சே குவேரா, அநீதிகளுக்கு எதிராக போராடுவோரின் ஆதர்ச நாயகன்.

அர்ஜெண்டினாவில் பிறந்த எர்னாஸ்டோ குவேரா அடைப்படையில் ஒரு மருத்துவர். மருத்துவம் பயிலுவதற்கு முன்பே தன் நண்பருடனான மோட்டார் சைக்கிள் பயனத்தின் மூலம் மக்களை படிக்க முயன்றவர். அர்ஜெண்டினாவில் தொடங்கிய தனது மோட்டார் சைக்கிள் பயனத்தின் மூலம் சிலி, பெரு, ஈக்வடார், கொலம்பியா, வெனிசூலா, பனாமா, மியாமி போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குச் சென்றார் சே. அந்நாடுகளில் மக்கள் வாழ்ந்து வந்த அவல நிலையானது அதைக் கண்ணுற்ற சாகசக்காரன் சே குவேராவை, புரட்சியாளன் சே குவேராவாக மாறுவதற்கு வழி வகுத்தது.

லத்தீன அமெரிக்க நாடுகளின் வளங்களையும், லத்தீன் அமெரிக்க மக்களின் உழைப்பையும் சுரண்டிய அமெரிக்க முதலாளிகளே லத்தீன் அமெரிக்க நாட்டு மக்களின் அவலத்திற்கு காரணமாக இருப்பதைக் கண்டார். ‘லத்தீன் அமெரிக்க நாடுகளை சுரண்டும் அமெரிக்க முதலாளிகள்’ என்ற புள்ளி, கியூபாவில் அமெரிக்க கைப்பாவை அரசான பாடிஸ்டா அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த பிடல் காஸ்ட்ரோவுடன் சே குவேராவை இனைத்தது.

கியூப விடுதலைப் போராட்டத்தில் தன்னை இனைத்துக் கொண்டார் சே. கியூபா விடுதலைக்குப் பின்னர் காங்கோ விடுதலைக்காக போராட புறப்பட்ட அவர், பொலிவிய விடுதலைப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு படுகொலை செய்யபட்டார். நாடுகளின் எல்லைகளைக் கடந்து, அடையாளங்களை மறுத்து ஒடுக்கப்படுவோரின் விடுதலைக்காக போராடிய ஒரு கம்யூனிஸ்ட் சர்வதேசியன் சே குவேரா.

இந்த அடையாளங்களோடு சே குவேராவிற்கு ’கோட்பாட்டாளன்’ என்ற அடையாளமும் உண்டு. விடுதலையடைந்த கியூபாவில் நிறுவப்பட்ட கம்யூனிஸ்ட்டுகளின் அரசிற்கு பல்வேறு நெருக்கடிகள் இருந்தன. இன்று வரையும் அத்தகைய நெருக்கடிகள் தொடர்கின்றன. இருந்தபோதும் அத்தகைய நெருக்கடிகளையெல்லாம் எதிர்க் கொண்டு இன்றுவரையும் கியூபா ஒரு சுயசார்பு- மக்கள் நல அரசாங்கமாக நீடிப்பதற்கு சே குவேரா வழங்கிய பங்களிப்பும் இன்றியமையாதது.

புரட்சியின் மூலம் கைப்பற்றப்பட்ட கியூபாவை ஒரு சோஷலிச நாடாக வடிவமைக்க வேண்டிய தேவையிருந்தது. கம்யூனிஸ தத்துவக் கோட்பாடுகளின் வழி கியூபாவை அதன் முந்தைய சூழலிலிருந்து வளர்த்தெடுப்பதற்குத் தேவையான வரலாற்று முன் மாதிரிகள் எதுவும் இல்லை. ரஷ்ய மாதிரியை கியூபாவில் செயற்படுத்துவதற்கு நடைமுறைச் சிக்கல் இருந்தது. மறுபுறம் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் கியூபாவின் பொருளாதார நடவடிக்கைகளை முடக்கி, அதனை தனிமைப்படுத்தியிருந்தது. இந்நிலையில் கியூப பொருளாதார நடவடிக்கைகளுக்கு அடிப்படையான தொழில்துறை மற்றும் தேசிய வங்கியின் தலைமைப் பொறுப்புகளில் சே குவேரா நியமிக்கப்படுகிறார்.

தேசிய விவசாய சீர்திருத்த நிறுவனத்தின் தலைவராக  சே

1959 மே 17ந் தேதி பிடல் அரசால் விவசாய (நில) சீர்சிருத்தச் சட்டம் கொண்டு வரப்படது. இச்சட்டத்தின் படி, பண்ணைக்கான நிலவுடைமை உச்ச வரம்பாக 3 சதுர கி.மீ மற்றும் சொத்துக்கான உச்சவரம்பாக 1 சதுர கி. மீ என நில உச்ச வரம்புகளை நிர்ணயித்து அதற்கு அதிகமான நிலவுடைமை கொண்டிருந்தோரிடம் நிலங்களை கையகப்படுத்தி மக்களுக்கு பகிர்ந்தளிக்க வழிவகை செய்தது. இச்சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளை நிர்வகிக்க தேசிய விவசாய சீர்திருத்த நிறுவனம் ( National Institute of Agrarian Reform-INRA) தொடங்கப்பட்டது. இதன் தலைமைப் பொறுப்பில் சே குவேரா நியமிக்கப்பட்டார். இந்நிலச் சீர்திருத்தச் சட்டப்படி நீட்சியாக 2008ம் ஆண்டு 1,73,000 விவசாயிகளுக்கு 35 லட்சம் ஏக்கர் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

கியூப தேசிய வங்கியின்  தலைவராக  சே

தேசிய விவசாய சீர்திருத்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட இரண்டு மாதங்களிலே கியூப தேசிய வங்கியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் சே. அக்காலக்கட்டத்தில் வங்கிகளை தேசியமயமாக்கினார்.

மேலும் அமெரிக்காவில் இருந்த கியூபாவுக்குச் சொந்தமான தங்க சேமிப்புகளை திரும்ப பெற்றார்; கியூபாவின் அமெரிக்க ஆதரவு நிதி நிறுவனங்களுடனான தொடர்பைத் துண்டித்தார்; கியூபாவுடனான வெளிநாட்டு வர்த்தகத்திற்கான உரிமம் பெறும் முறை செயல்படுத்தினார்; இதற்காக வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தை  (foreign trade agency) ஏற்படுத்தினார்; மிக முக்கியமாக புதிய பணத்தாள்களை கொண்டு வந்தார்.

தொழிற் துறை அமைச்சராக  சே

1960ல் அமெரிக்கா கியூபா மீது தடை விதித்த நிலையில், கியூபா வர்த்தக உறவை வளர்க்கும் நோக்கத்தில் உலக நாடுகளுக்கு பயனம் மேற்கொண்டார் சே. சோவியத் ரஷ்யா, ஜெர்மனி, சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று வந்தார்.

இப்பயணங்களின் மூலம் பெற்ற வர்த்தக உறவு தொடர்பான சே குவேராவின் அனுபவங்கள் 1961ம் ஆண்டு கியூப தொழிற் துறை அமைச்சகம் உருவாக்க உதவியது. தொழிற்த் துறை அமைச்சகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட சே குவேரா, 4 ஆண்டுகளுக்குப் பிறகாக காங்கோ செல்லும் வரையிலும் அப்பொறுப்பை வகித்து வந்தார். இக்காலக்கட்டத்தில் 84% தொழிற் நிறுவனங்கள் தேசியமாக்கப்பட்டன. தேசியமயமாக்கப்பட்ட தொழிற் நிறுவனங்களில் அமெரிக்க மற்றும் அமெரிக்கத் துனை நிறுவனங்களும் அடங்கும்.

தொழிற்த்துறை அமைச்சராக சே பணியாற்றிய காலத்தில் கியூப சோஷலிச மாற்றத்திற்குத் தேவையான அரசியல் பொருளாதார மாற்றம் குறித்து கவனம் செலுத்தினார். இது தொடர்பாக ஆய்வு செய்து புத்தகம் எழுதுவதற்காக பாராகுவேயில் மூன்று மாதம் தங்கி அதற்கான பணிகளை மேற்கொண்டார். லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு மத்தியில் கியூபா மட்டும் புரட்சிகர விடுதலை அடைந்திருப்பது, ஒரு வல்லாதிக்க நாடாக கியூபா மீதான அமெரிக்காவின் நெருக்கடி, உலக வர்த்தக ஒழுங்கு ஆகிய சூழ்நிலைகளை ஆய்ந்த சே,”எல்லாவற்றிற்கும் முதலாக உலகின் ஒரு நாட்டில் மட்டும் கம்யூனிசத்தை வளர்த்தெடுக்க முடியுமா?” என்ற கேள்வியை மார்க்சியத் தத்துவத் தளத்தில் முன் வைத்தார்.

சே எழுப்பிய இவ்விவாதம் சோவியத் யூனியனுடைய அறிவியல் கழகத்தின் அரசியல் பொருளாதார கையேட்டில் சேர்க்கப்பட்டது. அன்றைய சோவியத் ரஷ்யாவின் உதவிப் பெற்ற நாடுகளின் பிரதிநிதிகளுக்கு எடுக்கப்பட்ட வகுப்புகளில் இக்கையேடு பயிற்றுவிக்கப்பட்டது குறிப்பிடதக்கதாகும்.

தொழிற்த் துறை அமைச்சராகயிருந்து கியூபாவை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பிலிருந்த சே, கியூபாவை ’முதலாளித்துவ சமூக- பொருளாதார அமைப்பிலிருந்து சோஷலிச சமூக- பொருளாதார அமைப்பை நோக்கி’ வளர்த்தெடுப்பதில் இருக்கும் சிக்கல்களை, அனுபவங்களை, படிநிலைகளை கியூப தொழிற்த் துறையின் பத்திரிக்கையில் ( Nuestra Industria) பதிவு செய்தார்.

இது சே குவேரா மார்க்சிய தத்துவ தளத்திற்கு வழங்கிய மிக முக்கியமான பங்களிப்பாகும். புரட்சிகர சாகசக்காரன், கொரில்லா போராளி, எல்லைகளை, அடையாளங்களைக் கடந்த சர்வதேசியனாக உள்ள சே குவேரா இப்பங்களிப்பின் வழி கோட்பாட்டாளனாகவும் திகழ்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *