தாழப் பறந்திடும் மேகம் – 2 தொடரின் முதல் மூன்று பாகங்களை கீழே உள்ள இணைப்புகளில் படிக்கவும்.
தாழப் பறந்திடும் மேகம் -2 (பாகம் 1) அணுக்கழிவு -ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து.
தாழப் பறந்திடும் மேகம் -2 (பாகம் 2) அணுக்கழிவு – ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து.
தாழப் பறந்திடும் மேகம் -2 (பாகம் 3) அணுக்கழிவு – ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து
பிரான்சின் அணுக்கழிவு கையாளும் நிறுவனமான ஆண்ட்ராவின் போட்டியில் நுழைந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், பாரிஸில் வசிக்கும் பெல்ஜிய-இத்தாலியக் கலைஞரான ‘ரோசெல்லா சிசிலி’ ( Rossella Cecili) மற்றும் இத்தாலிய இசையமைப்பாளர் ‘வாலண்டினா கியா’ (Valentina Gaia). இவர்கள் பிரெஞ்சு நாட்டில் அணுக்கழிவுகள் எங்கு புதைக்கப்படுகின்றன என்பதைப் பற்றிய கதையைச் சொல்லும் குழந்தைகளின் பாடலுடன் வந்தனர். இந்த பாடல்கள், குழந்தைகளின் பெற்றோர் கவனித்துக் கேட்கவும், அந்த பாடல்கள்மேல் பெரியவர்கள் நம்பிக்கை கொள்ளவும் வலியுறுத்துகின்ற குழந்தை பாடல்கள்.
என்றென்றும் வாழக் கூடிய பாடல் கலாச்சாரம்
இந்த பாடல்கள் குழந்தைகளுக்கு ஏற்றவாறும் அதேசமயம் அவை உயிர் காக்கும் தகவல்களையும் கொண்டுள்ளன. இதைப்பற்றி குறிப்பிடும்போது நம் குழந்தைகள் இப்போது பாடிக்கொண்டிருக்கும் பல பாடல்களுக்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளின் வரலாறு இருக்கின்றது. எங்களுடைய பாடல்களின் மூலம் அந்த தளம் எங்கிருக்கிறது அதன்கீழே புதைக்கப்பட்டவை எப்படிப்பட்டவை என்பதைப் பற்றி கூறுகிறோம். ஒரு காலத்தில் அங்குள்ள கான்கிரீட் போன்ற பாதுகாப்பு அமைப்புகள் எல்லாம் அரிக்கப்பட்டு அழிந்துவிடக்கூடும். ஆனால் இந்த பாடல்கள் அந்த தளத்தைப் பற்றியும் அதன் ஆபத்துகளை பற்றியும் தொடர்ந்து எடுத்துச்செல்லும். இந்த பாடல் போன்ற கலாச்சாரம் என்றென்றும் வாழக்கூடும் என்கிறார் சிசிலி.
இப்போது எழுந்திருக்கும் கேள்விகளுக்கு இப்படிப்பட்ட பாடல்களும் கதைகளும் முக்கியமான விடைகளாக இருக்கக்கூடும் என்று வேதியியலாளரும் கோவ்ராவின் முன்னாள் இயக்குநருமான ‘ஹான்ஸ் கோடீ’ ( Hans Codée, a chemist and the former director of COVRA) ஒப்புக்கொள்கிறார். “கதைசொல்லல் என்பது எதிர்காலத்திற்கு தகவல்களை அனுப்பும் ஒரு பழங்கால மற்றும் சக்திவாய்ந்த ஊடகமாகவே இருக்கின்றது” என்று அவர் சமீபத்திய ஆய்வுக் கட்டுரையில் எழுதுகிறார். “இன்றும், தி இலியாட் (The Iliad) மற்றும் தி ஒடிஸி (The Odyssey) ஆகிய படைப்புகளை ரசிக்கிறோம். அந்த படைப்புகள் கி.மு1200 (1200BC) காலங்களில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி சொல்கிறது: அதாவது அவை சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
“கலை எப்போதும் நீண்ட காலம் நீடிக்கும்: இன்றும் உலகின் மிகப் பழமையான வரைபடங்களை, ஓவியங்களை தெற்கு பிரான்சில் காணலாம். இதன்மூலம் ஒரு கதையை சொல்லும் சில விலங்குகளின் வரைபடங்கள் 30,000 முதல் 32,000 ஆண்டுகள் வரை பழமையானவை. “ஒரு கதையைச் சொல்லும் ஓவியங்களும் சிற்பங்களும் அழகுக்கான ஒரு பொருளாக கருதப்படும்போது, அவற்றை என்றென்றும் பாதுகாத்து வைத்திருக்க நம்மிடம் காரணம் இருக்கிறது.” என்கிறார்.
மரபணு மாற்றப்பட்ட நிறம் மாறிய தாவரங்களை நடுதல்
ஆண்ட்ரா போட்டியில் நுழைந்த மற்றொரு பிரெஞ்சு கலைஞரான ‘ஸ்டெஃபேன் பெர்ராட்’ (Stéfane Perraud) ஒரு வினோதமான உயிரியல் தீர்வைக் கொண்டு வந்தார். அவரது கருத்தின்படி முற்றிலும் நீல நிறமாக மாறிய மரபணு மாற்றப்பட்ட தாவரங்கள் மற்றும் மரங்களை வளர்த்து அணுக்கழிவு புதைக்கப்பட்ட நிலப்பகுதியை நிரப்புவதே அவரது திட்டம். இதன்படி குறிப்பிட்ட நிலப்பரப்பில் இந்த நிறம் மிகவும் விசித்திரமாகத் தோன்றும் என்று அவர் நம்புகிறார். எனவே இது எதிர்கால மனிதர்களால் ஒரு விசித்திரமான இடமாகக் கருதப்பட்டு எச்சரிக்கையாகவே அந்த இடத்தை அணுகத் தோன்றும். பின் அவர்கள் அந்தப் பகுதியின் வரலாற்றை ஆராயத் தொடங்குவதன் மூலம் கீழே அணுசக்திப் பொருட்கள் புதைந்து இருப்பதை கண்டறிந்து கொள்வார்கள் என்கிறார். இதன்மூலம் ஒரு வரலாற்றை நாமாக சொல்வதைவிட அவர்கள் கண்டறிவது என்பது இன்னும் சிறப்பானதாக இருக்கக்கூடும் என்கிறார்.
அணு குறித்தான நாட்டுப்புற பொருட்கள்
இங்கிலாந்தில், அமெரிக்கக் கலைஞரான ‘பிரையன் மெக்கவர்ன் வில்சன்’ (Bryan McGovern Wilson) மற்றும் வடக்கு இங்கிலாந்தின் கும்ப்ரியா பல்கலைக்கழகத்தின் (University of Cumbria) நுண்கலை பேராசிரியர்’ ராபர்ட் வில்லியம்ஸ்’ (Robert Williams) ஆகியோர் கும்ப்ரியா மற்றும் வடக்கு லங்காஷயரின் அணுசக்தித் தொழில்களுக்கும் மற்றும் அங்கிருக்கும் உள்ளூர் நிலப்பரப்புக்கும் இடையிலான உறவை ஆராய்ந்து வருகின்றனர். அணுசக்தி தளங்களைச் சுற்றி வாய்வழி பாரம்பரியத்தை உருவாக்க விரும்பி அதையொட்டிய கதைகள், உடைகள், பொருட்கள் மற்றும் சடங்குகள் ஆகியவை அடங்கிய “அணு நாட்டுப்புறப் பொருட்கள்” (Atomic folk objects) என்ற ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குவதில் முனைந்தனர் . அப்படி ஒன்றை வெற்றிகரமாக உருவாக்க முடிந்தால் அவை உள்ளூர் பாரம்பரியமாக மாறி அங்கிருக்கும் மக்களால் தலைமுறை தலைமுறையாக கடத்திச் செல்லப்படும். எனவே அவை ஒருபோதும் மறக்கப்படாது என்கிற கருத்தை அவர்கள் முன்வைத்தார்கள்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பூனைகள்
அணுக்கழிவு தளங்களில் நினைவக கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான சில யோசனைகள் மிகவும் மனம் கவர்ந்தன. 1980களில் இருந்த ஆரம்ப திட்டங்களில் ஒன்றான தத்துவஞானிகளான ‘பிரான்சுவா பாஸ்டைட்’ (Françoise Bastide) மற்றும் ‘பாவ்லோ ஃபேப்ரி’ (Paolo Fabbri) ஆகியோர் கதிர்வீச்சுக்கு அருகாமையில் சென்றால் ஒளிரக்கூடிய மரபணு ரீதியாக மாற்றம் செய்யப்பட்ட பூனைகளை உருவாக்கும் “ரே கேட்”(Ray cat) என்ற கருத்தை கொண்டுவந்தனர். உலகெங்கிலும் பல இடங்களில் நிலவும் பூனைகளை வணங்கும் கலாச்சாரத்தில் உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்றால் பூனைகள் தங்களது நிறத்தை மாற்றுவது ஆபத்தைக் குறிப்பதாக அவர்கள் அனைவருமே கருதுவதாகும். இதன்படி பூனைகள் கதிரியக்கம் உள்ள இடங்களுக்கு செல்லுமாயின் அவை ஒளிரக்கூடும். இதனால் மனிதர்கள் ஆபத்தான இடமொன்று அங்கிருப்பதை தங்கள் கருத்துப்படி உணர்வார்கள். இத்தாலியில் உள்ள அர்பினோ பல்கலைக்கழகத்தில் (Urbino University) இருக்கும் குறியீடுகள் மூலம் கருத்தை உணர்த்தும் ஒரு துறையான ‘செமியோடிக்ஸ்’ துறையின் பேராசிரியரான ‘ஃபேப்ரி’ (Fabbri, Professor of semiotics) கூறுகையில், “மனிதர்களுக்கு என்றென்றும் முக்கியமாக விளங்கக்கூடிய ஒரு ஊடகத்தைக் கண்டுபிடிக்க நாங்கள் விரும்பினோம். சின்னங்கள், மொழி, எல்லாம் காலப்போக்கில் மாறக்கூடும், ஆனால் பூனைகள் எப்போதும் எல்லா வரலாற்றிலும் முக்கியமானதாக இருந்திருக்கின்றன. வருங்கால மனிதர்களுக்கும் அவை முக்கியமானதாக இருக்கக்கூடும் என்று ஒரு நியாயமான யூகத்தை நாம் செய்ய முடியும்” என்று அவர் கூறுகிறார். இது ஒரு “சிந்தனை பரிசோதனை” என்றும் நடைமுறையில் உறுதியாக நடக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார்.
அருங்காட்சியகங்கள்
அணுசக்தி அதிகாரிகளைப் பொறுத்தவரை, சமூக ஈடுபாட்டை உருவாக்குவதற்கான எளிய மற்றும் மிகவும் செலவு குறைந்த வழிகள் பெரும்பாலும் மிகவும் இன்றியமையாதது. அருங்காட்சியகங்கள் என்பவை மிகவும் பிரபலமான யோசனைகளில் ஒன்றாகும். WIPP இன் ‘வான் லூயிக்’ (Van Luik) கூறுகையில், ஒரு கட்டிடக் கலைஞர் பாலைவனத்தில் உள்ள அமெரிக்க அணுக்கழிவு சேகரிப்புத் தளத்தில் ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்க விரும்பினால் அது ஒரு சுற்றுலா அம்சமாக மாறும். இந்த யோசனை தளத்தின் நினைவகத்தை பல தலைமுறைகளுக்கு அந்த செய்தியை உயிரோடு வைத்திருக்கும்.
ஆனால் முக்கிய அம்சம் என்னவென்றால், அவரைப் போன்ற அதிகாரிகள் உள்ளூர் சமூக ஈடுபாடு அவசியம் என்ற கருத்தைச் சுற்றிச்சுற்றி வருகிறார்கள் மேலும் அங்கு வசிக்கப்போகும் எதிர்கால மனிதர்கள் கழிவுப்பொருட்களுக்கு தங்கள் சொந்தப் பொறுப்பை ஏற்க ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகின்றனர். அந்த கருத்து உண்மையாகவே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் எதிர்காலத்தில் யாராவது அங்கு எண்ணெய் தோண்ட விரும்பினால் அந்த இடத்தை பற்றிய அனைத்து நாகரிகமும் சரிந்துவிட்டால் உள்ளூர் சமூகமே அவர்களை எச்சரிக்க ஒரு வாய்ப்பாக இது இருக்கும்.
அதேபோல நாங்கள் விண்வெளியிலும் ஒரு நினைவகம் அமைப்பதை பற்றி எண்ணவேண்டும், எப்படியாயினும் அங்கே இருப்பதைப் பற்றிய ஒரு வாழ்க்கை நினைவகம் அங்கேயே இருக்க வேண்டும் அப்படி உருவாக்க முடிந்தால் தான் அது நீண்ட காலத்திற்கு தொடரலாம். ”என்கிறார் .
மனிதன் எதையும் அதன்போக்கில் விட்டதில்லை
மேலே கூறியிருக்கும் ஏதேனும் ஒரு முயற்சி வெற்றியடைந்தாலும் பிரான்ஸ் நாட்டில் அணுக்கழிவு சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு நிலையம் அமைந்துள்ள அமைதியான ‘ப்யூர்’ (BURE, France) நகரில் வசிக்கும் 82 உள்ளூர் மக்கள் இந்த மிகப்பெரும் பிரச்சினைக்கு ஏதாவது ஒரு விடையைப் பெறக்கூடும். அங்கு அமைந்திருக்கும் நீடித்த கான்கிரீட் அடுக்குகளை விட நீடித்த ஒரு வாய்வழி வரலாற்றை அவர்களால் உருவாக்க முடியும். 20 ஆண்டுகளாக ஆண்ட்ரா (Andra) தளத்திற்கு அருகிலுள்ள இப்பகுதியில் ஒரு ஓட்டலில் பணிபுரியும் மிரில்லே (Mireille) இந்த கருத்தை பற்றி சற்று கவலைப்படுகிறார்.
“நான் இதைப் பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை ஆனால் நான் அதைப் பற்றி என் குழந்தைகளுக்குச் சொல்வேன் என்று நினைக்கிறேன். ஆனால் என் குழந்தைகள் வாழ்க்கை முழுவதும் எங்களையும் இந்த இடத்தையும் நம்பியிருக்க முடியுமா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. நாங்கள் இங்கிருந்து விலகிச் செல்லலாம் அல்லது விலகியிருக்கும்படியான ஏதாவது வேறொரு சூழ்நிலைக்கூட உருவாகலாம் ஏனெனில் உங்களுக்குத் தெரியும் வாழ்க்கை இப்படிப்பட்ட சூழலில் என்றும் நிலையானதல்ல ” என்கிறார்.
‘ப்யூர்’ நகரின் மையத்தில் ‘மைசன் டி லா ரெசிஸ்டன்ஸ்’ (Maison de la Résistance) என்ற குடியிருப்பு உள்ளது. இந்த இடம் எப்போதும் அணுசக்தி எதிர்ப்பு பதாகைகள் மற்றும் குறியீடுகளால் சூழப்பட்டிருக்கும். அங்கு பத்திரிகையாளர் ஒருவர் சென்றபோது அவருக்கு சுவையான காபி மற்றும் உள்ளூர் ஒயின் வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டார். அங்கு நகரின் குடியிருப்பாளர்கள் அணுக்கழிவு தளத்திற்கு எதிராக, ஒரு வாழ்க்கை முறையாக, அறவழி பிரச்சாரத்தில் இருக்கின்றனர்.
அங்கிருக்கும் மைக்கேல் என்பவர் பாறை புவியியலை பற்றியும் மற்றும் விரும்பத்தகாத சூழல் ஏற்பட்டால் கதிர்வீச்சு எவ்வாறு வெளியேறும் என்பது பற்றியும் விளக்கத்தைத் தொடங்குகிறார். இது அங்கிருக்கும் அணுசக்தி எதிர்ப்பு சுற்றுச்சூழல் குழுக்களின் முக்கிய போராட்ட வழிமுறைகளில் ஒன்றாகும். அங்கிருக்கும் பெண்களில் ஒருவரான மைக்கேல் அடர்த்தியான கருப்பு காபியை ஊற்றி பருகிக்கொண்டே எதிர்கால தலைமுறையினர் அணுக்கழிவுகளை மீண்டும் தவறுதலாக தோண்டி எடுக்க 100% சதவிகிதம் வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறார். மனிதன் எப்போது எதை அதன் இயல்பிலேயே இருப்பதற்கு விட்டுவிட்டான்? என்று அர்த்தமுள்ள கேள்விகளைக் கேட்டு தங்கள் பிரச்சாரத்தை தொடர்கின்றனர்.
உள்ளூர் சமூகம் என்றென்றும் நினைவு கொள்ள வேண்டும்
‘ஆண்ட்ரா’ நிறுவனத்தில் பணிபுரியும் பல அதிகாரிகள் ‘மைசன் டி லா ரெசிஸ்டன்ஸ்’ குடியிருப்பு பற்றி எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் அங்கிருக்கும் அதிகாரிகளே அந்த போராட்டக்கார்களின் கோபத்திற்கு இலக்காக இருக்கின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் இதுபற்றி மகிழ்ச்சியடைய வேண்டும் ஏனெனில்அந்த போராட்டக்காரர்கள் உள்ளூர் கலாச்சாரத்தின் மற்றொரு முகம். அதேசமயத்தில் அவர்களின் நீடித்த அறவழி பிரச்சாரத்தின் மூலம் அவர்கள் தங்களையறியாமலேயே இந்த இடத்தின் அபாயத்தை பற்றி அங்கு வருபவர்களுக்கு சொல்வதன் மூலம் புதிய வாய்மொழி வரலாற்றை உருவாக்குகின்றனர். இது கிட்டத்தட்ட அதிகாரிகள் உருவாக்கவிரும்பும் கலாச்சாரத்தின் மற்றொரு முகம்.
அவர்கள் மேற்கொள்ளும் பிரச்சாரங்கள் இந்த தளம் என்றென்றும் மறக்கப்படாமலிருக்க அதிக வாய்ப்பை அளிக்கிறது. சார்டன் “எங்களுக்கு இதை பற்றி பரப்புவதற்கு, நாங்கள் சொல்ல விரும்பும் கருத்தை ஆண்டாண்டு காலம் நிலை நிறுத்துவதற்கு எல்லா வழிமுறைகளும் தேவைப்படுகிறது. மேலும் உலகெங்கும் அணுக்கழிவு ஆபத்தைப் பற்றிய குறியீடுகள், துண்டுப்பிரசுரங்கள் போன்றவை விநியோகிக்கப்படுகின்றன. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக உள்ளூர் சமூகம் அவற்றை என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும். அதுவும் திட்டத்தின் இன்றியமையாத ஒரு பகுதி” என்கிறார்.
இந்தக்கணத்தில் இந்த கேள்விக்கு பதில் தெரிந்தவர்கள் யாரும் இல்லை இந்தப் பூமியில்
உன்மையில் அதிகாரிகள் அவர்களை நம்பியிருக்கவே வேண்டும். இல்லையெனில் அங்கு அமையவிருக்கும் நினைவகமானது எதிர்வரக்கூடிய 100,000 ஆண்டுகால புவி வெப்பமாதல், போர்கள் மற்றும் தொற்று நோய்களைத் தாண்டி நிலைத்துநிற்கும் என்பதற்கு எந்தவித உத்திரவாதங்களும் இல்லை. “உண்மையில் எதிர்காலத்தில் வரும் காலமாற்றத்தில் இந்த தளம் மறக்கப்பட்டுவிடும். இந்த தளம் மீண்டும் தோண்டப்பட்டால் இந்த பகுதி முழுவதும் உயிர்கள் வசிக்காத அளவிற்கு கொடும்நஞ்சாக மாறக்கூடும் . இது நம் நிகழ்கால கலாச்சாரம் எதிர்காலத்திற்காக விட்டுச்செல்லும் அருமையான பரிசு, இல்லையா? உலகெங்கும் போராட்டக்காரர்கள் கேட்கின்ற இறுதி கேள்வி இதுதான். இப்போது நீங்கள் இதைப்படிக்கும் இந்தக்கணத்தில் இந்த கேள்விக்கு பதில் தெரிந்தவர்கள் யாரும் இல்லை இந்தப்பூமியில்.
“நம் மனதின் படைப்புகள் மக்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்க வேண்டுமே தவிர அது ஒருபோதும் மனிதகுலத்திற்கு சாபமாக இருக்கக்கூடாது. உங்கள் வரைபடங்கள் மற்றும் சமன்பாடுகளுக்கு மத்தியில் இதை ஒருபோதும் மறக்க வேண்டாம்.”
– ஆல்பிரெட் ஐன்ஸ்டீன்.
முற்றும்
– அருண்குமார் தங்கராஜ், Madras Review