கனவு

தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 1

தாழப் பறந்திடும் மேகம் கட்டுரைத் தொடரின் மூன்றாவது தொடராக கனவு காணும் வாழ்க்கை யாவும் தொடர் வெளிவருகிறது.

கொரோனா நோயின் பெருந்தொற்று அச்சத்தின் காரணமாக வீட்டினுள்ளே அனைவரும் முடங்கியிருக்கும் சூழலில் ஒரு நாள் என்பது எந்தவித வேறுபாடும் இல்லாமல் நாள்தோறும் ஒரே விதமாகவே கழிகின்றது. நேற்றுக்கும் நாளைக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. பெரும்பாலான மக்கள் தங்களது எதிர்காலம், நோய் அச்சம் இன்னும் பல கவலைகளால் உறக்கத்தை தொலைத்திருக்கின்றனர். பெருந்தொற்று காலத்தில் உலகெங்கிலும் மக்களால் ஒரு விடயம் பதிவாகிக்கொண்டே வருகிறது. அது அவர்கள் காணும் கனவுகள். இயல்பான நாட்களில் அவர்கள் கண்ட கனவுகளைவிட இப்போது அதிகமாக ‘கொடுங்கனவு’களை (Nightmare) காண்பதாக தெரிவிக்கிறார்கள். இத்தகைய கொடுங்கனவு காணுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

நெருங்கிய உறவுகளை, நண்பர்களை இழந்து வாடுகின்ற நாட்களில் கூடுதல் துயரமாக அவர்கள் காணும் கனவுகள் மாறியிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட கொடுங்கனவுகளால் உறக்கம் இழந்து, மனச்சோர்வு அடையும் மக்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிப்பதாக தெரிகிறது. உண்மையில் அறிவியல்பூர்வமாக ‘கனவு’ என்றால் என்ன? கனவுகள் ஏன் தற்போது கொடுங்கனவுகளாக மாறியிருக்கிறது ? என்பது பற்றியே இந்த தாழப் பறந்திடும் மேகம் 3ம் பகுதியில் பார்க்கவிருக்கிறோம். (இதற்காக நிறைய மருத்துவ ஆய்விதழ்களை, செய்திகளைப் படித்து தெளிந்து அவற்றை ஒரு கட்டுரையாக தருகிறோம். எங்களின் இந்த கட்டுரைக்கான கடின உழைப்பிற்கு உங்கள் கருத்துக்களை பதில்களாக எதிர்நோக்குகிறோம்.) 

தற்போதைய காலத்தின் விசித்திரமான நிகழ்வாக தொற்றுநோய் உச்சத்திலிருக்கும் நாடுகளில் வசிக்கும் மக்கள் தாங்கள் வழக்கத்திற்கு மாறாக விசித்திரமான கனவுகளை காண்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் இத்தகைய போக்கு அதிகரித்துள்ளதாக தெரிகிறது. தங்களது அன்புக்குரியவர்களின் உடல்நலம், மருத்துவ சிகிச்சை, வேலையிழப்பு மற்றும் பல்வேறு கவலைகள் வெளிப்பட்ட மோசமான கனவுகளுடன் ஒவ்வொரு காலையும் அவர்களுக்கு தடுமாற்றத்துடனே விடிந்திருக்கிறது. ஓவ்வொரு விடியலும் முந்தைய இரவின் கனவுகளால் ஏற்பட்ட குழப்பங்களாலேயே தொடங்கின.

குறிப்பாக மருத்துவ முன்களபணியாளர்கள் இத்தகைய கொடூரமான கனவுகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மிக மோசமாக பாதிக்கப்பட்ட சீன நகரம் வூகானில் ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் 114 மருத்துவர்கள் மற்றும் 414 செவிலியர்கள் பங்கேற்ற சமீபத்திய ஆய்வில் அவர்களில்  கால்பகுதிக்கும் மேற்பட்டவர்கள் மிக மோசமான மற்றும் கொடூரமான கனவுகளை அடிக்கடி காண்பதாகத் தெரிவித்தனர்.  உலகெங்கும் ஒவ்வொரு நாட்டிலும் கடைபிடிக்கப்படும் ஒவ்வொரு ஊரடங்கு காலத்திலும் இதுபோன்று கனவினால் அவதிப்படுபவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகத் தெரிகிறது. இதில் பெண்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கும், கவலைகள் மற்றும் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டோர்க்கும் இனிவரும் நாட்களில் இந்த கனவுகள் மிக ஆபத்தானதாக மாறக்கூடும் என்று கனவுகளை ஆய்வுசெய்யும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் பி.எச்.டி ஆய்வாளர் ‘ரேச்செல் ஹோ'(Rachelle Ho, PhD candidate at McMaster University,Canada) இதைப்பற்றி கூறும்போது வூகானில் மருத்துவ முன்களப் பணியாளர்கள் 2020-ம் ஆண்டில் சந்தித்த மனஅழுத்தம் அவர்களுக்கு ‘நீண்டகாலம் தொடரும் மனஅழுத்தமாக’ மாறியிருக்கிறதென்றும், மேலும் இது கடந்த காலங்களில்  மிகப்பெரிய போர்கள் நடந்தபோது மக்கள் சந்தித்த மனஅழுத்ததிற்கு இணையானதாகவும் இத்தகைய நாட்பட்ட மனஅழுத்தம் அவர்களின் அறிவாற்றல் செயல்திறனில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்.

மேலும் அடிக்கடி மோதல்கள் நிகழும் பாலஸ்தீனத்தின் காஸா நகரில் 10 முதல் 15 வயதுள்ள பள்ளி மாணவர்களிடம் அவர் நடத்திய ஆய்வில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அடிக்கடி கொடுங்கனவுகளால் பாதிக்கப்பட்டிருப்பதையும் குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு நான்கு இரவுகளை அத்தகைய கொடுங்கனவுகளால் கழிப்பதும் தெரியவந்திருக்கிறது.

பொதுவாக கனவுகள் மனநலத்துடன் வலுவான தொடர்புடையவை. தெளிவான சில கனவுகள் அதற்கு முந்தைய நாளின் உணர்ச்சிகளை செயல்படுத்த உதவுகின்றன. கெட்டகனவுகள் ஏன் கொடுங்கனவுகளாகவும், அச்சமூட்டும் கனவுகளாகவும் மாறுகின்றன என்பதை அறிந்தால்தான் அத்தகைய கனவுகளின் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியும்”

என்கிறார் மருத்துவ உளவியலாளர் ‘ஜோன் டேவிஸ்’ (Joanne Davis, a clinical psychologist at the University of Tulsa).

‘கனவு’ என்பது என்ன? 

எளிதாக சொல்வதானால் ‘கனவு’ என்பது நாம் உறங்கும்போது நம் மனம் உருவாக்ககூடிய கதைகள் மற்றும் படங்கள் எனலாம். அவை பொழுதுபோக்காகவும், வேடிக்கையாகவும், காதல் உணர்வை தூண்டக்கூடியதாகவும், குழப்பமானவையாகவும், பயமுறுத்துவதாகவும் மற்றும் சில நேரங்களில் வினோதமானவையாகவும் நம்மால் புரிந்துகொள்ளப்படுகிறது. உண்மையில் ‘கனவுகள்’ என்பவை விஞ்ஞானிகளுக்கும் உளவியல் மருத்துவர்களுக்கும் இன்றுவரை தொடந்துவரும் ஒரு மர்மத்தின் ஆதாரமாகும். கனவுகள் ஏன் ஏற்படுகின்றன? அவற்றிற்கு என்ன காரணம்? அவற்றை நாம் கட்டுப்படுத்த முடியுமா?அதற்கு முன் கனவுகள் பற்றிய சில உண்மைகளைபார்ப்போம்.

  • நாம் காணும் பெரும்பாலான கனவுகள் நமக்கு நினைவிலிருப்பதில்லை. ஆனால் நாம் அனைவரும் ஒரு இரவில் மூன்றிலிருத்து ஆறு கனவுகள் காண்பதாகத் தெரிகிறது.
  • ஒவ்வொரு கனவினுடைய காலநேரமும் சுமார் 5 முதல் 20 நிமிடங்கள் வரை நீடிக்கின்றன.
  • ஒரு நபர் படுக்கையில் இருந்து எழும் நேரத்தில் அவருக்கு ஏறத்தாழ 95% சதவீத கனவுகள் மறந்து விடுகின்றன.
  • கனவு என்பது நீண்டகால நினைவுகளைப் புரிந்துகொள்ளவும் அவற்றை மேம்படுத்தவும் உதவுகின்றன.
  • பார்வையுள்ளவர்களுடன் ஒப்பிடும்போது பார்வையற்றவர்கள் அதிக உணர்ச்சிகரமான கூறுகளுடனான  கனவுகளை அதிகம் காண்கிறார்கள்.

கனவுகள் பற்றிய கோட்பாடுகள்

நாம் ஏன் கனவு காண்கிறோம் என்பதில் அறிவியல்பூர்வமாக பல கோட்பாடுகள் உள்ளன. கனவுகள் வெறுமனே தூக்க சுழற்சியின் ஒரு பகுதியா, அல்லது அவை வேறு ஏதேனும் நோக்கத்திற்காக செயல்படுகின்றனவா? இதற்கு விடையளிக்கும் விளக்கங்கள்,

  • கனவுகளென்பது நாம் மயக்கமுற்றுள்ள ஆசைகளையும் மற்றும் விருப்பங்களையம் குறிக்கின்றன.

  • உறக்கத்தில் நம் மூளை மற்றும் உடலில் இருந்து வெளிப்படும் சீரற்ற சமிக்ஞைகளை விளக்குகிறது.
  • பகலில் சேகரிக்கப்பட்ட தகவல்களை ஒருங்கிணைகிறது மற்றும் செயலாக்குகிறது.
  • உளவியல் சிகிச்சையின் ஒரு வடிவமாக வேலை செய்கிறது.

பொதுவாக கனவுகள் மனநலத்துடன் வலுவான தொடர்புடையவை தெளிவான சில கனவுகள் அதற்கு முந்தைய நாளின் உணர்ச்சிகளை செயல்படுத்த உதவுகின்றன. கெட்ட கனவுகள் ஏன் கொடுங்கனவுகளாகவும், அச்சமூட்டும் கனவுகளாகவும் மாறுகின்றன என்பதை அறிந்தால்தான் அத்தகைய கனவுகளின் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியும்”

என்கிறார் மருத்துவ உளவியலாளர் ‘ஜோன் டேவிஸ்’ (Joanne Davis, a clinical psychologist at the University of Tulsa).

டேவிஸ் போன்ற உளவியல் நிபுணர்கள் நம்முடைய கனவுகளுக்கும் , உளவியல் சிக்கல்களுக்கும் இடையேயான தொடர்புகளையும் அவை ஒருவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கும்போது எப்படி அவரின் உணர்வு நிலையை நிலைப்படுத்தி வைத்திருக்கிறது என்பது பற்றியும் ஆராயத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாள் உறக்கத்திலும் முந்தைய நாளின் நினைவுகளை ஒழுங்கமைத்து அவற்றை ஒரு நினைவுக் கோப்பாக மாற்றுகிறோம், மேலும் பழைய நினைவுகளில் தேவையானவற்றை நினைவுகளில் சேமித்தும் தேவையில்லாதவற்றை அழித்தோ அல்லது மாற்றியமைத்தோ நினைவுகளில் சேமித்து வைக்கிறோம். இந்த செயல்கள் உறங்கும் நேரம் முழுவதும் நிகழ்வதாக நாம் நினைக்கிறோம். ஆனால் அப்படியல்ல. உறக்கத்தின் ஒரு பகுதியான ‘கண்கள் அலைவுறும் நேரம்’ (Rapid Eye Movement – REM) பகுதியில் நிகழ்கிறது. இந்த பகுதி ஒருவர் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்வதற்கு முன்னும் அல்லது நாம் விழிப்பதற்கு முன்னும் நிகழ்கிறது. இந்த பகுதியில் நாம் வாழ்வின் மிக உணர்ச்சிகரமான பகுதிகளை நம்மை அறியாமலேயே சேமித்து வைக்கிறோம். இந்த நினைவுகள்தான் அதன்பின் வரக்கூடிய கனவுகளின் பொருளாக மாறுகின்றன.

இதுவரை கண்டறிந்த சான்றுகள் மற்றும் புதிய ஆராய்ச்சி முறைகளிலிருந்து  கனவு காண்பது பல செயல்பாடுகளுக்கு உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் ஊகித்துள்ளனர்.

தொடரும்…

இக்கட்டுரையின் அடுத்த பாகத்தைப் படிக்க:

தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 2

– அருண்குமார் தங்கராஜ், Madras Review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *