மு.வரதராசனார்

உடலிலே சக்தி இருக்கும்வரை எழுதிக்கொண்டே இருப்பேன் என வாழ்ந்த மு.வரதராசனார்

மு.வரதராசனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals

”என்னுடைய வாழ்க்கையின் கடைசி மூச்சு உள்ளவரை நான் ஓய்வு பெற முடியாது. ஓய்வு பெற விரும்பாத ஒரு துறை உள்ளது. அதுதான் எழுத்துத்துறை. அது என்னுடைய உயிருடன் கலந்துவிட்ட ஒன்று. என் உடலிலே சக்தி இருக்கும் வரை எழுதிக்கொண்டே இருப்பேன். எழுத முடியாத ஒரு நிலை வந்தால், மற்றவர்களை எழுதச் சொல்லி நான் கூறிக் கொண்டே இருப்பேன்”  என்று கூறி கடைசிவரை அப்படியே வாழ்ந்தவர் தமிழறிஞர்  மு.வரதராசனார்.

மு.வரதராசனார் வட ஆற்காடு மாவட்டத்தில் திருப்பத்தூரில் முனுசாமி அம்மாக்கண்ணு  தம்பதிக்கு மகனாக 1912-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் நாள் மகனாகப் பிறந்தார். திருவேங்கடம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் பின்னாளில் தாத்தாவின் பெயரான வரதராசன் என்பதை தனக்கு சூட்டிக் கொண்டார்.

திருப்பத்துரில் ஆரம்பக் கல்வி படித்தவர், 1931-ல் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் தாமே பயின்று 1935-ல் வித்வான் தேர்வு எழுதி, அதில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.

இவரது திருமணத்திற்குப் பிறகு 1935 முதல் 1938 வரை திருப்பத்தூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1939-ல் பி.ஓ.எல் தேர்ச்சி பெற்றபின் அதே  ஆண்டில் பச்சையப்பன் கல்லூரி விரிவுரையாளர் பணி நிமித்தம் சென்னைக்கு வந்த மு.வ அக்கல்லூரியின் “கீழ்த்திசை மொழிகளின் விரிவுரையாளர்” என்ற பொறுப்பை ஏற்றார். 1944-ல் “தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற தலைப்பில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார்

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். 1948-ல் சென்னை பல்கலைக்கழகத்தின் மூலம் “சங்க இலக்கியத்தில் இயற்கை” என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னை பல்கலைக்கழகத்தின் மூலம் முதன்முதலாக தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் மு.வ என்பது குறிப்பிடத்தக்கது.

1939-ல் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த மு.வ 1961 வரை அங்கு பணியாற்றினார். 1945-ல் அக்கல்லூரியின் தமிழ்த் துறை தலைவர் ஆனார். இடையே 1948-ம் ஆண்டில் மட்டும், தனது முனைவர் பட்டப் படிப்பின் ஒரு பகுதியாக சென்னை பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியராகப் பணியாற்றினார். 1961 முதல் 1971 வரை சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவராகப் பணியாற்றினார்.

அதே ஆண்டு  மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணை வேந்தராகப் பதவியேற்றார். மதுரை பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வித்துறையை முதன்முதலில் தோற்றுவித்தவர் இவரே! கல்லூரியில் சேர்ந்து பயில வாய்ப்பில்லாத பலர், பல துறைக்கல்வி கற்று வாழ்வில் உயர உதவினார். பாலைவனம் போல் காட்சியளித்த பல்கலைக்கழகச் சூழலை மரங்களை நடச் செய்து பசுஞ்சோலையாக மாற்றினார்.

1972-ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள வூஸ்டர் பல்கலைக்கழகம் இவருக்கு இலக்கியப் பேரறிஞர்(D.Litt) என்ற பட்டத்தை அளித்து கௌரவித்தது.

சாகித்ய அகாதமி, பாரதிய ஞானபீடம், தேசிய புத்தகக் குழு, இந்திய மொழிக் குழு, சென்னை பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம்-தமிழ் அகராதிக் குழு, நாட்டுப்புறப் பாடல்களும் நடனங்களும் பற்றிய குழு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக்குழு, ஆந்திரப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு, தமிழ்நாடு புத்தக வெளியீட்டுக் கழகம், ஆட்சிமொழிக்குழு, ஆட்சி மொழி சட்டக்குழு, தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ்க்கலை மன்றம், தமிழிசை சங்கம், மாநில வரலாற்றுக் கழகம், தமிழ் கலைக் களஞ்சியம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் தனது அறிவுப்பணியை சமூகத்திற்குச் செய்தார்.

கள்ளோ காவியமோ, கரித்துண்டு, பெற்ற மனம் உள்ளிட்ட 12  நாவல்கள்,   விடுதலையா?, குறட்டை ஒலி என இரண்டு சிறுகதைத் தொகுதிகள், மேலும் சிறுவர் இலக்கியம், நாடகங்கள், இலக்கணம், அறமும் அரசியலும, அரசியல் அலைகள், கட்டுரைத் தொகுப்புகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரை, முன்னுரைகள், மொழிபெயர்ப்பு, மேற்கோள்கள் என 91 நூல்களை தமிழுக்குத் தந்துள்ளார். மு.வ பற்றிய வரலாற்று ஆய்வு நூல்களாக இதுவரை பன்னிரெண்டு நூல்கள் வெளிவந்துள்ளது.

1949-ம் ஆண்டு ‘திருக்குறள் தெளிவுரை’ என்னும் உரைநூலை எழுதினார். அது கையடக்கப் பதிப்பாக சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் வெளியிடப்பெற்றது. ‘திருக்குறள் தெளிவுரை’ என்னும் அந்நூல் 1999 வரை 490 பதிப்புகளைக் கண்டுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் பல இலட்சம் மக்களால் வாங்கி கற்கப் பெறும் உரைநூல் இது ஒன்றே ஆகும்.

சென்னையில் 1962-ம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழர் மாநாட்டில், ‘சங்க இலக்கியம்’ பற்றி மு.வ. எழுச்சியூட்டும் சொற்பொழிவை நிகழ்த்தினார். உலகப் பேரறிஞர்கள் உவந்து பாராட்டினார்கள். தலைமை தாங்கிய இலங்கை அமைச்சர் நடேசபிள்ளை, இலக்கியத்துக்குரிய நோபல் பரிசைத் தமிழகத்தில் பெறத் தகுதி வாய்ந்தவர் அறிஞர் மு.வ. என்று தம் உரையில் பாராட்டினார். 

மு.வரதராசனாருக்கு அகல் விளக்கு’ என்னும் புதினத்திற்காக 1961-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமியின் இலக்கிய விருதினை தில்லியில் குடியரசுத் தலைவர் வழங்கிப் பாராட்டினார்

தமிழ்த் தென்றல்’ திரு.வி.கவினால் ”தமிழ் பெர்னாட்ஷா” என பாராட்டப்பட்ட  

டாக்டர் மு.வரதராசனார் 1974-ம் வருடம் அக்டோபர் மாதம் 10-ம் தேதி காலமானார்.

மு.வ நினைவு நாள் இன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *