உலகளாவிய தொழிலாளர் வருமானம் 2020-ம் ஆண்டின் முதல் 3 காலாண்டுகளில் 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் குறைந்துவிட்டதாக ILO மதிப்பிட்டுள்ளது.
கொரானா தொற்றுநோயால் 2020-ம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் உலகளாவிய தொழிலாளர் வருமானத்தில் 10.7% குறைந்துவிட்டது என்று ஐ.நாவின் சிறப்பு முகமையான சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organisation – ILO) புதன்கிழமை தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
“கொரானா தொற்றுநோயால் ஏற்பட்ட வேலையின்மை மற்றும் வேலை நேர குறைப்பால் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது” என்று ILO சமீபத்தில் வெளியிட்ட ”தொற்றுநோயால் ஏற்படும் வேலை பாதிப்புகள்” எனும் மதிப்பீட்டு அறிக்கையில் கூறுகின்றது.
தொழிலாளர்களின் வருமான இழப்பு
கீழ் மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் (lower-middle income countries) வாழம் தொழிலாளர்களின் வருமான இழப்பு 15.1% சதவீதத்தை எட்டியள்ளது. இது மிகப்பெரிய வீழ்ச்சி என்று ILO தெரிவித்துள்ளது. அதேபோல் அமெரிக்காவில் 12.1% வருமானம் சரிந்துள்ளது.
2020-ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் உலகளாவிய வேலை நேர இழப்புகள், முன்னர் மதிப்பிடப்பட்டதை விட மிக அதிகம் என்று தெரிவிக்கிறது.
ஒவ்வொரு காலாண்டிலும் நேர்ந்துள்ள வேலை நேர இழப்பு
திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி 2020-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தொழிலாளர்கள் 17.3% வேலை நேரத்தை இழந்துள்ளனர். இது 495 மில்லியன் முழுநேர வேலைகளுக்கு சமமானது.
இதனைத் தொடர்ந்து எதிர் வருகின்ற மூன்றாம் காலாண்டில் 12.1% வேலை நேர இழப்பு ஏற்படும். அது 345 மில்லியன் வேலை இழப்பிற்கு சமமாகும் என்று கணித்துள்ளது.
அதேபோல் நான்காம் காலாண்டில் உலகளாவிய வேலை நேர இழப்புகள் 8.6 சதவீதமாக இருக்கும் என்று தற்போதைய கணக்கீடு தெரிவித்துள்ளது. இது 245 மில்லியன் வேலை இழப்பிற்கு சமமானது. இந்த தர்போதை கணக்கீடு முன்பு ILO செய்த கணக்கீட்டை வீட அதிகம் என்பது குப்பிடதக்கது.
முறைசார தொழில்களில் அதிக பாதிப்பு
வேலைநேர இழப்புகள் அதிகரிப்பதற்கு முக்கியமான காரணம் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் உள்ள தொழிலாளர்கள், குறிப்பாக முறைசாரா வேலைவாய்ப்பில் உள்ளவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதற்கு பொருளாதாரத்தின் செயலற்ற தன்மைதான் காரணம் என்று ILO தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது.
“பல இடங்களில் மூடப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்கள் தளர்வுடன் திறக்கப்பட்டாலும் பெரும்பான்மையான பிராந்தியங்களில் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை. இந்த போக்கு பிராந்தியங்கலுக்கு இடையே வேறுபட்டு உள்ளது.
94 சதவீத தொழிலாளர்கள் இன்னும் ஒருவிதமான கட்டுப்பாடுகளைக் கொண்ட நாடுகளில் உள்ளனர். 32 சதவீதம் பேர் அத்தியாவசிய பணியிடங்களைத் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டுள்ள நாடுகளில் உள்ளனர்”
இந்தியா, பிரேசில், தென்ஆப்ரிக்கா போன்ற பல வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் வருமானம் 15%-க்கும் மேலாக குறைந்துள்ளது. இந்த நாடுகளில் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு முறை மிக பலவீனமானதாக உள்ளது. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பிற்க்கு உள்ளாகும் என்று ILO இயக்குநர் ஜெனரல் கை ரைடர் (Guy Ryder) ஜெனீவாவில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அரசாங்க செலவீனத்தை அதிகரிக்க வேண்டும்
மேலும் அவர் கூறுகையில், ”பணக்கார நாடுகளின் அரசாங்கம் தங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை உட்புகுத்துகின்றனர். ஆனால் ஏழை நாடுகளால் இதைச் செய்ய முடியவில்லை. இதுபோன்ற நிதி தூண்டுதல் இல்லாவிட்டால், தொழிலாளர்களின் வேலை நேர இழப்புகள் எதிர்காலத்தில் 28% சதவீதமாக அதிகரிக்கும்.
இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் வளரும் நாடுகள் 982 பில்லியன் அமெரிக்க டாலர்களை (குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 45 பில்லியன் அமெரிக்க டாலர்களும், குறைந்த நடுத்தர வருமான நாடுகளில் 937 பில்லியன் அமெரிக்க டாலர்களும்) உட்செலுத்த வேண்டும். அப்படி செய்தால்தான் இழந்த வேலை நேரத்தை மீட்டெடுக்க முடியும்”
அதிக வருமானம் கொண்ட நாடுகள் அறிவித்துள்ள நிதி ஊக்கத் தொகைகளின் மொத்த மதிப்பில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவைத்தான் குறைவான வருமானம் கொண்ட நாடுகளால் ஒதுக்க முடிந்துள்ளது. இந்த போக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வளர்ச்சியடையாத நாடுகளை பெரும் சரிவிற்கு இட்டுச்செல்லும். பல வளரும் நாடுகளில் உள்ள சமூகப் பாதுகாப்பு நடைமுறை மேலும் பின்னடைவை சந்திக்கும். குறிப்பாக பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தில் மக்களுக்கான பொது செலவீனங்களை (PUBLIC SPENDINGS) குறைப்பது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
கொரோனவை வெல்வதற்கு இரட்டிப்பு முயற்சிகளை எடுக்க வேண்டும். அதேபோல் வேலைவாய்ப்பு, வருமானம், பொருளாதாரம் இவற்றின் மீது ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்க அவசரகால அளவில் செயல்பட வேண்டும் என்று கை ரைடர் கூறியுள்ளார்.