தமிழ்நாடு அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து, இந்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடாக 7.5% சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளித்திட முடிவெடுத்தது. அதனை செயல்படுத்தும் வகையில் செப்டம்பர் 15 அன்று ஒரு சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கடந்த 45 நாட்களாக காலம் தாழ்த்தியது அனைவராலும் கண்டிக்கப்பட்டது.
பல்வேறு அமைப்புகள் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டங்களும் நடத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி, திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி உள்ளிட்டோர் மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியலமைப்புச் சட்டத்தின் 162-வது பிரிவின் அடிப்படையில் அரசாணையாக வெளியிட வேண்டும் என்று ஆலோசனை வழங்கினர்.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் முன்வைத்த கருத்து
”சட்ட மசோதா ஒன்று சமர்ப்பிக்கப்பட்ட பிறகு விரைவாக முடிவு எடுக்கப்பட வேண்டும். சட்டமன்றத்தில் பல ஆலோசனைகள் மற்றும் யோசனைகளுக்குப் பிறகுதான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கும். அப்படி இருக்கும்போது பல கோணங்களில் ஆலோசிக்க மேலும் கால அவகாசம் தேவையா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பலர் இணைந்து இந்த சட்டத்தை உருவாக்கி உள்ளார்கள். எனவே கூடுதல் கால அவகாசம் கேட்பது விசித்திரமானது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில் விரைவாக இதனை அமல்படுத்த வேண்டும் என்று கூறி, இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்பது தங்களுக்கு தெரியும் என்றும், ஆனால் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.
தமிழக அரசு வெளியிட்ட அரசாணை
இந்த நிலையில் நேற்று மாலை (29.10.2020) தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதை அரசாணையாக வெளியிட்டார். அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் படித்து நீட் தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கப்படும். இது எம்.பி.பி.எஸ், பிடிஎஸ், மற்றும் சித்தா, ஆயுா்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கும் பொருந்தும். தமிழகத்தில் ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வரும் இடஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில் 69 சதவீதம் இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு 7.5% சோ்க்கை அனுமதி அளிக்கப்படும்.
எந்தெந்த மாணவர்களுக்கு 7.5% பொருந்தும்?
ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி, பழங்குடியினா் நலப் பள்ளிகள், கள்ளா் சீரமைப்பு, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், மாற்றுத் திறனாளிகள், வனம், சமூக பாதுகாப்பு துறைகளைச் சோ்ந்த பள்ளிகளில் படிக்கும் மாணவா்கள் இந்த உள் ஒதுக்கீட்டுக்குத் தகுதி உடையவா்கள்.
கல்வி உரிமைச் சட்டம், கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு வரை பிற பள்ளிகளில் படித்தாலும், 9 முதல் பிளஸ் 2 வரையில் அரசுப் பள்ளிகளில் படித்தால் அவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கிடைக்கும்.
எங்கெல்லாம் நீட் தோ்வு அடிப்படைத் தகுதியாகப் பாா்க்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இந்த உள் ஒதுக்கீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும். அனைத்து கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் மாணவா்கள் சோ்க்கப்படுவா் என்றும் அந்த அரசாணை தெரிவிக்கிறது.
ஒப்புதல் அளித்துள்ள ஆளுநர்
செப்டம்பர் 15-ம் தேதி நிறைவேற்றப்பட்டு ஆளுநரால் காலம் கடத்தப்பட்டு வந்த உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு இன்று (30.10.2020) ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 26-ம் தேதி மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரலுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்துக்கு, அக்டோபர் 29-ம் தேதி பதில் கடிதம் கிடைக்கப் பெற்றதாகவும், உள்ஒதுக்கீட்டு சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது.
இந்த 7.5% இடஒதுக்கீட்டின் படி அரசு மருத்துவக் கல்லுரிகளில் 303 மாணவர்கள் படிக்க வாய்ப்பு கிடைக்கும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 75 மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டில் படிக்க முடியும். பல்மருத்துவக் கல்லூரிகளை சேர்த்தால் 420 பேர் வரை படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று மருத்துவர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.