இஸ்லாமியப் பெண்கள்

இஸ்லாமியப் பெண்களின் புகைப்படங்களை ஏலம் விடும் சங்கிகள்

இந்திய இஸ்லாமியப் பெண்கள் பலரின் புகைப்படங்களை “சுல்லி டீல்ஸ்” (Sulli Deals) என்ற இணையதளத்தின் மூலம் சங்கிகள் ஏலம் விட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுல்லி என்ற சொல் இஸ்லாமியப் பெண்களை குறிக்கும் ஒரு தரக்குறைவான வார்த்தை. சங்கிகள் இஸ்லாமிய பெண்களின் சமூக வலைதளக் கணக்குகளில் இருந்து அவர்களின் புகைப்படங்களை எடுத்து, அதை சுல்லி டீல்ஸ் இணையதளத்தின் மூலம் ஏலம் விட்டிருக்கிறார்கள். 

ஏலம் எடுப்பவருக்கு பெண்களின் புகைப்படம் பெயர் மற்றும் ட்விட்டர் கணக்கு விவரங்களை அந்த இணையதளம் “Your sulli deal of the day is…” என்ற தலைப்பிட்டு அளித்தது. பத்திரிக்கையாளர்களாக, சமூக செயற்பாட்டாளர்களாக, கலைஞர்களாக, ஆய்வாளர்களாக இருக்கும் இஸ்லாமியப் பெண்களின் கணக்குகள் தான் பிரதானமாக குறிவைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து குறிவைக்கப்படுகிறார்கள்

தங்கள் பெயர் விவரங்கள் இந்த இணையத்தில் பகிரப்பட்டுள்ளதைக் கண்டு பதைத்த பல இஸ்லாமியப் பெண்கள் புகார் அளித்தத்தைத் தொடர்ந்து இந்த இணையதளமும், அந்த இணையதளத்தை இயக்கிய நான்கு சங்கிகளின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்படுள்ளது. சைபர் கிரைமில் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது கேள்விக் குறி தான். ஏன் என்றால் இது முதல் நிகழ்வு அல்ல. 

மே மாதம் இதே போல் ரமலான் ஈகைத் திருநாள் அன்று பல இந்திய மற்றும் பாகிஸ்தான் பெண்களின் புகைப்படங்களை சங்கிகள் சமூக ஊடகங்களில் ஏலம் விட்டனர். யூட்யூபில் தொடர்ந்து இஸ்லாமிய வெறுப்பு கருத்துகளை பதிவிட்டு வரும்  ‘Liberal Doge Live’ என்ற கணக்கு இந்த பெண்களின் புகைப்படங்களை “வந்து உங்கள் காமத்தை இந்த புகைப்படத்தைப் பார்த்துத் தீர்த்துக் கொள்ளுங்கள்” (quench your lust with your eyes) என்று தலைப்பிட்டு வெளியிட்டது. 

இதில் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள சங்கிகள் தொடர்பை அறிந்த பின், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரென் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இதை எதிர்த்த #IamWithLiberalDoge என்று சங்கிகள் டுவிட்டரில்  பதிவிடும் கேவலமும் அரங்கேறியது.

இஸ்லாமியப் பெண்கள்

சங் பரிவார் அமைப்பின் பிரச்சாரம்

லவ் ஜிஹாத் என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்கள் இந்து பெண்களை குறிவைப்பதாக ஒரு பொய் பிரசாரத்தை ஆர்.எஸ்.எஸ் ஒரு புறம் செய்தாலும், உண்மை தலைகீழாகத் தான் இருக்கிறது. Hindu Jagran Manch என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 2100 இஸ்லாமியப் பெண்களை இந்துக்கள் மதம் மாற்றி திருமணம் செய்யவேண்டும் என்று “beti bachao, bahu lao” என்ற பெயரில் 2017-ம் ஆண்டில் ஒரு பிரச்சாரத்தை செய்தது.

சவார்க்கரின் அரசியலே இது

சங்கிகளின் இந்த மனநிலையை ஏதோ எதேச்சையானதாகக் கருதிவிடக் கூடாது. இந்த மனநிலை ஷாகாக்களில் அவர்களுக்கு கற்றுத் தரப்படும் ஹிந்துத்துவ சிந்தாத்ததின் ஒரு பகுதி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான சவார்க்கர், தன்னுடைய ”Six Glorious Epochs of Indian History” கற்பழிப்பை ஆதரித்து எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் எட்டாம் அத்தியாயம் “Perverted Conception of Virtues” (நற்பண்புகள் குறித்த பிறழ்வான பார்வை). இஸ்லாமிய மன்னர்களை வெற்றி கொண்டபோது எல்லாம் இந்து மன்னர்கள் இஸ்லாமியப் பெண்களை கற்பழிக்காமல் விட்டு விட்டது தான் இந்திய வரலாற்றில் மிகப் பெரிய தவறு என்பது தான் இந்த அத்யாயத்தின் சாராம்சம். இப்படி ”தவறு” செய்த இந்து மன்னர்களின் வரிசையில் மராட்டிய மன்னர் சிவாஜியும் வைக்கப்படுகிறார். இதை நியாயப்படுத்த “இஸ்லாமியர்கள் தாங்கள் தோற்கடித்த நாட்டின் வேற்று மதப் பெண்களை கற்பழிப்பதை, தங்கள் மதக் கடமையாக” கொண்டிருந்தார்கள் என்ற பொய்யை கட்டவிழ்த்து விட்டார். மதத்தை அடிப்படையாக வைத்து போலியான தேசியத்தை கட்டமைக்க நினைத்த சவார்க்கருக்கு இந்து தர்மத்தை காப்பாற்ற இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை. 

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் காவி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்

ஆர்.எஸ்.எஸ் தங்கள் ஷாக்காக்களில் பயிற்றுவிக்கும் பாடம் இது தான். இதனால் தான் சங்கிகளுக்கு தாங்கள் செய்வது தவறு என்ற குற்ற உணர்வு சிறிதும் இருப்பதில்லை. குஜராத் கலவரம், உத்திரப் பிரதேச கலவரம் என்று சங்கிகள் இஸ்லாமியர்கள் மீது கலவரம் கட்டவிழ்த்து விட்ட இடங்களில் எல்லாம் இஸ்லாமிய பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஜம்மு-காஷ்மீர் கத்துவாவில் எட்டு வயது சிறுமி ஆசிஃபா கடத்தி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது, உத்திரப் பிரதேசத்தில் உன்னோ என்ற இடத்தில் 17 வயது சிறுமி பாஜக சட்டமன்ற உறுப்பினரால் கற்பழிக்கப்பட்டது, ஹத்ராசில் தலித் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது ஆகிய நிகழ்வுகளில் ஆர்.எஸ். எஸ் கற்பழித்தவர்களுக்கு ஆதரவாகவே முழுக்க முழுக்க வெளிப்படையாக செயல்பட்டது.

ஆசிஃபா விவகாரத்தில் ஆசிஃபாவின் உடலை தங்கள் சொந்த நிலத்தில் புதைப்பதற்குக் கூட சங் பரிவார அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து அந்த குடும்பத்தையே அச்சுறுத்தியது. இந்த அச்சுறுத்தலுக்கு பயந்து பக்கத்து ஊருக்கு ஆசிஃபாவின் உடல் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.  பாலியல் வன்புணர்வு செய்தவர்களுக்கு ஆதரவாக ஹிந்து எக்தா மன்ச் என்ற சங் பரிவார அமைப்பு கூட்டிய கூட்டத்தில் பாஜகவின் இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்டு ”எத்தனையோ பெண்கள் சாகிறார்கள்.. ஒரு குழந்தை இறந்ததற்கா இவ்வளவு பெரிய விசாரணை” என்று பேசினார்கள். இந்த வக்கிரமான மனநிலையை சவார்க்கர் போதிக்கும் ஹிந்த்துவ பாடத்தின் வாயிலாகவே புரிந்து கொள்ள முடியும்.

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்போம் (Beti Bachao, Beti Padhao Yojan) என்ற திட்டத்தை மோடி சில காலத்திற்கு முன் தொடங்கி வைத்தார். ஆர்.எஸ்.எஸ் கொள்கையும் சங் பரிவார அமைப்புகளும் உருவாக்கும் அரசியல் சூழல் இருக்கும் வரை குழந்தையே ஆனாலும் சரி, பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இருக்கப்போவது இல்லை.

Reference:

1. https://clarionindia.net/right-wing-twitter-accounts-target-muslim-women-with-lewd-remarks/

2. https://www.thenewsminute.com/article/open-source-website-targets-muslim-women-uses-their-pics-and-names-deal-151780

3. https://www.indiatoday.in/india/story/kathua-rape-case-2-bjp-ministers-attend-rally-in-support-of-accused-1181788-2018-03-04

– அருண் காளிராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *