திருமாவளவன்

முக்கியமான இலக்கை அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் துவங்கிய தினங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பும், திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் இருந்துகொண்டே இருந்தது. அதிக தொகுதிகளை எதிர்பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் என்று முடிவாகியது. 

சொந்த சின்னத்திலேயே போட்டியிட எடுத்த முடிவு

ஆறு தொகுதி என்ற எண்ணிக்கையில் தனக்கு அதிருப்திதான் என்றாலும், சனாதன சக்திகளை விரட்ட வேண்டும் என்பதற்காகவும், மதச்சார்பற்ற சக்திகளின் வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காகவும் இந்த எண்ணிக்கையை ஏற்றுக் கொண்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 

பிறகு உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதுதான் நல்லது என்றும், புதிய சின்னத்தினை 2 வார காலத்திற்குள் மக்களிடம் கொண்டு சேர்ப்பது சிரமம் என்றும் பேச்சுவார்த்தையின் போது கூறப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளைத் தவிர்த்து மற்ற அனைத்து கூட்டணி கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்று முடிவெடுத்த பிறகும் திருமாவளவன் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று உறுதியாகத் தெரிவித்தார். 

இதன் காரணமாக தனிச் சின்னத்துடன் 6 தொகுதிகள் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்டது. அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தினை துவங்கி நடத்திக் கொண்டிருந்த வேளையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியானது சின்னம் இல்லாமலேயே தனது பிரச்சாரத்தினை துவக்கி நடத்திக் கொண்டிருந்தது. 

முதன்முறையாக 4 சட்டமன்ற உறுப்பினர்கள்

ஒருவழியாக இரண்டு வாரத்திற்கு முன்பு பானை சின்னம் விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்டது. திமுக கூட்டணியில் 4 தனித் தொகுதிகளும் இரண்டு பொதுத் தொகுதிகளும் விசிகவிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 2 தனித் தொகுதிகள் மற்றும் 2 பொதுத் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் தனது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. முதல்முறையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு அனுப்புகிறது. 

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

இதுவரை தேர்தல் களங்களில் விடுதலை சிறுத்தைகளின் வரலாறு

  • 1989-ம் ஆண்டு தலித் சிறுத்தைகள் இயக்கத்தின் தமிழகப் பிரிவுத் தலைவராக இருந்த மலைச்சாமி இறந்ததும் அந்த அமைப்பின் தலைவரானார் திருமாவளவன். பின்னர் 1990-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி அந்த அமைப்பிற்கு விடுதலை சிறுத்தைகள் என பெயர் மாற்றினார். 
  • ஆரம்ப காலங்களில் தொடர்ந்து தேர்தல் அரசியலை புறக்கணித்து வந்த அவர், 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முதலாக களமிறங்கினார். அப்போது ஜி.கே.மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது விடுதலை சிறுத்தைகள் கட்சி. சிதம்பரத்தில் இரண்டே கால் லட்சம் வாக்குகளும், பெரம்பலூரில் ஒரு லட்சம் வாக்குகளும் பெற்றது.
  • 2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்தது. அப்போது தமிழ்நாட்டில் 8 தொகுதிகளிலும், புதுச்சேரியில் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டது. அப்போது கடலூர் மாவட்டத்தின் மங்களூர் (தனி) தொகுதியில் திருமாவளவன் மட்டும் வெற்றி பெற்றார். திருமாவளவன் உதயசூரியன் சின்னத்தில் நின்று அவ்வெற்றியைப் பெற்றிருந்தார். 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு தொகுதி எதுவும் ஒதுக்கப்படாததால் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கூட்டணியை விட்டு வெளியேறினார். 
  • 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். அப்போது அதிமுக கூட்டணியில் அவருக்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் மங்களூர் (தனி) மற்றும் காட்டுமன்னார்கோவில் (தனி) ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் விடுதலை சிறுத்தைகள் வெற்றி பெற்றது.
  • அதன்பிறகு 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு சிதம்பரம் (தனி) தொகுதியில் திருமாவளவன் வென்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 10 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டது. அதில் வெற்றி எதுவும் பெற இயலவில்லை. 
  • 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் 25 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டது. அதிலும் வெற்றி எதுவும் பெற இயலவில்லை. திருமாவளவன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 
  • பின்னர் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இரண்டு நாடாளுமன்ற தனித் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.
  • 2006 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு சட்டமன்றத்தில் இடம் இல்லாமல் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த தேர்தலில் நான்கு தொகுதிகளில் முதன்முறையாக வெற்றி பெற்றுள்ளது. அதிலும் மிகக் குறிப்பாக திருப்போரூர், நாகப்பட்டினம் ஆகிய இரண்டு பொதுத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

பொதுத் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. அதுவும் இந்த வெற்றியினை தனது சொந்த சின்னத்தில் நின்று பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமானதாக பார்க்கப்படும் பொதுத்தொகுதிகள் வெற்றி

இரண்டு பொதுத்தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் பெற்றுள்ள வெற்றியானது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியாக சாதி அடையாளம் குத்தி புறக்கணிப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து இரண்டு பொதுத்தொகுதி வேட்பாளர்கள் சட்டமன்றம் செல்கிறார்கள். இதற்காக அரசியல் விமர்சகர்கள், முற்போக்கு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் எனப் பலரும் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். 

தலித் கட்சிகள் தனியாக இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தபோது, அனைவரையும் ஜனநாயகப்படுத்தி மையநீரோட்டத்தோடு இணைவது தான் சமூக விடுதலை அரசியலாக இருக்க முடியும், தனித்து சாதியாக ஒருங்கிணைவது தலித்துகளை மேலும் தனிமைப்படுத்தவே செய்யும் என்று குறிப்பிட்டு தொடர்ந்து அந்த ஆலோசனைகளை மறுத்து வந்தார் திருமாவளவன். அனைவரையும் ஜனநாயகப்படுத்துதல், மையநீரோட்டத்தோடு போராடி கலத்தல் என்று திருமாவளவன் தொடர்ந்து குறிப்பிட்டு வந்த இலக்குகளின் முக்கியமான நகர்வாக இந்த வெற்றி அமைந்திருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *