பண்டாரவன்னியன் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals
தமிழீழத்தின் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்கள் இணைந்த பகுதிதான் வன்னி நிலம். வடக்கே கிளிநொச்சி, தெற்கே மதவாச்சி, கிழக்கு மேற்கு பகுதியில் கடலாகவும் உள்ள பகுதி அது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் கிணறுகள் வன்னி நாட்டின் தொன்மையை எடுத்துக் காட்டுகின்றன. இந்த வன்னி நிலத்தை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பண்டாரவன்னியன் வீழ்த்தபட்ட நாள் இன்று.
பண்டார வன்னியன் காலத்துக்கும் முன்பே, 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் அவர்களால் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது.
டச்சுக்காரர்களுக்கு காட்டிய பெரும் எதிர்ப்பு
டச்சுக்காரர்கள் இலங்கைத் தீவைக் கைப்பற்ற வந்தபோதே தமிழர் ஆட்சி அங்கு நிலவியது என்பதும், அதைக் கைப்பற்ற அவர்கள் பெரும் போர் புரிய வேண்டியிருந்ததையும் கூட அவர்களில் சிலர் குறிப்புகளாக ஏடுகளில் எழுதியுள்ளனர்.
முல்லைத்தீவில் இருந்து வற்றாப்பளை அம்மன் கோவில் வரை உள்ள 2000 சதுர மைல் நிலத்தை ஆட்சி செய்து வந்தான் பண்டாரவன்னியன். தனது சகோதரர்களை முக்கியப் பதவிகளில் வைத்து ஆட்சி செய்து வந்தான். தனது தம்பி கைலாய வன்னியனை அமைச்சராகவும், தனது இறுதி சகோதரன் பெரிய மன்னன் என்ற பெயருடையவனை தளபதியாகவும் நியமித்திருந்தான் .
1782-ல் வன்னியைக் கைப்பற்ற அவர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர், ”டச்சுக்காரர்கள் எத்தனையோ நாடுகளில் போர் புரிந்திருக்கிறார்கள். ஆனால் இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் வேறு எங்கும் அவர்கள் காணவில்லை” என்று குறிப்பிடுகிறார்.
டச்சுக்காரர்கள் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும் மன்னார், திரிகோணமலை, வன்னிக்காடுகள் என வன்னி மக்கள் இடைவிடாமல் போர் நடத்தி வந்தனர். அவர்களின் வழியில் வந்த மறக்க முடியாத மாவீரன்தான் பண்டாரக வன்னியன்.
பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு சிம்மசொப்பனமாக விளங்கியவன்
வெள்ளையர்கள் முல்லைத்தீவில் அமைத்திருந்த கோட்டையை முற்றாக அழித்து நிர்மூலம் செய்தவர். ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு சிம்மசொப்பனமாக இருந்த மாவீரன் பண்டார வன்னியன் அவனது முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டாரக வன்னியன்.
கி.பி 1803-ம் வருடம் அக்டோபர் மாதம் 31-ம் நாள் கற்சிலைமடு என்ற இடத்தில் ஆங்கிலேய தளபதி ரிபேக் என்பவனால் பண்டார வன்னியன் கொல்லப்பட்டான்.
அந்நியருக்குக் கட்டுப்படாமல் மிக நெடுங்காலம் பண்டாரவன்னியனின் ஆட்சி நீடித்ததால், அப்பகுதி அடங்காப்பற்று என்றும், வணங்காமன் என்றும் அழைக்கப்பட்டது. போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என எல்லா அந்நியர்களையும் முறியடித்த மாவீரர்கள் வன்னி மன்னர்கள் தான்.
பண்டாரவன்னியன் நினைவு நாள்
பண்டார வன்னியன் நினைவு நாள் “1803 ஆகஸ்ட் 25” என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். ஏனெனில் முல்லைத்தீவு கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது. வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான்.
அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றினான். அந்த நாள்தான் 1803 ஆகஸ்ட் 25. எனவே, பண்டார வன்னியனின் உச்சபட்சமான போர் வெற்றியே அவரது நினைவு நாளும் ஆகும் என்று அறிவித்தனர்.
கி.பி 1815-ம் ஆண்டு வரையில் கண்டியை ஆட்சி செய்து ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு தமிழகத்தில் வேலூர் சிறையில் பதினாறு ஆண்டுகாலம் அடைக்கப்பட்டு அந்த சிறையிலேயே உயிர்நீத்த கண்ணுசாமி என்ற விக்ரம ராஜசிங்கன், பண்டாரகவன்னியனின் போரை தொடர்ந்த அவரின் உற்ற நண்பராவர்.
பண்டாரவன்னியனின் போர் திறமை மிகவும் வியக்கத்தக்க வகையில் இருந்தது என்பது 1782-ல் லூயி என்கிற டச்சு ஆட்சியாளர் ஒருவர் எழுதிய நூல் வாயிலாகத் தெரியவருகிறது. அதில் லூயி டச்சுக்காரர்களான நாங்கள் உலகில் எங்கெங்கெல்லாமோ போரிட்டோம். ஆனால் இத்தகைய மாபெரும் வீரத்தினை இந்த மாவீர மன்னனைத் தவிர்த்து வேறொரு அரசனிடமும் கண்டதில்லை என எழுதியிருந்தார். எதிரிகளே வியந்த விடுதலை வீரன் பண்டாரவன்னியன் குறித்து பாயும் புலி பண்டாரவன்னியன் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி முரசொலியில் தொடர் எழுதி பின்னர் புத்தகமாகவும் வெளியிட்டார்.