”இந்தியாவை சுதந்திர நாடாக இருக்க விடுங்கள். விமர்சனங்கள் வைப்பவர்களை குற்றவாளிகளாக நடத்தாதீர்கள். உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் கருத்துரிமையை பாதுகாப்பதற்குத்தான் இருக்கிறோம். சாதரண மக்கள் அரசால் துன்புறுத்தப்படக் கூடாது என்பதற்காகவே அரசியல் சாசனத்தின் மூலமாக நீதிமன்றம் உருவாக்கப்பட்டது” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் வசிக்கும் ரோஷினி என்ற பெண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், கொல்கத்தாவில் உள்ள ராஜா பஜார் பகுதியில் மட்டும் கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று விமர்சித்து ஒரு பதிவினை பதிந்திருந்தார். அப்பெண்மணி மீது ஒரு சமூகத்தின் மீது வெறுப்புப் பிரச்சாரம் மேற்கொண்டதாகக் கூறி கொல்கத்தா காவல்துறையினர் வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கினை நீக்க வலியுறுத்தி அப்பெண் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு சென்றார். செப்டம்பர் 29-ம் தேதி அப்பெண் கொல்கத்தா காவல்துறை முன்பு ஆஜராக வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அப்பெண் உச்ச நீதிமன்றம் சென்றார்.
டெல்லியில் உள்ள பெண்ணை கொல்கத்தா காவல்துறை சம்மன் அனுப்பி ஆஜராக சொல்வது ஒரு துன்புறுத்தல் நடவடிக்கை என்றும், இப்படியே போனால் மும்பை, மணிப்பூர், சென்னை என எந்த பகுதியிலிருந்தும் நாட்டின் எல்லா பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு சம்மன் அனுப்புவார்கள் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளின் நடவடிக்கைகளை விமர்சிப்பதற்காக பொதுமக்கள் இப்படிப்பட்ட துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படக் கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
”எவ்வளவு தைரியமிருந்தால் ஒரு குடிமகன் அரசுக்கு எதிராக எழுத முடியும்? நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும் சம்மன் அளித்து நாங்கள் அவர்களை அழைத்துச் செல்வோம் என்று சொல்வதைப் போல் இந்த நடவடிக்கை உள்ளது” என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மின்னஞ்சல் மூலம் கேள்விகளை அனுப்பி வைத்தோ, வீடியோ கான்ஃபிரன்சிங் மூலமோ அப்பெண்ணை விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாட்டின் உண்மை நிலையை பிரதிபலித்துள்ள நீதிமன்றத்தின் கருத்து
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் இதுபோன்ற சட்ட விரோத கைது நடவடிக்கைகளை எச்சரிக்கும் விதமாக உச்சநீதிமன்றத்தின் இந்த பதில் அமைத்துள்ளது. “உங்களுக்கு கருத்து சுதந்திரம் வேண்டுமா,வாருங்கள் நாங்கள் உங்களுக்கு ஒரு தக்க பாடம் கற்பிப்போம்” எனும் தொனியில் அரசுகள் தற்போது செயல்பட்டு வருகிறது. இதற்காக நம் முன்னோர் அரசியல் சாசனத்தை எழுதவில்லை.
மிக முக்கியமாக நாட்டின் அரசியல் செயல்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக தேசத்துரோகம், தேசிய பாதுகாப்பு சட்டம், ஊபா போன்ற வழக்குகளுக்கு உள்ளாக்கப்பட்டு துன்புறுத்தப்படுவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. கருத்துரிமை வேண்டும் என்று மக்கள் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி போராடும் மக்கள் மீதும் தினம்தினம் வழக்குகள் பதியப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், ஊபா போன்ற தடுப்புக் காவல் சட்டங்கள் முறையான ஆதாரங்கள் இல்லாமலேயே மாதக் கணக்கிலும், வருடக் கணக்கிலும் ஒரு குடிமகனை சிறையில் அடைக்க வழிசெய்கிறது. இந்த சட்டங்கள் சர்வதேச மனித உரிமை விதிகளுக்கு எதிராக உள்ளதாக பல மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றன. அரசின் இதுபோன்ற அதிகார மீறல் நடவடிக்கைகளுக்கும், உரிமை மீறல் நடவடிக்கைகளையும் தடுத்து மக்களுக்கு அரணாக நிற்க வேண்டிய கடமை நீதிமன்றங்களுக்கு இருக்கிறது.
அரசை விமர்சிப்பது தேசத்துரோகத்தில் சேராது – உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம்
கொல்கத்தாவில் ஊடகவியலாளர் ஒருவர் உத்தரகாண்ட் முதல்வர் மீது ஊழல் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்த ஊடகவியலாளர் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் மீதான விசாரணையில் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் “அரசு எந்திரத்தை இயக்குபவர்கள் விமர்சிக்கப்படாவிட்டால், ஜனநாயகத்தை பலப்படுத்த முடியாது. அப்படி விமர்சிப்பவர்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடர்வது ஜனநாயகத் தன்மையை மேலும் பலவீனப்படுத்தும். அரசை விமர்சிப்பது ஒருபோதும் தேசத்துரோகத்தில் சேராது” என்று தெரிவித்துள்ளது.
தேசத்துரோக வழக்குகளைப் பொருத்தவரையில் நீதித்துறையின் வழிகாட்டல்களைக் காட்டிலும் அரசியல்வாதிகளும், ஆளும் அரசாங்கமும் கூறும் நடைமுறையை பின்பற்றுவதிலேயே காவல்துறை அதிகாரிகள் ஆவலாய் உள்ளனர். அரசியல் சாசனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள சுதந்திரத்திற்கு இடையூறாக இருக்கும் பிரிட்டிஷ் காலத்து தேசத்துரோக சட்டத்தை, சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளபடி திரும்பப் பெறச் செய்வதற்கான நேரம் உச்ச நீதிமன்றத்திற்கு தற்போது வந்திருக்கிறது. ஒரு ஜனநாயக நாட்டிற்கு தடுப்புக் காவல் சட்டங்கள் தேவையா என்பதை ஜனநாயகப்படி மறு ஆய்வு செய்ய வேண்டிய தேவையும் இருக்கிறது.