ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்றதில் இருந்தே தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், மாநில அரசின் செயல்பாடுகளையும் முடக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம்.
அரசியல் சட்டம், மதச்சார்பின்மை மற்றும் மாநில உரிமைகள் ஆகிய சனநாயக விழுமியங்களுக்கு எதிராக பொதுவெளியில் தொடர்ந்து பேசி வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன் ஐஏஎஸ் தேர்வு எழுதும் மாணவர்கள் இடையே ஆளுநர் மாளிகையில் ஆர்என் ரவி ஆற்றிய உரை சர்ச்சைக்குள்ளானது.
![](https://madrasreview.com/wp-content/uploads/2023/04/tamilnadu-governer.jpg)
அதில், ‘தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை எனில் அது இறந்துபோனதாகவே பொருள்’ எனவும், ‘வெளிநாட்டிடம் நிதி வாங்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலை போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக போராடுகிறார்கள்‘ என்றும் சான்றுகள் இல்லாமல் குற்றஞ்சாட்டியும் பேசி இருந்தார்.
மக்கள் ஆட்சியை மதிக்காத ஆளுநர்
தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் இறையான்மை உரிமையை மறுக்கும் வகையிலும், தமிழ்நாட்டில் இயங்கும் மக்கள் இயக்கங்களின் மேல் பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துவதை எதிரத்தும் ஆளுநர் பேசியதற்கு பல்வேறு சனநாயக அமைப்புகள், அரசியல் கட்சியினர் ஆளுநரின் தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிராக செயல்படுகின்ற தொடர போக்கினை கண்டித்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு சட்டமன்ற சிறப்பு அவையைக் கூட்டி தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு அறிவுறுத்தும் படி தனித் தீர்மானம் கொண்டு வந்தது. இந்தத் தீர்மானத்திற்குப் பிறகு தமிழ்நாடு அரசால் இரண்டு முறை இயற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட முன்வடிவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருப்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்தது.
![](https://madrasreview.com/wp-content/uploads/2023/04/tamilnadu-protest-1-1024x583.jpg)
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் போல தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட 19 சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் ஆட்சியை முடக்கும் வகையில் செயல்பட்டும் , மாநில அரசின் நோக்கங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து ஆளுநர் கருத்து தெரிவித்தும் வருகிறார்.
கடந்த சனவரியில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கொடுத்த ஆளுநர் உரையை வ், குறுக்கியும் வாசித்து மாநில அரசினை நகைப் பொருளாக மாற்றினார். ஆளுநர் உரையில்,’ சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, பெண்ணுரிமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ ஆகிய சொற்களை திட்டமிட்டே தவிர்த்தார். இதன் மூலம் இவற்றுக்கெல்லாம் தான் எதிரி என்பதை சொல்லாமல் கூறியிருக்கிறார், ஆளுநர்.
தமிழ்நாட்டினரின் மாபெரும் போராட்டம் மற்றும் அதன் உச்சமாக சங்கரலிங்கனார் அவர்களின் உயிர் ஈகத்தால் பெற்ற தமிழ்நாடு எனும் வரலாற்றுப் பெயரை தமிழ்நாடு என அழைக்கத் தேவையில்லை எனக் கூறினார். இதனை எதிரத்து கடும் கண்டனங்கள் எழவே தான் கூறியது தவறாக விளக்கப்படுத்தப்பட்டதாக மறுப்பு அறிக்கை வெளியிட்டார்.
நீட் விலக்குச் சட்டத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலந்தாழ்த்தினார். முதலைமச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் சட்டமன்றத்தில் நீட் விலக்குச் சட்டத்தினை விரைவில் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தியதன் பெயரில் நீட் விலக்குச் சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.
தான் வகிக்கக் கூடிய அரசமைப்புப் பதவியை மறந்து, போகும் இடங்களில் எல்லாம் சனாதன வெறிக் கொள்கையைப் பரப்புரை செய்தார். திராவிடம், திருக்குறள் போன்றவற்றை காலனி ஆட்சியாளர்கள் சதி செய்து திருத்தினர் எனும் வரலாற்றுக்குப் புறம்பான கருத்தைக் கூறினார்.
இவ்வாறு தன்னை ஆளுநராக நியமித்த ஒன்றிய பாஜக அரசின் ஏவலாளாக மட்டுமல்ல ஆர்எஸ்எஸ் இன் சனநாயக மறுப்பு ,சனாதனக் கொள்கைக்கு விசுவாசமாகவும் ஆளுநர் நடந்து வருகிறார். ஏற்கனவே நாகலாந்தில் ஆர்என் ரவி ஆளுநராக இருந்த போது அங்குள்ள மாநில மக்களின் நலன்களுக்கு எதிராக செயற்பட்டதால் வெளியேற்றப்பட்டார். தற்போதும் இவ்வாறு தொடர்ந்து மாநில உரிமைகளை அழிக்கும் முகவராக ஆளுநர் ஆர்என் ரவி தொடர்ந்து செயற்பட்டு வருகிறார்.
பாஜக -ஆர்எஸ்எஸ் இன் இந்துராஷ்டிர கொள்கைக்கு சேவை முகவர்களாய் ஆளுநர்கள்!
ஆர்எஸ்எஸ் தொடங்கிய நூற்றாண்டை ஒட்டி சட்டப்பூர்வ வழியில் இந்துராஷ்டிரத்தை அமைக்கும் நிகழ்ச்சிநிரலோடு அதன் தேர்தல் கட்சியான பாஜக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒன்றியத்தின் தன்னாட்சி அமைப்புகளான தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ) , அமலாக்கத்துறை மற்றும் நீதித்துறை உட்பட அனைத்து நிறுவனங்களையும் தன்வயமாக்கி வைத்திருக்கிறது;
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதித்துவ நிறுவனங்களான நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற நிறுவனங்களின் சனநாயக நெறிமுறையை ஒழித்துவிட்டு, பாசிச கொடுங்கோல் ஆட்சியை நிலைநிறுத்த அந்நிறுவனங்களின் மீது கடுந்தாக்குதலைத் தொடுத்து வருகிறதுவருகிறது;
அரசியல் சட்டத்திலுள்ள கருத்துரிமை, சனநாயக உரிமை , சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மை கோட்பாடுகளை அழித்துவிட்டு மனுவாத சட்டத்தை நடைமுறைப்படுத்த முயன்று வருகிறது.
இந்துராஷ்டிரம் எனும் அகண்ட இந்திய தேசியத்தை அமைப்பதற்கு மொழிவழி மாநிலங்கள் எனும் தேசிய இன சனநாயக அலகுகளை இல்லாமல் செய்வது , மாநில உரிமைகளைப் பறித்து மாநிலங்களை எந்த அதிகாரமும் அற்ற நகராட்சி கழகங்களாக மாற்றுவது ; மாநிலங்களை ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப் பகுதிகளாக மாற்றுவது எனும் அதிகார குவிப்பு அரசியலை நோக்கி ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. காசுமீரின் சிறப்புரிமை பறிக்கப்பட்டு இரண்டாக உடைக்கப்பட்டு ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றப்பட்டது என்பது ஒன்றிய- பாஜக ஆட்சியாளர்களின் கடுங்கோட்பாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு.
இந்த அதிகார குவிப்பு அரசியல் கருத்தியலை ஞாயப்படுத்த முசுலீம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களை எதிரிகளாகக் காட்டி பெரும்பான்மை மக்களை இந்துப் பார்ப்பனிய தேசிய அடையாளத்தில் திரட்ட சங்பரிவாரங்களின் பல்வேறு துணை அமைப்புகள் மூலம் கொடூரமான வெறுப்பு பரப்புரையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களை சாதி -மத அடிப்படையில் பிளவு படுத்துவதன் மூலம் தனது பனியா – பார்ப்பனிய வர்க்க நலன்களுக்கான முகத்தை பாஜக – ஆர்எஸ்எஸ் மறைத்து வருகிறது.
![](https://madrasreview.com/wp-content/uploads/2023/04/RN-RAVI-TUTY-1024x512.jpg)
இந்த செயற்பாடுகளுக்கு நாடாளுமன்றத்தில் பாஜக பெற்றிருக்கிற பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி வருகிறது.
எதிர்கட்சிகளை அமலாக்கத்துறையை ஏவி பொய் வழக்குகளைப் போட்டு அச்சுறுத்தி வருகிறது. ஒட்டுண்ணிகள் மூலம் எதிர்க்கட்சியினரை விலைக்கு வாங்குவதன் மூலம் அவர்களை தங்களது காலாட்படையாக பயன்படுத்திக் கொள்ள கடும் போட்டியில் இறங்கியிருக்கிறது.
ஒன்றிய- பாஜக அரசினுடைய இத்தகைய அரசியல் போக்கின் ஒரு பகுதியாகவே ஆர்எஸ்எஸ் ஐச் சேர்ந்த ஆளுநர்களை பதவியில் அமர்த்தி, மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு எதிராக மாநிலங்களில் இரட்டை ஆட்சி முறையை ஆளுநர்கள் மூலம் செயற்படுத்தி வருகிறது. மாநில அரசின் அதிகாரத்தில் நாள்தோறும் ஆளுநர்கள் தலையீடு செய்வதன் மூலம் மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
மக்களின் நலன்களுக்காக மாநில அரசுகள் கொண்டு வரும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மறுப்பது அல்லது கிடப்பில் போடுவது மூலம் மாநில அரசுகளை செயற்படாமல் முடக்கி வருகிறது ; மாநிலக் கட்சிகளில் போட்டிக் குழுக்களை உருவாக்கி சட்டத்திற்குப்புறம்பாக ஆட்சியமைக்க பாஜகவின் கைப்பாவைக் கட்சியினரின் ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்க முயல்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல பஞ்சாப் , கோவா , ஜார்க்கண்ட் , தெலுங்கானா , கேரளா , புதுதில்லி , காசுமீர் மற்றும் மகாராஷ்டிரம் என ஆளுநர்களின் இத்தகைய மக்கள் பகைப்போக்கு ஒன்றியத்தின் அன்றாட நிகழ்ச்சி நிரலாக மாறியிருக்கிறது.
ஆளுநர்களின் எதேச்சதிகாரப் போக்கினை எதிர்த்து ஆட்சியாளர்களும், அமைச்சர்களும் வீதியிலே இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆளுநர்கள் ஒன்றிய அரசால் நேரடியாக நியமிக்கப்படுகின்ற சட்ட நடைமுறையை ஆளுநர்களின் வழி மாநில அரசுகளுக்கு எதிராக ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது.
ஒன்றியமா? கூட்டரசா?
இந்திய ஒன்றியம் பல்வேறு மொழிவழி தேசிய இனங்களைக் கொண்ட ஒரு துணைக்கண்டமாகும். பிரிட்டீசு ஆட்சியாளர்களை எதிர்த்து உள்நாட்டு மக்கள் நடத்திய கடும் போராட்டத்தை ஒடுக்கிய பிரிட்டீசார் தங்களது படைபலத்தின் வழியாகவே பிரிட்டீசு இந்தியாவை உருவாக்கினர்.
![](https://madrasreview.com/wp-content/uploads/2023/04/college-std-1024x634.jpg)
இந்தத் துணைக்கண்டத்தை ஆளுவதற்கு இசைவாக அவர்கள் மத்திய சட்டமன்றம் மற்றும் மாகாண சட்டமன்றங்களை 1935 சட்டத்தின் வழி உருவாக்கினர்.
இந்திய துனைக்கண்ட மக்களால் மாகாணங்களில் தேரந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை இருந்த போதிலும் அமைச்சரவையின் முடிவுகளைக் கட்டுப்படுத்தும் இறுதி அதிகாரம் கொண்டவராக பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்ட ஆங்கிலேயர் ஒருவரைக் கொண்ட மாகாண ஆளுநர் பதவி இருந்தது. ஆளுநருக்கு என உளத்தேர்வு அதிகாரங்கள் பிரிட்டீசு இந்திய சட்டத்தில் இருந்தது.
பிரிட்டீசு ஆட்சியாளர்களை எதிர்த்து களமாடிய காங்கிரசு கட்சி இந்தியா பல்வேறு தேசிய இனங்கள் கொண்ட ஒரு துணைக்கண்டம் என ஏற்றுக் கொண்டது. மொழி வழியாக மாகாணங்களில் அதன் கிளைகளை உருவாக்கியது. தேசிய இனங்களின் அரசுகள் இணைந்த கூட்டாட்சி அரசாகவே விடுதலை பெற்ற இந்தியா இருக்கும் எனக் கூறியது. இந்தியாவிற்கான ஒரு அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன் 1946 ல் பண்டிதர் நேரு மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்களும் பாதுகாப்பு , வெளிநாட்டு உறவு போன்ற அதிகாரங்கள் மட்டுமே ஒன்றிய அரசுக்கு இருக்கும் இதுபோக மாநிலங்கள் விரும்பாத எஞ்சிய அதிகாரங்களையும் அது கொண்டிருக்கும் என ஒரு வரைவை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்தார்.
பனியா முதலாளிகளும் மாநில உரிமையும்
ஆனால் அரசியல் சட்டம் அமைக்கப்பட்ட பிறகு பிர்லா , தாக்குர் தாஸ் போன்ற பனியா முதலாளிகள் தங்களுடைய சந்தை நலன்களை பாதுகாக்க ஒன்றியத்தில் அதிகாரங்கள் குவிக்கப்பட்ட மத்திய அரசையே விரும்பினர். அதனடிப்படையிலேயே மாகாணங்கள் எனும் அன்றைய மாநிலங்களைக் குற்றவாளிகளைப் போல கண்காணிக்க ஆளுநர் பதவியை ஒன்றிய அரசால் நியமனம் செய்யும் பதவியாக அரசியல் சட்டத்தில் ஆக்கிக் கொண்டனர்.
ஆளுநர் பதவிக்கு எதிராக மாநிலங்களின் சனநாயக உரிமைக்காக ஆளுநர் பதவி தேவையில்லை என்ற குரல்கள் மிகக் குறைவானதாகவே இருந்தது. ஆளுநர்கள் மாநிலங்களில் எந்தக் கட்சி பெரும்பான்மை பெறுகிறதோ அந்தக் கட்சியின் சார்பாக முதல்வரை நியமிப்பவர்களாக ; ஆளுநர்கள் விருப்பப்பட்டால் மாநில ஆட்சியினை கலைக்கும் உரிமை பெற்றவர்களாக ; மாநில சட்டமன்றங்கள் இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, கிடப்பில் போடுவது, சட்டமன்றங்களுக்கே திருப்பி அனுப்புவது அல்லது குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்புவது எனும் அதிகாரங்கள் ஆளுநருக்கு வழங்கப்பட்டதாக அரசியல் சட்ட உறுப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்த அம்பேத்கர் ஆளுநர் பதவி என்பதை ‘அரசியலமைப்பின் படி அமைச்சரவையின் ஆலோசனையின் படியும், அதன் சட்ட வரைமுறைக்கு உட்பட்டு செயற்படும் வெறும் அலங்காரப் பதவி‘ என்பதாக வலியுறுத்திய போதிலும் நடைமுறையில் அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு மாநில ஆளுநர்கள் ஒன்றிய அரசின் தாளத்திற்கு ஆடுகிறவர்களாகவே செயல்பட்டனர். ஒன்றிய அரசுக்கு விருப்பமில்லாத மாநில ஆட்சிகள் பலமுறை 356 பயன்படுத்தி கலைக்கப்பட்டன.
1994 பொம்மை வழக்கு
1994 எஸ்.ஆர் பொம்மை எதிர் ஒன்றிய அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசின் மாநில ஆட்சிக் கவிழ்ப்புக்கு கடிவாளம் இடும் வரை மாநில ஆட்சி அதிகாரம் ஒன்றிய அரசின் முகவர்களான ஆளுநர்களின் உளத்தேர்வு அதிகாரத்தின் கடைப்பார்வைக்கு கட்டுபட்டதாகவே இருந்தது.
1974 சாம்சர் சிங் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு மாநில ஆளுநர்கள் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்களே எனக் கூறிய போதும் சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவது அதற்காக எடுத்துக் கொள்ளும் கால அளவுகள் உட்பட பலவற்றில் இன்று வரை ஒரு தெளிவான வரையறை இல்லாததே ஆளுநர்களை ஒன்றிய அரசு தம் விருப்பம் போல இயக்க அடிப்படைக் காரணம்.
ஒன்றிய அமைச்சரவை நினைத்தால் குடியரசுத் தலைவரை பணிநீக்கம் செய்யும் அதிகாரம் அரசியல் சட்டத்தின் பிரிவு 61 ல் இருப்பதைப் போல மாநில அமைச்சரவை முடிவுக்கு மாறாக செயல்படும் ஆளுநர்களை பணி நீக்கும் அதிகாரம் மாநில அமைச்சரவைக்கு இல்லை என்பதே உண்மை.
எனவே தாம் ஆளுநர்கள் தம் விருப்பம் போல செயற்படும் போக்கும் அதிகரித்துள்ளது.
நாடு விடுதலை அடைந்த பிறகு ஒன்றிய – மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் இராஜ மன்னார் ஆணையம் , ஒன்றிய அரசின் சர்க்காரியா ஆணையம் , வெங்கடாசலம் ஆணையம் மற்றும் பூஞ்ச் ஆணையம் போன்ற அரசியல் சட்டம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஆணையங்கள் சனநாயகத்திற்கு தடையான ஆளுநர் பதவியின் அமைவு குறித்து கவலை தெரிவித்தன. ஆளுநர் அதிகாரம் தொடர்பான பிரிவுகள் திருத்தப்பட வேண்டும் எனக் கோரின.
மாபெரும் சனநாயக காலக்கட்டமாக பார்க்கப்படுகின்ற இந்த 21 ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையை விட தேர்ந்தெடுக்கப்படாத நியமன ஆளுநர் கூடுதல் அதிகாரம் பெற்று விளங்கும் அரசியல் நடைபெறுவது சனநாயகத்திற்கு பெரும் இழுக்கு.
இந்திய ஒன்றியம் மெய்யான சனநாயக அமைப்பாக விளங்க வேண்டுமெனில் மாநிலங்களுக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும்.
அதற்கு இந்திய அரசியல் சட்டம் தேசிய இனங்கள் அதிகாரம் பெறும் வகையில் கூட்டாட்சி அரசியல் அமைப்பாக மாற்றப்பட, திருத்தப்பட வேண்டும். கூட்டாட்சி அரசியல் அமைப்பே ஆளுநர்களின் சனநாயக மறுப்புக் கொள்கைக்கு முடிவுகட்டும். இந்திய ஒன்றியத்தில் பாசிசத்தின் ஆட்சி அதிகாரத்திற்கு முடிவுக்கு கொண்டு வரும் சனநாயக திறவுகோலாகவும் அது அமையும்.
குமரன் புரடசிகர இளைஞர் முன்னணி
(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)
தெளிவான விஞ்ஞானப் பார்வை குமரனுக்கு வாழ்த்துகள்