமய பேதங்களைக் கடந்து நாடகக் கலையை வளர்த்த பம்மல் சம்பந்தனார், ‘ஓரியன்டல் டிராமேட்டிக் சொசைட்டி நாடகக்குழு சாதியைப் பாதுகாக்கும் அரணாக மாறியதைக் கண்டு சினமுற்று கண்டித்திருக்கிறார்.

கடல் கடந்தும் நாடகங்களை அரங்கேற்றினார்

போக்குவரத்து வசதிகள் அறவே இல்லாத அக்காலக்கட்டத்தில், பம்மல் சம்பந்த முதலியார் தன்னுடைய நாடகங்களை இந்தியாவில் உள்ள நகரங்களிலும் கடல் கடந்து பர்மா, இலங்கை முதலிய நாடுகளிலும் மேடை ஏற்றினார். இலங்கையில் அவருடைய நாடகங்களைப் பார்த்த கலையரசு சொர்ணலிங்கம் என்பவர், பிற்காலத்தில் ஈழத்து தமிழ் நாடக வளர்ச்சிக்குப் பாடுபட்டார். அவர் பம்மல் சம்பந்த முதலியாரைத் தன்னுடைய ஆசான் என்று குறிப்பிட்டுள்ளார்.

மெளன நாடக வகையை தமிழில் அறிமுகப்படுத்தினார்

பம்மல் சம்பந்தனார் ‘ருக்மாங்கதா’ என்ற நாடகத்தை உரையாடல்களும் பாடல்களும் இன்றி தோற்றக் காட்சிகளின் மூலம் (Tableau vivantes) அமைத்து முதன்முதலில் தமிழில் அவ்வகை நாடகத்தை நடத்தினார். இது மௌனக்காட்சி என்ற நாடக வகையைச் சார்ந்தது. 

நாடக மேடையில் அவர் செய்த மாற்றங்களைக் கண்டு முதலில் முகம் சுளித்தவர்கள், பின்னர் அம்மாற்றங்களை முழுமனதுடன் வரவேற்றனர் என்பதையும் அவரது நூலில் குறிப்பிட்டுள்ளார். இவரது தமிழ் ஆங்கில நூல்கள் நாடகங்கள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளது.

தமிழறிஞர்களிடம் பாராட்டு பெற்ற அவரது நூல்

1895-ம் ஆண்டு வெளிவந்த முதல் நாடக நூலானது பம்மல் சம்பந்தனாரின் உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான முருகேச முதலியார், மாநிலக் கல்லூரி தமிழாசிரியர் கிருஷ்ணமாச்சாரி, கிருத்துவக் கல்லூரி தமிழாசிரியர் பரிதிமாற்கலைஞர், பூவை கல்யாணசுந்தர முதலியார், திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளை, தமிழ்தாத்தா உ.வே. சாமிநாத ஐயர், தமிழ்ச்சுவடி பதிப்புத் துறையின் முன்னோடிகளில் ஒருவரான சி.வை. தாமோதரம் பிள்ளை, மனோன்மணியம் நாடக ஆசிரியர் சுந்தரம் பிள்ளை ஆகியோரால் பாராட்டப்பட்டது. 

நவீன தமிழ் நாடகக் கலையின் வரலாற்றை எழுதுகிறவர்கள் அதில்  சுகுண விலாச சபையை தவிர்த்துவிட்டு எழுதிவிட முடியாது. தமிழ் நாடகக் கலையின் தந்தை என்று புகழப்படும் அளவிற்கு உழைத்த பம்மல் சம்பந்தம் 1964-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி இயற்கை எய்தினார். தமிழ் நவீன நாடகத்தின் தந்தையின் நினைவு நாள் இன்று. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *