ஹிந்துத்துவா

ஆட்காட்டிகள் வலைப்பின்னலை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ்

கர்நாடக மாநிலத்தில், ஆர்.எஸ்.எஸ்-இன் கோட்டையாக இருப்பது கடலோர மாவட்டங்களான மங்களூர், உடுப்பி ஆகியவை. வி.ஹெச்.பி, பஜ்ரங் தள், ஹிந்து யுவ சேனை போன்ற பல்வேறு ஹிந்துத்துவ அமைப்புகள் வலிமையுடன் இங்கு செயல்பட்டு வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்’இன் சோதனைக் கூடம் என்று அந்த பகுதிகளைச் சொன்னால் கூட மிகையில்லை. ”லவ் ஜிகாத்” என்ற போலி அரசியல் அங்கு இருந்து தான் உருவாகியது. இன்று இந்தியா முழுவதும் சங்கிகள் லவ் ஜிகாத் என்ற பெயரில் காதலர்களை அச்சுறுத்துவது, அவர்கள் திருமணத்தை தடுப்பதும் கிட்டத்தட்ட அன்றாட நிகழ்வாகவே மாறிவிட்டது. இந்த சூழலில் தான் ஒரு புது விதமான முயற்சியில் ஆர்.எஸ்.எஸ் இறங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது.

மாணவர்களைத் தாக்கிய காவிகள்

2021 பிப்ரவரியில் மங்களூரு தனியார் கல்லூரியைச் சார்ந்த ஏழு மாணவர்கள், எரமாயி நீர்வீழ்ச்சிக்கு சென்ற போது அங்கு ஹிந்துவ அமைப்பைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டுள்ளனர். நான்கு ஆண்கள் மூன்று பெண்கள் இருந்த அந்த மாணவர் குழுவில், ஒருவர் மாத்திரம் இஸ்லாமியர். ஒரு இஸ்லாமியருடன் சேர்ந்து சுத்துவதா என்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் அந்த மாணவர்களைத் தாக்கியுள்ளது. அந்த மாணவர்களை அடித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் புகைப்படங்களையும் எடுத்து வாட்ஸ்அப்பிலும் பரப்பியுள்ளது. இவர்களை எப்படி இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் அடையாளம் கண்டது என்று காவல்துறை விசாரிக்கும் போதுதான், நீர்வீழ்ச்சிக்குச் செல்ல கடவுச்சீட்டு எடுக்கும் கவுன்டரில் இருந்து இவர்களுக்கு தகவல் கசிந்துள்ளது தெரிய வந்துள்ளது. 

பேருந்தை நிறுத்தி இசுலாமிய இளைஞரை கத்தியால் குத்தினர்

இதே போல் மார்ச் மாதத்திலும் பல தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. பேருந்தில் பயணிக்கும் ஆண்-பெண் நண்பர்கள் மீது பேருந்தை நிறுத்தி ஆர்.எஸ்.எஸ்-சைச் சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர். பேருந்தில் இருந்த சிலரே இவர்களைப் பற்றி ஹிந்துத்துவ அமைப்பினருக்கு துப்பு கொடுத்திருக்க வேண்டும் என்று காவல்துறை கூறுகிறது. 

ஏப்ரல் 1-ம் தேதி மங்களூருவில் இருந்து இந்து பெண் ஒருவர், அஸ்வித் என்ற தன் இஸ்லாமிய நண்பருடன் பெங்களூருவிற்கு வேலை விடயமாக பேருந்தில் கிளம்பியிருக்கிறார். மாலை 4.30 மணிக்கு இணையத்தின் மூலமாக பேருந்து டிக்கெட் எடுத்துள்ளனர். இதை எப்படியோ மோப்பம் பிடித்த பஜ்ரங் தள், வி.எச்.பி அமைப்பினர் பேருந்தை இடையில் நிறுத்தி அவர்களை தாக்கியுள்ளனர். இஸ்லாமிய இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லவ் ஜிகாத்’தை தடுத்து விட்டதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வாட்ஸ்அப்பில் கொண்டாட்ட குறுஞ்செய்திகளை அனுப்பினார்கள்.

தகவல் கொடுக்கும் நபர்களை உருவாக்கி வரும் காவிகள்

இரண்டு வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் பொது இடங்களில் ஒன்றாகக் காணப்பட்டால், அவர்கள் நண்பர்களாகவே இருந்தாலும் கூட, அவர்களைப் பற்றிய தகவலைக் கடைக்காரர்களோ, பஸ் கண்டக்டர்களோ அல்லது ஆட்டோ ஓட்டுனர்களோ இந்துத்துவ அமைப்பினருக்கு தருவதாக போலீஸ் அதிகாரிகளே கூறுகின்றனர். அப்படி துப்பு கொடுப்பவர்கள் அனைவரும் இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று கூறும் காவல்துறை, பெரும்பான்மையான தாக்குதலுக்கு வழக்கு பதியவும் இல்லை.

கலப்புத் திருமணம் குறித்து அதிகாரிகளிடம் பெறப்படும் தகவல்

இந்துத்துவ அமைப்புகள் மத கலப்புத் திருமணங்களைத் தடுக்கவும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் தாக்குதலில் ஈடுபடவும் தேவையான தகவல்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலமாகவே இதுவரை பெற்று வந்துள்ளன. உத்திரப்பிரதேசத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் ஏராளம் நடந்துள்ளன. ஒரு இஸ்லாமிய ஆணும் இந்துப் பெண்ணும் பதிவுத் திருமணம் செய்ய முயற்சித்தால், பதிவர் அலுவலக அதிகாரிகளிடம் இருந்தோ, பதிவுத் திருமணங்கள் பற்றி செய்தித்தாள்களில் வரும் அறிவிப்புகள் கொண்டோ, அந்த ஆண், பெண் குடும்பத்தினருக்கு தொடர் அச்சுறுத்தல்களை கொடுத்து, பல இடங்களில் திருமணங்களையே நிறுத்தியுள்ளன சங் பரிவார அமைப்புகள். பசு பாதுகாப்பு என்ற பெயரில் தாக்குதலில் ஈடுபடும் ஹிந்த்துவ அமைப்புகள் அதிகாரிகளிடம் இருந்தோ அல்லது ஹைவே சாலைகளில் கண்காணித்தோ தகவல்களை சேகரிப்பது வழக்கம். 

ஆனால் பொதுமக்களையே ஆட்காட்டிகளாக மாற்றும் சோதனையை மங்களூர், உடுப்பி பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் செய்து வருகிறது. பொது மக்களிடையே பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்துவது தான் இவர்களின் நோக்கமாகவே உள்ளது.

மக்களை ஆட்காட்டிகளாக பயன்படுத்தும் ஹிட்லரின் நாஜி வடிவம்

உலக வரலாற்றில் இப்படி நடப்பது முதல் முறையும் அல்ல. ஜெர்மனியை நாஜிக்கள் ஆண்ட போது, கெஸ்டப்போ என்ற உளவுப் பிரிவை உருவாக்கினார்கள். யூதர்கள், கம்யூனிஸ்டுகள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் பிற சோசியலில அமைப்பைச் சார்ந்தவர்களை கெஸ்டாப்போ தன் இலக்காகக் கொண்டிருந்தது. ஆனால் இந்த கெஸ்டாப்போ அமைப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் மிகச் சிறியது. 66 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட ஜெர்மனியில், கெஸ்டப்போ அதிகாரிகளின் எண்ணிக்கை வெறும் 16,000 மட்டுமே. நாடு முழுவதும் ஆட்காட்டிகளை ஊக்குவித்து வளர்த்து விட்டதன் மூலமாகவே  இவர்களால்  திறம்பட செயல்பட முடிந்தது. 

யார் யாரைக் காட்டி கொடுப்பார் என்ற அச்சம் மக்களிடையே வளர்ந்தது. ஹிட்லரின் ஆட்சியை விமர்சித்து ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக் கூட மக்கள் அச்சப்படத் துவங்கினர். எப்படியும் அது கெஸ்டாப்போ காதுகளுக்கு போய்ச் சேர்ந்து விடும், நாம் கைது செய்யப்படுவோம் என்று அச்சப்பட்ட மக்கள் அமைதி காத்தனர். குடும்பங்களுக்குள்ளேயே கூட ஆட்சியைப் பற்றிய அதிருப்திகளை பேச தயக்கம் வந்தது. ஆட்சியைக் குறை கூறும் பெற்றோர்களை, ஹிட்லர் யூத அமைப்பைச் சேர்ந்த குழந்தைகளே காட்டி கொடுக்கும் அவலங்கள் எல்லாம் அரங்கேறின. இதன் விளைவு சமூகம் என்பதே இல்லாமல் ஆனது. 

இப்படி ஒரு சூழலை உருவாக்கத் தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் விரும்புகிறது. காட்சி மற்றும் பத்திரிக்கை ஊடகங்கள், சமூக ஊடகங்கள் அகியவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு சட்டங்களும் வரைவுகளும் தொடர்ச்சியாக இயற்றப்பட்டு வருகின்றன. ஊடகங்கள் தங்கள் பிரச்சார ஊதுகுழகளாக இருக்க வேண்டும் என்பதைத் தான் ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது. இதையும் தாண்டி சமூகத்தில் எந்த ஒரு உரையாடலும் நிகழ்வதைத் தடுக்கவே இப்படிப்பட்ட ஆட்காட்டிகளை இந்துத்துவா உருவாக்க நினைக்கிறது. யார் ஆட்சிக்கு வரப்போகிறார்கள் என்ற ஒற்றை விவாதப் புள்ளியை மட்டும் வைத்து ஹிந்த்துவா வலதுசாரி அரசியல் வீழாது என்பதைத் தான் நடக்கும் இந்த நிகழ்வுகள் நமக்கு காட்டுகின்றன.

Reference:

https://www.thenewsminute.com/article/mangaluru-hindutva-groups-wield-web-informers-target-interfaith-friends-151860

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *