மாநில சுயாட்சி போராட்டத்தின் தற்கால தொடக்கப் புள்ளி எழுவர் விடுதலையே!

சமூக வலைத்தளங்களில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ’31 ஆண்டுகால அநீதி (#31YearsOfInjustice)’ என்ற பொது முழக்கத்தின் கீழ் கூட்டுப் பங்கேற்பு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. விசாரனைக்கென அழைத்துச் செல்லப்பட்டு 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனையை அணுபவிக்கும் பேரறிவாளன் கைது செய்யப்பட்ட நாளான ஜூன் 11ந் தேதியையொட்டி, எழுவர் விடுதலை கோருவதே அப்பிரச்சாரத்தின் நோக்கம். அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோரும் இப்பிரச்சாரத்தில் பங்கு கொண்டனர்.

புதிய ஆட்சியின் மீதான நம்பிக்கை

எழுவர் விடுதலைக்காக முந்தைய காலக்கட்டங்களில் பல்வேறு சமயங்களில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தற்போதைய சூழலில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம் அனைவராலும் மிகுந்த நம்பிக்கையுடன் செயற்படுத்தப்பட்டது. ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, எழுவர் விடுதலையை சாத்தியப்படுத்தும் என்ற நம்பிக்கை அனைத்து தரப்பினரிடத்திலும் இருந்ததே இதற்கு காரனம்.

ஏனென்றால் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக, தனது தேர்தல் அறிக்கையில்,”ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து சிறையில் வாடிடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை பெற்றிட அனைத்து முயற்சிகளையும் கழக அரசு முழு முனைப்புடன் மேற்கொள்ளும்” என குறிப்பிட்டிருந்தது.

மேலும் திமுக கூட்டனி கட்சித் தலைவர்களில் ஒருவரான திருமாவளவன் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னரே ‘எழுவர் விடுதலையை’ வலியுறுத்தியிருந்தார். அதைத் தொடர்ந்து பலராலும் எழுவர் விடுதலை, புதிதாக பொறுப்பேற்க இருக்கும் அரசிற்கான முதல் கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டது.

எதிர்ப்பார்ப்பும், அதிருப்தியும்

இதன் பலனாக ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுவர் விடுதலை தொடர்பாக அதுசார்ந்த துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எல்லோரும் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்!

ஆனால் அதைத் தொடர்ந்து, ‘எழுவர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவரின் முடிவறிய கடிதம் எழுதிய’ திமுக அரசின் செயல்பாடு எல்லோருக்கும் அதிருப்தியை தந்தது. முந்தைய அதிமுக அரசின் மீது விமர்சனமாக சொல்லப்பட்ட காலந் தாழ்த்தும் நடைமுறைகளையே திமுக தலைமையிலான அரசும் மேற்கொள்வதாக கருத்து கூறப்பட்டது

முந்தைய  அதிமுக அரசு எழுவர் விடுதலை தொடர்பான முடிவுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு குறிப்பிட்ட கோப்புகளை அனுப்பியிருந்த நிலையில், இரண்டாண்டுக்கு மேலாக அதனை கிடப்பில் போட்டிருந்த ஆளுநர் இறுதியாக ‘குடியரசுத் தலைவர் தான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும்’ என பதிலுரைத்தார்.

161ன் விதியின் கீழ் எழுவரை மாநில அரசே விடுவிக்கலாம்

 தற்போதைய திமுக அரசு குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருப்பதை தொடர்பாக அறிக்கை வெளியிட்ட திராவிடர் கழகத் தலைவர் வீரமணி,”மாநில அரசு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 161ஆம் பிரிவின்படி அமைச்சரவை மீண்டும் முடிவெடுத்து, எழுவரை விடுதலை செய்ய தாராளமாக இடம் உண்டு” என்பதை குறிப்பிட்டு,” முன்பு நமது கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 1996 செப்டம்பரில் அண்ணா பிறந்தநாளையொட்டி, 10 ஆண்டுகளாக சிறையில் இருந்த கைதிகளை விடுதலை செய்ய முடிவெடுத்து, ஆளுநர் மாளிகைக்கு கோப்பு சென்றபோது, அங்கிருந்து கி.பு.கோ (Criminal Procedure Code) படி 15 ஆண்டுகளானால்தான் விடுதலை செய்ய முடியும் என்று உள்ள ஒரு தடையை ஆட்சேபனையாக எழுப்பி, திருப்பி அனுப்பினார். அதனை முதலமைச்சர் கலைஞர், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 161ஆம் பிரிவின் கீழ் புதிய முடிவு எடுத்து, அவர்களை விடுதலை செய்த முன் மாதிரியும் தமிழக அரசியல் வரலாற்றி- திமுக ஆட்சி வரலாற்றில் இருப்பதால்…… அரசமைப்புச் சட்ட உரிமைப்படியும் மாநில அரசின் உரிமைகளை முறைப்படி செயல்படுத்தியும் நல்ல முடிவுகளை” எடுக்க கோரியிருந்தார்.

வரலாற்று முன்னுதாரனம்

அவர் சுட்டுக்காட்டுவது போல் சிறைத்தண்டனை தொடர்பாக தமக்கிருக்கும் உரிமையை பயன்படுத்தி மாநிலங்கள் சிறைக் கைதிகளை விடுதலை செய்த ஏராளமான முன்னுதாரனங்கள் இருக்கின்றன. ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்பதால் இது அரிதினும், அரிதான வழக்காக கூறப்படும் பட்சத்திலும் காந்திப் படுகொலை குற்றவாளியான கோபால் கோட்சே விடுதலை செய்யப்பட்ட முன்னுதாரனமும் இருக்கிறது. 14 வருட சிறைவாசத்துக்குப் பின் தன்னை விடுதலை செய்யுமாறு கோபால் கோட்சே விண்ணபித்த மனுவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது; அடுத்த நான்காண்டிற்குள்ளாக சிறைத்தண்டனை தொடர்பான மாநில அரசின் உரிமையைப் பயன்படுத்தி அன்றைய மஹாராஷ்டிரா முதல்வர் வசந்தராவ் நாயக்கால் கோபால் கோட்சே விடுதலை செய்யப்பட்டார்.

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்து வாழ்நாள் ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பிலே கூட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ’ அரசமைப்புச் சட்டப் பிரிவு 432 மற்றும் 433-ன்படி மேற்கூறிவர்களின் சிறைத் தண்டனை தொடர்பாக மாநில அரசு முடிவு செய்யலாம்’ என குறிப்பிட்டிருந்தனர்.

தமிழ்நாடு அரசின் தீர்மானமும் அதன் விளைவுகளும்

அரசமைப்புச் சட்ட பிரிவு 432 வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, 2014ம் ஆண்டு தமிழ்நாடு அரசு எழுவரை விடுதலை செய்ய முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றியது. நிறைவேற்றிய தீர்மானத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி மூன்று நாட்களுக்குள் கருத்து தெரிவிக்கக் கேட்டிருந்த நிலையில், ஒன்றிய அரசு எழுவர் விடுதலைக்கு எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது.

இவ்வழக்கை விசாரித்த உச்சமன்ற நீதிபதி லலித்,’சிறைவாசிகளின் தண்டனைக் குறைப்பு தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுக்கு முழு உரிமையுண்டு’ என்று குறிப்பிட்டிருந்தார். மற்றொரு நீதிபதியான கலிஃபுல்லா,’ தண்டனைக் குறைப்பு தொடர்பாக மாநில அரசுக்கு 161-வது பிரிவு வழங்கும் அதிகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது  முடியாது’ என்று கூறியிருந்தார்.

இருந்த போதும் இவ்வழக்கின் மீது 2018ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில்,’எழுவர் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம். குறிப்பிட்ட பரிந்துரையை பரிசீலித்து முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது’ என கூறப்பட்டது.

இதையடுத்து 2018ம் ஆண்டு எழுவர் விடுதலை தொடர்பாக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. அரசமைப்புச் சட்ட விதி 161ஆனது, ’ஆளுநருக்கு தனித்து முடிவெடுக்கும் அதிகாரம் கிடையாது, அமைச்சரவையின் முடிவைக் கேட்டு மட்டுமே பரிந்துரை செய்ய முடியுமென்று குறிப்பிட்டுள்ள நிலையில்’, 2 ஆண்டுகளுக்கு மேலாக குறிப்பிட்ட தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தினார் ஆளுநர். இறுதியாக ஆளுநர், ’குடியரசுத் தலைவரே இது குறித்து முடிவெடுக்கும் அதிகாரமுடையவர்’ என்றுக் கூறிவிட்டார். 

30 ஆண்டுகால எழுவர் விடுதலை போராட்டம் கடந்து வந்த பாதையைப் பற்றி அறிந்துகொள்ள:

குடியரசுத் தலைவர் முடிவு- மாநில சுயாட்சிக்கு முரண்

இந்நிலையில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, எழுவர் விடுதலைக்காக முந்தைய சட்டமன்ற தீர்மானத்தை முன்னிறுத்தி குடியரசுத் தலைவர் ஒப்புதலை கோரியிருப்பது திமுக பேசிவரும் ‘மாநில சுயாட்சி’க்கு முரணானதாக அமைந்திருக்கிறது. 

2014ம் ஆண்டே எழுவர் விடுதலை என்பது தமிழ்நாட்டு அரசின் கொள்கை முடிவாக ஏற்கப்பட்டு விட்டது. தொடர்ந்து எழுவர் விடுதலைக்கான சட்டமன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றில் தற்போதைய திமுக அரசிற்கு மாற்றுக் கருத்தேதும் இருக்கப் போவதில்லை. கடந்த ஆட்சியின் போதே எழுவர் விடுதலை என்பது அரசமைப்புச் சட்ட விதி 161ன் அடிப்படையில் மாநில உரிமை பிரச்சனையாக மாற்றமடைந்து விட்டது. மாநில உரிமையாக மாறிவிட்ட எழுவர் விடுதலைக்கு மீண்டும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கோருவது திமுகவின் மாநில சுயாட்சி முழக்கத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும். 

மாநில சுயாட்சி- மக்களின் அவநம்பிக்கைக்கு ஆளாகப் போகிறதா திமுக?

தமிழ்நாட்டிடமிருந்து பறிக்கப்பட்டு ஒன்றிய அரசின் கீழ் குவிக்கப்பட்ட அதிகாரங்களை மீட்பது மாநில சுயாட்சி உரிமைப் போராட்டத்தின் தேவையாக உள்ள நிலையில், தனக்கிருக்கும்  அதிகாரமொன்றை குடியரசுத் தலைவர் தீர்மானிக்க கோருவது, மாநில சுயாட்சி உரிமைப் போராட்டத்தில் திமுக கொண்டிருக்கும் தீவிரமற்ற தன்மையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இந்த போக்கு திமுகவினுடைய மாநில சுயாட்சி முழக்கத்தின் மீது தமிழ்நாட்டு மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும்.

திமுகவின் மாநில சுயாட்சி முழக்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை அவசியமானது. ஏனெனில், அத்தியாவசியமான அதிகாரங்கள் கூட இல்லாமல் தங்களது அரசு வஞ்சிக்கப்படுவதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்தாலொழிய திமுகவின் மாநில சுயாட்சி உரிமைப் போராட்டம் வெற்றிப் பெறாது. இதுப் பற்றி கூறும் அண்ணா,

……வெற்றுத்தாளில் கூட்டாட்சி சார்புடையது எனக் கூறி, நடைமுறையில் மத்திய அரசிற்கு மேன்மேலும் அதிகாரங்களைக் குவித்துக் கொண்டிருக்கிற (நமது) அரசியல் சட்டத்தின் கீழியங்கும் ஒரு மாநிலத்திற்கு நான் முதலமைச்சர் என்பதில் சிறிதும் மகிழ்ச்சி அடையவில்லை……….. கூட்டாட்சித் தத்துவத்தை மக்களுக்குக் கற்றுத் தரவேண்டும். கொல்லைப்புற வாயில் வழியாக நுழையும் ஒருவகை இரட்டை ஆட்சியே நமது இன்றைய அரசியல் சட்டம் என்பதை, தி.மு.க ஆட்சிப் பொறுப்பிலிருப்பதன் மூலமாக, சிந்திக்கும் ஆற்றல் படைத்த மக்களின் கவனத்திற்கு கொண்டு வர முடியுமெனில், உண்மையில் அதுவே நாம் அரசியல் உலகத்திற்கு செலுத்திய உரிய பங்காகும்” என்கிறார். (’விடியற் காலையே வாழ்க’ என்ற தலைப்பில் ஹோம்ரூல் வார இதழில் அண்ணா எழுதியதன் மொழிபெயர்ப்பு (1969) ).

எழுவர் விடுதலையே தற்கால மாநில சுயாட்சி முழக்கத்தின் தொடக்கப் புள்ளி

பறிக்கப்பட்ட அதிகாரங்களை மக்களுக்கு விளக்குவதாக இருக்க வேண்டிய திமுக ஆட்சி, எழுவர் விடுதலையில் தனக்கிருக்கும் அதிகாரத்தை குடியரசுத் தலைவரிடம் பறிக்கொடுத்ததாக அமைந்துவிடக் கூடாது. மாநில சுயாட்சிக்கான உரிமைப் போராட்டத்தை தமிழ்நாட்டு மக்களுடன் இனைந்து திமுக தொடங்க வேண்டுமென்றால், மாநில உரிமையாக தீர்மானிக்கப்பட்டுவிட்ட ’எழுவர் விடுதலை’ என்ற புள்ளியிலிருந்தே அது தொடங்கப்பட வேண்டும்; உடனடியாக எழுவர் விடுதலைக்கான புதிய சட்டமன்ற தீர்மானத்தை நிறைவேற்றி சாந்தன், முருகன், பேரறிவாளன், ரவிச்சந்திரன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும்; இப்புள்ளியிலிருந்தே திமுகவின் தற்கால மாநில சுயாட்சி போராட்டம் தொடங்குகிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *