இன்று பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் 25 கோடி ஊழியர்கள் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, தேச விரோத, அழிவுக் கொள்கைகளை திணிப்பதாகக் கூறி, அதற்கு எதிராக இந்த வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
பங்கேற்றுள்ள தொழிற்சங்கங்கள்
தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (National Trade Union Congress), அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (All India Trade Union Congress), ஹிந்த் மஜ்தூர் சபா(Hind Mazdoor Sabha), இந்திய தொழிற்சங்கங்களின் மையம்(Centre of Indian Trade Unions), அகில இந்திய ஐக்கிய தொழிற்சங்க மையம்(All India United Trade Union Centre), தொழிற்சங்க கூட்டுறவு(Trade Union Co-ordination Centre), மகளிர் சுயதொழில் சங்கம்(Self-Employed Women’s Association ) அகில இந்திய மத்திய தொழிற்சங்கங்கள்(All India Central Council of Trade Unions), தொழிலாளர் முற்போக்கு கூட்டமைப்பு(Labour Progressive Federation) மற்றும் ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ்(United Trade Union Congres) உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், பீடி விற்பனையாளர்கள், வணிகர்கள், விற்பனையாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சுயதொழில் மேற்கொள்பவர்கள், ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள், ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் உட்பட பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கமும் வேலைநிறுத்தத்தில் சேர்ந்திருக்கிறது. சுமார் 4.5 லட்சம் வங்கி ஊழியர்கள் தங்கள் சேவைகளை புறக்கணித்திருக்கிறார்கள்.
“அனைத்து கிராமப்புற வங்கிகள்,12 பொதுத்துறை வங்கிகள், ஒன்பது தனியார் வங்கிகள், ஒன்பது வெளிநாட்டு வங்கிகள் மற்றும் பெரும்பாலான கூட்டுறவு வங்கிகளின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள்” என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்திருந்தார்.
ராஷ்டிரிய சுயம்சேவக் சங் (RSS) இயக்கத்தின் தொழிற்சங்கமான பாரதிய மஜ்தூர் சங்கம்(BMS) மட்டும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.
இந்திய தேசிய திரிணாமுல் தொழிற்சங்க காங்கிரசும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் வேலைநிறுத்தத்தை ஆதரிக்கவில்லை. ஊழியர்கள் தங்கள் சேவைகளைத் தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள்
- தேசிய ஊரக வேலைவாய்ப்பு (MGNREGA) திட்டத்தின் கீழ் ஊதியத்தை உயர்த்தி, ஒரு வருடத்தில் 200 நாட்களுக்கு வேலை வழங்கவேண்டும்.
- மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விவசாயிகள் விரோத வேளாண் சட்டம் மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.
- நிதித்துறை, ரயில்வே, ஆர்டனன்ஸ் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை பெறு நிறுவனங்களுக்கு(corporate) தாரைவார்ப்பதை நிறுத்த வேண்டும்.
- கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள எழை,நடுத்தர மற்றும் நலிவடைந்த குடும்பங்களுக்கு (வருமான வரி செலுத்தும் வரம்புக்குள் வராத அனைத்து குடும்பங்களுக்கும்) மாதத்திற்கு ரூ .7,500 ரொக்கமாகவும், குடும்பத்தில் தலா ஒரு நபருக்கு மாதத்திற்கு 10 கிலோ அளவில் ரேஷன் பொருள்கள் நியாய விலை கடைகள் மூலமாக இலவசமாக வழங்க வழி செய்ய வேண்டும்.
- புதியதாக அமல்படுத்திய தேசிய ஓய்வூதிய முறையை நீக்கி பழைய ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் 1995- ல் மேம்படுத்தும் விதமாக சில மாறுதல்கள் செய்து அமல்படுத்த வேண்டும்.
- வங்கிகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வைத்துள்ள வாராக் கடன்களை அரசு உடனே வசூலிக்க வேண்டும்.
முதன்மைப் படம்: கோப்பு