கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சிறைக்குள் அடைபட்டுக் கிடக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களின் விடுதலைக்கு தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் தொடர்ச்சியாக காலம் தாழ்த்தி வருகிறார்.
1991 மே மாதம் தேர்தல் பிரச்சாரத்தில் நிகழ்ந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்த வழக்கின் விசாரணையானது ’தடா’ என்று அழைக்கப்படும் பயங்கரவாத மற்றும் சீர்கேட்டு நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது.
தடா வழக்கு
இறுதியில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கு தடா வழக்கு அல்ல, இது தீவிரவாத செயலும் இல்லை என்று தீர்ப்பளித்தது.
‘தடா’ என்றழைக்கப்படும் பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் [Terrorist and Disruptive Activities (Prevention)] இச்சட்டம் 1987ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு உயர் நீதிமன்றத்தில் பிணை அனுமதி கோர முடியாது. கைது செய்யப்படுபவர்கள் காலவரையரையின்றி சிறையில் அடைக்கவும், அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.
தடா சட்டத்தின்படி கைது செய்யப்படுபவர்கள் விசாரணையின்பொது நடத்தப்படும் சித்திரவதைகள் குறித்து நீதிமன்றம் தலையிடாது. காவல்துறையினர் வாங்கிய ஒப்புதல் வாக்குமூலங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியும்.
26 பேருக்கு மரண தண்டனை வழங்கிய தடா நீதிமன்றம்
இச்சட்டப்படி கைது செய்யபட்டோர் காவல் அதிகாரியின் முன்னிலையிலேயே குற்றச் செயலை ஒப்புக்கொள்ள செய்யமுடியும். மேலும் இது தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனியாக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. இப்படி ஒரு மனித உரிமைகளுக்கு எதிரான சட்டத்தின் கீழ் நடந்த விசாரணையில் சித்ரவதை செய்து வாங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னை பூந்தமல்லியில் அமைக்கப்பட்ட தடா நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை என்று ஒரு தீர்ப்பைக் கொடுத்தது.
4 பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்
மேலும் தடா வழக்கு என்பதால் உயர்நீதிமன்றத்தை அணுகும் வாய்ப்பும் அவர்களுக்கு மறுக்கபட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தில் நடந்த நீண்ட சட்டப் போராட்டத்தில் 19 பேர் விடுவிக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கு தடா சட்டத்தின் கீழ் வராது என்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு கூறியது. ஆனால் தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு 4 பேருக்கு மரண தண்டனையும், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.
1999-ல் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட கருணை மனு
இந்த தீர்ப்பை எதிர்த்து நால்வரும் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை தள்ளுபடி செய்து 8.10.1999 அன்று தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் தமிழக ஆளுநருக்கு 17.10.1999 அன்று கருணை மனுக்களை அனுப்பினர். தமிழக ஆளுநர் 27.10.1999 அன்று கருணை மனுக்களை நிராகரித்தார்.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆளுநரின் உத்தரவை ரத்துசெய்து அமைச்சரவையின் முடிவைக் கேட்டு புதிய ஆணை வழங்கும்படி சொன்னது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 19.4.2000 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடைப்படையில் நளினியின் கருணை மனுவை ஏற்றுக்கொண்டு மற்ற மூன்று பேரின் கருணை மனுக்களை 21.4.2000 அன்று ஆளுநர் நிராகரித்தார்.
2000-ம் ஆண்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனு
அமைச்சரவையின் முடிவால் பாதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் 28.4.2000 அன்று குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவினை அனுப்பியிருந்தனர். குடியரசு தலைவருக்காக அவர்கள் எழுதிய கருணை மனு தமிழக அரசின் சார்பாக 28.4.2000 அன்று அனுப்பிவைக்கப்பட்டது.
09-09-2011 மூவருக்கு தூக்கு தண்டனைக்கு குறிக்கப்பட்ட தேதி
இந்த கடிதத்தின் மீது 11 ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்காமல் இருந்த குடியரசுத் தலைவர் 12.8.2011 அன்று கருணை மனுக்களை நிராகரித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார்.
2011 செப்டம்பர் 9 அன்று அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் நாளாகக் குறிக்கப்பட்டது.
தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் அமர்வை தலைமை தாங்கிய நீதிபதி கே.டி.தாமஸ், இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட 7 பேரும் குற்றமிழைத்திருப்பார்கள் என்று தான் நம்பவில்லை என்று பின்னாளில் சொன்னார்.
தமிழகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், சென்னையிலும் மிகப்பெரிய மக்கள் போராட்டங்கள் நடைபெற்றது. எல்லாவற்றுக்கும் உச்சமாக மூன்று தமிழர் உயிரைப் பாதுகாக்க 21 வயது இளம்பெண் செங்கொடி தன்னுயிரைக் கொடுத்தார்.
நீதிமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தூக்கை ரத்துசெய்ய நடத்திய போராட்டம், மூன்று பெண்கள் நடத்திய போராட்டம் என தமிழகம் ஒரு பெரும் கொந்தளிப்புக்கு உள்ளானது.
போராட்டத்திற்கு இறங்கி வந்த தமிழக அரசு
தமிழ்நாடு முழுவதும் நடந்த மக்கள் திரள் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக 29.8.2011 அன்று தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, ”திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் குடியரசுத் தலைவரை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்ற தீர்மானத்தினை நிறைவேற்றினார்.
தூக்கு தண்டனைக்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்
ஆகஸ்ட் 30, 2011 இல் சென்னை உயர்நீதிமன்றம் இம்மூவரின் தூக்கு தண்டனைக்கு எட்டு வாரங்களுக்கு தடை விதித்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் மூவரின் கோரிக்கையை ஏற்று, 18.2.2014 அன்று அவர்களுடைய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும் ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் சிறைவாசம் என்றும், எனினும் அது குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 432 மற்றும் 433-ன்படி, அரசு எடுக்கும் தண்டனை மாற்றுதல் அல்லது தள்ளுபடி செய்தல் நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் நீதிபதிகள் ப. சதாசிவம், ரஞ்சன் கோகாய், சி.கே.சிங் ஆகியோர் கொண்ட அமர்வு பிப்ரவரி 18-ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டனர். இந்த வழக்கில் இது ஒரு மிக முக்கியமான தீர்ப்பாக இருந்தது.
குற்றவியல் நடைமுறை சட்டத்தில் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் தண்டனை நிறுத்தி வைப்பு, தண்டனை குறைப்பு மற்றும் மாற்றுதல் ஆகியவை குறித்து கூறப்பட்டுள்ளது. கு.வி.மு.ச பிரிவு 432 ன் கீழ் உரிய அரசாங்கம் (மாநில அரசு) ஆயுள்தண்டனை உட்பட பிற தண்டனைகளை குறைப்பதற்கான அதிகாரம் பெற்றுள்ளது. குற்றவியல் விசாரணை முறைச் சட்டத்தில் 1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, பிரிவு 433(A) என்கிற பிரிவு புதியதாக சேர்க்கப்பட்டு அது 18.12.1978 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறையில் இருந்தால் மட்டுமே அந்த நபருக்கு தண்டனை குறைப்பு வழங்கி விடுதலை அளிக்க முடியும்.
ஏழ்வரையும் விடுதலை செய்ய சட்டசபையில் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம்
19.2.2014 அன்று காலை ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோர் 23 ஆண்டுகளாக சிறைச்சாலையில் இருந்து வருவதைக் கருத்தில் கொண்டு, குற்ற விசாரணை முறைச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. இதேபோன்று ஏற்கெனவே ஆயுள் கைதியாக 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யலாம் என்று முடிவும் எடுக்கப்பட்டது.
இருப்பினும் இந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பினால் விசாரணை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தடா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-ன்படி, தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.
பிரிவு 161-ஐ பயன்படுத்தாமல் பிரிவு 432-ஐ பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டு
எனவே மத்திய அரசின் கருத்தினைப் பெறும் வகையில் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும், மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 7 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு முடிவெடுத்து கடிதம் எழுதியது.
அரசியலமைப்பு சாசனப் பிரிவு 161-ஐப் பயன்படுத்தாமல் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 432-ஐப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. .
நீதிமன்றத்திற்கு சென்ற ஒன்றிய அரசு
தமிழக அரசு இந்திய உள்துறையிடம் ஆலோசனை கேட்டு எழுதிய கடிதத்திற்கு பதில் ஏதும் சொல்லாமல் நீதிமன்றம் சென்றது ஒன்றிய அரசு.
5 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்த அமர்வு, 3 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டாலும், 41-ஆவது தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றிருந்த லோதா தனது 5 மாத பதவிக் காலத்தில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்காமல் ஓய்வு பெற்றார்.
அடுத்து 42-வது தலைமை நீதிபதியாக வந்த நீதிபதி தத்து, பதவி ஏற்று ஓராண்டுக்குப் பிறகு தான் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் அமர்வையே நியமித்தார். நீண்ட தாமதத்துக்குப் பிறகு இந்த அமர்வு இரண்டு தீர்ப்புகளை வழங்கியது.
மூன்று நீதிபதிகளுக்கான தீர்ப்பை நீதிபதி கலிஃபுல்லாவும், இரண்டு நீதிபதிகளுக்கான தீர்ப்பை நீதிபதி லலித்தும் வழங்கினர். நீதிபதி கலிஃபுல்லா எழுதிய தீர்ப்புக்கு கையெழுத்திடவே தலைமை நீதிபதி தத்து, தனது பணி ஓய்வு நாளான 2015 டிசம்பர் 2 வரை காக்க வைத்தார்.
மேற்சொன்ன இரண்டு தீர்ப்புகளில், இந்த வழக்கில் முடிவெடுக்கக் கூடிய அதிகாரம் படைத்த அரசு எது என்பதை திட்டவட்டமாகக் கூறாமல் மூவர் கொண்ட வேறு ஒரு உயர்நீதிமன்ற அமர்வு முடிவு செய்யட்டும் என்று நீதிபதி கலிஃபுல்லா தீர்ப்பு எழுதி விட்டார்.
முடிவு எடுக்கும் உரிமை மாநில அரசுக்குத் தான் என்று நீதிபதி லலித் தீர்ப்பு எழுதினார். ஆனால் இரண்டு தீர்ப்புகளும் தண்டனைக் குறைப்புக்கு மாநில அரசுக்கு 161-வது பிரிவு வழங்கும் அதிகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது முடியாது என்று திட்டவட்டமாகக் கூறி விட்டன. (Article 72 or Article 161 of the constitution will always be available being Constitutional Remedies untouched by the Court) (சட்டப் பிரிவு 72 – குடியரசுத் தலைவருக்குரிய தண்டனைக் குறைப்பு அதிகாரம் பற்றியது).
தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என அளிக்கப்பட்ட தீர்ப்பு
முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு பேரின் விடுதலை குறித்துத் தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரை செய்யலாம். அதை ஆய்வு செய்து முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது என்று 6.9.2018 அன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்கா, கே.எம்.ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிராக நடுவண் அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கையும் முடித்து வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
2018-ம் ஆண்டு தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானம்
இந்த தீர்ப்பின் அடிப்படையில் இறுதியாக தமிழக அமைச்சரைவை 2018 செப்டம்பர் 9-ம் தேதி நடந்த கூட்டத்தில் 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைத்து தமிழக ஆளுநருக்கு அனுப்பியது.
இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 161, சில வழக்குகளில் தண்டனையை இடைநிறுத்தி வைக்க, நிறுத்த, குறைக்க, மன்னிப்பு வழங்க மாநில அதிகாரம் தொடர்பான விடயத்தில் ஆளுநருக்கு அதிகாரம் வழங்குகிறது.
ஆளுநர் அதிகாரம் என்று வரையறுக்கபட்டிருப்பது அவரது தனிப்பட்டஅதிகாரம் இல்லை. அமைச்சரவையின் பரிந்துரைகளை கேட்டுதான் முடிவெடுக்கப்பட வேண்டும் என்றும், தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்றும் ஏற்கனவே உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழக மக்களால் தேர்வு செய்யப்படட அரசின் அமைச்சரவையானது அளித்த தீர்மானத்திற்கு ஆளுநர் இரண்டு ஆண்டுகளாக பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட கோபால் கோட்சே
சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாத செயலான தேசத்தந்தை மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே 14 ஆண்டுகள் சிறையில் இருந்த பின், தன்னை விடுதலை செய்யுமாறு 1961இல் உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தார். ஆனால் உச்சநீதிமன்றம் அந்த விண்ணப்பத்தை ஏற்க மறுத்து விட்டது. ஆயினும் அதன்பின் மகாராஷ்டிரா மாநில அரசு நான்காண்டுகள் முடிவதற்குள் கோபால் கோட்சேவை விடுதலை செய்தது.
குறிப்பாக 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது என்ற விதியைப் பயன்படுத்தி மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருந்த வசந்தராவ் நாயக் கோபால் கோட்சேவை விடுதலை செய்தார். விடுதலையான கோபால் கோட்சே காந்தியைக் கொல்ல எவ்வாறு திட்டமிட்டோம் என்று வெளிப்படையாகப் பேசினார். காந்தியைக் கொன்ற கோபால் கோட்சேவை ஆர்.எஸ்.எஸ்காரர்கள் போற்றிப் புகழ்ந்தனர். மேலும் கோபால் கோட்சே தான் காந்தியை கொலை செய்ததை நியாயப்படுத்தி பிரச்சாரம் செய்து வந்தார்.
காந்தியாரைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே, 14 ஆண்டுகள் சிறைத் தண்டனைக் காலம் முடிந்ததும் விடுதலை பெறலாம் என்ற குற்றவியல் சட்ட நடைமுறையின் அடிப்படை யில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஏழு தமிழர்களும் சிறைக் கொட்டடியில் கிடக்கிறார்கள்.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது பாஜக எம்.பி ஆக உள்ள பிரக்யா சிங்
2006 செப்டம்பரில் மகாராஷ்டிரா மாநிலம் மலேகான் மசூதி அருகில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சாத்வி பிரக்யா சிங் தாகூர் பிணை பெற்று வந்து தற்போது பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
2008 செப்டம்பரில் மகாராஷ்டிர மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையின் தலைவராக இருந்த ஹேமந்த் கார்கரே மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கின் குற்றவாளி சாத்வி பிரக்யா சிங் தாகூர்தான் என்று தனது விசாரணை மூலமாக முடிவை அடைந்திருந்தார். அவர் 2011 இல் நடைபெற்ற மும்பை தீவிரவாத தாக்குதலின்போது கொல்லப்பட்டார்.
பாஜக ஆட்சிக் காலத்தில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகளை தேசிய புலனாய்வு முகமை முடித்துள்ளது. இரண்டு வழக்குகளில் மட்டும் குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டனர். இந்த இரண்டு வழக்குகளும் இந்துத்துவ அமைப்புகள் மீதான வழக்குகள் ஆகும்.
பாஜக ஆட்சிக்கு வந்ததும் விடுதலை செய்யப்பட்ட இந்துத்துவ அமைப்பினர்
இதில் முக்கியமானவராக இருந்தவர் அசீமானந்த் என்று அழைக்கப்படும் நபா குமார் சர்கார் என்பவரே ஆவார். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடனே 2014 ஆகஸ்ட் மாதத்தில் பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்றத்தால் இவருக்கு பிணை வழங்கப்பட்டது. 2017-ம் ஆண்டு மார்ச் 8 அன்று அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் அசீமானந்தையும், குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரையும் ஜெய்பூர் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.
ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்புடைய சங்பரிவார் அமைப்பினர் நடத்திய பயங்கரவாத செயல்களில் நேரடியாக பங்கெடுத்தவர்கள் எல்லாம் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் பல்வேறு முரண்பட்ட தகவல்களைக் கொண்ட விசாரணையின் அடைப்படையில் 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களை விடுவிக்க தொடர்ந்து மறுத்து வருகிறது.
ஏழ்வர் விடுதலைக்காக ஒலிக்கும் தமிழ்நாட்டின் குரல்
அவர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்த சொன்ன பிறகும், மாநில அதிகாரத்தில் தலையிட்டு அவர்களின் விடுதலையை ஒன்றிய பாஜக அரசு தடுத்து வருகிறது. உச்ச நீதிமன்றமே விடுவிக்கலாம் என சொன்ன பிறகும் ஆளுநர் காலம் தாழ்த்துவது தவறானது என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
#ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தொடர்ச்சியாக ட்ரெண்டாகி வருகிறது.