தொ.பரமசிவன்

தமிழ் பண்பாட்டின் பொக்கிஷம் தொ.பரமசிவன் – அரசியல் தலைவர்களின் இரங்கல் செய்தி

1. தமிழ் ஆராய்ச்சி அறிஞர் பேராசிரியர் தொ.பரமசிவம் அவர்களுக்கு நமது வீரவணக்கம்! – கி.வீரமணி

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற மேனாள் தமிழ் துறைத் தலைவரும், சீரிய தமிழாராய்ச்சி அறிஞருமான மானமிகு தொ.ப என்று அழைக்கப்படும் பேராசிரியர் தொ.பரமசிவம் அவர்கள்* 24.12.2020 இரவு 7.30 மணியளவில் காலமானார் (வயது 70) என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனையும் துன்பமும் அடைகிறோம்.

சிறந்த பெரியாரிய சிந்தனையாளர். மாணவப் பருவந்தொட்டே திராவிட இயக்கப் பற்றாளர். காரைக்குடியில் தந்தை பெரியாரை அழைத்து 1970-களில் திராவிட மாணவர் முன்னேற்றக் கழக நிகழ்ச்சியை நடத்தியவர்களுள் ஒருவர். பல வகை நூல்களை புத்தாக்கச் சிந்தனையோடு எழுதி, செம்மொழித் தமிழுக்கும் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கும் ஒப்பற்ற இலக்கியத் தொண்டு புரிந்த மாமேதை ஆவார் பேராசிரியர் தொ.ப. அவர்கள்.

சில காலமாகவே அவர் உடல்நலம் குன்றி வீட்டிலேயே இருந்துவந்தவர் மறைவு என்பது அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல திராவிட சமுதாயத்திற்கும் தமிழ் இலக்கிய உலகத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். நம்மிடம் அன்பு கொண்டவர்.

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவருக்கு அருகில் இருந்து உதவிய நண்பர் குழுவினருக்கும் நமது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அந்தோ ஒப்பற்ற ஒரு சிறந்த ஆய்வாளரைத் தமிழ் உலகம் இழந்து தவிக்கிறதே!

*நமது வீரவணக்கம் அந்த மாமேதைக்கு!*

2. தந்தை பெரியார் நினைவு நாளில் தொ.ப அவர்களும் மறைவெய்தியுள்ளார்; ஆழ்ந்த இரங்கல்கள் – மு.க.ஸ்டாலின்

3. பண்பாட்டுப் பேரறிஞர் தொ.பரமசிவன் மறைவு தமிழினத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு! – வைகோ 

தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து தமிழின, மொழி, பண்பாடு, மரபுகளைக் காப்பாற்றுவதற்கு ஆய்வுத் துறையில் வெளிச்சம் பாய்ச்சிய ஒளிச்சுடர் அணைந்தது.

தமிழர் வாழ்வியலில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சிறப்புற்று விளங்கிய பண்பாட்டு மரபுகளை அசைக்கமுடியாத அழுத்தமான ஆவணங்கள் மூலம் ஆய்வு நூல்களை படைத்த பண்பாட்டுப் பேரறிஞர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாக தாக்கியிருக்கிறது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கால் நூற்றாண்டு காலம் தமிழியல் துறை தலைவராக பணியாற்றியவர்.

பேராசிரியர், முனைவர் தொ.ப அவர்கள் பேராசிரியர் மு.ராகவையங்கார், மயிலை சீனி வேங்கடசாமி நாட்டார், பேராசிரியர் நா.வானமாமலை ஆகியோரை முன்னோடியாக அவர் கருதினாலும் தமிழ் இலக்கியத்தையும், பண்பாட்டையும் ஆராய்ச்சி செய்வதற்கு புதிய முறையைப் பின்பற்றி முத்திரை பதித்தவர் ஆவார்.

தொ.ப .அவர்களின் ‘அழகர் கோவில் ஆய்வு’ நூல் ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

புத்தகங்களில் இருந்தும், தத்துவங்களில் இருந்தும் வாதங்களை முன்வைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட சூழலில், தமிழ்நாட்டுத் தெருக்களில், கோவில் வாசல்களில், ஆற்றங்கரைகளில், திருவிழாக்களில், நாட்டார் தெய்வங்களின் முற்றங்களில் கள ஆய்வு செய்து, ஆய்வு உலகில் அதிர்வுகளை ஏற்படுத்தினார்.

அறியப்படாத தமிழகம், தெய்வங்களும் சமூக மரபுகளும், சமயங்களின் அரசியல், விடுபூக்கள், பண்பாட்டு அசைவுகள், போன்ற ஆய்வு நூல்கள் தமிழ் இலக்கிய உலகத்திற்கு அவர் அளித்த கொடையாகும். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளில் தோய்ந்து முன்னோடியாக திகழ்ந்தவர்.

மேலும் அவரது சங்க இலக்கிய ஆய்வுகளில் எடுத்துக்கொண்ட ஆய்வுப் பொருள் என்பதோடு மட்டுமின்றி, அதன்மீது எழுப்பப்படும் ஆய்வுக் கேள்விகள், பயன்படுத்தும் சான்றுகள் ஆகியவற்றிலும் தமிழியல் ஆய்வுக்கான புதிய களங்களை உருவாக்கின.

திராவிட இயக்கத்தின் மீது தீராத பற்றுக் கொண்ட தொ.ப., தந்தை பெரியார் சிந்தனைகள், கொள்கைகள் , தமிழினத்தின் விடியலுக்கு எல்லா காலத்திற்கும் தேவைப்படுகின்றன என்பதை இறுதி மூச்சு அடங்கும் வரையில் சொல்லிக்கொண்டே இருந்தார்.

பார்ப்பனியம் விழுங்கி  செரிக்க முடியாத தந்தை பெரியார் கலக மரபு சிந்தனையாளர் என்று மிகச்சரியாகக் கணித்தவர் தொ.ப. அவர்கள்.

இந்துத்துவ சனாதன சக்திகள் நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைக்க முனைந்துள்ள சூழலில் மதச்சார்பற்ற சக்திகளின் போராட்டத்திற்கு கருத்து வளம் சேர்த்தவர் தொ.ப.

“மதத்தின் பெயரால் ஏற்படும் பதற்றங்கள், ரத்தக் களறிகள், பிறவகை வன்முறைகள், அனைத்திலும் இந்து என்ற கருத்தியலே மையமாகத் திகழ்கிறது. எனவே பெரியாரியப் பார்வையில் இந்து என்ற சொல்லுக்கு அரசியல் சட்டம் நேரிடையான வரைவிலக்கணத்தைத் தரவேண்டும்.

அந்தச் சொல் பல்வேறு சமயங்களையும், நம்பிக்கை சார்ந்த வழிபாட்டு நெறிகளையும் குறிக்கும் சொல் என்பதால் வெவ்வேறு சமயங்களுக்குமான வரம்புகளை முறைப்படுத்திச் சட்டமாக்க வேண்டும்” என்று வலுவாகக் குரல் எழுப்பி, இந்த மண்ணில் சமய நல்லிணக்கம் தழைக்க வேண்டும் என்று ஓங்கிக் குரல் எழுப்பியவர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள்.

அவரது மறைவு தமிழினத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும், தமிழ் பண்பாட்டு ஆய்வு உலகுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும்.

பண்பாட்டுப் பேரறிஞர் தொ.ப. அவர்களுக்கு மதிமுக வீர வணக்கத்தை செலுத்துகிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும், தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய நண்பர்கள், ஆய்வு மாணவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

4. அறிஞர் தொ.பரமசிவன் மறைவு – சிபிஐ(எம்) இரங்கல்

தமிழ் அறிஞரும், சிறந்த ஆய்வாளருமான பேராசிரியர் தொ. பரமசிவன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவருடைய முனைவர் பட்ட ஆய்வான “அழகர் கோவில்” குறித்த ஆய்வு தமிழ் இலக்கிய ஆய்வுலகில் ஒரு திருப்புமுனையாகும். மானுடவியல், பண்பாட்டு நோக்கில் தமிழக வரலாற்றை அவர் ஆய்வு செய்து சிறந்த நூல்களை வழங்கியுள்ளார். அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள் உள்ளிட்ட அவரது நூல்கள் தமிழில் பெரும் கவனத்தைப் பெற்றவை. மார்க்சிய, பெரியாரிய நோக்கிலேயே அவர் தன்னுடைய ஆய்வை அமைத்துக் கொண்டார்.

கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மூட்டா அமைப்பின் முன்னணி தலைவர்களில் ஒருவராக அவர் பணியாற்றினார். ஆசிரியர் போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார். ஏராளமான ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், தமிழ் வரலாற்றியல் ஆய்வுக்கும் பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், அவர் வழிவந்த மாணவர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

– (கே. பாலகிருஷ்ணன்), மாநிலச் செயலாளர்

5. முனைவர் தொ.ப மறைவுக்கு அஞ்சலி – இரா.முத்தரசன்

தமிழகத்தின் தலைசிறந்த பண்பாட்டு, மானுடவியல் ஆய்வறிஞர் முனைவர் தொ பரமசிவம் (70) நேற்று (24. 12.2020) மாலை காலமானார் என்ற துயரச்செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.

முனைவர் தொ. பரமசிவம் மார்க்சிய ஆய்வு முறையில் நின்று, பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளை உள்வாங்கி, தமிழகத்தின் பண்பாட்டு வளர்ச்சியினை அங்குலம், அங்குலமாக ஆய்வு செய்தவர். மதங்கள் நிறுவகமாகும் நீண்ட காலத்திற்கு முன்னரே சாதிப் பிளவுகள் உருவாக்கப்பட்டதாக   வலுவான  கருத்தை முன்வைத்தவர். பேராசியர் நா. வா வின் ஆராய்ச்சி வட்ட மாணவர்களுடன் தோழமை நிறைந்த உறவு கொண்டவர். அவரது மறைவு ஆய்வுலகின் மிகப்பெரும் துயரமாகும். 

அறிஞர் தொ ப வின் நினைவுகளுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செவ்வணக்கம் கூறி, அஞ்சலி செலுத்துகிறது.. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், ஆய்வுலக நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக் கொள்கிறது.

6. அடிப்படைவாத சனாதனிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கியவர் தொ.ப. அவர்கள்; அவருக்கு எமது வீரவணக்கம்! –  தொல்.திருமாவளவன்

ஆய்வறிஞர் பேராசிரியர் தொ.ப. அவர்களின்  மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரது மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு  நேர்ந்த பேரிழப்பாகும். 

பண்பாட்டுத் தளத்தில் இந்துத்துவ சனாதன சக்திகளுக்கு  பெரும் சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் விளங்கியவர். 

தமிழினத்தின் தொன்மையை உலகுக்கு  உறுதிப்படுத்தும் முனைப்புடன் தனது இறுதிமூச்சு வரையில் பண்பாடு மற்றும் வரலாற்று ஆய்வுத் தளத்திலே வெகுமாக பணியாற்றியவர்.

 பெரியாரியத்தை அடிப்படையாகக் கொண்டே அவரது அனைத்து அசைவுகளும் அடித்தட்டு மக்களின் நலன்களை  முன்னிறுத்தக் கூடியவையாக அமைந்துள்ளன. 

பேரா. தொ.ப’ வின் மறைவால்,  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் பெரியாரிய, மார்க்சிய சிந்தனையாளர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

– தொல்.திருமாவளவன்.

7. தமிழ் நாட்டார் வழக்கியலின் ஆகப்பெரும் பொக்கிஷம் – தி.வேல்முருகன்

தமிழின் தொன்ம வரலாற்றினை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்திட ஆவணப்படுத்திட   உடல் நலிவுற்ற தன் இறுதி காலத்திலும் அயராது உழைத்திட்ட அய்யா  திரு.தொ.பரமசிவன். அவர்கள் சிறிது நேரத்திற்கு முன்பாக இயற்கை எய்தினார் என்கிற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 

அய்யா அவர்கள் தமிழர் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருப்பார்.

8. முனைவர் தொ.பரமசிவன் தமிழகத்தின் தொன்மையைப்  புதிய கோணத்தில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர் – டி.டி.வி.தினகரன்

தமிழக வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் முனைவர். தொ. பரமசிவன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன். தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுகளிலும், தமிழகத்தின் தொன்மையைப்  புதிய கோணத்தில் வெளிச்சத்திற்குக்  கொண்டுவந்ததிலும் மறக்கமுடியாத பணியாற்றியவர். 

இவை தொடர்பாக பேராசிரியர் பரமசிவன் அவர்கள் ஆராய்ந்து கண்டறிந்த தகவல்களும், எழுதிய நூல்களும் என்றைக்கும் வரலாற்றில் இடம்பெற்றிருக்கும். அன்னாரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.

9. தமிழ் நாட்டார் வழக்கியலின்  ஆகப் பெரும் பொக்கிஷம் தொ.ப – தமுஎசக

தமிழின் தொன்ம வரலாற்றினை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்திட ஆவணப்படுத்திட   உடல் நலிவுற்ற தன் இறுதி காலத்திலும் அயராது உழைத்திட்ட அய்யா  திரு.தொ.பரமசிவன். அவர்கள் சிறிது நேரத்திற்கு முன்பாக இயற்கை எய்தினார் என்கிற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அய்யா அவர்கள் தமிழர் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருப்பார்.

தமிழறிஞர் தொ.பரமசிவன்  மறைவுக்கு தமுஎகச மாநிலக்குழு  அஞ்சலி.

அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தமிழக அரசு முன்வரவேண்டும்.

மூத்த தமிழறிஞரும் ஆழ்ந்த  பெரியாரியச் சிந்தனையாளருமான அய்யா தொ.பரமசிவன் அவர்களின் மறைவு தமிழ் ஆய்வுலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். உறுதிமிக்க பெரியாரியவாதியான அவர் தற்செயலாக பெரியாரின் நினைவுநாளிலேயே காலமாகியிருக்கிறார்.

சிவகங்கை மாவட்டம், இளையாங்குடியில் டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிய நாட்களில் கல்லூரி ஆசிரியர் சங்கமாகிய மூட்டாவின் இணைச்செயலாளராகப் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். மூட்டா இயக்க வரலாற்றின் மிக முக்கியமான போராட்டமான ஜாகிர் உசேன் கல்லூரிப்போராட்டத்தில் முன்னணிப்பாத்திரம் வகித்தவர். அவருடைய முனைவர் பட்ட ஆய்வேடாக அழகர்கோவில் பற்றிய ஆழமான ஆய்வு அப்போது வெளிவந்தது.

பின்னர், மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியில் பணி தொடர்ந்த காலத்தில் அவருடைய ”அறியப்படாத தமிழகம்” உள்ளிட்ட முக்கியமான நூல்கள் வெளிவந்தன. சின்னச்சின்னக் கட்டுரைகளில் இதுவரை நாம் அறிந்திராத தகவல்களுடன் நாம் பார்த்திராத புதிய கோணங்களில் அவருடைய சிந்தனை வீச்சைத் தமிழகம் கண்டது. அவருடைய ஆய்வுக்கட்டுரைகள் பலவும் மார்க்சிய ஆய்வுநெறியின்பாற்பட்டவையாக இருப்பதைக் காணலாம்.

நாட்டுப்புறத் தெய்வங்கள் மீது தமிழ்ச்சமூகத்தின் கவனத்தைத் திருப்பிய முன்னோடிகளில் ஒருவராகத் திகழும் தொ.ப. அவர்களின் பண்பாட்டு அசைவுகள், உரைகல், தெய்வம் என்பதோர், சமயங்களின் அரசியல் போன்ற நூல்வரிசை இந்துத்துவ அரசியலுக்கு எதிரான வலுவான வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டவை. அவரோடு உரையாடும் சில மணித்துளிகளில் அவர் வெளிப்படுத்தும் அறிவின் விசாலமும் அவரது நினைவாற்றலும் வியப்பளிப்பவை. நூல்களில் கற்றவற்றைத் தமிழ் நிலப்பரப்பில் வீதிகளில் நின்று இதோ பாருங்கள் இதுதான் சங்க இலக்கியம் சொன்ன சேதி என்று ஓர் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டே இருந்தவர். தொல்லியல் ஆய்வுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். தமிழ் வைணவம், தமிழ்ச்சமணம் எவ்விதம் வட இந்திய மரபுகளிலிருந்து வேறுபட்டது என்பதை கண்டு சொன்னவர்.

பின்னர், அவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். பேராசிரியராகவும் ஒரு நிர்வாகியாகவும் அவர் நேர்மையின் இலக்கணமாக வாழ்ந்தார் என்று இன்றுவரை அவரது சக பேராசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். 

கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்பால் தோழமைப்பூர்வமான உறவை தன் இறுதிநாள்வரை கொண்டிருந்தவர். செம்மலர், புதுவிசை உள்ளிட்ட முற்போக்கு இதழ்களில் பல கட்டுரைகளை எழுதியவர். நெல்லையில் ஒவ்வோராண்டும் நடைபெறும் கலை இலக்கிய இரவுகளில் முதல் வரிசையில் அமர்ந்திருப்பார். தமுஎகசவின் பல பயிலரங்குகளில், நிகழ்வுகளில் பங்கேற்று ஆக்கப்பூர்வமான பங்களிப்பைச் செலுத்தியவர்.

சுற்றுச்சூழல் இயக்கங்களோடு தன்னை மனப்பூர்வமாக இணைத்துக் கொண்டவர். 

பணத்துக்கும் புகழுக்கும் ஒருபோதும் மயங்காத, எதற்காகவும் தன் கருத்துக்களில் சமரசம் செய்துகொள்ளாத மிகப்பெரும் தமிழறிஞராக இறுதிவரை எளிய வாழ்வையே வாழ்ந்தவர். நாட்டின் பன்முகத்தன்மையை அழித்து ஒற்றைத்துவப்படுத்தும் வரலாற்று மோசடிகள் அரசின் துணையோடு விஷமெனப் பரவும் இக்காலத்தில் வரலாற்றின் உண்மைத்தன்மையை துணிவுடன் எடுத்துரைக்க முன்னிலும் கூடுதலாய் தேவைப்பட்ட முனைவர்  தொ.ப. காலமாகியுள்ளார். அவரது ஆய்வுநூல்களையும் அறிவார்ந்தச் செயல்பாடுகளையும் பரவலாக்குவதே அவருக்குச் செலுத்தப்படும் பொருத்தமான அஞ்சலியாக அமையுமென தமுஎகச கருதுகிறது.  மதிக்கத்தக்க பங்களிப்பினைச் செய்து காலமாகிற தமிழறிஞர்களையும் கலை இலக்கிய ஆளுமைகளையும் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யும் நடவடிக்கையை இவரிலிருந்தேனும் தொடங்க வேண்டுமென தமிழக அரசை தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

அவருடைய மறைவால் துயருற்றிருக்கும் அவரது இணையர், மகன், மகள், பேரக்குழந்தைகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் தமுஎகச தன் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. 

அன்புடன்

மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் (பொறுப்பு)  
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

10. மூத்த தமிழ் பண்பாட்டு  ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன் மறைவு! -எஸ்.டி.பி.ஐ கட்சி ஆழ்ந்த அனுதாபம்!

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;

தமிழகத்தின் புகழ்பெற்ற மூத்த  பண்பாட்டு ஆய்வாளரும், தமிழ் ஆய்வுலகின் முக்கியமான ஆய்வாளராகவும் விளங்கிய தொ.ப என்று அழைக்கப்படும் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள், உடல்நலக் குறைவு காரணமாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (டிச.24) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அன்னாரின் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பாகும்.

பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் தமிழகத்தில் பண்பாட்டு ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை முன்வைத்து ஆய்வுலகின் கவனத்தை ஈர்த்தவர்.

இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரியிலும், மதுரை தியாகராசர் கல்லூரியிலும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக பணியாற்றியுள்ள தொ.பரமசிவன் அவர்கள், அறியப்படாத தமிழகம்,  பண்பாட்டு அசைவுகள்,  இதுவே சனநாயகம்  உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நூல்களை படைத்துள்ளார்.

பேரா. தொ.பரமசிவன் அவர்களின் தமிழ் பண்பாட்டு ஆய்வுகள் இளம் ஆய்வாளர்களுக்கு ஒரு திறப்பை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது.

தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து ஆவணப்படுத்தியதில் பெரும் பங்காற்றிய பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் இழப்பு ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்துக்கும் பேரிழப்பாகும். அன்னாரின் மறைவால் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்,  உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

11. பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களது மறைவு தமிழறிவுலகத்திற்கும், அரசியல் பண்பாட்டுத் துறைகளுக்கும் ‌மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்திற்குமான பேரிழப்பு! – சீமான்

முதுபெரும் தமிழறிஞரும், மகத்தான வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வாளருமான எனது பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், மற்றும் உறவுகள் துயரில் நானும் ஒருவனாய்ப் பங்கெடுக்கிறேன்.

எளிய கிராமத்தில் பிறந்த என்னைப் போன்ற எண்ணற்றவர்களுக்குக் கல்வியை மட்டுமல்லாது, தமிழுணர்வையும், மானுடச்சிந்தனையையும், சமூகப்பார்வையையும் அளித்த மகத்தான மாமனிதராவார். சமயங்கள் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் சார்ந்து அவர் நிகழ்த்தியிருக்கிற ஆய்வுகள் தமிழின அறிவுலகில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கின்றன. தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடிக் கண்டறிந்து ஆவணப்படுத்தி அவர் எழுதி இருக்கின்ற அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், தெய்வம் என்பதோர், சமயங்களின் அரசியல் போன்ற பல நூல்கள் தமிழினத்திற்கு அவர் வழங்கி இருக்கின்ற மகத்தான பெருங்கொடைகளாகும்.

இளையான்குடி ஜாஹீர் உசேன் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக அவர் பணிபுரிந்த போது அவருடைய மாணவனாகப் பயின்ற அனுபவங்கள் மறக்க முடியாதவை. அவரால்தான் நான் உருவானேன். என் பேச்சில், என் எழுத்தில் என என் வாழ்வின் சகல விதத்திலும் என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய எனது பேராசிரியர் மறைந்துவிட்டார் எனும் செய்தி ஏற்கவே முடியாத பெருந்துயரமாக மாறி, என்னை வாட்டுகிறது. நாம் தமிழர் என்கின்ற பெரும்படையை நாங்கள் கட்டியெழுப்பியபோது எங்களுக்கு வகுப்பெடுத்து வழிகாட்டிய பெருந்தகை அவர். மதுரை தியாகராயர் கல்லூரி, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி எண்ணற்ற அறிஞர்களை, ஆய்வாளர்களை உருவாக்கிய பேரறிஞராவார். கடினமான ஆய்வு நூல்களைக்கூட எளிய தமிழில் சொல்லக்கூடிய அவரைப் போன்ற ஒரு மகத்தான எழுத்தாளுமை யாரும் இல்லை. அவருடைய இழப்புத் தனிப்பட்ட அளவில் என்னை வெகுவாகப் பாதித்திருக்கிறது. இன்றளவும் எனக்கு வழிகாட்டிக்கொண்டிருந்த ஒரு ஒளி அணைந்து விட்டதே? என்று கலங்கி நிற்கும் வேளையிலும் அவர் நம்மிடம் விட்டுச்சென்றுள்ள காலத்தால் அழியாத அவரது ஆய்வு நூல்களும் அவர் கற்பித்த பாடங்களும் இன்னும் பல தலைமுறைகளுக்குத் தமிழினத்தை வழிநடத்திச்செல்லும் என்ற பேருண்மை நம்பிக்கையுடன் மீண்டெழ வைக்கிறது. ஐயாவின் மறைவு தமிழறிவுலகத்திற்கும், அரசியல் பண்பாட்டுத் துறைகளுக்கும் ‌மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்குமானப் பேரிழப்பாகும். உரிய அரசு மரியாதையோடு ஐயாவின் உடலை நல்லடக்கம் செய்ய தமிழக அரசை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

பெருந்தமிழர் நமது ஐயா தொ.பரமசிவன் அவர்களின் பெயர் தமிழினம் உள்ளவரை, தமிழ்மொழி வாழும் வரை மங்காத அறிவுப்பேரொளியாகச் சுடர்விடும். என் விழி முழுவதும் நிறைந்திருக்கின்ற கண்ணீரோடு என் பேராசிரியரின் பேரன்பிற்கு நன்றிப்பெருக்கோடு புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

12. பேரா.தொ.பரமசிவன்  ஐயாவிற்கு மே17 இயக்கத் தோழமைகளின் புகழ் வணக்கம்

தொல்லியல் அறிஞர், மானுடவியலாளர், பண்பாட்டு ஆய்வாளர், சங்க இலக்கியத்தில் புலமை பெற்றவர், நாட்டார் வழக்காற்றியல் அறிஞர் என பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை  ஐயா.பேரா.தொ.பரமசிவன் அவர்கள் நம்மை விட்டுப்பிரிந்தார்.

திராவிடஇயக்கப் பேராளுமை, பண்பாட்டு ஆய்வாளர், தமிழறிஞர், அரசியல் செயற்பாட்டாளர் என நீளும் அவரது ஆளுமை தமிழினத்தின் சிந்தனைச் செழுமைக்கு பெரும்பங்காற்றியது. 

மார்க்சிய-பெரியாரிய பார்வையுடன் தமிழின சிக்கல்களை அணுகி ஆய்ந்தவர்.

திராவிட இயக்கச் சிந்தனையின் தளத்தை மேலும் விரிவடைந்த செயல்தளத்திற்கு நகர்த்திய பணியில் பெரும்பங்காற்றியவர். அனைத்து தோழமைகளையும் எளிமையுடன், இனிமையுடன், நம்பிக்கையுணர்வுடன் அணுகியவர். தனது விரிந்த அறிவை தமிழின மேன்மைக்கு அர்ப்பணித்தவர்.

மே17 இயக்கத்தின் துவக்க காலத்திலிருந்து ஆதரித்து வழிகாட்டியவர். ஈழத்தமிழருக்கான மே 17 இயக்கத்தின் முதல் நினைவேந்தலை பாளையங்கோட்டையில் நடத்தியபோது அங்கு வந்து  ஈழத் தமிழர்களுக்கான நினைவுச்சுடரை ஏற்றி எழுச்சியுரை நிகழ்த்தியவர். தொடர்ந்து இளம்தோழர்களை உற்சாகமூட்டி வளர்த்தெடுத்தவர் என அவரது பங்களிப்பின் பட்டியல் நீளமானது. 

பெரியாரை தமிழ்ச்சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தும் வேலைகள் நடக்கும் போதெல்லாம் அதற்கு எதிராக சமர் புரிந்தவர். அப்படிப்பட்டவர் அவரது நினைவு நாளிலேயே மறைந்துவிட்டார். 

தமிழ்ச்சமூகத்திற்கு ஐயா ஆற்றிய அளப்பரிய பணிகளை கருத்தில் கொண்டு, ஐயா தொ.ப. அவர்களின் இறுதி சடங்கை தமிழ் நாடு அரசு தானாக முன்வந்து அரசு மரியாதையுடன் நடத்த வேண்டுமென மே 17 இயக்கம் வலியுறுத்துகிறது.

ஐயாவிற்கு மே17 இயக்கத் தோழமைகளின் புகழ் வணக்கம்.

13. ட்வீட்டில் அடங்காத் துயரம் – கமல்ஹாசன்

2 Replies to “தமிழ் பண்பாட்டின் பொக்கிஷம் தொ.பரமசிவன் – அரசியல் தலைவர்களின் இரங்கல் செய்தி”

  1. எனக்கு உங்களது இரங்கல் குறிப்பு பதிவில் சிறு வருத்தம் உண்டு !தமிழ்நாட்டின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இரங்கல் குறிப்பு இடம்பெறாமல் போனதில் நிச்சயம் பிழையான ஒன்று. காரணத்தை அறிய விருப்பம் !

  2. இந்த செய்தி பதியப்பட்ட நேரத்தில் முதல்வரிடமிருந்து அறிக்கை வரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *