1. விவசாயிகளின் போராட்டத்துக்கு பின்னால் எதிர்கட்சிகள் உள்ளன எனும் மோடியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது – சீத்தாராம் யெச்சூரி
ஒரு அரசியல் தலைவர் கூட போராட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள். இந்த சட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய விவசாயிகள் உட்பட அனைவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துங்கள். தேவை எனில் உங்கள் கார்ப்பரேட் நண்பர்களையும் அழையுங்கள். விவசாயத்தில் தேவையான சீர்திருத்தங்கள் குறித்து கலந்தாலோசனை செய்யுங்கள். அதற்குப் பிறகு புதிய சட்டங்களை கொண்டு வாருங்கள் – சீத்தாராம் யெச்சூரி, CPIM
2. சென்னை மாநகராட்சியின் அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும்! – வைகோ
திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் என்ற பெயரில், சென்னை மாநகர மக்கள், இனி சொத்து வரியுடன் கூடுதலாக, குப்பை கொட்டக் கட்டணம் செலுத்த வேண்டும் என, மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. கொரோனா முடக்கத்தால் வருமானம் இன்றிப் பரிதவிக்கும் மக்கள் மீது, மேலும் ஒரு அடி விழுந்து இருக்கின்றது. 1000 பேருக்கு மேல் கூடுகின்ற நிகழ்ச்சிகளை நடத்துவோர், 20000 ரூபாய் கட்ட வேண்டும் என, கூட்டத்திற்கு ஏற்றவாறு பல வகையான கட்டணங்களையும் அறிவித்து இருக்கின்றார்கள். இதனால், அரசியல் கட்சிகள் மட்டும் அல்ல, திருமணம், கோவில் திருவிழா என சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள்.
இத்தகைய முடிவுகளை, மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மாநகராட்சி மன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், அண்ணா தி.மு.க. அரசு செய்த குழப்பங்களால், தமிழ்நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட ஊர் ஆட்சி மன்றங்களுக்குத் தேர்தல் நடத்தவில்லை. அடுத்த நான்கு மாதங்களில், சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த நிலையில், இத்தகைய அறிவிப்பு தேவை அற்றது.
சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்ளே, அனைத்துத் தெருக்களிலும் கைவிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான கார்கள், இலட்சக்கணக்கான இரு உருளை ஊர்திகள் பல ஆண்டுகளாகக் கிடக்கின்றன. அவற்றைச் சுற்றி குப்பைகள் குவிந்து, சிறுநீர் கழிப்பிடமாக, கொசுக்களின் பிறப்பிடமாக ஆகி இருக்கின்றது. ஆனால், அத்தகைய கழிவுகளையும், மலைபோல் குவியும் குப்பைகளையும் அகற்றுவதற்கு, போதிய நடவடிக்கைகளை சென்னை மாநராட்சி மேற்கொள்ளவில்லை.
குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு, இன்றுவரையிலும் சீருடைகள் வழங்கவில்லை. அமைச்சர்கள் பவனி வருகின்ற கடற்கரைச் சாலை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே, சீருடைகள் வழங்கி இருக்கின்றார்கள். மற்ற இடங்களில், பெண்கள் சேலை அணிந்துதான் குப்பைகளை அகற்றுகின்றார்கள்; அப்போது கிளம்பும் மணல் தூசுகள், அவர்களுடைய உடையில்தான் முழுமையாகப் படிகின்றது. மேலும், ஊர்திகள் மோதாமல் இருக்க அவர்கள் அணிந்து இருக்கின்ற ஒளிரும் பட்டைகளுக்கும் கூட, 100 ரூபாய் வாங்கிக்கொண்டுதான் கொடுத்து இருக்கின்றார்கள். 21 ஆம் நூற்றாண்டிலும்கூட, தூய்மைப்பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்காமல் இருப்பது வேதனைக்கு உரியது. எனவே, சென்னை மாநகரில் பணிபுரிகின்ற ஆண், பெண் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும், மாநகராட்சி உடனே சீருடைகள் வழங்க வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டண அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
3. குன்றத்தூரில் மின்சாரம் தாக்கி இருவர் சாவு: ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்குக! – மருத்துவர் ராமதாஸ்
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள திருமுடிவாக்கம் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தொழிற்சாலை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருமுடிவாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் பராமரிப்புப் பணியில் சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்த முருகன், நாகராஜ், ஆனந்த் ஆகிய 3 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பராமரிப்புப் பணியின் போது மிகப்பெரிய இரும்பு ஏணியை நகர்த்த முயன்ற போது, அந்த ஏணி உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்லும் கம்பிகள் மீது உரசியதால் முருகன், நாகராஜ் ஆகிய இருவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். ஆனந்த் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்த தொழிலாளி ஆனந்துக்கு தரமான மருத்துவம் வழங்கப்பட வேண்டும். அவர் வெகு விரைவில் குணமடைவதற்கு விழைகிறேன்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரும் ஏழைத் தொழிலாளிகள். அவர்களின் மறைவால் அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றன. அந்தக் குடும்பங்களின் துயரத்தைப் போக்கும் வகையில் இருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சமும், காயமடைந்த தொழிலாளி ஆனந்துக்கு ரூ. 5 லட்சமும் நிதியுதவி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
4. புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்யக்கோரியும், ஆர்ப்பாட்டம் – வேல்முருகன் அறிவிப்பு
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் 26.12.20 அன்று காலை 10 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.
மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லியில் மாபெரும் போராட்டத்தை விவசாயிகள் நடத்திக்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு, ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள், மருத்துவர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைக்காக அறிஞர்கள் பலரும் தாங்கள் பெற்ற விருதுகளையும் திருப்பி அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறப்போவதில்லை என, மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திமிராக பதிலளித்துள்ளது கண்டனத்துக்குரியது. விவசாயிகள் கடந்த 29 நாட்களாக பனியிலும், பட்டினியிலும் இரவு பகல் பாராமல் போராடி வரும் நிலையில், மத்திய அமைச்சர் தோமரின் பேச்சு, அரசின் ஆணவத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்-யின் அறிவுரையின் பெயரில் மோடி, புதிய வேளாண் சட்டங்களை நியாயப்படுத்தி பேசி வருகிறார். அதுமட்டுமின்றி, விவசாயிகளின் போராட்டத்தினைக் கண்டு அஞ்சி நடுங்கும் மோடி அரசு, போராட்டத்திற்கு பெருகும் ஆதரவினை தடுக்க முடியாததால், நரித்தனமாக போராடும் விவசாயிகளின் மீதான வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் மீது போர் தொடுத்துள்ள மோடி அரசு, மறுபுறம், எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்தி நாட்டு மக்கள் மீது போரை நிகழ்த்தியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் வரை ரூ. 610 -ஆக இருந்த எரிவாயு சிலிண்டர் விலை, தற்போது ரூ.710-ஆக உயர்த்துள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் இரு கட்டங்களாக எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் சாமானியர்களை கடுமையாக பாதிக்கும்.
எரிவாயு விலை உயர்வு ஒருபுறமிருக்க, ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட ரூ.90-ஐ நெருங்கிவிட்டது பெட்ரோல் விலை. பெட்ரோல் விலை, டீசல் விலை உயர்வு நேரடியாக, நாட்டு மக்களை பாதிக்கும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், கலால் வரியை குறைக்காமல், பாஜக அரசு உயர்த்தியே வந்துள்ளது. இதன் காரணமாகவே, பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை, எரிவாயு சிலிண்டர் உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
எனவே, புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்யக்கோரியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 26.12.2020 அன்று காலை 10 மணியளவில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு, பொதுமக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
5. விவசாயிகள் விரோத ஆட்சிக்கு எதிராக அணிதிரள்வோம்! – கே.பாலகிருஷ்ணன்
பெரியோர்களே, தாய்மார்களே,
இந்திய விவசாயத்தை அழிக்கின்ற, இந்திய விவசாயிகளை ஏதும் இல்லாதவர்களாக ஆக்குகின்ற 3 வேளாண் விரோத சட்டங்களை பாஜகவின் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மேலும் விவசாயிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் இலவச மின்சாரம் வழங்குவதை நிறுத்துகின்ற, மின்சார சட்ட திருத்த மசோதா 2020ஐ சட்டடமாக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் கார்ப்பரேட்டுகள் கையில் விவசாயத்தைத் தாரை வார்க்கின்ற நடவடிக்கைகளாகும்.
· மக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய், வெங்காயம் ஆகியவற்றை பதுக்கி வைக்கக்கூடாது என்று இருந்த அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955ஐ திருத்தி, இனிமேல் சட்டப்பூர்வமாக இவற்றை இருப்பு வைத்துக் கொள்ளலாம். அதாவது பதுக்கி வைத்துக் கொள்ளலாம் என்று இப்புதிய சட்டத் திருத்தம் கூறுகிறது. இதன்மூலம் அறுவடை காலத்தில் விளை பொருட்களை விவசாயிகளிடமிருந்து மொத்தமாக வாங்கி, அவற்றை சந்தைக்கு வரவிடாமல் பார்த்துக் கொள்ளுவதன் மூலம் ஒரு செயற்கையான பற்றாக்குறையை ஏற்படுத்தி, அதிக விலையில் கார்ப்பரேட்டுகள் விற்க இந்தச் சட்டம் வழிவகை செய்யும். இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
· வியாபாரிகள் அரசாங்கத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு மண்டிகளில் மட்டுமே விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை வாங்க வேண்டும் என்ற நிலையை மாற்றி, மண்டிக்கு வெளியேயும் வாங்கலாம் என்று சட்டத்தைத் திருத்தி உள்ளது. இதன்மூலம் வியாபாரிகளுக்கு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, எவ்வித வரைமுறையும் இல்லாமல், விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதார விலைக்கு வாங்க வேண்டும் என்ற நிர்பந்தமும் இல்லாமல் மிகக் குறைந்த விலைக்கு வாங்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலமாக மண்டிகள், விவசாயிகளுக்கு அளித்து வந்த விலை உத்திரவாத பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் போகும்.
· கார்ப்பரேட்டுகள் விவசாயிகளிடம் நேரிடியாக ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம்; மத்திய மாநில அரசுகளின் எந்தவொரு சட்டமும் இந்த ஒப்பந்தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்று இந்த ஒப்பந்தச் சட்டம் கூறுகிறது. மேலோட்டமாக பார்ப்பதற்கு முதலில் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தச் சட்டம் இருப்பது போல தோன்றினாலும், ஒப்பந்தத்தில் உள்ள தரமும், அளவும்போல் விளைப்பொருட்கள் இல்லை என்றால், விலையைக் குறைக்கவும், விவசாயிகளிடம் குறித்த நேரத்தில் பணம் பட்டுவாடா செய்யாமல் இருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. இவற்றை எதிர்த்து நீதிமன்றமும் செல்ல இயலாது. மேலும் கார்ப்பரேட்டுகளுக்கு அதிக இலாபம் தரக்கூடிய மரபணு மாற்றப்பட்ட விதை, இரசாயன உரம், ஆகியவை தொடர்ந்து பயன்படுத்தப்படுவதன் மூலம், நிலம் சாரமற்று மலட்டுத்தன்மை உள்ளதாக மாறிவிடும்.
முக்கியமாக இந்த 3 சட்டங்களிலும் ஒரு இடத்தில் கூட குறைந்தபட்ச ஆதார விலையயை விளை பொருட்களுக்கு சட்டப்ப10ர்வமாகக் கொடுப்பதற்கு குறிப்பு அல்லது விதி இல்லை.
· மின்சார சட்ட திருத்த மசோதா 2020 விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை நிறுத்த வழிவகை செய்கிறது. ஏற்கனவே இடுபொருள் விலை உயர்வினால் கடனுக்கு உள்ளாகி வரும் விவசாயிகள் இதன்மூலமாக மேலும் பெரும் கடன் சுமைக்கு ஆளாவார்கள். அது மட்டுமல்லாமல், ஏழை எளிய மக்களுக்கும், கைத்தறி மற்றும் விசைத்தறி உரிமையாளர்களுக்கும் உள்ள மின்சார சலுகைகள் பறிபோகும். எனவே இவை அனைத்தும் மக்கள் விரோதமானவை மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானவை என்பதில் எள் முனையளவும் சந்தேகம் இல்லை.
டெல்லி போராட்டம் :
இந்தச் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தலைமையில் இலட்சக்கணக்கான வட மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகை இட்டு போராடி வருகிறார்கள். 29 நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இப்போராட்டம், உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. 30,000க்கும் அதிகமான முன்னாள் இராணுவ வீரர்கள் தங்களுக்குக் கிடைத்த பதக்கங்களைத் திரும்ப ஒப்படைத்துள்ளனர். 70க்கும் அதிகமான முக்கிய பிரபலங்களும், மரியாதைக்குரிய உச்சநீதி மன்றமும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மத்திய பாஜக அரசை வலியுறுத்திய போதும், அரசு பிடிவாதமாக இருக்கிறது.
அதிமுகவின் துரோகம்
நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டபொழுது அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்தன. பாஜக கூட்டணியில் இருந்த சிரோன்மணி அகாலிதள் கட்சி இச்சட்டங்களை எதிர்த்தது மட்டுமல்லாமல், தன்னுடைய அமைச்சரை பதவி விலக செய்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அதிமுக கட்சி இச்சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்து, இந்திய விவசாயிகளுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்தது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தின் முதலமைச்சர் உள்பட இச்சட்டங்களுக்கு ஆதரவாகவும், போராடும் விவசாயிகளை இடைத்தரகர்கள் என்று பேசிஅசிங்கப்படுத்தியும் வருகின்றனர். அதிமுக அரசு தன்னுடைய நிலையை மாற்றிக்கொண்டு இந்திய விவசாயிகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இந்த வேளாண் விரோத சட்டங்களுக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெற வேண்டும் என்றும் AIKSCC(தமிழ்நாடு) வலியுறுத்துகிறது.
கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக, பிடிவாதமாக பாஜக அரசு இருக்கின்ற நிலையில், நாடு முழுவதும் இப்போராட்டத்தைத் தீவிரப்படுத்துமாறு, போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திவரும் சம்யுக்த் கிசான் மோர்ச்சாவும், AIKSCCயும், முடிவு செய்துள்ளன. ஏற்கனவே அம்பானி, அதானி பொருட்களை புறக்கணிக்க அறைகூவல் கொடுத்த AIKSCC, தற்பொழுது நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பேரணிகளை நடத்த அறைகூவல் கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் வரும் டிசம்பர் 29 அன்று தஞ்சை மாநகரில் பிற்பகல் 3 மணிக்கு பேரணியும், அதைத் தொடர்ந்து கலைநிகழ்சிகளும், பொதுக்கூட்டமும் நடைபெறும். அனைத்து அரசியல் அமைப்புகள், சிவில் சமூகங்கள், வணிக பேரமைப்புகள், மாணவ இளைஞர் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் என அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து டிசம்பர் 29 நிகழ்வுகளை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மத்திய பாஜக அரசே,
• மூன்று வேளண் விரோத சட்டங்களை இரத்து செய்!
• மின்சார சட்டத் திருத்த மசோதா 2020ஐ திரும்பப் பெறு!
மாநில அதிமுக அரசே,
• மக்கள் விரோத, விவசாயி விரோத சட்டங்களை ஆதரிக்காதே!
– K.பாலகிருஷ்ணன், மாநில ஒருங்கிணைப்பாளர், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு, (AIKSCC) தமிழ்நாடு